Monday, February 21, 2011

நீங்கள் யார் பக்கம்?

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி  அவர்களே 
நீங்கள்  யார்  பக்கம்? 

உங்களை 12 ஜனவரி 2011  அன்று ஒன்பது  மத்திய தொழிற்சங்கங்களின் 
தலைவர்கள்  சந்தித்துள்ளார்கள்.  ஒரு வேலை  எவ்வித சிக்கலும் இல்லாமல்  உங்களால்  இவ்வாண்டு  நிதிநிலை  அறிக்கை தாக்கல் 
செய்ய இயலுமானால்   அதிலே  அவர்கள்  என்ன எதிர்பார்க்கின்றார்கள் 
என்பதையும்  விளக்கியுள்ளார்கள்.  தலைப்பாகை  கட்டிய நமது 
மரியாதைக்குரிய பிரதமர்  தான்  விரும்பாத  எதுவும்  தன் செவிகளில் 
வந்து விழக்கூடாது  என்பதற்கு  எப்படி  தன் டர்பனையே  கவசமாக 
பயன்படுத்துகின்றாரோ, அது போல  தொழிற்சங்கத் தலைவர்கள்  
சொல்வது  உங்கள்  காதில், மூளையில்  ஏறாவிட்டால்  என்ன செய்வது 
என்ற அச்சத்தோடு  தங்கள்  கோரிக்கைகளை  ஒரு மனுவாக எழுதியும் 
உங்கள் கையில் அளித்துள்ளார்கள். அதைப் படித்து விட்டீர்களா? இல்லை
தண்ணீர் தண்ணீர் திரைப்படம் போல போக வேண்டிய  இடத்திற்கு 
சென்று விட்டதா? 

பரவாயில்லை. அந்த மனுவின் முக்கிய அம்சங்களை மட்டும் நான் 
நினைவுபடுத்துகின்றேன். 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துங்கள், ஆன்லைன் வர்த்தகத்தை 
தடை செய்யுங்கள், பொது விநியோக முறையை  பலப்படுத்துங்கள்! 
பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறையுங்கள். வரி விதிப்பு 
முறையை மாற்றியமைத்தால் அது சாத்தியமே.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை  நிறுவனங்களில் புதிய பணி
நியமனத்திற்கு  போடப்பட்டுள்ள தடைகளை  அகற்றுங்கள். 


ஊக்கத்தொகை, தொழில் மானியம், ஊக்கச்சலுகை  என்று பல 
பெயர்களில்  அரசிடமிருந்து  உதவி பெறும்  எந்த ஒரு நிறுவனமும் 
ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது  என்று நிபந்தனை 
விதியுங்கள்.


வேலை உறுதிச்சட்டத்தை  இருநூறு நாட்களுக்கு விரிவு படுத்துங்கள் 


அணி சேராத தொழிலாளர்களுக்கு  சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.


விவசாயப் பொருட்களுக்கு  நியாயமான விலை கிடைப்பதை 
உத்தரவாதப்படுத்துங்கள்


சர்வதேச பொருளாதார நெருக்கடியில்  இந்தியா சின்னாபின்னமாகாமல் 
காத்து நின்ற பொதுத்துறை  வங்கிகள், எல்.ஐ.சி மற்றும்  பொதுத்துறை 
பொதுக்காப்பீட்டு  நிறுவனங்கள்  எதையும் சீர்குலைக்கும்  முயற்சிகளை 
கைவிடுங்கள். 

நடுத்தர ஊழியர்களுக்கான வருமான வரி வரம்பை மூன்று லட்சமாக 
உயர்த்திடுங்கள். 


சில்லறை வர்த்தகத்தில்  அந்நிய மூலதனத்தை அனுமதிக்காதீர்கள்

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்காதீர்கள் 

இதைப்போல  எத்தனையோ  கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 
இவற்றை அமுலாக்க தேவையான நிதியாதாரத்தை  திரட்டும் வழியையும்  சொல்லியுள்ளார்கள் 


நிறுவன வரியாக மட்டும் வசூலிக்கப்படாத  தொகை இரண்டு லட்சம் 
கோடி ரூபாய். கடந்தாண்டுகளில்  நீங்கள் அள்ளி விட்ட சலுகைகள் 
1 .8  லட்சம்  கோடி ரூபாய் ( அது என்ன உங்கள் ஆட்சியில்  எல்லா 
தொகையும்  ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாகவே  உள்ளது?)
பழைய வரி பாக்கியை கறாராக வசூலித்து  நிறுவன வரியை சற்று 
உயர்த்தினாலே  போதும். தேவைப்படும் நிதி வந்து குவியும். 


நம் ஒட்டு மொத்த அன்னியக்கடனைக் காட்டிலும்  இரு மடங்குத்தொகை 
வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கொண்டுள்ளதே, அதை கொண்டு 
வந்தால் பற்றாக்குறை பட்ஜெட்  என்ற பேச்சுக்கே இடம் கிடையாதே! 


இந்திய வங்கிகளில் கடன் வாங்கிய பல பெரிய மனிதர்கள் அதை திருப்பிச்செலுத்தாமல்  ஏய்த்து வருகின்றனரே  அதை கண்டிப்பாக 
வசூல் செய்யுங்கள்! 


இதுதான்  தொழிற்சங்கங்கள்  உங்களிடம் வைத்துள்ள கோரிக்கைகள். 
சி.ஐ.டி.யு  போன்ற  இடதுசாரி தொழிற்சங்கங்கள்  மட்டுமல்ல  உங்களது
காங்கிரஸ் கட்சியின்  ஐ.என்.டி.யு.சி,  பொருளாதாரக் கொள்கைகளில் 
உங்களோடு ஒட்டி  உறவாடுகின்ற  பாரதீய ஜனதா கட்சியின் சங்கமான
பி.எம்.எஸ்  கூட  மற்றவர்களோடு  ஒன்றிணைந்து  நிற்கிறார்கள். 
நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் ? 


கிட்டத்தட்ட நாட்டின் மக்கட்தொகையில்  99 சதவிகிதம் இக்கோரிக்கைகளை  நிறைவேற்றினால் பலனடைவார்கள். அதைச்செய்யப போகின்றீர்களா?

  அல்லது 

11 ஜனவரி அன்று  உங்களைப் பார்த்த பெரு முதலாளிகள் 

நிறுவன வரியைக் குறைக்க வேண்டும்

சில்லறை வணிகத்தை அந்நிய முதலாளிகளுக்கு திறந்து விட வேண்டும்

பாதுகாப்பு தளவாட உறபத்தியையும் அந்நிய முதலாளிகளுக்கு திறந்து விட வேண்டும். 

இன்சூரன்ஸ் துறையை  வேறு இன்னும் அதிகமாக  வெளிநாட்டினருக்கு 
திறந்து விட வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளா? 
சுய நலன் மட்டுமே
சார்ந்த கோரிக்கைகளா?

நிதியமைச்சரே, நீங்கள் யார் பக்கம்? 
அறிந்து கொள்ள ஆவலுடன் 
காத்திருக்கிறோம்.

இவன் 
ஒரு சாதாரண ஊழியன்   


 






1 comment:

  1. அசத்தல் கேள்வி... யார் பக்கம் புரிய மாட்டீங்கிதே....?பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete