மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்பு மத்திய அமைச்சரும் தற்போதைய மம்தாவின் தலைமை எடுபிடியுமான முகுல் ராய், எங்களுக்கு இனி காங்கிரஸ் கட்சியின் தயவு அவசியம் இல்லை. நாங்கள் அடுத்த தேர்தலில் தனியாகவே நிற்போம் என்று வீர வசனம் பேச, மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வெகுண்டு எழுந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தைரியமிருந்தால் இப்போதே எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கட்டும் என்று அறிவித்தார்.
ஆனால் பாவம், அவர் அறிக்கையை யாருமே சீண்டவில்லை. மம்தா கட்சியுடன் கூட்டணி உறவு நன்றாகவே இருக்கிறது என்று மேலிடத் தலைவர் அக்பர் அஹமது தெரிவித்து விட்டார்.
அவர் அறிக்கை வெளியிட்ட மறுநாள் பென்ஷன் மசோதாவிற்கு ஆதரவு கிடையாது என்று மம்தா சொல்லி விட்டார். ஆக காங்கிரஸ் கட்சியை மம்தா தனது அடிமையாகத்தான் கருதுகின்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்ற போது என் காலிலும் கையிலும் மாட்டப்பட்டிருந்த விலங்குகள் அகன்றது என்று சொன்ன தன்மான மன்மோகன் சிங்கத்தால் மம்தா பற்றி வாய் திறக்கக்கூட முடியவில்லை. அன்னை சோனியா காந்தியின் ஜம்பம் கலைஞரிடம் பலிப்பது போல மம்தாவிடம் எடுபடுவதில்லை.
இப்படி இருக்கையில் மேற்கு வங்க காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு மட்டும் மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் எதற்கு?
பி,கு : பென்ஷன் மசோதா பற்றியெல்லாம் மம்தாவிற்கு தெரியுமா என்று சந்தேகமாகவே உள்ளது. மன்மோகன்சிங்கை மிரட்டியே வைக்க கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகின்றார். அவ்வளவுதான். எனது கவலை ஒன்றே ஒன்றுதான். இடதுசாரிகள் பென்ஷன் மசோதாவை உறுதியாக எதிர்க்கிறார்கள் என்பது மம்தாவிற்கு தெரிந்து அவர் தனது எதிர்ப்பிலிருந்து பல்டி அடிக்கப் போகிறாரே என்பதுதான்.
No comments:
Post a Comment