Wednesday, September 19, 2012

பிள்ளையாரை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா.....



எல்லா ஊர்களைப் போல வேலூரிலும் வினாயகர் சதுர்த்தி
பரபரப்பாக உள்ளது. அங்கங்கே குட்டியும் பெரிசுமாய் 
வினாயகர் சிலைகள். வசூலின் தன்மை மற்றும் வசூலித்தவர்கள்
நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் கீற்றுப் பந்தலிலும்
அலங்கார ஷாமியானாவிலும் வினாயகர் அமர்ந்து 
அருள் பாலிக்கிறார். வாய்ப்பு கிடைக்கிற இடங்களில் 
எல்லாம் இந்து முன்னணி காவிக்கொடியை பறக்க விட்டுள்ளது.

பொம்மைக் கலைஞர்கள், மண் பாண்டக் கலைஞர்கள், அழகாய்
குடை செய்யும் நாடோடி இனத்தவர், பூ, பழ வியாபாரிகள்,
பந்தல் போடுபவர்கள், மைக் செட் வைப்பவர்கள்,
ஆகியோருக்கு  சுமாரான வருமானம் கிடைக்கிறது என்ற
வகையில் வினாயகர் சதுர்த்தி ஓ.கே. பெரிய கடைகளில்
எந்நாளும் வாய் திறவாமல் கிரெடிட் கார்டை தேய்க்கக்
கொடுக்கிற பெரிய மனிதர்கள், இந்த சிறிய கலைஞர்களிடம்
மட்டும் பேரம் பேசுவது ஒரு கொடுமை.

 ஆனால் ஒரு விதத்தில் இந்த பக்தர்கள் வினாயகரைப் 
போட்டு படுத்தும் பாடுதான் தாங்க முடியவில்லை. 
சம்பிரதாயத்திற்கு ரெண்டு பக்தி பாட்டு போட்ட பிறகு
அதற்குப் பின்பு வெறும் குத்துப் பாட்டுதான். சாலையோரம்
செல்லும் நம்மாலேயே அந்த இரைச்சலைக் கேட்க 
சகிக்கவில்லை. 

அதிலும் சில பாடல்களை கேட்டால் வினாயகரின்
பிரம்மச்சரிய விரதத்தை கலைத்து அவரையும்
கல்யாணம் செய்ய வைத்து விடுவார்கள் போல.

நாள் முழுதும் பாவம் இந்த பாடல்களை கேட்க வேண்டிய
நிலையில் இருந்து கொஞ்சம் வினாயகரைக் 
காப்பாற்றுங்களேன். 

பி.கு : ஒரு தொழிற்சங்கமோ, அரசியல் கட்சியோ 
மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டத்திற்கு
ஒலி பெருக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டால்
ஆயிரம் நிபந்தனை போடும் காவல்துறை இந்த
ஒலி பெருக்கிகளை கண்டு கொண்டதே இல்லை.
நாயகனில் வேலு நாயக்கர் வைத்த ஒலி பெருக்கிகளை
அசிஸ்டன்ட் கமிஷனர் நாசர் கழட்டியதற்குப் பின்பு
யாரும் அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை.

ஒரு நல்ல விஷயமும் இன்று பார்த்தேன். வினாயகர்
சதுர்த்திக்கு  வாழ்த்து சொல்லி ரசூல் என்ற
இஸ்லாமியர் பேனர் வைத்திருந்தார்.

No comments:

Post a Comment