Tuesday, July 9, 2024

3 சட்டங்கள் - சமஸ்கிருதம் மட்டுமல்ல பிரச்சினை.

 


ஒன்றிய அரசு மூன்று சட்டங்களை வாயில் நுழையாத பெயர்களை வைத்து நிறைவேற்றியது நினைவில் உள்ளதல்லவா!

வாயில் நுழையாத பெயர் என்பது அல்ல பிரச்சினை . . 

அதைக்காட்டிலும் தீவிரமானது.

வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் இரு பதிவுகள், சட்டங்களில் உள்ள சதிகளை புரிந்து கொள்ள உதவும்.

இதோ அவரின் பதிவுகள்.

புதிய கிரிமினல் சட்டங்களை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. ( இது வேறு இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் தண்டச் செலவு ). ஆனால் இவை பற்றி வரும் விமர்சனங்களும் மேலோட்டமான பார்வையில் கிடைத்த விஷயங்களும் அதிர்ச்சி அளிக்கின்றன.

புதிய இந்திய தண்டனை சட்டத்தில் முன்பு மனித உரிமைகளுக்கு எதிரானது என்று உச்ச நீதி மன்றத்தால் நிறுத்தி வைக்கப் பட்ட 124 A எனப்படும் தேசத் துரோக பிரிவு புதிய சட்டம் பிரிவு 150 இன் படி வேறு வடிவத்தில் திரும்ப கொண்டு வரப்பட்டு உள்ளது.

தீவிரவாதம், பயங்கரவாதம், தேசத் துரோகம் போன்றவற்றுக்கு மிகவும் மேலோட்டமான விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இது போலீஸ் அதிகாரத்தை அதிகப் படுத்தி சாதரான அமைதியான செயல் பாடுகளையும் இக்குற்றங்களாக கருதி வழக்கு தொடுக்க முடியும்.

UAPA போன்ற சிறப்பு தீவிர வாத தடுப்பு சட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு இப்போது பல கட்டுப்பாடுகள் உள்ளன. இது போன்ற குற்றங்களை புதிய கிரிமினல் சட்டங்களின் அடிப்படையிலேயே தண்டிக்க முடியும். இது சிறப்பு சட்டங்களில் உள்ள கட்டுப்பாடு இல்லாமல் போலீஸ் செயல்பட உதவும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் உள்ளதாகக் கூறப்படும் பிரிவுகள் அதிர்ச்சியளிக்கிறது. கைதிகளுக்கு கை விலங்கு போடுவது பல நீதிமன்றங்களால் தடை செய்யப் பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிரிவு 43 இதை அனுமதிக்கிறது. இன்னும் தனிமைச் சிறையில் வைப்பது, பொதுவாக கைது செய்யப்பட்டு பதினைந்து நாட்களுக்குள் விசாரணைக்கு கேட்டால் நீதிமன்ங்கள் அனுமதிக்கும். இதற்கு பதில் கைது செய்யப்பட்டு அறுபது நாள், தொண்ணூறு நாள் வரை நீதிமன்ற காவலில் இருந்து போலீஸ் காவலுக்கு அழைத்துச் செல்ல அனுமதிப்பது போன்ற மாற்றங்கள் உள்ளன என்கிறார்கள்.

இவையெல்லாம் சட்டத்தை நவீனப் படுத்துவதற்கு பதில் நாட்டை பின்னால் தள்ளும்.

இந்திய அரசியல் சட்டத் துக்கு அடுத்து மிகவும் முக்கியமானவை கிரிமினல் சட்டங்கள். இவற்றை இந்த அளவுக்கு விவாதம் இன்றி நிறைவேற்றி இருப்பது நாட்டின் எதிர்க்கட்சிகள், அறிவுத் துறையினரின் பலவீனத்தை காட்டுகிறது.

அர்பன் நக்சல் என்று குற்றம் சாட்டும் வழக்கம் உள்ள நிலையில் இந்த மாற்றங்கள் இன்னும் பிரச்சினையை ஏற்படுத்தும்.

********************************************************************************
புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்து விட்டன. இவற்றால் மிகக் குறைவாக பாதிக்கப் படப் போகின்ற வக்கீல்கள் மட்டுமே, அதுவும் தமிழ்நாடு, மேற்கு வங்காள வக்கீல்கள் மட்டுமே எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

மிக அதிகமாகப் பாதிக்க வாய்ப்பு உள்ள பல்வேறு மக்கள் உரிமை இயக்கங்கள், அறிவு ஜீவிகள், கட்சிகள் தரப்பிலிருந்து அடையாளப் போராட்டங்கள் என்பதற்கு மேல் ஒரு தீர்மானமான எதிர்ப்பும் இல்லை.

மிக மோசமான மனித உரிமை மீரல்களுக்கு வித்திடக் கூடியது என்று உச்ச நீதி மன்றம் சொன்ன 124 A இன்னும் தீவிரமான வடிவத்தில் திரும்பவும் வந்து இருக்கிறது. அரசை விமர்சிப்பவர்கள் இதில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏதாவது இது போன்ற வம்பில் சிக்கி உள்ளே போனால் குறைந்தது 60, 90 நாட்களுக்கு ஜாமீன் கிடைக்காமல் செய்ய முடியும். ஆன் லைனில் சாட்சி சொல்ல அனுமதி உண்டு. எனவே சாட்சிகள் மீது போலீஸ் அதிக கட்டுப்பாடு செலுத்தும். கடுமையான தண்டனைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்டவர்கள் அவற்றை வெளிப்படுத்து பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப் படுவார்கள்.

இந்த அரசு இந்த சட்டங்களை மிரட்டும் பூச்சாண்டி போலப் பயன்படுத்தப் போவது இல்லை. நிச்சயம் அதன் முழு உக்கிரத்தையும்யும் உணர வேண்டி வரும்.

இப்போது எல்லோரும் அமைதியாக இருந்து விட்டு பின்பு முகநூல் போராளிகள் பூஞ்சையிலும் பூஞ்சையான எழுத்தாளர்களிடம் வந்து இதற்கு குரல் கொடுத்தாரா அதற்கு குரல் கொடுத்தாரா என்றால் ஒரே ஒரு பதில்தான்.

எழுத்தாளர் ஓடி விட்டார். முடிந்தால் நீங்களும் ஓடித் தப்பி விடுங்கள்.

No comments:

Post a Comment