Thursday, September 13, 2012

எல்லையில் சிந்திய ரத்தம். , நடந்தது என்ன?

அஸ்ஸாம் கலவரம் தொடர்பாக எங்கள் அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாத இதழ் 
இன்சூரன்ஸ் வொர்க்கர் ஒரு ஆழமான ஆய்வினை
செப்டம்பர் மாத தலையங்கத்தில் அளித்துள்ளது.
அதை எங்கள் கோட்ட இதழ் சங்கச்சுடருக்காக
தமிழாக்கம் செய்துள்ளேன்.

அது உங்களுக்காகவும் இங்கே.

 
தெற்கே வரும் ரயில்

சில தினங்கள் முன்பு அஸ்ஸாமிலிருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்ட ஒரு சிறப்பு ரயில் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் ஒற்றுமையும் மக்கள் மீதான நம்பிக்கையும் இன்னமும் சீர்குலைந்து விடவில்லை என்பதை உணர்த்துகின்றது அந்த ரயில் பயணம். ஏனென்றால் சில தினங்கள் முன்புதான் பெங்களூர், ஹைதராபாத், சென்னை, மும்பை போன்ற மாநகரங்களுக்கு பணி செய்யவும் படிக்கவும் வட கிழக்கு மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் உயிருக்கு பயந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு  திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீண்டும் பணிக்காகவும் கல்விக்காகவும் எங்கிருந்து அச்சத்துடன் புறப்பட்டார்களோ, அங்கேயே மீண்டும் திரும்பி வருவது என்பது ஒரு நல்ல செய்தி.

இந்த நிலை நீடிக்குமா? நீடிக்க வேண்டுமென்றால் அரசு என்ன செய்ய் வேண்டும்? மக்களின் கடமை என்ன? 


அதற்கு இப்பிரச்சினை குறித்த ஒரு சரியான புரிதல் வேண்டும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர் வாளான இன்சூரன்ஸ் வொர்க்கர் மாத இதழின் செப்டம்பர் 2012 மாத தலையங்கம், இப்பிரச்சினையை மிக ஆழமாக அலசியுள்ளது. தேச ஒற்றுமையை பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்களின் கடமை என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. தலையங்கத்தின் தமிழாக்கத்தை கீழே காண்போம்.

துடிப்பு மிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012 ல் வெளிப்படுத்திய  அற்புதமான திறன் மூலம் பல லட்சம் உள்ளங்களை கொள்ளை கொண்டார். பதக்கம் வென்ற அவரது முயற்சி மணிப்பூரையும் வட கிழக்கு மாநிலங்களையும் இந்தியாவின் இதரப் பகுதிகளுக்கு நெருக்கமாக்கியது. தேச ஒற்றுமைக்கான புதிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாக பார்க்கப்பட்ட சூழலிலேயே, அரசியல் சந்தர்ப்பவாத எண்ணத்தோடு சில தீய சக்திகள், தேச ஒற்றுமையை சிதைக்கும் அபாயகரமான விளையாட்டை துவக்கியுள்ளனர்.

அஸ்ஸாமை உலுக்கிய  இனக்கலவரங்களுக்கு  பதிலடியாக  மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பூனா போன்ற பெரு நகரங்களில் உள்ள வட கிழக்கு மாநிலங்களை பிறப்பிடமாகக் கொண்ட மாணவர்களும் தொழிலாளர்களும் தாக்கப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டனர். சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புணர்வு மிக்க செய்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு, இந்நகரங்களில் வாழும் வட கிழக்கு மாநிலத்தவர் மனதில் அச்சம் விதைக்கப்பட்டது. அவர்களுக்கு தங்கள் பாதுகாப்பு பற்றிய பயம் ஏற்பட்டது. ஜனநாயக முற்போக்கு சக்திகள் உறுதியளித்தாலும் இந்த மாணவர்களும் தொழிலாளர்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கினார்கள்.  தேச ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படக் கூடிய விதத்தில் இந்தியாவின் சமூக நல்லுறவுகளே பாதிக்கப்படுவதுதான் இதன் விளைவாக இருந்தது.

இப்பிரச்சினையின் ஆணி வேர் என்பது அஸ்ஸாம் மாநிலத்தின் போடோ இன மக்களுக்கும் போடா இனம் அல்லாத முஸ்லீம்களுக்கும் இடையேயான இனக்கலவரங்கள்தான். இந்த இனக்கலவரம் எண்பதிற்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலிவாங்கி நான்கு லட்சத்து எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வீடிழிந்தவர்களாக்கி விட்டது. இரு இனங்களையும் சேர்ந்த சாதாரண ஏழை மக்கள்தான்  பாதிப்புக்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளானவர்கள். கிராமம் கிராமமாக கொளுத்தப்பட்டு அங்கே வாழ்ந்தவர்கள் துரத்தப்பட்டது என்பது கற்பனை கூட செய்ய முடியாத காட்டுமிராண்டித்தனம்.  ஐயத்திற்கு இடமில்லாமல் நிச்சயமாக   இது ஒரு இன அழித்தல் நடவடிக்கை. மிகவும் மோசமான அவலமான நிலையில் அவர்கள் 278  நிவாரண முகாம்களில் அவர்கள் தங்கியுள்ளனர்.

போடோலாந்து எல்லைப்புறப் பகுதி மாவட்டங்கள் (பி.டி.ஏ.டி) என்பது அஸ்ஸாமின் கோக்ரஜார், சிராங்க், பக்ஸா, உதல்குரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த பி.டி.ஏ.டி மாவட்டங்கள் போடோலாந்து எல்லைப்புற கவுன்ஸில் (பி.டி.சி) என்ற அமைப்பால் நிர்வகிக்கப் படுகின்றது. அஸ்ஸாமின் மிகப் பெரிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் போடோக்கள். சமூக, பொருளாதார அடிப்படையில் மிகவும் பின் தங்கியவர்கள். அரசின் அலட்சியத்திற்கும்  பாரபட்சத்திற்கும் நெடுங்காலமாக பலியானவர்கள். பொருளாதாரப் பின்னடைவு, பிரிவினை வாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்தது. தனி போடோலாந்து வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலைமையை சமாளிக்க 2003 ல் மத்திய அரசிற்கும் போடோ விடுதலைப் புலிகள் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பிற்கும் இடையே போடோ ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின்படி போடோ மாவட்டங்களுக்கு பிராந்திய சுயேட்சை வழங்கப்பட்டது. இருப்பினும் இப்போது   பி.டி.ஏ.டி சுயேட்சை கவுன்ஸிலின்  ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமைப்பு, அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியோடு கூட்டணையில் உள்ளது. ஆனால் அதனால் மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்றார் போல செயல்பட முடியாமல் தோல்வியடைந்து மக்களின் மிகப் பெரும் அதிருப்திக்கு உள்ளானது.

உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, இன வெறி மூட்டப்பட்டது. தனி போடோலாந்து கோரிக்கை மீண்டும் முன்னிருத்தப்பட்டது. தற்போதைய போடோ பகுதிகளில் இனக் குழுக்களுக்கிடையேயான பதட்ட நிலை என்பது சில காலமாகவே இருந்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் பற்றியெரியக் கூடிய பதட்ட நிலை இருந்தது என்பது மத்தியரசோ அல்லது மாநில அரசோ அறியாதது அல்ல. ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்து சட்டத்தின் ஆட்சியை நிலவச் செய்வதில் தவறி விட்டது. இன மோதல் வெடித்து ஐந்து நாட்களுக்குப் பின்பே சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த ராணுவம் சென்றது என்பது வருத்தத்திற்குரிய விஷயம். நிலைமை சிக்கலாக மத்திய, மாநில அரசுகள் அனுமதித்துவிட்டது.

அஸ்ஸாம் நிகழ்வுகளை சில தீய சக்திகள் தங்களுக்கான மிகப் பெரிய அரசியல் வாய்ப்பாகப்  பார்த்தன. இந்த இன மோதலுக்கு மதச்சாயம் பூசப்பட்டது.  பங்களாதேஷ் ஊடுருவாளர்கள் இந்தியர்கள் மீது நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல் இந்த கலவரம் என்று இந்த தேசத்தின் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிற ஒரு முக்கிய அரசியல்வாதி   அறிவிக்கிறார். எந்தப் பகுதியில் ஊடுருவல் நிகழ்ந்தாலும் அங்கே மக்கட்தொகை பெருகும் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் போடோ மாவட்டங்களிலோ, ஏன் ஒட்டு மொத்த அஸ்ஸாம் மாநிலத்திலே கூட இவ்வாறு மக்கட்தொகை பெருகவில்லை என்பதுதான் உண்மை..

2011 மக்கட்தொகை கண்க்கெடுப்பு அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் அஸ்ஸாம் மாநிலத்தில் மக்கட்தொகை உயர்வான  16.93 % என்பது தேசிய அளவு உயர்வான 17.64 % ஐ விட குறைவானது. கோக்ரஜார் மாவட்டத்தில் உயர்வு என்பது 5.19 % தான். மற்ற போடோ மாவட்டங்களான சிராங், பக்ஸா, மற்றும் உதல்கிரியில் மக்கள் தொகை உயர்வு என்பது முறையே 11.26 %, 11.17%, மற்றும் 9.76 % மட்டுமே. இது அஸ்ஸாம் மாநில சராசரியை விடவும் தேசிய சராசரியையும் விட குறைவு. எனவே அஸ்ஸாமிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் மத வெறியை ஊட்டி அரசியல் ஆதாயம் அடையவே, சட்ட விரோத ஊடுறுவல் என்ற பிரச்சினை எழுப்பப் படுகின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது.   

இதனால் ஊடுருவலே கிடையாது என்று நாம் சொல்லவில்லை. இந்தியாவின் பங்களாதேஷ் எல்லை என்பது பலவீனமான ஒன்று. ஊடுறுவல் என்பது நிச்சயமாய் நிகழ்கிறது. அதனை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எல்லை  மூடப்பட வேண்டும். ஆனால் தற்போதைய இனக் கலவரத்தை  சட்டவிரோத பங்களாதேஷ் ஊடுருவாளர்கள் இந்தியர்கள் மீது நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல் என்று கூறுவது முற்றிலுமாக உண்மைக்கு அப்பாற்பட்டது.

இனக்கலவரங்களும் மோதல்களும் போடோ மாவட்டங்களுக்கு 1996 க்கும் 1998 க்கும் இடையே போடோக்களுக்கும் ஆதிவாசிகளுக்கும் இடையேயான இனக் கலவரங்கள் 198 உயிர்களைக் குடித்து இரண்டு லட்சம் பேரை அவர்களது வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தியது.  புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதிவாசிகள்.  32,000 க்கும் மேற்பட்ட ஆதிவாசிக் குடும்பங்கள் இன்னமும் நிவாரண முகாம்களில்தான் வாழ்கின்றன. இந்த ஆதிவாசிகளை ஊடுருவாளர்கள் என்று எவராலும் கூற முடியுமா?

சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த அடிப்படைவாதிகளும் மதத்தின் அடிப்படையில் தங்களை வலிமைப் படுத்திக்க்கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். போடோலாந்து எல்லைப் பிரதேச கவுன்ஸிலை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை அபாயகரமானது. மாறாக ஊழல் களையப் படவேண்டும். கவுன்ஸில் மேலும் ஜனநாயக பூர்வமாக மாற்றப்பட்டு போடோக்கள், போடோக்கள் அல்லாதவர்கள் ஆகிய இரு பகுதி மக்களுடைய முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும்.

அஸ்ஸாமின்  அமைதியை நேசிக்கிற, சரியான சிந்தனை கொண்ட மக்கள் ஒன்றிணைந்து அங்கே நடைபெறும் நிகழ்வுகளுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது மகிழ்ச்சியான ஒன்று. மேற்கு அஸ்ஸாமில் நடைபெற்ற துயர சம்பவங்களும் இன மோதல்களும் மனித குலத்திற்கும் ஜனநாயக மாண்புகளுக்கும் பெருத்த அடி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.   பரஸ்பர நம்பிக்கையின்மை, அச்ச உணர்வு, இனக்குழுக்களிடையேயான பயங்கரவாதம் என இன்று நிலவும் சூழலை மத அடிப்படைவாதிகளும் பிரிவினைவாத சக்திகளும்  முழுமையாக பயன்படுத்திக் கொள்வது,  அஸ்ஸாமின் வாழ்நிலைக்கே மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது என்று  அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினையை கையாண்ட முறையினால் மிகக் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன. அமைதியை உத்தரவாதப் படுத்தவும், நிவாரணப் பணிகளை வேகமாக மேற்கொள்ளவும் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அனைத்து சட்ட விரோத ஆயுதங்களையும் பறிமுதல் செய்ய தேவைப்படும் அரசியல் உறுதியையும் அரசாங்கம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வட கிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதி. இதர பகுதிகளில் உள்ளவர்களைப் போலவே வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியா சொந்தமானதுதான். அவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காண்பிக்கக் கூடாது. அவர்கள் தங்கள் பணியிடங்களுக்கும் கல்விச்சாலைகளுக்கும் திரும்புவதை ஊக்குவிக்க வேண்டும். வட கிழக்கு மாநில மக்களை இந்தியாவிற்கு எதிராக அணி திரட்ட பிரிவினைவாத சக்திகள்  இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட வேண்டும்.

வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடத்தில் நம்பிக்கையை தோற்றுவிப்பதும், அவர்களது பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதும் உழைக்கும் மக்களுடைய, முற்போக்கு சக்திகளின் கடமை. மத வெறியூட்டி, தேச ஒற்றுமையை சீர் குலைக்கிற சுய நல சக்திகளின், சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளின் அபாயகர விளையாட்டு தோற்கடிக்கப்பட வேண்டும். உள்நாட்டில் உருவாகியுள்ள அதிருப்தியை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையை எல்லைக்கு அப்பால் உள்ள சக்திகள் செய்கின்றனர் என்பதில் சிறிதளவு உண்மையும் உண்டு.

நமது தேச ஒற்றுமை என்பது மகத்தானது. அதனோடு தங்களது அரசியல் ஆதாயங்களுக்காக  உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள சுய நல  சக்திகள் விளையாடுவது என்பதை அனுமதிக்க முடியாது. இந்தச் செய்தியை உழைக்கும் வர்க்கம், சுய நல சக்திகளுக்கு ஆணித்தரமாக உரத்த குரலில் கூறிட வேண்டும்.



  


2 comments:

  1. You are making fun here. Right. You cant be serious, or you do not know what is happening. Wake up friend.

    ReplyDelete
  2. Sorry Mr Anonymous, It is You who should come out of the Imaginations or the Propaganda. This is the real assessment of the situation in North East

    ReplyDelete