Sunday, July 29, 2012

தொலைபேசி இல்லை, தொல்லைகள் இல்லவேயில்லை.




நேற்று ஏற்காட்டில் ஒரு பயிற்சி முகாம். முகாம் நடந்த இடத்தில் எந்த ஒரு அலைபேசி நிறுவனத்தின் சிக்னலும் எடுக்கவேயில்லை. எந்த ஒரு வகுப்போ, கூட்டமோ, உங்கள் அலைபேசியை சற்று சைலன்ட் மோடில் வைத்துக் கொள்ளுங்கள் என்று பலமுறை வலியுறுத்தினாலும் தொலைபேசியின் ஓசைகள் எப்போதுமே அடங்கியதில்லை.

ஆனால் நேற்று இந்த பிரச்சினை இல்லவேயில்லை. கடவுள் பாடல் தொடங்கி காதல் பாடல் வரை எந்த ஒரு தொலைபேசியும் யாரையும் அழைக்கவேயில்லை. காரணம் அங்கே சிக்னல் இல்லை. வகுப்பும் முழுமையாக அமைதியாக இருந்தது. என்ன காலை ஆறு மணிக்கு வைக்க வேண்டிய அலாரமை ஒரு தோழர் மாலை ஆறு மணிக்கு அது அடித்து அறையில் சிரிப்பொலியையும் எழுப்பியது.

இதை விட மிக முக்கியமாக நான் பார்த்த ஒன்று. இது போன்ற நிகழ்வுகளின் தேநீர் இடைவேளையிலோ, உணவு இடைவெளியிலோ பெரும்பாலானவர்கள், செல்லும் கையுமாக பேசிக்கொண்டு மனிதத் தீவாகவே இருப்பார்கள்.

பேச நினைத்தும் வாய்ப்பில்லாததால், அந்த நேரம் மற்றவர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பத்தை அளித்தது, நெருக்கத்தை உணர்த்தியது. இந்த சுகம் எல்லாம் ஏற்காடு மலையிலிருந்து இறங்கும் வரைதான். சேலமும் வந்தது, தொலைபேசி அழைப்புக்களும் தொடங்கியது.

மாதத்தில் ஒரு நாளாவது அலைபேசி இல்லாத நாளாக அனுசரித்தால் அந்த நாள் இனிமையாகவே இருக்கும் எனத் தோன்றுகின்றது.


1 comment:

  1. venaktaraman nageswaranAugust 5, 2012 at 6:13 PM

    You are right. Everbody can have a day in a month as no Mobile Phone day.

    ReplyDelete