Monday, September 17, 2012

இருபத்தி மூன்றே மாதங்களில் நான்காயிரம் கோடி ரூபாய், மாவோயிஸ்டுகளுக்கு முப்பது சதவிகித பங்கு.


பெரிய மாநிலங்கள் சிறு மாநிலங்களாக பிரிக்கப்படுவதால் மக்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ ஆட்சியாளர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கான சான்று ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா.

ஜார்கண்ட் மாநிலத்தில் 2000 ம்  ஆண்டு பாஜக ஆட்சியில் முதல்வர்களாக இருந்த பாபுலால் மாரண்டி, அர்ஜுன் முண்டா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மது கோடா. 2005 ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக சீட் தராததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். பெரும்பான்மை கிடைக்காததால் மது கோடா மற்றும் மூன்று சுயேட்சைகள் அளித்த ஆதரவில்தான் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது.

பாஜக அரசை 2006 ம் ஆண்டு கவிழ்க்க நினைத்த காங்கிரஸ் கட்சி மது கோடாவை பயன் படுத்துகின்றது. அவர்கள் பாஜக அரசிற்கான ஆதரவைத் திரும்பப் பெற அர்ஜூன் முண்டா ஆட்சி  கவிழ்கிறது. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தர ஜே.எம்.எம் கட்சியோடு சேர்ந்து மது கோடா ஜார்கண்ட் முதல்வராகிறார். சுயேட்சையாக இருந்து முதல்வரான மூன்றாவது நபர் மது கோடா.

கனிம வளம் மிக்க ஜார்கண்ட் மாநிலத்தில் அவற்றை வெட்டியெடுக்க முதலாளிகளுக்கு தாறுமாறாக லைசன்ஸ்கள் வழங்கப்படுகின்றது. கனிமங்கள் கொள்ளை போக, கொள்ளை போக மது கோடாவின் சொந்த கஜானா நிரம்பி வழிகின்றது. புகார்களும் நிரம்பி வழிய வருமான வரி சோதனை நிகழ்த்தப் படுகின்றது.

கோடிக்கணக்கில் ரொக்கப் பணம், தங்க, வைர நகைகள், சொத்துப்பத்திரங்கள் என நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அவர் சம்பாதித்தது தெரிய வருகின்றது. வங்கிகளில் கூட இல்லாத நவீன பணம் எண்ணும் இயந்திரம் ஒன்றை வேறு அவர் வைத்திருந்தார். குவியும் பணத்தை சரியாக எண்ண வேண்டும் அல்லவா ? மும்பை, கொல்கத்தா நகரங்களில் மட்டுமல்லாமல் தாய்லாந்தில் கூட ஆடம்பர ஹோட்டல்கள், லைபீரியாவில் நிலக்கரிச் சுரங்கம் என்றெல்லாம் அவரது சொத்து மதிப்பு விரிகின்றது. ஆனால் அவற்றில் சொற்பமான தொகை மட்டுமே இது வரை கைப்பற்றப்பட்டுள்ளது. 18 செப்டம்பர் 2006 முதல் 23 ஆகஸ்ட் 2008 வரை மட்டுமே பதவியில் இருந்த போதும் அவரால் இந்த அளவிற்கு சுருட்ட முடிந்துள்ளது.

இயற்கை வளங்களை சுரண்டுபவர்களுக்கு எதிராக போராடுபவர்கள், பழங்குடி மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மாவோயிஸ்டுகளுக்கு மது கோடா சம்பாதித்த பணத்தில் முப்பது சதவிகிதம் பங்குத் தொகையாக சென்றுள்ளது என்ற தகவல் மாவோயிஸ்டுகளை அம்பலப்படுத்துகின்றது.(இதற்கான ஆவணங்கள்
கிடைத்துள்ளது. ஆகவே யாரும் என் மீது அவசியம் இன்றி பாய வேண்டாம்)

கோடிக்கணக்கில் ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிக்க உதவுகின்ற வகையில் இயற்கை வளம் உள்ள போதும் ஜார்கண்ட் மாநில மக்களின் வாழ்க்கை நிலை என்னவோ மிகவும் பின் தங்கித்தான் உள்ளது. கல்வி நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதனால்தானோ என்னவோ ஜார்கண்ட் மக்கள் இவ்வளவு ஊழல் செய்த மது கோடாவை சிறையில் இருந்த போதும் கூட 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.

எங்கள் சங்க இதழ் சங்கச்சுடரின் ஊழல்களின் ஊர்வலம் தொடருக்காக
எழுதியது. ஆனால் இந்த தொகையெல்லாம் ஜூஜூபி என்று இப்போது
ஆகி விட்டது. 

1 comment:

  1. ஆவணங்களை அனைவரின் பார்வைக்கு வைப்பீர்கள் என கருதுகிறேன்

    ReplyDelete