Monday, July 30, 2012

மாவட்ட நீதிபதிக்கே தீண்டாமைக் கொடுமை ?




தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வேலூர் மாவட்ட மாநாடு நேற்று வேலூரில் நடைபெற்றது. அதிலே பங்கேற்று நிறைவுரையாற்றிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் கூறிய பல தகவல்கள் அதிர்ச்சிகரமானது. அதிலே ஒன்றை இங்கே பதிவு செய்கிறேன். மற்றவை பிறகு.

விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வருகின்றது. அங்கே நீதிமன்றத்திற்காக புதிய நூலகம் கட்டப்பட்டுள்ளது. நூலகத்திற்கு ராம்கோ சிமெண்ட்ஸ் உரிமையாளர் திரு ராமசுப்ரமணிய ராஜா, ஒரு கோடி ரூபாய்க்கு சட்டப் புத்தகங்கள் வாங்கி அளித்துள்ளார். நூலகத் திறப்பு விழாவிற்கு அந்த மாவட்ட நீதிபதியின் பெயரை அழைப்பிதழில் போடவேயில்லை. காரணம் அவர் ஒரு தலித்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்தது பார் கவுன்ஸில். அவர்களைக் கேட்டால் மிகவும் கூலாக மறந்து விட்டோம் என்று பதிலளித்தார்களாம். யார் யார் பெயரையோ ஞாபகமாக போட்டவர்கள், அந்த மாவட்ட நீதிமன்றத்தின் உயர் பிரிவில் உள்ளவரை மறந்து விட்டார்களாம். எத்தனையோ வழக்கறிஞர்கள் அமைப்புக்கள், சங்கங்கள் இருந்தாலும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ( All India Lawyers Union ) மட்டுமே இப்பிரச்சினையை கையில் எடுத்தது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு இணைந்து போராடுவோம் என்று வற்புறுத்திய பிறகு அவசரம் அவசரமாக மாவட்ட நீதிபதியின் பெயரை இணைத்து புதிதாக சுவரொட்டி அச்சடித்து அவரைத் தலைமை தாங்க வைத்து விழாவை நடத்தியுள்ளார்கள்.

அரசியல் சாசனத்தை அமுலாக்க வேண்டிய ஒரு பிரிவினராக உள்ள வழக்கறிஞர்களில் சிலரே இது போல தீண்டாமைக் கொடுமையை அனுசரித்தால், அதிலே பாதிக்கப் படுவது ஒரு நீதிபதி என்றால் இந்தியாவிலே தீண்டாமைக் கொடுமை என்றுதான் ஒழியும் என்ற கேள்வி தானாக எழுகிறது.

நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளதால்தான் இந்த
கொடுமை நிகழ்ந்ததோ?

வருங்கால சமூகத்திற்கு நாம் எப்படிப் பட்ட வரலாற்றை விட்டு விட்டுப் போகப் போகின்றோம்?

2 comments:

  1. ராமன் அவர்களே! பார்கவுன்சில் முன்னால ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க வேண்டும் ஐயா! இதனை மாநிலம் தழுவிய அளவில் கொண்டுசென்றிருக்க வேண்டும்! தாழ்த்தப்பட்டோருக்கான கமிஷன் முன்பு கொண்டு சென்றிருக்க வேண்டும்! ---காஸ்யபன்.

    ReplyDelete
  2. வழக்கறிஞர்களிலும் நீதிபதிகளிலும் தீண்டாமைக் கொடுமையா? வேதனை....

    ReplyDelete