Tuesday, December 4, 2018

வெட்டவெளியில் - கைக்குழந்தையுடன் . . .


பிறந்து 17 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் வெட்டவெளியில் தவித்த முத்துலெட்சுமி

உதவிக்கரம் நீட்டிய எல்ஐசி ஊழியர்கள்




புதுக்கோட்டை, டிச.3-பிறந்து 17 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் வெட்டவெளியில் கடும் குளிருடன் புதுக்கோட்டை அருகே நெய்வாசல்பட்டியில் அவதிப்பட்டு வருகிறார் முத்துலெட்சுமி. அவருக்கு எல்ஐசி ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். 

புதுக்கோட்டை அருகே நெய்வாசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகள்முத்துலெட்சுமி. இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பிரசாத்துக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கர்ப்பமடைந்த முத்துலெட்சமி பிரசவத்திற்காக கடந்த மாதம் தாய்வீடான நெய்வாசல்பட்டிக்கு வந்தார். கஜா புயல் வீசிய கடந்த 16ஆம்தேதியன்று காலையில் முத்துலெட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டோவில் முத்துலெட்சுமி வீட்டிலிருந்து ஏறும்போது முத்துலெட்சுமியின் கண்முன்னாலேயே தங்கியிருந்த வீடு புயலில் தரைமட்டமானது. 

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துலெட்சுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் அழகான ஆண்குழந்தை பிறந்தது. பிரசவத்தில் பிரச்சனை இருந்ததால் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை வரைமருத்துவமனையில் இருந்த முத்துலெட்சுமி அன்று மதியம் வீடு திரும்பினார்.

ஆட்டுக்கொட்டகையில்

வீடு தரை மட்டமானதால் ஆட்டுக் கொட்டகையில் முத்துலெட்சுமியும் குழந்தையும் தங்க வைக்கப்பட்டுள்ளார். வெட்டவெளியில் ஆடுகளை கட்டுவதற்காக தாழ்வாகக் கட்டப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் கடந்த மூன்று நாட்களாக முத்துலெட்சுமி தங்கி வருகிறார். 

இந்நிலையில், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் என்.கண்ணம்மாள், வி.லதாராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் உள்ளிட்டோர் வெட்டவெளியில் கடும் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த முத்துலெட்சுமியையும், குழந்தையையும் பார்த்தனர். 

அதிர்ச்சியடைந்த அவர்கள் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான மெத்தை, துணிகள், சோலார் விளக்கு, கொசுவர்த்தி, ஹார்லிக்ஸ் பாட்டில் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினர். 

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவில் இப்படி அவதிப்பட்டு வரும் முத்துலெட்சுமியையும், குழந்தையையும் கவனிக்க ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நேரமில்லையோ?

நன்றி : தீக்கதிர் 04.12.2018

Monday, December 3, 2018

பராசக்தி -பார்ப்போம், பரப்புவோம்



சமீபத்தில் கோவாவில் நடந்து முடிந்த சர்வதேச திரைப்பட விழாவில் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களை கௌரவிக்கக் கூடிய விதத்தில் அவர் வசனம் எழுதி வரலாறாகிய பராசக்தி படத்தை ஒளி பரப்ப இருந்தார்கள்.

ஆனால் காவிகள் உள்ளே புகுந்து குழப்பமேற்படுத்தி பராசக்தி படத்தின் திரையிடலை தடுத்து விட்டார்கள். பராசக்தி படத்திற்குப் பதிலாக மலைக்கள்ளன் படத்தை திரையிட்டுள்ளார்கள்.

அறுபது வருடங்களுக்குப் பிறகும் காவிகள் பராசக்தி திரைப்படத்தை, அதன் அனல் கக்கும் வசனங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

“கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது”

“பக்தி பகல் வேஷமாகி விடக் கூடாது”

“பராசக்தி எந்த காலத்திலடா பேசினாள்”

என்ற இடி முழக்கங்கள் அவர்களின் இதயத்தை நடுங்க வைக்கிறது. வயிற்றை கலக்க வைக்கிறது.

அய்யப்பனையும் அயோத்தி ராமனையும் வைத்து கலவர அரசியல் நடத்தும் காவிக்கயவர்கள், கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விட்டது என்ற வசனம் கேட்கும் மக்களுக்கு கத்துவாவில் ஆசிபாவுக்கு நடந்த அவலமும் சிலைத் திருட்டு கேவலமும் நினைவுக்கு வந்தால் என்ன செய்வது என்று அஞ்சி விட்டார்கள்.

அதனால்தான் பராசக்தியை திரை போட்டு மறைத்து விட்டார்கள்.

அவர்கள் மறைத்தால் என்ன? நாம் பல்லாயிரம் முறை பகிர்ந்து கொண்டே இருப்போம்.

இந்தியத் திரை வரலாற்றின் மறக்க முடியாத நீதிமன்றக் காட்சி இங்கே



பராசக்தி திரைப்படத்தினை முழுமையாக கண்டு களிக்க இங்கே இணைப்பு    உள்ளது.

பராசக்தியை பார்க்க பார்க்க காவிகளுக்கு எரிச்சல் வருமென்றால் நாம் வாய்ப்புள்ள அனைத்து முறைகளிலும் பகிர்ந்து அந்த எரிச்சலை அதிகப்படுத்திக் கொண்டே இருப்போம்.

பிகு

நீதிமன்றக் காட்சியின் காணொளியை நான் கேட்டவுடன் அனுப்பிய எங்கள் தோழர் ஆரோக்கியராஜிற்கு நன்றிகள் பல. 

பத்தாவது மாடியிலிருந்து . . .

போன வாரம் சனிக்கிழமையன்று கோட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்காக எர்ணாகுளம் சென்றிருந்தேன்.

கூட்டம் நடந்த எல்.ஐ.சி எர்ணாகுளம் கோட்ட அலுவலகக் கட்டிடத்தின் பத்தாவது மாடியிலிருந்து எடுத்த படங்கள் கீழே உள்ளது.

கடலே கண்ணுக்குத் தெரியாமல் கட்டிடங்கள் மறைத்து விட்டன.





Sunday, December 2, 2018

ஆபரேஷனுக்குப் பதில் ஆயின்மென்டா?

ஜி.டி.பி கணக்குகள் பில்டிங் ஸ்ட்ராங்க்... பேஸ்மென்ட் வீக்...
பொருளியல் அரங்கம் 
க.சுவாமிநாதன்




வெள்ளிக்கிழமை மத்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. இந்து பிசினஸ் லைன் (01.12. 2018) தந்துள்ள தலைப்பு ‘இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவீதமாக விழுந்துள்ளது’ என்பதே.

ஜி.டி.பி ன்னா என்ன?

எந்த காலத்திற்கு கணக்கிடுகிறோமோ, அக்காலத்தில் நடைபெறும் சரக்கு மற்றும் சேவை உற்பத்திகளின் மொத்த மதிப்பின் கூட்டுத்தொகை ஆகும். “மொத்த உள்நாட்டு உற்பத்தியின்” ஆங்கில வார்த்தையின் சுருக்கமே ஜி.டி.பி. (G.D.P - Gross Domestic product) ஆகும். தற்போது அடிப்படை

ஆண்டாக (BASE YEAR) 2011-12 உள்ளது. அந்த ஆண்டில் நிலவிய விலைகளின் அடிப்படையிலேயே ஜி.டி.பி விகிதங்கள் கணக்கிடப்படுகின்றன.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அரசின் புள்ளிவிபரங்கள் தருகிற தகவல்கள் என்ன?

இது 2018-19 இரண்டாம் காலாண்டில் (Q2) மொத்த உள்நாட்டு உற்பத்தி 33.98 லட்சம் கோடிகளாகும். கடந்த ஆண்டு (2017-18) இதே காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 31.72 கோடிகளாக இருந்துள்ளது. கணக்கு கேட்டு பாருங்கள் ! 7.1 சதவீதம் என வளர்ச்சி விகிதம் மேற்கூறிய இரு  தொகைகளுக்கு இடையிலான வித்தியாசமே ஆகும். ஆனால் இந்த ஆண்டில் முதல் காலாண்டில் (2018 - 19) வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருந்தது. கடந்த மூன்று காலாண்டுகள் என்று பார்த்தாலும் தற்போதைய 7.1 சதவீதம் என்பதே மிகக்குறைவு.

விவசாயத் துறை வளர்ச்சி எப்படி உள்ளது?

பட்ட காலிலேயே படும் என்பது விவசாயத்துறைக்கே பொருந்துவதாகும். இக்காலாண்டில் அதன் வளர்ச்சி 3.8 சதவீதம் என்பது மதிப்பீடு. இதுவே முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜுன் 2018) 5.3 சதவீதமாக இருந்துள்ளது. இந்து பிசினஸ் லைன் (01.12.2018) வெளியிட்டுள்ள இன்னொரு செய்தி பாருங்கள்! நடப்பிலுள்ள “ராபி” பருவத்து பயிர்கள் 32 லட்சம் ஹெக்டேர் குறைவாக விதைக்கப்பட்டுள்ளதாம். அதாவது கடந்த “ராபி” பருவத்தில் 387 லட்சம் ஹெக்டேர் பயிரிடப்பட்டதெனில் இவ்வாண்டு 355 லட்சம் ஹெக்டேர் மட்டுமே விதைக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாநிலங்களில் விவசாயம் அதிகம் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது?

விவசாயப் பயிரிடல் வீழ்ச்சியை சந்தித்துள்ள வேளையில் அதில் மூன்றில் ஒரு பங்கு ஹெக்டேர்கள் மகாராஷ்டிராவில்தான் குறைந்துள்ளது. அம்மாநிலத்திலுள்ள வட்டங்களில் பாதிக்கு பாதி தண்ணீர் பற்றாக்குறையால் வாடுகின்றன. உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான், கர்நாடகா என விவசாயம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல் தொடர்கிறது. கோதுமை, அரிசி தவிர்த்த பயிர்கள் அதாவது கேழ்வரகு, மக்காச் சோளம் போன்றவை 27 சதவீதம் ஹெக்டேர் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதாவது 40 லட்சம் ஹெக்டேரிலிருந்து 29.64லட்சம் ஹெக்டேர்களாக பயிரிடல் குறைந்துள்ளது.மகாராஷ்டிரா, கர்நாடகாவில் அதிகம் பாதிப்பு.பருப்பு வகையறாக்கள் 12 சதவீத ஹெக்டேர் வீழ்ச்சியை அடைந்துள்ளன. 111 லட்சம் ஹெக்டேரிலிருந்து 101 ஹெக்டேர்கள் ஆகும்.

எது ஜி.டி.பியை கீழே இறக்கிவிட்டுள்ளது?

பொருளாதார நிபுணர்களின் கருத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அரசு முதலீடுகளில் ஏற்பட்டவீழ்ச்சி, கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் தேக்கம் ஆகியன ஆகும். புள்ளி விவர நிபுணர்கள் கடந்த ஆண்டு இதே காலாண்டில் நல்ல வளர்ச்சி எட்டப்பட்டதால் அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டதால் இக்காலாண்டில் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கிறது என்று விளக்கம் தருகிறார்கள்.

நகர்ப்புற பொருளாதாரத்தின் நிலைமை என்ன?

தொழில் உற்பத்தி 7.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாகச் சொல்லப்பட்டாலும் வர்த்தகம், ஓட்டல்கள், நிதிச் சேவைகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாகச் சரிந்துள்ளன. இது நல்லஅறிகுறி அல்ல.

மொத்தத்தில் எப்படி மதிப்பிடுகிறார்கள்?

மொத்த மதிப்பு அதிகரிப்பில் விவசாயத்தையும், அரசு முதலீடுகளையும் கழித்துவிட்டு பார்த்தால் வட கேந்திரமான துறைகளின் வளர்ச்சி கூட பாதிக்கப்பட்டுள்ளது என்பதே தெளிவாகிறது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகி பிரசன்னா கூறுவது என்னவெனில் “நாங்கள் மூன்றாவது காலாண்டிலிருந்தே சரிவை எதிர்பார்த்தோம். ஆனால் இரண்டாம் காலாண்டிலேயே முக்கியமான அளவுகோல்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது 2018 - 19 ஒட்டுமொத்த ஆண்டிற்கான வளர்ச்சி மதிப்பீடுகளையே மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.’’

பொருளாதாரத்தின் மற்ற அளவுகோல்கள் எப்படி உள்ளன?

வெள்ளிக்கிழமை அன்று இன்னொரு புள்ளி விபரம் தலைமைத் தணிக்கை பொது அலுவலர் அலுவலகத்தால் (சிஏஜி) வெளியிடப்பட்டுள்ளது.அது தரும் தகவல் என்ன? 2018-19 நிதியாண்டிற்கு ரூ,6.24 லட்சம் கோடிகள் நிதிப் பற்றாக்குறையால் பட்ஜெட் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதல் 7 மாதங்களிலேயே (ஏப்ரல் - அக்டோபர் 2018) நிதிப்பற்றாக்குறை 6.48 லட்சம் கோடிகளைத் தொட்டுவிட்டது. இலக்கை போன்று103.9 சதவீதம். நிதிப்பற்றாக்குறை என்றாலே மோசம் என்று சொல்ல முடியாது. எதனால் அதுஏற்படுகிறது? எப்படி அரசு அதை எதிர்கொள்ளப் போகிறது? என்பதைப் பொருத்துதான் அதை முடிவு செய்ய வேண்டும்

ஜிடிபி மதிப்பீடுகளை மத்திய அரசு மாற்றுவது குறித்து அரசுக்கும் - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் மோதல் உள்ளதே!

நவீன தாராளமயம் குறித்த அணுகுமுறையில் இருவருக்கும் வேறுபாடுகள் இல்லாவிட்டாலும் பிஜேபி அரசின் செயற்கை பலூன்களை உடைக்கிறார் சிதம்பரம். நிதியமைச்சகத்தின் சூட்சுமங்கள் தெரிந்தவரல்லவா! பிஜேபி ஆட்சிக்கு வந்தபிறகு ஜிடிபி வளர்ச்சி அதிகரித்துள்ளது என்றால் ஏன் முதலீடுகள் 5 சதவீதம், 6சதவீதம் குறைவாக உள்ளது? மார்ச் 2014ல் எட்டப்பட்ட 315 பில்லியன் டாலர் ஏற்றுமதி என்ற அளவை இதுவரை ஏன் கடக்க முடியவில்லை? நிறுவனக் கடன்களின் வளர்ச்சி ஏன் 1.4 சதவீதம் என்கிற குறைவான அளவிலேயே உள்ளது? என் வேலைவாய்ப்பில் தேக்கம்? ஏன் விவசாயிகளின் துயரம்? என்று அவர் நிறைய கேள்விகளை எழுப்புகிறார். இவையெல்லாம் இடதுசாரிகளால் ஏற்கெனவே எழுப்பப்பட்ட கேள்விகளே!

ஜிடிபி வளர்ச்சி விகித சரிவை எப்படி சரி செய்வார்கள்?

ஜிடிபி வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கான அளவுகோலா என்பது தனிக்கேள்வி. அடிப்படையான மாற்றங்கள் நோக்கி நகராவிட்டால் இதுபோன்ற நெருக்கடிகள் எழுவது தவிர்க்க இயலாது. கிராமப்புற மக்களின் வருமானங்களில் உயர்வு, மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு, வரி திரட்டல் கொள்கைகளில் மாற்றம், அரசு முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட அடிப்படை அம்சங்களில் கவனம் இல்லாதவரை இத்தகைய பிரச்சனைகள் வந்து கொண்டேயிருக்கும். 

அறுவை சிகிச்சை தேவைப்படுகிற காயத்தை ஆயின்மென்ட்டுகளால் குணப்படுத்த முடியுமா?

நன்றி - தீக்கதிர் 02/12/2018

கையேந்தி நிற்கிறது அட்சய பாத்திரம்

தஞ்சாவூரிலிருந்து வெ.ஜீவக்குமார்


காவிரி தஞ்சைக்கு இடப்பெயர்ச்சி பெற்றதாக கூறும் சில ஆய்வுகள் உண்டு. வலுவாக இதை மறுப்போரும் உண்டு. எப்படி இருந்தபோதிலும் காவிரி டெல்டாவின் வாழ்க்கை கி.பி,- கி.மு என்பது போல் கஜா புயலுக்கு முன் - கஜா புயலுக்கு பின் என மாற்றப்பட்டது. பேரளவு மருதமும் ஓரளவு நெய்தலும் கலந்த நிலம் தன் வடிவை இழந்தது. புதிய எதையும் அது பெறவில்லை. அதன் பண்பாடும் நாகரிகமும் கண் முன்னே நொறுங்கித் தகர்கிறது.இயல்பாகவே சோழ மண்டலத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கீர்த்தி உண்டு. தமிழகத்தில் குடிசைகள் இப்போது அதிகம் உள்ள மாவட்டம் நாகப்பட்டினம். ஆனால் அதன் பூர்வீகம் அப்படி அல்ல. பேரரசன் ராஜராஜன் ஆட்சியில் (985-1014) நாகை மாபெரும் துறைமுகம் ஆகும். 13ஆம் நூற்றாண்டில் சீனர்கள் நாகையை நா-கியா-போ-டன்- நா என அழைத்தனர். 

1520ல் நாகை சர்வதேச வணிக மையம் ஆகும். இதன் வர்த்தக வனப்பு போர்த்துகீசியர், டச்சு, பிரெஞ்சுக்காரர்களின் கண்களை உறுத்தியது. அரிசி, வெண்ணெய், உப்பு, இரும்பு, மரம், பீரங்கி குண்டு போன்றவை இங்கிருந்து ஏற்றுமதியாயின. சீனாவிடம் பட்டுத்துணியை நாகை பெற்றது. அரிசியை திரும்ப தந்தது. 1500களில் முத்து மாலைகளாலும் மாணிக்கப் பரல்களாலும் வளம் பெற்று இருந்த நாகையில் கடற்கொள்ளை நடந்தது.நாகை அருகில் 2018லும் அது தொடர்கிறது.நாகையிலிருந்து அரசு வாகனம் வேதார ண்யம் புறப்படுகிறது. கஜா நிவாரணத்துக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள மளிகை வாகனத்தில் உள்ளது. கீழையூர் அருகில் வாகனம் மறித்து பறிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு கழக சங்க தோழர்கள் தஞ்சையிலிருந்து திருத்துறைப்பூண்டி, வேதாரண் யத்திற்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர். அவர்கள் கொண்டு சென்ற 5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழியில் மிரட்டி பறிக்கப்படுகிறது.

எத்தனையெத்தனை புயல்கள்

மேற்கு பகுதியை விட கிழக்கு கடற்கரை பகுதி அடிக்கடி புயல்களை சந்திக்கிறது. 1890 முதல் 2002 வரை இப்பகுதி 304 புயல்களை சந்தித்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியோ 48 புயல்களை மட்டுமே கண்டது. 2004 டிசம்பரில் சுனாமி, 2005ல் ஃபானூஸ் புயல், 2008ல் நிசா, 2010ல்... 2011ல் தானே, 2015ல் சென்னையில் வர்தா, இப்போது 2018ல் கஜா...புயலையோ சூறாவளியையோ கை நீட்டித் தடுக்கும் வல்லமை நமக்கு இல்லை. எனினும் புயலின் தாக்கத்தை, பாதிப்பை, விளைவை குறைக்க அரசாங்கத்தால் முடியும்? புயலின் நகர்வை பேரிடர் மேலாண்மையைத்துறை கணித்தது. வானிலை ஆராய்ச்சி மையம் ஊடகம் மூலம் அறிவித்தது.12-11-2018ல் தமிழக அரசின் உயர் மட்டக்குழு இதுகுறித்து விவாதிக்க கூடியது. 

16-11-2018ல் கஜா சண்டமாருதம் செய்தது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை செய்தது. விடியலில் புயல் வீச போகிறது என நள்ளிரவில் சங்கு ஊதியது. எனினும் அதிகாலை 2 மணிக்கு தமிழக அரசு குறட்டைவிட்டது. கஜா மணிக்கு 115கி.மீ வேகத்தில் வீசியது. எச்சரித்த அரசு அமைப்பு களே அலறின. தமிழக அரசு இயந்திரம் குடை சாய்ந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மேற்கூரையில் சூரிய ஒளி மின் தகடுகள் பறந்தன. அரசு அலுவலகங்கள், காவல் நிலை யங்கள், நீதிமன்றங்களில் இருந்த மரங்களே வீழ்ந்தன. குடிமக்களை மரம் மட்டையை வெட்ட சொன்ன அரசு தன் உடைமையை சரிசெய்யவில்லை.

 அரசு நட்டிருந்த மின் கம்பங்கள் ஒடிந்தன. 1,03,241 மின் கம்பங்கள் அதோ கதியாயின. முனனெச்சரிக்கை செய்த அரசிடம் 7,000 புது மின் கம்பங்கள் மட்டுமே இருந்தது. துவக்கத்தில் 471 நிவாரண முகாம்கள் அமைத்து அரசு 82,000 பேரை தங்க வைத்தது. பின்னர் அமைச்சர் உதயகுமார் அறிவிப்புப்படி 465 முகாம்களில் 3,78,533 பேர் அடைக்கப்பட்டனர். ஒரு தீப்பெட்டிக்குள் 10 யானைகள், ஒரு டவுன் பேருந்துக்குள் 10,000 பேர் நுழைந்தால் என்ன ஆகுமோ அதுதான் நடந்தது. 

அரசு முன்னெச்சரிக்கையுடன் நசுவினி ஆற்றினை தூர்வாரி இருந்தால் கரிசைக்காடு கிராமம் கண்ணீரில் படகு விட்டிருக்காது. அரசு எச்சரிக்கை காட்டி யிருந்தால் கோடியக் கரையில் மான்கள் நள்ளிரவில் மாண்டு இருக்காது. குதிரைகள் சேற்றுக்குள்ளும் கடலுக்குள்ளும் வீழ்ந்து இருக்காது. சரணாலயத்தில் பறவைகள் செத்து மிதந்து இருக்காது. மன்னார் தீவில் மேய்ச்சலுக்குப் போன 300க்கும் மேற்பட்ட மாடுகள் மடிந்திருக்காது. 35 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். மீனவர்களின் 2000 விசை படகுகளும் பைபர் படகுகளும் காப்பாற்றப்பட்டு இருக்கும். வீடுகள் தலைகுப்புற கவிழ்ந்து இருக்காது. 

தேவையான அளவு முகாம்கள் அமைத்து இருந்தால் முத்துப்பேட்டை, பின்னத்தூரில் மக்கள் சுடுகாட்டில் சமைக்கவும் சேற்று ஈரத்தில் படுக்கவும் நேர்ந்திருக்காது. கோட்டூர் அக்கரைகோட்டத்தில் கழிப்பறையில் சமையல் நடந்திருக்காது. மதுக்கூர் வானதெரியான் குடிக்காட்டில் சாலையில் சமைக்க நேர்ந்திருக்காது. மரவள்ளி கிழங்குகளையும் தேங்காய் குருத்துக்களையும் உணவாக உட்கொள்ள நேர்ந்திருக்காது. மாணவர்களின் கல்வி வெள்ளத்தில் மூழ்கியிருக்காது. காற்று வீசும் போது ஸ்விட்சை நிறுத்துவது ஒரு நடவடிக்கை. மெழுகுவர்த்தி தருவதுதான் முன்னெச்சரிக்கை. தமிழக அரசு அதை செய்யவில்லை.

இது தேசியப் பேரவலம் இல்லையா?

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என தன்னை நிறுவிக்கொண்ட ஒரு பகுதியின் அவலம் தேசிய பேரவலம் என அறிவிக்க மத்திய அரசை கெஞ்ச வேண்டும். ஒரு அட்சயபாத்திரம் திருவோடாய் மாறியது. உலகெங்கும் உலாவரும் பிரதமர் சுமார் 70பேர் இறந்தும் ஒரு பெருமூச்சு விட மறுக்கிறார். குஜராத்தில் ஒரு சிலைக்கு 3000 கோடி செலவு செய்த பிரதமர்தமிழக நிவாரணத்திற்காக இன்னும் ஒரு ரூபாய்ஒதுக்க யோசிக்கிறார். இத்தாலிய நாட்டின் சீசர் டிஃபிரடரிக், போர்த்துகீசிய கஸ்பார் கொரையா, சீனாவின் துங் ஆவோ உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் 500 ஆண்டுகளுக்கு முன்னே அதிசயித்து மிதித்த டெல்டாவின் மண்ணிற்கு நரேந்திர மோடி வர மறுக்கிறார். கஜா எனும் மத யானைப் புயலின் பிளிறலை- அதன் பேரழிப்பை மத்திய அரசு அலட்சியப் படுத்தியது. பனித்துளிகள் மலர்களுக்கு முத்தம் தருவதை போல் மத்திய அரசு கஜாவை கண்ணடிக்கிறது.

 தமிழக அரசின் நிவாரண கோரிக்கைகளை புறம் தள்ளுவது மத்திய அரசின் வாடிக்கை. தமிழக அரசு ஒரு 1,02,573 கோடி கோரியது. மத்திய அரச தந்ததோ 2,012 கோடி. இப்போதும் கஜாவின் நாசத்தை மத்திய அரசின் குழு பார்வையிட்டுள்ளது. இவர்கள்பார்க்கும் போதே தென்னை மரத்தின் குருத்தைக்காட்டி இது தென்னை போட்ட முட்டையா குஞ்சு பொரிக்குமா என கேட்டுள்ளனர். ஒரத்தநாடு புலவன் காட்டில் 25-11-2018ல்அதுதான் நடந்தது. தமிழக அரசும் மனிதர் களின் சாவை ஈசலின் மரணம் போல் கடந்து செல்கிறது. 

கஜா ருத்ரதாண்டவம் நடத்தியபோது சேலத்தில் முதலமைச்சர் சந்தன மணத்துடன் திறப்பு விழாக்கள் நடத்தினார். தென்னந் தோப்பும் தேக்கும் நிர்மூலம் ஆனதால் ஒரு தற்கொலை, அதிர்ச்சி மாரடைப்பில் ஒரு சாவு, புயலில் விழுந்த மரத்தை அகற்றும் போது பாம்பு கடித்து ஒரு சாவு, நிவாரணம் வாங்க முயலும் போது சில சாவுகள், பூப்படைந்த தீட்டு என தனிக்குடிசையில் வைக்கப்பட்ட சிறுமியின்கூரையில் மரம் விழுந்து ஒரு சாவு,வீடுகள் இடிந்து பல சாவுகள், மின்சாரம் பாய்ந்து சில சாவுகள், திருத்துறைப் பூண்டி கீழக்கொற்கை, மணலியில் நிவாரண முகாமில்கெட்டுப்போன உணவை சாப்பிட்டு சிலர் சாவு,தொற்று நோய் வந்து சில சாவு என குலை குலையாய் முந்திரிக்காய் என்பது போல்மரணங்கள் நடந்தன. அதேசமயம் முதலமைச்சரோ தில்லி தாஜ்மான்சிங் ஹோட்டலில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் சிறந்த நிர்வாகி என மார்பில் 3 பதக்கங்களை சூடிக்கொண்டிருந்தார். மந்திரிகள் அங்கே தங்கி இருக்கிறார்கள். அவர்களை கொசுவோ மற்றவையோ கடிப்பது இல்லை. வியர்வை போக்க பனை மட்டை விசிறியால் அவர்கள் விசிறுவதில்லை. பசியாலோ தாகத்தாலோ அவர்கள் வாடுவதில்லை. 

முறையாக நிவாரணம் வழங்க அவர்களுக்கு திராணியும் இல்லை. சென்னை வர்தாவால் பாதிக்கப்பட்டபோது 20 ஆயிரம் மின் ஊழியர்கள் களத்தில் நிறுத்தப்பட்டனர். இப்போதோ 13,829 மின் ஊழியர்கள்தான். 4 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயலலிதா ஏக்கருக்கு ரூ.15ஆயிரம் நிவாரணம் கொடுத்தார். எடப்பாடியோ ஹெக்டேருக்கு 13,500 (ஏக்கருக்கு சுமார் 5400) தருகிறார்.தமிழக அரசு வெள்ள நிவாரண பணிகளில் கேரளா, ஒடிசா போன்றவற்றின் பாடத்தைபின்பற்றவில்லை. 

உற்பத்தி பாதிக்கப்பட்டால் மன்னர்கள் ஆட்சியில் வரி தள்ளுபடி செய்யப்பட்ட முன்மாதிரி சோழ மண்டலத்தில் உண்டு. இன்றைய அரசு அதையும் பின்பற்ற வில்லை.சோறு பெருக்கெடுத்த வீதிகளின் சேற்றில்நின்று சோற்றுப் பருக்கைகளுக்காக எங்கள்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கையேந்துகின்றனர். அமுதசுரபி ஏந்திய எங்கள் மணிமேகலைகள் எச்சில் இலை பொறுக்க க்யூவில் நிற்கிறார்கள். கர்ணன் போல் வள்ளலாய் வாழ்ந்த எங்கள் விவசாயி தர்ம சத்திரத்தின் வாசலில் துணி விரித்து யாசகம் கேட்கிறார்.துயரமும் கோபமும் கொப்பளிக்க நிற்கிறோம் நாங்கள்.­­­

தீக்கதிர் 01.12.2018

Saturday, December 1, 2018

காவிகளின் காலி லாரி மோசடி





இரண்டு நாட்களாக முகநூலில் உலா வரும் செய்தி இது.

நரேந்திர மோடி புகைப்படத்துடனான ஒரு பேனருடன் ஒரு லாரி கஜா புயல் தாக்கிய இடங்களில் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. ஒரு கிளீனர் கூட  உடன் இல்லாமல் டிரைவர் மட்டும் சாலைகளில் அங்கேயும் இங்கேயும் போய்க் கொண்டிருக்கிறார்.

மக்கள் மடக்கிக் கேட்டதும்தான் உண்மை தெரிந்துள்ளது.

அந்த லாரியில் ஒரு பொருளும் கிடையாது. ஆனால் பாஜக ஏதோ நிவாரணம் வழங்குவதாக வெட்டி சீன் போடுவதற்காக செய்யப் பட்ட மோசடி வேலை இது. 

இதெல்லாம் ஒரு பிழைப்பு!
இதைச் செய்வது ஒரு மத்திய ஆளும் கட்சி!!
இந்த வெட்கம் கெட்டவர்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமாம்!!!

பிகு 1

அந்த காலி லாரியை மக்கள் மறிக்கும் காணொளியைப் பார்த்த பிறகுதான் இந்த பதிவை எழுதுகிறேன். இரண்டாவது மற்றும் மூன்றாவது புகைப்படங்கள், அந்த காணொளியிலிருந்து எடுக்கப் பட்ட ஸ்க்ரீன் ஷாட்டுகளே. 

பிகு 2 

இதை எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் இதே ஃப்ராடு வேலையை கேரளத்திலும் செய்து கையும் களவுமாக பிடிபட்டார்கள் என்ற செய்தியும் நினைவுக்கு வந்தது. 



கருணை வடிவம் நீட் அம்மையார்; சீ சீ


கேரள மாநில பெரு வெள்ளத்திற்கு கேட்ட நிதி ஒன்று, மத்தியரசு அள்ளிக் கொடுத்ததோ அற்பத் தொகை. அதிலும் அரிசிக்கான தொகையை பிடித்துக் கொண்டது.

சவுதி அளிக்க இருந்த தொகையை வெட்டிக் காரணங்கள் சொல்லி தடுத்து விட்டது.

வெளி நாடுகளில் வாழும் மலையாளிகளை சந்தித்து நிதி திரட்ட அமைச்சர்கள் புறப்பட்ட போது அதையும் தடுத்து விட்டது.

இப்போது வெள்ள நிவாரணப் பணியில் இந்திய விமானப்படை ஈடுபட்டதற்காக

கருணை வடிவமான நீட் நிர்மலா அம்மையார் இருபத்து எட்டு கோடி ரூபாய்க்கு பில் அனுப்பியுள்ளார்.

சீசீ ரவிசங்கர் சாமியார் யமுனையை சீரழித்து கலை நிகழ்ச்சி நடத்திய போது ராணுவத்தை கூலிப்படையாக மாற்றிய இந்த அம்மையார் உயிர் காக்கும் பணிக்கு காசு கேட்கிறார்.

ஷேக்ஸ்பியரில் வரும் ஷைலாக் இவர்களை விட கருணை கொண்டவனாகத் தெரிகிறான்.

வார்ட் தேர்தலில் இந்த அராஜகப் பேர்வழிகளுக்கு பனிரெண்டு வாக்குகளே அதிகம் . . ..