Monday, June 25, 2012

மனதை பாதித்த மழலை மரணங்கள்




இதயத்தை பாதித்த இரு மழலைகளின் மரணம் பற்றிய பதிவு இது. ஒன்று அனைவரும் அறிந்த ஹரியானா குழந்தை மாஹி. பிறந்த நாள் கொண்டாடிய அந்த சிறு மலர், ஆழ்துளைக் கிணறில் விழுந்து சடலமாகவே வெளியில் வந்தது. ராணுவ வீரர்களின் கடுமையான போராட்டத்திற்கு பலனில்லாமல் போனது.

ஆழ்துளைக் கிணறுகளில் இப்படி குழந்தைகள் சிக்கிக் கொள்வதும், மிகக் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு அவர்கள் உயிரோடோ அல்லது சடலமாகவோ மீட்கப்படுவது என்ற செய்தியை அவ்வப்போது படிக்கிறோம். இந்த நிகழ்வுகள் எல்லாமே பொறுப்பற்ற தன்மையினால் மட்டுமே விளைவது.

ஆழ்துளைக் கிணறு தோண்டி அதிலே தண்ணீர் வரவில்லை என்றால் அதை அப்படியே விட்டு விட்டு போவதால்தான் அதிலே சிக்கிக் கொள்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை கொட்டி போர் போட முடிகின்றவர்களால், அதற்கு மேலே ஒரு மூடியைப் போட்டு மூட ஒரு இருநூறு, முன்னூறு ரூபாய் செலவிட முடியாதா?

இப்படி பொறுப்பில்லாமல் செயல்படுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

இன்னொரு மழலையின் மரணம் இன்னும் வெகுவாக பாதித்தது. சென்னையில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு தெரிந்த ஒருவரின் குழந்தை ப்ளட் கான்ஸருக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. ரத்தம் தேவை என்று அந்த ஊழியர் எனக்கு தெரிந்த ஒரு அதிகாரி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

இரண்டு பாட்டில் ரத்தம் இந்த வாரம் தேவை என்றார்கள். வெள்ளிக் கிழமையன்று நான் ரத்த தானம் செய்து விட்டேன். இன்று காலை எங்கள் இணைச்செயலாளர் தோழர் பட்டாபி அளிப்பதாக ஏற்பாடு. காலை பத்து மணிக்கு அந்த சென்னை தோழரிடமிருந்து தொலைபேசி வருகின்றது.

ரத்த தானம் பற்றி நினைவு படுத்தத்தான் தொலைபேசி செய்கின்றார்கள் என்று நினைத்து, அவர் பேசுவதற்கு முன்பாகவே அவசரம் அவசரமாக இன்னும் அரை மணி நேரத்திற்குள் தோழர் பட்டாபி ரத்த வங்கி சென்று விடுவார் என்றேன். அவரோ, அதற்கு அவசியமில்லை, நேற்று இரவு அந்த குழந்தை இறந்து விட்டது. என்று தழுதழுத்த குரலில் சொன்னார். எனக்கு பதில் பேசும் தெம்பு இல்லை. ரத்த தானம் செய்ய சென்று கொண்டிருந்த அந்த தோழருக்கும் தகவல் அளித்தேன். அவரும் மிகவும் வருத்தமுற்றார்.

நான் அந்த குழந்தையை, ஏன் அதன் பெற்றோரைக் கூடப் பார்த்ததில்லை. ஆனாலும் மனதை என்னவோ செய்கிறது அந்த மார்வான் என்ற பெயருடைய அந்த மழலையின் மரணம்.




No comments:

Post a Comment