Sunday, November 23, 2025

ஒன்பது முறை எழுந்தவன்

 


தமிழ்நாட்டின் பெரும் கவி ஈரோடு தமிழன்பவன் அவர்கள் இயற்கை எய்தி விட்டார். அவரை ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகத்தான் முதன் முதலில் அறிந்து கொண்டேன். பின்பு தூர்தர்ஷனில் கலைஞர் தலைமை தாங்கிய ஒரு கவியரங்கத்தில் கவிதை வாசித்த போதுதான் அவர் கவிஞர் என்று அறிந்து கொண்டேன். 

இந்தி திணிப்பை எதிர்த்த "அசோகச் சக்கரத்தை அஜர்பைஜான் விசாரிக்கும்" என்ற கவிதையை சங்கிகள் "அஜர்பைஜான் எரிக்கும்" என்று மாற்றி அவரது செய்தியாளர் பணியை பறித்தார்கள் என்பது நாம் மறக்கக் கூடாத நிகழ்வு.

பாரதியின் "வீழ்வேன் என்று நினைத்தாயோ" போல அவரது :ஒன்பது முறை எழுந்தவனல்லாவா நீ" யும் சோர்வைப் போக்கி எழுச்சி தரும்.

அவர் தமிழாக்கம் செய்த பாப்லோ நெரூடாவின் கவிதைகளில் ஒன்றை மூன்றாண்டுகளுக்கு முன்பு எங்கள் கோட்டத்தின் காலண்டரில் பயன்படுத்தியுள்ளோம்.

முற்போக்கு சிந்தனையாளரான தோழர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி.

அவரது மறைவை ஒட்டி அஞ்சலியாக அவரின் சில கவிதைகள்.

******************************************************************************


அறத்தில்
விழித்தது எதுவோ -
அன்பில்  தழைத்தது எதுவோ
அது தமிழ் உயிர்


இளகிக் 
கனிவது எதுவோ 
இரங்கிக் கரைவது எதுவோ 
அது தமிழ் உளம்


அணுவில் 
விரிவது எதுவோ
அண்டம் இணைப்பது எதுவோ
அது தமிழ் அறிவு

**********************************************************


“பத்து முறை விழுந்தவனைப் பார்த்து
நிலம் சொன்னது -
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ ?”

*****************************************************************************

"மாங்கல்யத்தின் மகிமையை
மனைவி அறிவாள்
மணவாளன் அறிவான்
அவர்கள் இருவரையும்விட
மார்வாடியே
அதிகம் அறிவான்"

*****************************************************************************
"கவிதை, தான் கவிதையாவதற்கு
வார்த்தைகளைக் காட்டிலும்,
அர்த்தங்களைக் காட்டிலும்
வாழ்க்கையையே நம்பி இருக்கிறது.
வாழ்க்கைக்கு அர்த்தம்
அனுபவங்களில் புரிந்தும்
புரியாமலும் தெரிந்தும்
தெரியாமலும்
சிதறிக் கிடக்கிறது."
*********************************************************************************
'சிலம்பை உடைத்து என்ன பயன்
அரியணையிலும்
அந்தக் கொல்லன்..'

******************************************************************************
"இமயப்பறவைகள் நாம்
எரிமலையின் உள்மனம்நாம்.
அக்கினிக் காற்றிலே
இதழ்விரிக்கும் அரும்புகள்நாம்.
திக்குகளின் புதல்வர்கள்
தேசவரம்பற்றவர்கள்”


3 comments: