Thursday, June 7, 2012

இதுவும் கடந்து போகும்




எல்.ஐ.சி யின் அன்னியச் செலாவணி பொருளாதார தரத்தை ‘ மூடி முதலீட்டு சேவை நிறுவனம்’ பிஏஏ 3  லிருந்து  பிஏஏ ஆகக்குறைத்துள்ளது. எவ்வித அடிப்படையான காரணமும் இல்லாமல் காழ்ப்புணர்வினால் மட்டும் செய்யப்பட்ட நடவடிக்கை இது.

எல்.ஐ.சி முழுமையான அரசு நிறுவனமாக உள்ளது. எல்.ஐ.சி யின் மூலதனத்தில் அன்னிய மூலதனம் என்பது இல்லவே இல்லை, எல்.ஐ.சி யின் பிரிமிய வருமானத்தில் பெரும்பகுதி உள்நாட்டிலிருந்தே திரட்டப்படுகின்றது. எல்.ஐ.சி  அரசுப் பத்திரங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பெருமளவு முதலீடு செய்கின்றது  ஆகிய காரணங்களைச் சொல்லி எல்.ஐ.சி யின் தர அளவை மூடி நிறுவனம் குறைத்துள்ளது.

எது எல்.ஐ.சி யின் பலமாக உள்ளதோ, அதை பலவீனமாக கருதியுள்ளது வெறும் நகைப்பிற்குரிய விஷயம் மட்டுமல்ல, உள்ளே ஒளிந்திருக்கிற சூழ்ச்சியும் புலப்படுகின்றது. அன்னிய மூலதனத்தின் வேட்டைக்காடாக எல்.ஐ.சி மாறாமல் இருக்கிறதே என்ற ஆத்திரமும் வெளிப்படுகின்றது.

இந்தியாவின் தரத்தையும் மூடி குறைத்துள்ளது. நிதித்துறை சீர்திருத்தங்களை அமுலாக்காமல் உள்ளதுதான் அதற்குக் காரணம் என்றும் சொல்லியுள்ளது. இந்தியாவை சீரழிக்க முயல்பவர்கள், இந்திய உழைப்பாளி மக்களின் சேமிப்பைக் கொள்ளையடிக்க விழைபவர்கள், மூடியின் இந்த நடவடிக்கையை ஒரு பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தலாம்.

பதினான்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட, முப்பத்தி எட்டு கோடி பாலிஸிதாரர்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி, மூடியின் மூடத்தனமான நடவடிக்கையால் சிறிதும் பாதிக்கப்படப் போவதில்லை. கடந்த காலங்களிலும் எல்.ஐ.சி க்கு எதிரான விஷமத்தனமான பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளது. அவையெல்லாம் தவறு என்று இந்திய மக்கள், எல்.ஐ.சி யில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து நிரூபித்து உள்ளனர். அது போலவே இந்த விஷமப் பிரச்சாரத்தையும் இந்திய மக்கள் முறியடிப்பார்கள். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனின் ஒளியை மறைக்க முடியாதல்லவா?

1 comment:

  1. உங்கள் கருத்து முழுக்க உண்மை.

    ReplyDelete