நேற்றுதான் கோகோ கோலா விளம்பரம் பார்த்தேன். காலில் செருப்பில்லாத, பூவா தலையா போட கையில் காசில்லாத, முறையான ஸ்டம்ப் இல்லாத, புல் தரைகள் இல்லாத மணல் வெளியில், சுட்டெரிக்கும் சூரியனை சமாளிக்க குளிர் கண்ணாடிகள் இல்லாமல் கிழிந்த ஆடைகளோடு, மேலே கூரைகள் அற்று வெயிலில் காயும் பார்வையாளர்களோடு, கிரிக்கெட் விளையாடும் ஏழைச் சிறுவர்களைக் காட்டி இதுதான் இந்த மண்ணின் மகிழ்ச்சி என்று சொல்கிறது அந்த விளம்பரம். இறுதியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சச்சின் டெண்டுல்கர் கோகோ கோலா குடித்து “ எல்லோரும் கோக் குடித்து நாசமாகப் போங்கள்” ( அவர் பேசும் மொழி புரியாததால் அப்படித்தான் சொன்னார் என்று நினைக்கிறேன்” என்று சொல்கிறார்.
மற்ற விளையாட்டுக்களையெல்லாம் புறம் தள்ளி விட்டு இந்திய மக்கள் கிரிக்கெட்டிற்கு அளிக்கும் அமோக ஆதரவுதான் இன்று அதனை பணம் கொழிக்கும் விளையாட்டாக மாற்றியுள்ளது. என்ன விளையாடினாலும் பார்ப்பார்கள் என்பதால்தான் இன்று எல்லா நேரமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கிரிக்கெட் வீரர்கள் தேவதூதர்களாகக் கருதப்படுவதால்தான் அவர்களுக்கு விளம்பர வருவாய் விளையாட்டு வருவாயை விட பல மடங்கு அதிகமாக வருகிறது.
கிரிக்கெட்டை ஆராதிப்பதால் இந்திய மண்ணிற்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியில்லை. கோகோ கோலா போன்ற நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் இந்திய மண்ணிற்கு பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட்டை ஒரு விளையாட்டு என்ற அடிப்படையில் நேசிக்கும் மக்களால், அதனை ஒரு வணிகமாக மாற்றியுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கும் வாரியங்களுக்கும் மிகப் பெரிய நிறுவனங்களுக்குத்தான் மகிழ்ச்சி.
No comments:
Post a Comment