Thursday, December 10, 2015

தோழர் சுபாஷினி அலியின் உயிர் காக்கும் எச்சரிக்கை – படியுங்கள், பகிருங்கள்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி தன்னுடைய ஒரு அனுபவத்தை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார். அச்செய்தி அதிகமானவர்களை சென்றடைவது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

அவருடைய வார்த்தைகளிலேயே அவருக்கு என்ன நிகழ்ந்தது என்று காண்போம்.


1992 ம் வருடம் கான்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் எனக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அப்போது அதற்காக தேவைப்பட்ட ரத்தத்தை எனது குடும்பத்தினர்தான் அளித்தார்கள். கான்பூரில் உள்ள ஒரு ரத்த வங்கியில் எனது உறவினர்கள் ரத்தம் அளித்தார்கள். பிறகு அந்த ரத்த வங்கி அங்கிருந்து மருத்துவமனைக்கு  ரத்தம்  அனுப்பப்பட்டது.

ரத்த வங்கியில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஹெபடிடிஸ் சி வைரஸ் அடங்கிய ரத்தம் எனக்கு சேர்க்கப்பட்டு விட்டது.

இந்த வைரஸ் மிகவும் அபாயகரமானது. உங்களின் ஈரலை அப்படியே நாசமாக்கக் கூடியது. உயிரையே கொல்லக் கூடிய அளவு மோசமான வைரஸ் இது.

அதிர்ஷ்டவசமாக என்னுடைய ரத்தத்தில் ஒளிந்து கொண்டிருந்த இந்த வைரஸ் எனக்கு எந்த கெடுதலையும் விளைவிக்கவில்லை. இந்த வைரஸ் என்னுடைய ரத்தத்தில் கலந்து கொண்டிருப்பதையே நான் சமீபத்தில் செய்து கொண்ட ஒரு ரத்த பரிசோதனை மூலம்தான் அறிந்து கொண்டேன். கான்பூரில் உள்ள ஒரு சிறப்பான பரிசோதனை மையமும் ஒரு தலை சிறந்த மருத்துவரும் பல சோதனைகளை நடத்தி இதனை உறுதி செய்தார்கள்.

இந்த வைரஸ் என்னை இதுநாள் வரை தாக்காமல் இருந்தது ஒரு அதிர்ஷ்டமென்றால் கான்பூரிலும் புதுடெல்லியிலும் உள்ள மருத்துவர்கள் சரியான சிகிச்சையளித்து என்னை காப்பாற்றியது அது இன்னொரு அதிர்ஷ்டம்.

சமீபத்தில்தான் இந்தியாவில் இதற்கான சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதற்காக ஆகும் செலவினத்தை ஒப்பிடுகையில் குறைவு என்றாலும் அதுவே இங்கே அதிகம்தான். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் மத்தியரசின் மருத்துவக் காப்பீடு இருந்ததும் எனக்கு உதவிகரமாக இருந்தது.

ஆனால் எல்லோருக்கும் இத்தகைய அதிர்ஷ்டம் கிடையாதே! ஈரல் மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல தீவிரமான சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் தள்ளப்படுகின்றனர். பலர் இறந்து போகிறார்கள்.

இதைத் தவிர்ப்பதற்கு என்ன வழி?

ரத்த வங்கிகள், நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு முன்பாக பல சோதனைகளை செய்ய வேண்டும் என்ற விதியை கண்டிப்பாக கடைபிடிப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்களுக்கான மருத்துவ சிகிச்சையின் போது ரத்தம் செலுத்தப்பட்டால், சிகிச்சை முடிந்த உடனேயே ஒரு ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதனை செய்கிற போது மோசமான வைரஸ் ஏதாவது நம் ரத்தத்தில் கலந்துள்ளதா என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். இன்றைய சூழலில் இது மிகவும் அவசியம். வரும் முன் காப்பது நலம்தானே!.”

முக்கியமான இச்செய்தியை நீங்களும் பகிர்ந்து கொள்ளலாமே….
 

4 comments: