Friday, July 13, 2012

பாஜக பல்டி – பேரத்திற்கான துவக்கமா?




இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா தொடர்பாக ஆய்வு செய்த நிதியமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி மூலதன வரம்பை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று நாடாளுமன்றத்திற்கு பரிந்துரை அளித்தது. சர்வ தேச பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் இந்திய பாலிசிதாரர்களின் முதலீடு பன்னாட்டு நிறுவனங்கள் வசம்  செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது அப்பரிந்துரைக்கான காரணமாக சொன்னது.

பாஜக வின் யஷ்வந்த் சின்ஹாவினை தலைவராகக் கொண்ட நிதியமைச்சக நிலைக்குழு  அளித்த இந்த பரிந்துரை ஒரு மனதாக அளிக்கப்பட்ட ஒன்று. மத்தியரசின் எதிர்பார்ப்பிற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளுக்கும் மத்தியரசு அளித்த உறுதி மொழிக்கும் முரணானது.

நிதித்துறை சீர்திருத்தங்களை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவோம் என்று சொன்ன மத்தியரசிற்கு நிலைக்குழு பரிந்துரை உவப்பாக இல்லை. நிலைக்குழு பரிந்துரைகளை புறம் தள்ளி இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற தைரியம் இல்லாததால் கடந்த நாடாளுமன்றத் தொடரில் மவுனம் சாதித்தது.

தவிப்பில் தகித்த அரசிற்கு அபயம் அளிப்பது போல பாஜக உதவிக்கரம் நீட்டியுள்ளது. நிலைக்குழு தலைவராக பரிந்துரை அளித்த யஷ்வந்த் சின்ஹா, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த அரசுக்கு உதவ பாஜக தயார் என்று அறிவித்துள்ளார். நாங்கள் சொல்லும் சில விஷயங்களை அரசு ஏற்றுக் கொண்டால் அரசுக்கு நாங்கள் உதவுவோம் என வெளிப்படையாகவே அவர் கூறியுள்ளார். அரசிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை மட்டும் சொல்லவில்லை.

இந்தியப் பொருளாதாரத்தை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் அடகு வைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. இப்போது ஏதோ பேரம் துவங்கியுள்ளது. அதனால் பாதிப்பு இந்திய மக்களுக்கும் பொருளாதரத்திற்கும்தான். தான் அளித்த பரிந்துரைக்கு எதிராக செயல்படுவது சந்தர்ப்பவாதம். இதனை முறியடிக்க வேண்டியது நமது கடமை.

1 comment:

  1. ராமன் அவர்களே! 60ம் ஆண்டுகளில் எல்.ஐ.சி.யில் ஒரு மண்டல அதிகார் இருந்தார்.பெயர் ஷா என்று நினைக்கிறென்.."கரட்டுவத கந்தசாமீ" ஒரு பிரச்சினைல சிக்கல் வந்தது.மனுசன் என்ன சொன்னாலும் கெக்க மாட்டேன்னுட்டான். சங்கம்முடிவு செய்தது.அந்த ஆள் எங்கபோனாலும் ஆற்ப்பாட்டம்னு முடிவாச்சு. தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா ஆந்திரா எங்கவேணுலாலும் போ! அங்க ஆர்ப்பாட்டம்! கார்ல போனா வாடகை கார் எடுத்து ஆற்ப்பாட்டம்.அப்போ மொகன் குமாரமங்கலம்தான்மண்டல தலைவர். இல.கணேசன் எங்கபோனாலும்,ராதாகிருஷ்ணன் எங்க போனாலும் அந்த காரைக்குடிகாரரு எங்க போனாலும் ஆர்ப்பாட்டம்பண்ணலாமா!---காஸ்யபன்

    ReplyDelete