Monday, February 4, 2019

மோசடி அழைப்பு - உஷார், உஷார்


6206398218 லிருந்து போன் வந்தால் ???

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வரும் செய்திதான்.

எனக்கும் இந்த அழைப்பு வந்ததால் அந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

6206398218 என்ற எண்ணிலிருந்து காலை 9.15 மணிக்கு அழைப்பு வந்தது.

இஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பிராஞ்ச் மேனேஜர் பாலமுருகன் பேசறேன் என்று அந்த நபர் கூறினான்.

“ஏ.டி.எம் கார்டெல்லாம் இன்னியோட லேப்ஸ் ஆகுது. உங்க நம்பர் சொன்னா ரினியுவல் செஞ்சிடலாம். உடனே நம்பரை சொல்லுங்க”

“எனக்கும் ஸ்டேட் பேங்குக்கும் சம்பந்தமே கிடையாதே, நீ எதுக்கு எனக்கு போன் செய்யறே”

என்று ஒருமையில்தான் நான் கேட்டேன்.

ஹோட்டலில் சர்வர் “இட்லி, தோசை, பொங்கல், பூரி” என்று அடுக்குவதைப் போல

“இந்தியன் பேங்க், கனரா பேங்க், கரூர் வைஸ்யா பேங்க், யூனியன் பேங்க் எல்லாத்துக்கும் நாந்தான் இன்சார்ஜ். இன்னிக்குள்ள ரெனியூ செய்யலன்னா, ஏ.டி.எம் கார்டை யூஸ் செய்ய முடியாது. உங்க பணம்லாம் பேங்க் ஃப்ரீஸ் செஞ்சுரும்”

என்றதும்

“டேய், ஃப்ராடு, நானே ஒரு பேங்க் மேனஜர், என்னையே ஏமாத்தப் பார்க்கறீயா”

என்று சத்தம் போட்டவுடன் போனை வைத்து விட்டான்.

அந்த எண்ணை சேமித்து வைத்துக் கொண்டு பார்த்தால் அந்த எண்ணிற்கு வாட்ஸப் கணக்கெல்லாம் இருப்பது தெரிந்தது.

“True Caller” மூலம் சோதித்துப் பார்த்தால் அந்த எண்ணின் பெயர் Altad Andi  என்று அதைக் காண்பித்தது.

வேறு ஒரு எண்ணிலிருந்து கூப்பிட்டு

“பேங்க் மேனேஜர்” னு போன் செஞ்சு ஃப்ராடு செய்யறியாமே. உன் மேல கம்ப்ளைன்ட் வந்திருக்கு”

என்று ஆரம்பித்த உடனேயே போனை துண்டித்து விட்டான்.

வடிவேலு படத்தில் கிட்னி திருடுவது போல, இதே வேலையாகவே ஒரு கும்பல் அலைகிறது போல.

ஆகவே எச்சரிக்கையாக இருப்பீர்.

வங்கிகளும் சரி, எல்.ஐ.சி யும் சரி எப்போதும் தொலைபேசி செய்து ஏ.டி.எம் எண் அல்லது பாஸ்வோர்ட், பின் எண்ணைக் கேட்பதே கிடையாது.

அப்படி கேட்பவர்கள் மோசடிப் பேர்வழிகள். அப்படிக் கேட்பவர்களை நன்றாக திட்டி விடுங்கள்.


Sunday, February 3, 2019

மோடியின் ஏப்பச்சத்தம் கேட்டதா?

தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதி தீக்கதிர் நாளிதழில்  இன்று வெளியான கட்டுரையின் அடுத்த பகுதி.


ஏப்ப சத்தம் கேட்கிறதே!


எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்டங்களுக்கு முறையே 35 சதவீதம், 28 சதவீதம் பட்ஜெட் ஒதுக்கீட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளன. இது மேலோட்டமாக பார்க்கும் போது ஏதோ மத்திய அரசுக்கு புது பரிவு வந்திருக்கிறதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. 

ஆனால் எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்டங்களுக்கான வழிகாட்டல்கள் என்ன? ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு? என்று பார்த்தால் அதிர்ச்சியே மிஞ்சும். இப்போது பட்ஜெட்டில் திட்ட செலவுகள், திட்டமில்லாத செலவுகள் என பிரிக்கப்படுவதில்லை. எனவே திட்ட செலவுகளில் 15 சதவீதம் எஸ்.சி துணைத் திட்டத்திற்கும், ஏழரை சதவீதம் எஸ்.டி துணைத் திட்டத்திற்கும் என்கிற பழைய வழிகாட்டல்களை மாற்ற வேண்டி வந்தது. 

ஜாதவ் குழு அமைக்கப்பட்டு அது மொத்த பட்ஜெட் செலவினத்தில் முறையே 4.63 சதவீதம்,2.32 சதவீதம் மேற்கண்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைத்தது. 

கணக்கு போட்டு பாருங்கள்! இந்த 2019-20 பட்ஜெட்டில் மொத்த செலவினம் ரூ.27.84 லட்சம் கோடி. 

ஜாதவ் குழு பரிந்துரைகள் படி எஸ்.சி துணைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகை ரூ. 1,28,892 கோடிகள். ஆனால் பட்ஜெட் தந்திருப்பதோ ரூ. 76801 கோடிகள். ஸ்வாகா ஆகியிருப்பது ரூ.52,091 கோடிகள். 

எஸ்.டி. துணைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகை ரூ. 64400 கோடிகள். ஒதுக்கப்பட்டிருப்பது ரூ. 50086 கோடிகள். பறிக்கப்பட்டிருப்பது ரூ. 14314 கோடிகள். 

இது மட்டுமல்ல. இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போட்ட முதல் பட்ஜெட்டில் இருந்த எஸ்.சி துணைத் திட்ட ஒதுக்கீட்டை 39 சதவீதம் குறைத்தார்கள். ரூ. 50548 கோடிகளில் இருந்து ரூ. 30851 கோடிகளாக... 

மூன்றாவது பட்ஜெட்டில்தான் மீண்டும் பழைய ரூ.50,000 கோடியை ஒதுக்கீடு தொட்டது. இது ஐந்தாவது பட்ஜெட். 

தேர்தல் நெருங்குகிறது. 35 சதவீத உயர்வு என ஏமாற்றுகிறார்கள்.

பாஞ்சாலி, பரஞ்சோதி, ரயிலு, மயிலு . . .





மத்திய பட்ஜெட்டில் வழக்கம் போல தமிழகம் ரயில்வே திட்டங்களில் வஞ்சிக்கப்பட்டுள்ளதை எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அம்பலப் படுத்துகிறார். 

தீக்கதிரில் வெளியான அவரது கட்டுரையின் ஒரு பகுதி. மீதமுள்ள பகுதிகளும் இன்று  முழுதும் வெளியாகும். 

மோடி பக்தர்கள் முட்டு கொடுக்க வாய்ப்பில்லாத வகையில் உண்மை இருக்கிறது.


பரஞ்சோதிக்காக காத்திருக்கும் பாஞ்சாலி

கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் இப்படித்தான் உணர்ச்சிகரமாய் முடியும். தமிழக ரயில்வே திட்டங்களும் பட்ஜெட் நிதிக்காக இப்படி காத்திருக்கின்றன. தமிழ்நாடு இரட்டை வழி இருப்புப் பாதை திட்டங்களின் மொத்த மதிப்பீட்டிற்கும் பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் பெரும் விரிசல் உள்ளது. 

102 கி.மீ வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி-நாகர்கோவில் இருப்பு பாதைக்கு ஒதுக்கீடு ரூ. 183 கோடி. திட்ட மதிப்பீடு ரூ.1003 கோடி. 

86 கி.மீ கன்னியாகுமரி- நாகர்கோவில்- திருவனந்தபுரம் இருப்பு பாதைக்கு ரூ. 133 கோடி. திட்ட மதிப்பீடு ரூ.1432 கோடி. 

160கி.மீ மதுரை- வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி இருப்புப் பாதை திட்டத்திற்கு பட்ஜெட் செய்துள்ள ஒதுக்கீடு ரூ. 169 கோடி. அதன் மொத்த மதிப்பீடு ரூ.1182 கோடி. போனஆண்டு ஒதுக்கீடு ரூ. 75 கோடி. உயர்வு என கொண்டாட முடியுமா? 

2020 ஆம் ஆண்டிற்குள்ளாக நிறைவேற வேண்டியரூ. 3615 கோடி ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.735 கோடிகளாக மட்டுமே உள்ளது. 

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விழுப்புரம்-தஞ்சாவூர் இரு வழிப்பாதைக்கான ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றமே. 

இதுவெல்லாம் தென், மேற்கு மாவட்டங்களின் சமூக, பொருளாதார  வளர்ச்சியோடு தொடர்புடையதாகும்.

Saturday, February 2, 2019

மோடியின் 22 வது அடிக்கல் நாட்டு விழா




மோடி ஜும்லா பட்ஜெட்

விரிவாக எழுத வேண்டும். அதற்கு முன்பாக இது இடைக்கால விமர்சனம்.

வருமான வரி உச்சவரம்பு ஐந்து லட்சமாக உயர்த்தப்படும் என்று நம்பி கடந்த வருடம் வரை ஏமாந்தவர்களுக்கு இந்த வருடம் வித்தியாசமான ஏமாற்றம்.

வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படவில்லை.  ஐந்து லட்சம் ரூபாய் வரைக்குமே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வரி விலக்கு.

ஆனால் அவசரத்தில் ஊடகங்கள் அறைகுறையாக செய்தியை வெளியிட  அதை நம்பி ஏமாந்தவர்கள் ஏராளம்.  நம்பியவர்களை இப்படி எல்லாம் ஏமாற்ற மோடியால் மட்டுமே முடியும்.

ஆறரை லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள், ஒன்றரை லட்சம் ரூபாய் சேமித்தால் வருமான வரி கட்ட வேண்டாமே என்று யாரும் சொல்லாதீர்கள்.

சேமித்தால் – ஆம் சேமித்தால் மட்டுமே.

விவசாயிகளுக்கான பட்ஜெட்டாம்.

இவர்களிடம் என்ன கேட்டோம்? இல்லையில்லை, என்ன செய்வதாக சொன்னார்கள்?

உற்பத்திச்செலவை விட கூடுதல் 50 % சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது.

என்ன கொடுத்துள்ளார்கள்?

குடும்பத்திற்கு மாதம் ஐநூறு ரூபாயாம். அதுவே கைக்கு வரும் நாள் வரை நிச்சயமில்லை. இந்த தொகையை வைத்து பூச்சி மருந்து வேண்டுமானால் வாங்கலாம். அதைத்தான் மோடியும் விரும்புகிறார் போல.

மாதம் நூறு ரூபாய் கட்டி முப்பத்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு மூவாயிரம் ரூபாய் பென்ஷன் என்ற திட்டத்திற்கு அண்ணன் “என்னத்த கன்னையா “வசனம்தான் பொருத்தம்

வரும். ஆனா வராது.

ஹரியானாவில் இருபத்தி இரண்டாவது எ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனை அமைக்கப்படுமாம்.

ஹலோ, இருபத்தி இரண்டாவது அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும்னு சொல்லுங்க.

இதுவரைக்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்த எதுக்கும் நிதியே ஒதுக்கலை. மதுரைக்கும்தான்.

வாயால் வடை சுடுவது எப்படி என்பதை உலகில் உள்ள ஆட்சியாளர்கள் எல்லாம் மோடியிடம் கற்றுக் கொள்கிறார்களாம்.

பட்ஜெட் உரையை முழுமையாக படிக்க வேண்டும். அதிலும் பொடி எழுத்துக்களில் யாருடைய கவனத்திற்கும் வராதது போல ஏதாவது இருக்கும். அதில்தான் மோடி தன் எஜமானர்களுக்கான விஸ்வாஸம், பேட்ட எல்லாவற்றையும் காண்பித்திருப்பார்.

மாட்டு மூளைகள் மனித உரிமையை மதிக்காது


பேஷ்வாக்களை தலித்துக்களின் மஹர் ரெஜிமெண்ட் வெற்றி கொண்டதை நினைவு கூறும் பீமா கோரேகான் வெற்றிச் சின்னத்தில்  இருநூறாவது ஆண்டை கொண்டாடியதில் இருந்தே வெறி கொண்டு அலைகிறது மோடி அரசு. மனித உரிமை செயற்பாட்டாளர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. அங்கே நடந்த கலவரத்துக்குக் காரணமான காவிகளுக்குப் பதிலாக கொஞ்சமும் தொடர்பில்லாத மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தலித் மக்கள் மத்தியில் பணியாற்றுபவர்கள் ஆகியோரை கைது செய்கிறது. 

அண்ணல் அம்பேத்கரின் உறவினரும் அறிவு ஜீவியுமான தோழர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களை கைது செய்ய துடித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர் முன் ஜாமீன் வாங்குவதற்கு வசதியாக அவருக்கு நான்கு வார அவகாசம் அளிக்கும் ஆணையை 14.01.2019 அன்றுதான் உச்ச நீதி மன்றம் வழங்கியது.  

ஆனாலும் கூட  இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரத்தில் ஈடுபட்ட கிரிமினல் குற்றவாளிகள் அனைவர் மீதான வழக்குகளையும் சில தினங்கள் முன்பாகத்தான் மொட்டைச் சாமியார் வாபஸ் வாங்கினார்.

காந்தி கொலையை மறு உருவாக்கம் செய்த பூஜா சாமியார் தலை மறைவாகி விட்டார்.

முகமது அக்லக்கை அடித்துக் கொன்ற மாட்டுக் குண்டர்களுக்கு என்.டி.பி.சி நிறுவனத்தில் வேலை பரிசாக வழங்கப்பட்டது.

ஆனால் உச்ச நீதி மன்ற உத்தரவு இருந்த போதும் ஒரு அராஜகக் கைது நடந்துள்ளது.

மாட்டு மூளை கொண்ட மோடி வகையறாக்கள் மனித உரிமையை மதிக்கத்தான் செய்யாது.

தோழர் ஆனந்த் டெல்டும்ப்டே கைதை கண்டிப்போம்.
விடுதலை செய் என்று குரல் கொடுப்போம்.


Friday, February 1, 2019

1050 பக்க பரவச அனுபவம்




















1050 பக்கங்கள் கொண்ட காவல் கோட்டம் நாவலைத்தான் சொல்கிறேன். சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் வாங்கினாலும் புத்தகத்தின் கனம் வாசிப்பை துவக்குவதற்கான தயக்கத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது. 

ஆனந்த விகடனில் தொடராக வேள்பாரி படிக்கத் தொடங்கி பரம்பில் மூழ்கிய பின்பு  மீண்டும் ஒரு முறை நூல் வடிவில் படிக்கும் சுகானுபவத்தைப் பெற முன்பதிவு செய்த போதுதான் இனியும் காவல் கோட்டத்தை படிக்காமல் தள்ளிப் போடக்கூடாது என்று முடிவு செய்து படிக்கத் தொடங்கினேன்.

ஜனவரி மாதத்தில் மட்டும் ஐந்து நீண்ட பயணங்கள். அவை அத்தனையும் பயணத்தின் சுமை கொஞ்சமும் தெரியாமல் காவல் கோட்ட  வாசிப்பிலேயே கடந்தது. வேலூர் மாவட்டத்துக்கு வந்த டி.டி.வி.தினகரனுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களைக் கூட கவனிக்காத அளவிற்கு மூழ்கிப் போயிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மாலிக்கபூரின் தாக்குதலில் தொடங்கும் மதுரையின் வரலாறு வெள்ளையரின் வெறி கொண்ட தாக்குதலில் முடிகிறது.

கிருஷ்ணதேவ ராயரின் செல்லப்பிள்ளை விஸ்வநாத நாயக்கர் காலம் தொடங்கி நாயக்கர் ஆட்சிக்காலம் முழுதையும் விவரிப்பது நாவலின் ஒரு பகுதி என்றால் திருமலை நாயக்கரின் அரண்மனையில் கன்னம் வைத்து நுழைந்து அரசு முத்திரையை களவாடிக் கொண்டு போய் மதுரை நகரை காவல் செய்யும் உரிமையைப் பெற்ற தாதனூர் கள்வர்கள் பற்றியது நாவலின் அடுத்தப் பகுதி

தாதனூர் கள்வர்களின் காவல் உரிமையை பறித்து அவர்களை அடிமைகளாக மாற்ற வெள்ளையர்கள் பின்பற்றிய சூழ்ச்சிகளும் சதிகளும் ரத்தம் சொட்ட சொட்ட விவரிக்கப்பட்டுள்ளது இறுதிப் பகுதி.

1050 பக்க நாவலின் கதையை முழுமையாக விவரிப்பது, விமர்சிப்பது என்பது என்னால் இயலாத காரியம்.

என்னை கவர்ந்த சில அம்சங்களைப் பற்றியும் எனக்கு தோன்றிய சில விமர்சங்களை முன்வைப்பதோடும் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அடிப்படையில் இது ஒரே கதை என்று சொல்ல முடியாது. வரலாற்றில் நடந்த  எண்ணற்ற கதைகள் ஒரு மாலை போல தொடர்ச்சியாக பிணைக்கப்பட்டுள்ளது.  
கள்வர்களே காவலர்களாகவும் இருக்கிற முரண்பாடுகள்தான் நாவலின் பிரதான முடிச்சு.

மிக அற்புதமான தமிழ்நடையை நாவல் முழுதும் காண முடிந்தது. நாவலின் மிகப் பெரிய பலமாக தமிழ் மொழியை கையாண்ட விதத்தைக் கூறுவேன். வேள்பாரியில் இதை விட பல மடங்கு உச்சத்தில் உள்ளது என்பது வேறு விஷயம்.

நாவலில் வரும் ஆண்கள் பலசாலிகளாக, பராக்கிரமசாலிகளாக இருந்தாலும் கொஞ்சமாகவே வரும் பெண்கள் அவர்களை விட இன்னும் வலிமையாக அழுத்தமானவர்களாக படைக்கப்பட்டுள்ளார்கள். கங்காதேவி, மங்கம்மா, மீனாட்சி, கழுவாயி, குஞ்சரத்தமாள், காத்தாயி, அங்கம்மா, பின்னியக்காள், மேரி ஆகியோர் எண்ண முடியாத அளவு ஆண் பாத்திரங்களுக்கு மத்தியில் பிரகாசமாக ஒளிர்கிறார்கள்.

தாதனூர்காரர்களின் களவு நுட்பங்கள் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ஆனால் அவர்கள் ஊருக்கே வந்து அவர்கள் அறியாமல் களவு செய்த செங்கன் கதை அவற்றையெல்லாம் விட சுவாரஸ்யம்.

மதுரைக் கோட்டையை இடிக்க வெள்ளையர்கள் கையாண்ட தந்திரத்தையும் தங்களின் சுய நலனுக்காக செல்வந்தர்கள் எதையும் செய்வார்கள் என்பதும் நன்றாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் காவலர்கள் மதுரை காவலை தாதனூர்காரர்களிடமிருந்து பறிக்க செய்யும் முயற்சிகள் படிக்கும் நமக்கு பதட்டத்தை அளித்தது என்பதையும் அவர்கள் அதை முறியடித்த போது மகிழ்ச்சியை அளித்தது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தாது வருடப் பஞ்ச காலத்தையும் கொள்ளை நோய், பிளேக் நோய்க் காலங்களையும் பற்றி படிக்கையில் அந்த மக்களின் துயரம் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

தேவதாசியான குஞ்சரத்தம்மாள் தனது பெரும் செல்வம் அனைத்தையும் தாது வருடப் பஞ்சத்தின் போது ஏழை மக்களுக்கு உணவிட செலவழித்து கடைசியில் ஓட்டாண்டியாகி இறந்து போனார் என்ற பகுதி உண்மையிலேயே உருக்கம். அவரது நினைவை மூடி மறைக்க செல்வந்தர்கள் முயன்றார்கள் என்பது இன்றும் நிகழும் யதார்த்தம்.

முல்லைப் பெரியார் அணை கட்டுகையில் நேர்ந்த துயரங்கள், இலங்கை தேயிலைத் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட தொழிலாளர்களின் இன்னல்கள் ஆகியவையும் உருக்கமாகவே எழுதப்பட்டுள்ளது.

ஆச்சாரத்தை பின்பற்றிய அக்ரஹாரங்கள் அதிகாரத்தின் ருசி அறிந்ததும் மாறிய நிகழ்வும் சரியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல ஆவணங்கள் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து பல விமர்சனங்களை படித்துள்ளேன். சம்பவங்கள், உரையாடல்கள் என்று கதையை இழுத்துச் செல்வதற்கு மாறாக காலத்தை கடத்தும் உத்தியாகவே நான் பார்க்கிறேன்.

நாவல் குறித்து சில விமர்சனங்கள் எனக்கும் இருக்கத்தான் செய்கிறது.

திருமலை நாயக்கர் காலத்தில் நிகழ்ந்த மதுரை வீரன் கதை நாவலில் தொடப்படாதது ஏன் என்று தெரியவில்லை.

நாவலில் பல்வேறு இன மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் பற்றி எதுவுமே எழுதப்படவில்லை.

களவு பற்றி விரிவாக எழுதப்பட்ட அளவிற்கு காவல் பற்றி எழுதப்படவில்லை.

நாவலின் முக்கியமான கதாபாத்திரமான சின்னானின் வாழ்க்கை ரகசியம் என்னவென்றே சொல்லப்படவில்லை.

குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழே தாதனூர் கள்வர்கள் ஒடுக்கப் படுகின்றனர். அந்த சட்டம் வந்த கதையையும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்.

சாகித்ய அகாடமி காலத்தில் வந்த விமர்சனங்களை படித்துள்ளேன். இப்போது அவை எதையும் படிக்கக் கூடாது என்று தெளிவாக இருந்தேன்.

ஆனாலும் முன்பு படித்தவற்றில் உருப்படியான ஒரு விமர்சனத்தை நானும் வழி மொழிகிறேன்.

இந்த நாவல் உருவாக்கத்திற்கு உதவிகரமாக இருந்தவர்கள், மூல நூல்கள் ஆகியவை பற்றிய பட்டியலை அளித்திருக்கத்தான் வேண்டும், அதனால் ஒரு பத்து பக்கங்கள் அதிகரித்திருந்தாலும் கூட.

ஆனால் இருநூறு பக்கம் கூட படிக்க முடியவில்லை. ஒரே இழுவை போன்றவற்றையெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எந்த ஒரு பக்கத்திலும் கூட இனி படிக்க முடியாது என்ற உணர்வு ஏற்படவே இல்லை.

அத்தனை பக்கங்களையும் நான் ரசித்துத்தான் படித்தேன். ஒரு கணம் கூட சோர்வென்பதே இல்லை. அந்த விமர்சனங்களுக்கு உள்நோக்கம் உண்டா என்ற ஆராய்ச்சி இப்போது அவசியம் இல்லை. ஆனால் ஒரு போலிப் பெயரில் வலைப்பக்கம் தொடங்கி எழுதிய ஒரு மனிதனுக்குள் ஏதோ வன்மம் ஒளிந்து கொண்டிருந்தது நிச்சயம். வன்மமும் வக்கிரமும் இல்லாதவர்கள் நிச்சயம் ஃபேக் ஐ.டி க்குள் தங்களை மறைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது என் சொந்த அனுபவம்.

சாகித்ய அகாடமி விருதுக்கு முழுமையான தகுதி உள்ள நூல் என்று கண்டிப்பாக சொல்வேன். கோவி.மணிசேகரனின் குற்றாலக் குறிஞ்சி படித்து நொந்து போன கதை நினைவுக்கு வந்தது.

பக்கங்கள் அதிகம் என்ற விமர்சனத்தையும் படித்துள்ளேன். பக்கங்களை சுருக்க வேண்டும் என்பதற்காக சுருக்கி அது குறைப் பிரசவமான இரண்டு நூல்கள் (ஒரே எழுத்தாளருடையது) பற்றி விரைவில் எழுதுவேன்.

அற்புதமான மொழி நடையில் கடுமையான உழைப்பின் வாயிலாக அளித்த 1050 பக்க பரவச வாசிப்பு அனுபவம் அளித்த ஒரு நாவலை  தோழர் சு.வெங்கடேசனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கடந்த வருடம் எங்கள் பண்ருட்டி மாநாட்டு கலை இரவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டு கடைசி நிமிடம் வராமல் ரத்து செய்த வருத்தமும் கோபமும் இருந்தாலும் கூட.

காவல் கோட்டத்தை விட இன்னும் சிறந்த, அற்புதமான நூல் ‘வேள்பாரி”

அதற்கு பல விருதுகள் கிடைக்கவும் தோழர் சு.வெ விற்கு வாழ்த்துக்கள்




பாரதி பாடல்தான் பதில் . . .



ஜாக்டோ ஜியோ போராட்டம் முடிவுற்ற சூழலில் ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறி பல பதிவுகள் வேகமாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. 

அதிலே சொல்லப்பட்ட ஒரு அறிவுரை உங்கள் மாணவர்களுக்கு பெரியார், மார்க்ஸ், லெனின் பற்றி சொல்லிக் கொடுங்கள் என்பது. இது மிகவும் சரியானது. இதிலே எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. 

ஆனால் இதைச் சொல்வதற்கு முன்பாக சொல்லப்பட்ட ஒரு விஷயத்தில்தான் நெருடல் வருகிறது.

ஆசிரியர்களே, நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் பாரதியார், விவேகானந்தர், சங்கராச்சாரி ஆகியோரை குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

எந்த ஒரு ஆசிரியரும் சங்கராச்சாரியையோ அல்லது விவேகானந்தரையோ உயர்த்திப் பிடிப்பதாகத் தெரியவில்லை. பாரதியை மட்டும் தனித்துச் சொல்லக் கூடாது என்பதற்காக மீதமுள்ள இருவரையும் இணைத்துள்ள மோசமான உத்தியாகத்தான் பார்க்கிறேன்.

பாரதி வாழ்ந்த காலத்தின் சமூகச் சூழலைப் பற்றி கொஞ்சமும் கருதாமல் பாரதிக்கு ஒரு பிற்போக்கு முத்திரை அளிக்கும் மோசமான அணுகுமுறையை மதிமாறன் வகையறா ஆட்கள் என்றைக்கு நிறுத்தப் போகிறார்களோ?

அந்த சந்தர்ப்பவாத கபடவேததாரிகளுக்கான பதிலை பாரதியே தன் பாடல்களில் சொல்லி விட்டு போயுள்ளான். .