Friday, January 16, 2026

எம் நினைவுகளில் எந்நாளும் வாழ்வீர்கள் . . .

 



இன்றைய நாள் ஒரு துயரச் செய்தியுடன் விடிந்தது. 

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிதாமகர், நிறுவனத் தலைவர்களில் ஒருவர்,  1955 முதல் 1994 வரை பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தலைவர் ஆகிய பொறுப்புக்களில் அகில இந்திய இன்சூரனஸ் ஊழியர் சங்கத்தை வழி நடத்தியவர். 

செப்டம்பர் 1957 ல் இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழ் தோழர் சந்திரசேகர போஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வரத் தொடங்கியது. இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழ் நவம்பர் 1997 ல் சென்னையிலிருந்து வெளிவர தொடங்கும் வரை நாற்பதாண்டுகள் அதன் ஆசிரியராக செயல்பட்டவர்.

ஹிந்துஸ்தான் கோவபரேட்டிவ் என்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். அங்கேயிருந்த சங்கத்திற்கு வேகம் கொடுக்கிறார். சுரண்டலுக்கு எதிராக போராட்டத்தை துவக்குகிறார். போனஸ் கோரிக்கைக்காக  போராட்டம் நடக்கிறது. ட்ரிப்யூனலுக்கு பிரச்சினை செல்கிறது. லாபம் இல்லை என்று நிர்வாகம் பொய்க்கணக்கு காண்பிக்கிறது. மிகுந்த சிரமத்துடன் உண்மையான கணக்குகளை போட்டோ எடுத்து ட்ரிப்யூனலிடம் சமர்ப்பிக்கிறார். நிர்வாகம் மட்டுமல்ல ட்ரிப்யூனலின் நீதிபதி கூட இது துரோகம் என்று கொந்தளிக்கிறார். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். என்னை என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், ஊழியர்களுக்கு நியாயமான போனஸை அளியுங்கள் என்பதே அவர் நிலையாக இருந்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீண்டும் ஊழியர்களின் போராட்டத்தால் பணியில் இணைகிறார்.

நாடெங்கிலும் இருந்த பல்வேறு இன்சூரன்ஸ் கம்பெனிகளின் சங்கங்களை ஒன்றிணைத்து ஒரு அகில இந்திய அமைப்பை உருவாக்க ஒரு கூட்டம் பம்பாய் நகரில் நடந்த போது மேற்கு வங்க ஊழியர்களின் சார்பாக அவர் கல்கத்தாவிலிருந்து பம்பாய் செல்கிறார். 01.07.1951 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உருவாகிறது. அகில இந்திய செயற்குழு உறுப்பினராகிறார் தோழர் போஸ். 1953 ல் முதல் மாநாடு. 1955 ல் இரண்டாவது மாநாடு. அம்மாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலாளராகிறார் தோழர் போஸ்.

இதற்கிடையில் 1954 ல் ஒரு சம்பவம். மெட்ரோபாலிடன்  இன்சூரன்ஸ் கம்பெனி என்ற தனியார் கம்பெனியில் சங்கம் அமைக்க முயற்சித்த 55 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட அங்கே கல்கத்தா நகர இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக தோழர் சந்திரசேகர் போஸ் மற்றும் பின்னாளில் சங்கத்தை பொதுச்செயலாளராக வழி நடத்திய தோழர் சரோஜ் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.  கீழமை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

1956 ல் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்ட போது அதனை வரவேற்று அகில இந்திய இன்சூர்ன்ஸ் ஊழியர் சங்கம் தந்தி அனுப்பியது. அனுப்பியவர் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் போஸ். முதலாளித்துவ சிந்தனை கொண்ட சில காங்கிரஸ் எம்.பி க்களும் என்றைக்குமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பாஜகவின் அன்றைய வடிவமான ஜனசங்கும் தேசியமயத்தை கடுமையாக எதிர்த்த போது "ஊழியர்கள் ஆதரிக்கிறார்கள்" என்று அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் அந்த தந்தியை காண்பித்து உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் இது பதிவாகியுள்ளது.

ஊழியர்களுக்கான பலன்களை பெறுவதில் கவனம் செலுத்துபவர் என்றும் நிர்வாகத்தின் முன்மொழிவுகளுக்கு சரியான எதிர்வினைகளை உடனுக்குடன் தருவதில் வல்லவர் என்று எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அவர் ஒரு திறந்த புத்தகம் என்பதை அவரது தன் வரலாறு நூல் உணர்த்தியது. 

1983 . அவர் எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் சங்கத்திலிருந்து அவர் ஓய்வு பெறவே இல்லை. 1994 ல் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாலும் சங்க இயக்கங்களிலிருந்து அவருக்கு ஓய்வு என்பதே இல்லை. 

அவரை முதன் முதலாக பார்க்கும் வாய்ப்பு 1988 ல் கிடைத்தது. அகில இந்திய தலைமையகம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறிய போது சென்னை எல்.ஐ,சி கட்டிடத்தில் பிரம்மாண்டமான கூட்டம் ஒன்று நடந்தது. பெரிய ஆரவாரம் இல்லாத தெளிவான நீரோடை போன்றது அவர் பேச்சு. அந்த தெளிவும் அழுத்தமும் இறுதி நாள் வரை மாறவே இல்லை. எங்கள் வேலூர் கோட்டத்திற்கு ஒரு முறை வந்துள்ளார்.

1998 ல் நான் வேலூர் கோட்டப் பொதுச்செயலாளராகிறேன். 2000 ம் ஆண்டு சென்னையில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது என்னை அழைத்து பேசி உற்சாகமும் நம்பிக்கையும் கொடுத்தார். அந்த காலகட்டத்தில் புதிதாக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற வேறு சிலரையும் அழைத்து உற்சாகப்படுத்தினார் என்று பின்பு அறிந்து கொண்டேன்.










ஏழாண்டுகள் முன்பாக அவரை அவரது வீட்டில் சந்தித்தேன். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்திற்கும் மேல் நடந்த சந்திப்பு அது. இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை நாவல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்ற வேட்கையில் கொல்கத்தா சென்று அவருடன் பேசி பல்வேறு விபரங்களை அறிந்து கொண்டேன். அறுபதுகளின் சம்பவங்களை முழுமையாக தன் நினைவிலிருந்து சொன்னவர் மறைந்த தன் சகாக்களான தோழர் சரோஜ், தோழர் சுனில் பற்றி பேசும் போது மட்டும் உணர்ச்சிவயப்பட்டார். 



 வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இது. தமிழ்நாட்டிலிருந்து தோழர் வந்துள்ளார். அதனால் எங்கள் இருவருக்குமே தோசை ஆர்டர் செய்து விடு என்று பேரனிடம் சொன்னார். இரவு 10.30 க்கு புறப்படுகையில் ஊபரில் டாக்ஸி புக் செய்த போது, பக்கத்தில்தான் டாக்ஸி ஸ்டாண்ட் உள்ளது. நானே ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அவர் புறப்பட்ட போது அவரது வயது அதிகமில்லை, வெறும் 96 தான். 

அந்த போராட்டத்தை "முற்றுகை" எனும் நூலாகஆறாண்டுகளுக்கு முன்பாக   விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவரே வெளியிட்டது வாழ்வில் எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.



நூறாண்டுகளை கடந்த நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவர் தினமும் வந்து கலந்து கொண்டார். மாநாட்டின் போது மட்டுமல்ல அதற்கு முன்பாக மம்தாவின் அடாவடி காரணமாக தற்காலிக அரங்கம் அமைக்கப்பட்ட போது அதன் பணிகளை அன்றாடம் வந்து பார்த்து ஆலோசனை வழங்கியுள்ளார்.




அவரை நாங்கள் இறுதியாக பார்த்தது 31.12.2025 அன்றுதான். 28.12.2025 முதல் 01.01.2026 வரை புவனேஸ்வரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் 29.12.2025 முதல் 31.12.2025 வரை அவர் 104 வயதில் கலந்து கொண்டார். மிகவும் தெளிவான உரை ஒன்றையும் நிகழ்த்தினார். அவரது வருகையும் இருப்புமே அனைவருக்கும் உற்சாகமளித்தது, வேகம் கொடுத்தது.




அதன் பின்பு உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தோழர் சந்திரசேகர் போஸ் இன்று இயற்கையுடன் இணைந்து விட்டார்.

அவர் 

எளிமையின் வடிவம்,'

தியாகத்தின் உருவம்,

உறுதிக்கு உதாரணம்,

வரலாற்றுப் பொக்கிஷம்,

இயக்கத்திற்கு எழுச்சி தந்த நாயகன்.

சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத தலைவர்.

எந்நாளும் அவர் எங்களின் நினைவில் வாழ்வார், வழி காட்டுவார்.




2 comments:

  1. Excellent comrade

    ReplyDelete
  2. தோழருக்கு செவ்வணக்கத்துடன் எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன். AIIEA என்ற பெருமைமிகு சங்கத்தின் சீரிய, ஒப்பற்ற தலைவரின் வழி காட்டலில் சங்கம் தனதுபயணத்தை தொடரட்டும். நமது கடமையும் கூட.

    ReplyDelete