Friday, December 28, 2018

இடப் பக்கமாய் வராதீர்கள்





இந்த தலைப்பை இந்த வலைப்பக்கத்தில் பார்க்க அதிர்ச்சிகரமாய் உள்ளதல்லவா? இத்தலைப்பில் ஒரு கவிதையைப் பார்க்கையில் எனக்கும் கூட இருந்தது.


நூல்                                        : பெண்டிரும் உண்டுகொல்?
ஆசிரியர்                             :  கோவை மீ.உமாமகேஸ்வரி
வெளியீடு                            : பாரதி புத்தகாலயம்
                                                  சென்னை – 18
விலை                                    : ரூபாய் 70

எங்கள் கோவைக் கோட்டச்சங்கத்தின் இணைச்செயலாளரும் தமுஎகச அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும் பட்டிமன்றப் பேச்சாளருமான தோழர் உமா மகேஸ்வரி அவர்களின் கவிதைத் தொகுப்பு இந்த நூல்.

பெண்களின் நுண் உணர்வுகளை, அவர்களின் வலியை, ஆதங்கத்தை உழைக்கும் வர்க்கப் பார்வையோடு அழகு தமிழில் தேர்ந்தெடுத்த வார்த்தைகளோடு கவிதைச்சரம் தொடுத்துள்ளார்.

சில தலைப்புக்களும் சில வரிகளும் மட்டும் உங்கள் பார்வைக்கும் படிக்கும் ஆவலைத் தூண்டுவதற்கும்

ஜன்னலோர இருக்கைக்கும் சுதந்திரத்திற்கும் என்ன தொடர்பு என்பதை “மீச்சிறு சுதந்திரம்” சொல்கிறதென்றால் வீட்டிற்குள் அடைக்கப்படும் பெண்ணின் துயரத்தை “வேறெங்கும் கிளைகள் இல்லை” கண்ணீர் மல்க வைக்கிறது.

உறவுகளுக்குள் ஆன ஒப்பனையை “அன்னைக்கு வர முடியலை” கலைக்கிறது.  சில ஆண்களின் சபலக் கண்களுக்கான சவுக்கடி “இடப் பக்கமாய் வராதீர்கள்”

கொலைக்குற்றவாளியின்
தலைமறைவு வாழ்க்கையைக் காட்டிலும்
பதட்டங்கள் நிரம்பியதாயிருக்கிறது
நம் தேசத்து தனிப் பெண்களின் வாழ்க்கை!

என்று முடியும் “தனிப் பெண்கள்” யதார்த்தத்தை கன்னத்தில் அறைந்து சொல்கிறது.

தானியங்கி மின் தூக்கியில்
தனித்திருக்கிறாள் பெண்ணொருத்தி

என்று தொடங்கும் “யாவர்க்குமாம் சுதந்திரம்”  இன்றைய நிலைமையின் அவலத்தைச் சொல்லும் இன்னுமொரு கவிதை.

ஏய்த்துப் பிழைக்காது
உழைத்துப் பிழைக்கிற
பாட்டாளிகளால்தான்
உலக உருண்டை
நிற்காமல் சுழல்கிறது . . .

என்ற உண்மையை உரக்க முழங்குகிறது “நிற்காமல் சுழல்கிறது”

முறிக்கப்பட்ட முதுகெலும்பும் மூன்று நட்சத்திர விடுதியும்
பெண்டிரும் உண்டுகொல்? 
தன் நாமம் கெட்டாள்

ஆகிய அதிர்ச்சிகரமான கவிதைகளுக்கு மத்தியில்

ஆண்டாளின் வெண்ணெய் முத்தங்கள்,
சத்தமாய் கவிதையைப் படிக்காதீர்கள்,
நீயும் நானும் நமது தலையணைகளும்

ஆகிய சுவாரஸ்யமான கவிதைகளும் உண்டு. 

அவசியம் படித்து உணர வேண்டிய கவிதைத் தொகுப்பு


குடித்து கும்மாளமிட அனுமதி வேண்டுமாம் . . .




இன்று காலை செய்தித்தாளை எடுத்ததுமே கண்ணில் பட்டு எரிச்சல் ஊட்டிய செய்தி கீழே உள்ளது.

டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் தேதி புத்தாண்டை மக்கள் உற்சாகமாகக் கொண்டாட எந்த வித தடையும் இருக்கக் கூடாது. விடுதிகளுக்கு நேரக் கட்டுப்பாடு எதுவும் இருக்கக் கூடாது என்று சிவசேனா கட்சி இளைஞர் அணியின் தலைவரும் பால் தாக்கரேயின் பேரனுமான ஆதித்ய தாக்கரே மஹாராஷ்டிர மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

வணிகம் அதிகமாக பெருகுவதற்கு உதவிகரமாக இருப்பதால் அக்கோரிக்கையாம்.  ஒரு நாள் மட்டுமல்ல, வருடத்தின் அனைத்து நாட்களிலும் எந்த தடையோ கட்டுப்பாடோ இருக்கக் கூடாது என்று மஹாராஷ்டிர மாநில ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அக்கோரிக்கையை இன்னும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.

புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் என்னய்யா வணிகம் நடக்கப் போகிறது?

மது பாட்டில்கள் விற்பனையை அதிகரிக்கவும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நட்சத்திர விடுதிகள் கல்லா கட்டவும் சிவசேனா அனுமதி கேட்கிறது. தங்கு தடையற்ற மது விற்பனை முதலாளிகளுடைய லாபத்தை அதிகரிக்கும். 

குடிபோதையை ஊக்கிவிக்கும் இந்த கட்சிக்கு கலாச்சாரக் காவலர்கள் என்று பெத்த பெயர் வேறு. 

புராணங்களில் சொல்லப்படுகிறதே, இந்திர லோகத்தில் சோம பானம், சுரா பாணம் ஆறாக ஓடியது என்று, அந்தக் கலாச்சாரப் பாதுகாவலர்களா இவர்களா?






ரயிலில் ஒரு குடிமகனோடு மோதல் . . .



நேற்று விழுப்புரத்தில் ஒரு கூட்டம். 

எங்கள் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களின் நினைவு நாளை ஒட்டி நாங்கள் நடத்திய புது வணிகப் போட்டியில் வெற்றி பெற்ற முகவர்களுக்கு பரிசளிப்பு,  31.12.2018 அன்று ஓய்வு பெறவுள்ள தோழர் ராதாகிருஷ்ணன் என்ற உறுதியான தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, 8,9 ஜனவரி 2019 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்ட கோரிக்கை விளக்கக் கூட்டம் என 3 இன் 1 ஆக நடைபெற்ற கூட்டம் அது. 

கூட்டம் முடிந்து விழுப்புரம் - காட்பாடி பாஸெஞ்சரில் வேலூர் திரும்பிக் கொண்டிருந்தேன். நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்த அந்த புகை வண்டியில் பெரிய கூட்டமில்லை. இருக்கைகள் பலவும் காலியாகவே இருந்தது. 

ஒற்றை இருக்கையாகப் பார்த்து அமர்ந்து கொண்டேன். எதிர் இருக்கை காலியாகவே இருந்தது. வெண்மணி தியாகிகள் தினத்தன்று வெளியிடப்பட்ட தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய "மார்க்சியம் என்றால் என்ன?" நூலை படித்துக் கொண்டிருந்தேன். 

திருக்கோயிலூர் வந்த போது ஒரு தொலைபேசி வந்தமையால் கையிலிருந்த புத்தகத்தை எதிர் இருக்கையில் வைத்து விட்டு அழைப்பிற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். 

அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு குடிமகன் எனது இருக்கையை கடந்து போய் விட்டு மீண்டும் திரும்பி வந்து எதிர் இருக்கையில் இருந்த புத்தகத்தை கோபமாக கீழே தள்ளி விட்டு அங்கே அமர்ந்து கொண்டு யாருடனோ போனில் பேசுவது போல நடித்துக் கொண்டிருந்தான். 

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

எங்களுக்குள் நடந்த உரையாடல்

அவன் : என்ன பாக்கறே! நாந்தான் புக்கை எடுத்துத் தரனுமா?

நான் : நீங்கதானே கீழே தள்ளி விட்டீங்க? நீங்கதான் எடுத்துத் தரனும்.

அவன்: இது என்ன ரிசர்வேஷன் சீட்டா? நீங்க (டக்கென்று மரியாதை வந்து விட்டது? என்ன ரிசர்வ் செஞ்சி வச்சீங்களா?

நான்: நீங்க ரிசர்வ் செஞ்சி வச்ச சீட்டா? 

அவன்: அதுக்காக புக்கை வைப்பீங்களா?

நான்:  நான் புக்கை வச்சதில என்ன பிரச்சினை?

அவன்: நாந்தான் எடுத்துக் கொடுக்கனுமா?

நான்: மேனர்ஸ் இல்லாம தள்ளி விட்ட நீங்கதான் எடுத்துத் தரனும்

அவன்" அது என்ன உங்க சீட்டா?

இந்த உரையாடல் முற்றுவதற்குள் அவனின் நண்பர் ஒருவர் வந்து விட்டார். 

அண்ணே! ட்ரெயின் ஏறதுக்கு முன்னாடி சரக்கு போடாதேன்னு சொன்னா கேட்கறதில்லை. டெய்லி யாரோடயாவது தகராறு செஞ்சு கிட்டே இருக்க! அந்த புக்கை எடுத்து கொடுத்துட்டு வா! நம்ம சீட்டுக்கு போகலாம்

என்று இழுக்க அவனும் புத்தகத்தை மீண்டும் கோபமாக எடுத்து கொடுத்து விட்டு போய் விட்டான்.

பாவம் அவனுக்கு என்ன பிரச்சினையோ?

புத்தகம் பிரச்சினையோ இல்லை புத்தகத்தின் அட்டையில் இருந்த மார்க்ஸ் பிரச்சினையோ தெரியவில்லை.

இல்லை ஏதாவது பிரச்சினை செய்ய வேண்டும் என்ற மனரீதியான பிரச்சினை அவனுக்கு உள்ளதா என்றும் தெரியவில்லை.

காரணம் எதுவும் இல்லாவிட்டலும் ஏதாவது பிரச்சினை செய்ய வேண்டும் என்ற சேடிஸ மனநிலை கொண்டவர்கள் கொண்ட இந்த உலகத்தில் போதையில் பிரச்சினை செய்கிற அவன் மீது கோபம் வரவில்லை. இரக்கம்தான் வந்தது. 

பிகு:

சிவசேனா மகாராஷ்டிர மாநில அரசிடம் முன்வைத்துள்ள ஒரு கோரிக்கையை காலை செய்தித்தாளில் படித்தவுடன்தான் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அது என்ன கோரிக்கை? மாலை பார்ப்போம்

Thursday, December 27, 2018

முக்கியமான இரு எதிர்வினைகள் . . .



வெண்மணி வரலாற்றில் கம்யூனிஸ்டுகளை இருட்டடிப்பு செய்து எழுத்தாளர் டி.ரவிக்குமார் எழுதி தமிழ் இந்துவில் வெளியான கட்டுரைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத்தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய முக்கியமான இரு எதிர்வினைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


வெண்மணியில் சிபிஎம் தோழர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும்தான் எரிக்கப்பட்டனர். அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்பதை எரித்த கோபாலகிருஷ்ண நாயுடுவும் 23 மிராசுதார்களும் அன்று ஏற்கவே இல்லை.

கம்யூனிஸ்ட்டாவது புடலங்காயாவது.. அவனுங்க பள்ளுப் பறையனுங்கதான் என்று கோபாலகிருஷ்ண நாயுடு ஊர் ஊராகப்போய் பிரச்சாரம் செய்தான்.

அதே பிரச்சாரத்தை இப்போது முகநூலிலும் பத்திரிகைகளிலும் நாம் தோழமை எனக் கருதுவோர் சிலர் செய்து வருகிறார்கள்.

ஆனால்,நாம் எல்லாச் சாதியிலும் பிறந்தவராக இருக்கும் தோழர்கள் அந்த 44 கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வீர வணக்கம் செய்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறோம் - எரியும் நினைவுகளோடு....



ஞ்சை மண்ணில் பள்ளன் கட்சி பறையன் கட்சி என்கிற பெருமையைப்பெற்ற இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். அடங்க மறு அத்துமீறு என்று இன்று நாம் எழுப்பும் முழக்கங்களுக்கெல்லாம் அடியுரமாக   அமைந்தது அன்று தோழர் சீனிவாசராவ் எழுப்பிய ‘அடிச்சா திருப்பி அடி’ ஏட்டின்னு கூப்பிட்டா என்னட்டீ ்்னனு பதில் சொல்லு’என்கிற ஆவேச முழக்கங்கள்தாம். 

வெண்மணியில் கொல்லப்பட்ட 44 பேரில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர் அல்லாதவர் இல்லையே ஏன் தோழர் என்று வரலாற்றிடம் கேட்க வேண்டிய கேள்வியை பலி கொடுத்த நம்மை நோக்கிச் சிலர் கேட்பது அவர்களின் அரசியல் தேவைக்காக என்பதை நாம் பதட்டமின்றி எதிர்கொள்ள வேண்டும். கோபாலகிருஷ்ணநாயுடுவுக்கும் இவர்களுக்கும் இருக்கும் பொதுவான நோக்கம் செங்கொடியைக் கீழே இறக்க வைப்பதுதான் என்பது புரியாமலா இருக்கிறது நமக்கு?


ஒருமுறை புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி டெல்லி சென்று அன்றைய சிபி எம் பொதுச்செயலாளர் தோழர் சுர்ஜித்தை சந்தித்து தங்கள் இயக்கத்தை சிபி எம் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டபோது.சுர்ஜித் சிரித்தபடி மென்மையாகக் கூறியது: ”நாங்களே தலித் மக்களின் இயக்கமாக இருக்கும்போது நீங்கள்தான் எங்களை ஆதரிக்க வேண்டும்”

செங்கொடி இயக்கம் மட்டுமல்ல திராவிட விவசாயத் தொழிலாளர் இயக்கமும் பெருவாரியாக தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்ட இயக்கமாகவும் அதே சமயம் எல்லாச் சாதியினரையும் தோழர்களாகக் கொண்டிருந்த இயக்கமாக அன்று இருந்ததும் வரலாறு.

தஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக பண்பாட்டு மற்றும் பொருளாதார விடுதலைக்கான போரை முன்னெடுத்த இயக்கத்தில் தம் இன்னுயிரை ஈந்த மற்றும் சிறைசென்று சித்திரவதைப்பட்ட தலைவர்கள்/தோழர்களின் பட்டியலைப் பாருங்கள்”

வாட்டாக்குடி இரணியன்-சுட்டுக்கொலை
ஆம்பலாப்பட்டு ஆறுமுகம்-சுட்டுக்கொலை
ஜாம்புவானோடை சிவராமன்-சுட்டுக்கொலை

சேரங்குளம் அமிர்தலிங்கம்,ஆம்பலாப்பட்டு முருகையன் ,மணலி கந்தசாமி,சாகும்வரை கையில் போலீஸ் சுட்ட குண்டுகளைக் கையில் ஏந்தியிருந்த தோழர் ஏ.எம்.கோபு, கொல்லப்பட்ட  தோழர் என்.வெங்கடாசலம், கே.ஆர்.ஞானசம்பந்தன், கோ.பாரதிமோகன், சமீபத்தில் மறைந்த தோழர் கோ.வீரய்யன், ஏ.ஜி.கஸ்தூரிரங்கன்,பாவா நவநீதகிருஷ்ணன் என தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லாத பிற சமூகங்களில் பிறந்த தோழர்கள். 

இவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கடைசி இருவர் பெரியாரிஸ்ட்டுகள். உங்கள் பாஷையில் சொன்னாலாவது மனம் இரங்கி ஏற்க மாட்டீர்களா என்பதற்காக இதை வருத்தத்துடன்தான் பதிவிடுகிறோம்.

பண்ணையார்களுக்கும் கோவில் மடங்களுக்கும் ஜமீந்தார்களுக்கும் எதிரான வர்க்கப்போரில் தலித் மற்றும் தலித் அல்லாத சமூகத்தினர் கரம் கோர்த்து நின்ற வர்க்கப்போராட்ட வரலாறு தஞ்சை மண்ணுக்குரியது.அதன் உச்சம்தான் வெண்மணி. தலித்துகளுக்காக தலித் அல்லாதவர் ரத்தம் சிந்திய பாரம்பரியம் தஞ்சை மண்ணுக்குரியது.அதை மேலும் வளர்த்தெடுப்பதுதானே தலித் விடுதலையின் மீது அக்கறையுள்ளவர்கள் உண்மையில் செய்ய வேண்டிய காரியம்.தந்திர ரீதியாகவும் அதுதானே வெற்றி தரும். விமர்சனங்கள் இருக்கலாம்.அதை விவாதிக்கலாம்.செங்கொடி இயக்கம் சுயவிமர்சனத்தைப் பொக்கிஷமாகக் கருதும் இயக்கம்தான். 

ஆனால் ’அதை நாங்க மட்டும் பாத்துக்கிர்றோம். நீங்க வேண்டாம்” என்று கத்தரித்துவிடும் வாதங்கள் நம் பொதுவான நோக்கத்துக்கு  ஊறு  விளைவிக்கும் .

உசுப்பேத்தும் நக்கல்களையும் நிதானத்துடன் எதிர்கொள்வோம். தஞ்சை மண்ணின் அசலான பாரம்பரியத்தை செங்கொடி ஏந்தி கறுப்பு மற்றும் நீலக்கொடிகளையும் தோழமையுடன் இணைத்துக்கொண்டு முன்னேறுவோம்., 

காலம் நமக்கிடும் கட்டளை இதுவே.

மரமேறி – தமிழிசை, பொன்னார் கவனத்திற்கு




தென்ன மரம் ஏறுகிறவனை எல்லாம் மேலே உட்கார வைக்கறதுக்கு முன்னாடி யோசிக்கனும்

என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மலையாளப் பத்திரிக்கை “ஜன்ம பூமி”

கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழரான தோழர் பிணராயி விஜயனை இழிவுபடுத்தி வெளியிட்டுள்ள கார்ட்டூன் இது.



காவிகள் இவ்வாறு ஜாதிய ரீதியாக தோழர் விஜயனை இழிவுபடுத்துவது இது முதல் முறை அல்ல.

“தாழ்ந்த ஜாதி மகனே” என்று ஒரு மாதம் முன்பாக சமூக வலைத் தளங்களில் ஒரு அசிங்கமான பிரச்சாரத்தை காவிக்கயவர்கள் மேற்கொண்டதையும் “அவர் எங்கள் தோழர்” என்று செங்கொடி இயக்கத்தினர் பதிலடி கொடுத்ததையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்போது ஆர்.எஸ்.எஸ் அதன் பத்திரிக்கையிலேயே அதிகாரபூர்வமாக  கார்ட்டூன் வெளியிடுகிறது.  அதன் சிந்தனை எவ்வாறு ஜாதிய வெறியில் அழுகிப் போயுள்ளது என்பதற்கான நிரூபணம் இது.

கீழே உள்ள வாசகங்களை எழுத மனம் சங்கடமாகத்தான் உள்ளது. ஆனாலும் வேறு வழியில்லை. அவர்களுக்கும் தங்கள் குருபீடத்தைப் பற்றி புரிய வேண்டுமல்லவா?

மரியாதைக்குரிய தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பொன்னார் அவர்களுக்கு,

நீங்கள் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகவோ அல்லது மத்திய இணை அமைச்சராகவோ இருக்கலாம்.

ஆனாலும் உங்கள் கட்சியின் குரு பீடம் ஆர்.எஸ்.எஸ் உங்களையும் ஜாதியக் கண்ணாடி கொண்டு உங்களையும் மரமேறிகளாக மட்டுமே பார்க்கும். நீங்கள் என்னத்தான் தாமரை மலர்ந்தே தீரும் என்று தொண்டை வரளக் கத்தினாலும் உங்களை உயர்ந்த இடம் எதிலும் உட்கார வைக்காது. உங்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் மரமேறிகளாக இருந்தார்கள் என்பதால் தோழர் பிணராயி விஜயனை எப்படி இழிவு படுத்துகிறார்களோ அது போல உங்களையும் நிச்சயம் இழிவு படுத்துவார்கள்.  மனு தர்மத்தையே தன் கொள்கையாகக் கொண்ட உங்கள் அமைப்பு பற்றி என்னை விட உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

ஏற்கனவே எஸ்வி.சேகர் தொடங்கி காயத்ரி ரகுராம் வரை உங்களை இழிவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆகவே கவனமாக இருக்கவும், பாஜக விற்கு வெளியே சென்று . . .

Wednesday, December 26, 2018

புல்லட் ட்ரெயினும் வேணாம் ...



கடந்த 22 ம் தேதி சரயு-யமுனா ரயிலில் பயணம் செய்த பாஜகவின் தலைவரும் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான லட்சுமிகாந்த் சௌலா கோபத்தில் வெடித்துத் தள்ளியுள்ளார்.

அவர் பயணித்த ரயில் பத்து மணி நேர தாமதத்தில் செல்ல, உணவும் நீரும் இல்லாமல் பயணிகள் பட்ட அவஸ்தையைப் பார்த்த அவர் ஒரு வீடியோ மூலமாக

"புல்லட் ட்ரெயினோ ராஜ்தானி, சதாப்தி ரயில்கள் தேவை இல்லை. இருக்கும் ட்ரெயினை உருப்படியாக ஓட்டை உடைசல் இல்லாமல் ஓட்டுங்கள். நடைபாதைகளில் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் பயணிகள் மீது அக்கறை செலுத்துங்கள்"

என்று மோடியிடமும் ரயில்வே மந்திரி பியூஷ் கோயலையும் சூடாக கேட்டுள்ளார்.

செய்தி மற்றும் காணொளி இணைப்பு இங்கே உள்ளது

பாஜக ஆட்களே மோடியை திட்டத் தொடங்குவது அவரை அக்கட்சி ஆட்களே எதிர்க்கத் தொடங்கி விட்டனர் என்பதன் அடையாளம். 

அந்த வெக்கையைக் காட்டிலும் . . .




















நேற்று வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுதிலிருந்தும் சுமார் எழுநூறு இன்சூரன்ஸ் ஊழியர்கள் திரண்டிருந்தனர். வெண்மணி நினைவகம் நோக்கி பேரணியாய் புறப்படும் முன்னர் ஒரு சிறிய கூட்டம் நடைபெற்றது.

சங்கத்தலைவர்கள் தோழர்கள் எம்.கிரிஜா, கே.சுவாமிநாதன், என்.ஆனந்த், ஆர்.புண்ணியமூர்த்தி ஆகியோரைத் தவிர தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வனும் உரையாற்றினார்.


அவரது உரை மிகவும் முக்கியமானது. அதிலிருந்து சில பகுதிகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

“வெண்மணி குறித்த வரலாறை தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியை நடுத்தர வர்க்க ஊழியர்கள் செய்திட வேண்டும்.

வெண்மணி கொடூரம் நிகழ்ந்த போதுதான் தோழர் மைதிலி சிவராமன் அமெரிக்காவிலிருந்து திரும்பி இருந்தார். அவர் வெண்மணியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். கொடூரத்திற்கு காரணமான பண்ணையார்களையும் சென்று சந்தித்தார்.

ஏன் இந்த கொடூரம்?
அவர்கள் கூலி உயர்வு கேட்டது பிரச்சினையா?
செங்கொடியை அகற்றி உங்களின் மஞ்சள் கொடியை ஏற்ற மறுத்தது பிரச்சினையா?

 என்று கேட்டதற்கு பண்ணையார்கள் சொன்ன  என்ன தெரியுமா?

கூலி உயர்வு என்பது பிரச்சினையே இல்லை. அரை படி அல்ல ஒரு படி கூட கொடுத்து விடலாம். அவர்கள் செங்கொடியை பிடித்துக் கொண்டு இருப்பதுதான் பிரச்சினை.

அப்படியென்றால் செங்கொடியை பிடித்திருப்பதை உங்களுடைய ஈகோ பிரச்சினையாகப் பார்க்கிறீர்களா என்றும் அவர் கேட்கிறார்.

அது ஈகோ பிரச்சினை இல்லை. செங்கொடியைப் பிடித்ததும் அவர்களுக்கு ஒரு திமிர் வந்து விட்டது.  நாங்கள் முன்பெல்லாம் வேலைக்கு வராத கூலிகளை சாட்டையால் அடிப்போம். சாட்டையின் நுனியில் கட்டப்பட்டிருக்கும் கல், சதையை பிய்த்துக் கொண்டு வரும். கட்டி வைத்து அடிக்கையில் தாகம் என்று கதறினால் சாணியைக் கறைத்து சாணிப்பால் புகட்டுவோம். செங்கொடி வந்ததும் அது எல்லாம் நின்று போனது.

முழங்காலுக்கு மேல்தான் புடவை கட்ட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அவர்கள் விரைவாக வேலை செய்யவும் அவர்களை நாங்கள் ரசிக்கவும் அப்படி வைத்திருந்தோம். அது மாறி விட்டது.

ஏட்டி என்று  அழைத்தால் ஏண்ட்டி என்று திரும்பி அழைக்கவும் "அடித்தால் திருப்பி அடி" என்றும் கற்றுக் கொடுத்து விட்டார்கள்.  

எங்கள் வீட்டு புழக்கடையில் நின்று மீந்து போன கஞ்சியை சிரட்டையில் வாங்கிக் குடித்தவர்கள் எல்லாம் வீட்டு வாசலில் நின்று  ஐந்து மணியாகி விட்டது, கட்சிக்கூட்டம்  இருக்கு, வரட்டுமா ஆண்டை என்று சொல்லிப் போகிறார்கள்.

இதற்கெல்லாம் பாடம் கற்றுக் கொடுத்து செங்கொடி இயக்கத்தை அழிக்கத்தான் செய்தோம்”

என்றெல்லாம் ஆணவமாக பதில் கொடுத்தார்கள்.

இதையெல்லாம் கேட்ட பின்புதான் தோழர் மைதிலி சிவராமன் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

சாதாரண மக்களுக்கு இன்னமும் நம்பிக்கை அளிப்பது செங்கொடிதான் என்பதை மக்களிடத்தில் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும்.”

கூட்டம் நடக்கும் போதும் சரி, பின்பு வெண்மணி நினைவகம் சென்று திரும்பும் போதும் சரி மிகக் கடுமையான வெயில்.

வழக்கத்தை விட மிக அதிகமான கூட்டம். உள்ளே செல்வதை விட திரும்புவது மிகவும் சிரமமாக இருந்தது. நடையும் வழக்கத்தை விட இரட்டிப்பு தூரம்தான். 

உச்சி வெயில் நேரடியாக தாக்கியது. ஆனாலும் அது அவ்வளவு கடுமையாக இல்லை.

ஆமாம்.

தன் உரையைத் தொடங்கும் முன்பாக தோழர் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.

“இப்போது நல்ல வெயிலாகத்தான் உள்ளது. ஆனாலும் வெண்மணியில் வெந்து கருகிய தோழர்கள் சந்தித்த வெக்கையை விட ஒன்றும் பெரிதான ஒன்றை நாம் அனுபவிக்கப் போவதில்லை”

ஆம்,

அவர்கள் அனுபவித்த அந்த மரண வாதையை விடவா நம் சில நிமிட சிரமங்கள் பெரிது !!!