Sunday, September 23, 2012

தொழிற்சங்க இயக்கமும் ... சமுக நீதியும்...




க சுவாமிநாதன் ,
பொதுச்செயலாளர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு, 











ஒரு காலத்தில் அரசு அலுவலகங்களில் கூட இரண்டு குடிநீர்ப் பானைகள் இருந்திருக்கின்றன. தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான எப்.எம்.குத்புதீன் கோபத்தோடு ஒரு பானையை உடைத்தார் என்று அவருக்கு அஞ்சலி செலுத்திய "தீக்கதிர்" கட்டுரையில் திரு ராஜ்குமார் குறிப்பிட்டிருந்தார். சாதிய  வேறுபாடுகள் பணித் தலங்களில் எப்படி பரவி விரவி இருந்தன என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு. 1930 களில் "குடியரசு" இதழில் தந்தை பெரியார் சென்னை தங்க சாலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் ஒரு ஆதி திராவிடப் பெண் துணிச்சலாய் ஆலயப் பிரவேசம் செய்ததைப் பாராட்டியுள்ளார். சென்னை மாநகரத்தில் இப்படிப்பட்ட தீண்டாமைக் கொடுமைகள் கடந்த நூறாண்டுக்கு உள்ளே கூட இருந்துள்ளது. 

அண்மையில்  சேலம் அருகில் உள்ள சந்நியாசிக் குண்டு என்ற கிராமத்திற்கு தோழர் குழந்தைவேலு (செயலாளர்,சேலம் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி) தோழர் ஆர் நரசிம்மன் (பொதுச்  செயலாளர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், சேலம் ) ஆகியோரோடு 16 08 2012 சென்று இருந்தேன். காலை 7 மணிக்கு கிராமக் கூட்டம் நடந்தது. தலித் மக்களின் குடியிருப்பில் இருந்து வெளியே செல்வதற்குள்ள எல்லாப் பாதைகளும் அடைக்கப்படுவதை கோபத்தோடும், குமுறலோடும் அம்மக்கள்  பகிர்ந்து கொண்டனர். ஒரு புறம் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் காம்பவுண்டு சுவர் கோட்டை மதில் போல எழுந்து நிற்கிறது. சுவரில் அணையின் மதகுகள் போன்ற  பெரிய ஓட்டைகள் மூலம் கழிவு நீர் மட்டும் தலித் பகுதியின் பக்கம் வெளியேறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இன்னொரு பாதையில் இப்போது வீடு கட்டும் ஒருவர் பாதையை மறிக்கும் சுவர் ஒன்றை எழுப்ப முயன்ற போதே த.நா.தீ.ஓ.மு தலையிட்டு அதை தடுத்து நிறுத்தியுள்ளது. நிலத்தை அளந்து பாதை இருப்பதை உறுதி செய்துள்ள அரசு நிர்வாகம் ஆனால் இதுவரை சாலை வசதி செய்து தரவில்லை. பாறைகளும், முட்புதருமாய் உள்ள தற்போதைய தற்காலிகப் பாதை, பாம்பு போல ஓரடி அகலத்தில் சுருண்டு சுருண்டு செல்கிறது. இருட்டிவிட்டால் பாம்புகளின் நடமாட்டமும் இருக்குமாம். பள்ளிக் கூடம் போகிற குழந்தைகளை பயந்து பயந்து அனுப்ப முடியுமா என்று ஒரு சகோதரி குமுறியபோது யாரிடமும் பதில் இல்லை. பணமும் பணமும் சேர்ந்துகொள்கிறது, சனமும் சனமும் ஏன் சேர மாட்டேன் என்கிறது என்று அதே பெண்மணி எழுப்பிய கேள்வி இந்தியச் சமுகத்தை தனது அனுபவத்தால் கூராய்வு செய்கிற கத்தியாய்ப் பாய்ந்தது. அக் கிராமத்தில் த.நா .தீ.ஓ.மு தலைமையில் போராட்டம் தொடர்கிறது. 

இதுதான் இந்தியச் சமுகத்தின் வித்தியாசமான ஒடுக்குமுறை. வர்க்க ஒடுக்குமுறைக்கான ஆயுதக் கிடங்கில் சாதியம் மிக மிகக்  கொடூரமான ஆயுதமாக இருக்கிறது. பொருளாதாரக் கோபுரத்தின் 
அடிக் கல் துவங்கி, பளபளக்கும் கலசம் வரை இதன் வெளிப்பாடுகளை நம்மால் காணமுடியும். சென்னை அரசு மருத்துவ மனையில் இறந்த குழந்தையின் கன்னத்தை ஒரு பெருச்சாளி குதறியதை செய்திகளில் படித்தோம். ஒரு சிறுவன் வாதாங் கொட்டை பார்ப்பதற்காக சுவர் ஏறியபோது ஒரு வெறி பிடித்த கனவானால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வந்த கடந்தாண்டு செய்தி பலருக்கு மறந்து போயிருக்கலாம். அண்ணா பல்கலை கழகத்தில் ஜோதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டாள். இம்மூன்று செய்திகள் தனித் தனியானதாக இருந்தாலும் ஒரு ஒற்றுமை தற்செயலானதல்ல.
இதில்  பலியான எல்லோரும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதே. வறுமை, உடல் நலக் கேடு, மன அழுத்தம் போன்ற எல்லாவற்றுக்குள்ளும் ஆராய்ந்து பார்த்தால் சாதியச் சமுகத்தின் தாக்கம் நிச்சயமாய் வெளிப்படும். பிசினஸ் வேர்ல்ட் இதழில் அண்மையில் வெளியான டாலர் பில்லியனர், ருபாய் பில்லியனர் பட்டியலில் தலித்துகளை பூதக் கண்ணாடி போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை. 

இவ்வளவு   சாட்சியங்களும் சுட்டிக் காட்டுவது என்ன ? வர்க்க ஒடுக்குமுறைக்குள் சாதி ஒடுக்குமுறை சாரைப் பாம்புகளின் காதல் போல எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறது! என்பதுதானே. எனவே சுரண்டலற்ற சமுகம் நோக்கிய பயணத்தில் இவ்விரு ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடி முன்னேற வேண்டியுள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இத் தெளிவான புரிதலை நமக்கு தந்திருக்கிறது. அதனால்தான் இட ஒதுக்கீடு, சமுக நீதி, சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு போன்றவற்றிற்கான களங்களில் சமரசமற்ற அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழகக் கோட்டங்களின் பங்களிப்பு  மகத்தானதாகும். 

இன்றைக்கு தீண்டாமைக் கள ஆய்வுகள் மிகப் பெரும் அம்பலப்படுத்தலாக (EXPOSE ) அமைந்து வருகின்றன. இதற்கான துவக்கபுள்ளியை வேலூர்க் கோட்டச் சங்கமே வைத்தது. வேலூர், விழுப்புரம்,கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களை ஈடுபடுத்தி ஏராளமான கிராமங்களில் இருந்த சாதியப் பாரபட்சங்களை வெளிக் கொணர்ந்தது. அதற்குப் பின்னரே உத்தபுரத்தை உலகின் கவனத்திற்கு கொண்டுவந்த மதுரை மாவட்ட கள ஆய்வில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் முக்கிய பங்கை வகித்தனர். இன்றைக்கு தமிழகம் முழுக்க இன்சூரன்ஸ் ஊழியர்கள் முன் வரிசையில் நிற்கிறார்கள். குடியாத்தம் பகுதியில் பட்டா போராட்டத்தில் தோழர் குபேந்திரன் (பொது இன்சூரன்ஸ்- த.நா.தீ.ஒ.மு மாவட்ட தலைவர்) தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தி ஒடுக்கப் பட்ட மக்களுக்கு வெற்றி தேடித்தந்தது குறிப்பிடத்தக்கது. தஞ்சை அருகே சூரக் கோட்டை கிராமத்தில் சாதிமறுப்புத் திருமணத்திற்காக நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு எதிராக நடந்த போராட்டம் போன்ற இயக்கங்களிலும் இன்சூரன்ஸ் ஊழியர்களின் பங்கேற்பு பாராட்டுதலுக்குரியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வன்முறைக்கு இலக்கான பழங்குடி மக்களுக்கு கிராமத்திற்கே சென்று நிவாரணம் அளித்தோம். வாச்சாத்தி மக்களோடு இணைந்து அம்பேத்கர் பிறந்த நாளைக்  கொண்டாடிய கோவை மண்டல பொது இன்சூரன்ஸ், சேலம் கோட்ட ஊழியர்கள் ரூ 150000   பெறுமான கல்வி உதவி பொருட்களை அக்கிராம பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அளித்துள்ளனர். இது போன்ற உதவிகள் , நிவாரணங்கள் எல்லாம் அனுதாபத்தில் செய்யப்படுபவை அல்ல. 19 ஆண்டுகள் பாலின வன்முறைக்கு எதிரான போராட்டத்தை  நடத்திய வாச்சாத்தி பெண்களின் வீரத்திற்கு விலை ஏதும் உண்டோ!  தமிழகம் முழுவதும் ஆயிரம் ஒடுக்கப்பட்ட இளைஞர்களோடு வேலை வாய்ப்பு பயிற்சி மூலம் அம்பேத்கர் மையம் ஏற்படுத்தியுள்ள உறவு விரிந்து கொண்டே வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களை கொண்ட கோட்டங்களின் பட்டியலில் தஞ்சாவூருக்கு அடுத்ததாக வேலூர் இணைந்துள்ளது. வேலூர், கடலூர் மையங்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.

பொருளியல்  , சமுக தளங்களில் நிலவுகிற பாரபட்சங்கள் தொடருமேயானால் அரசியல் சனநாயகம் தகர்ந்து போகுமென்ற டாக்டர் அம்பேத்கார் அவர்களின் எச்சரிக்கை மிக முக்கியமானது. அதுபோன்று இப்பிரச்சினைகளில் சரியான நிலைகளை மேற்கொள்ளாவிட்டால் தொழிற்சங்கங்களும் விரிந்த ஒற்றுமையை உறுதிப்படுத்த இயலாது. பொருளியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் சமுக ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுகிற உழைப்பாளிகளை உணர்வு பூர்வமாக இணைக்க இயலாது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அனுபவமும், செயல்பாடுகளும் இவற்றை நிரூபித்துள்ளன. 

இப்பாதையில்  நாம் எடுத்து வைத்துள்ள அடிகள் நீண்ட நெடிய பாதையின் ஒரு சில மைல்களே. இன்னும் எட்ட வேண்டிய இலக்கோடு ஒப்பிடுகையில்  நம்மோடு கோர்க்க வேண்டிய கரங்கள் நிறைய... செல்லவேண்டிய தூரமோ மிக மிக அதிகம்...

(வேலூர்க் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வெள்ளி விழா மலருக்காக )

No comments:

Post a Comment