நேற்றைய தினம் சங்கப் பணியாக எங்களது கடலூர் மாவட்டக் கிளைகளுக்கு ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் சென்று வந்தோம். அப்போது பார்த்த சில இடங்கள் சில நினைவுகளை கிளறி விட்டது.
கடலூர் நியூ சினிமா தியேட்டர் : கல்லூரி முடித்து விட்டு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்யப்போனால் பட்டப் படிப்பிற்கான ப்ரொவிஷனல் சான்றிதழ் வராததால் பனிரெண்டாவது தகுதியோடு பதிவு செய்தார்கள். அதன் பின்பு அந்த சான்றிதழ் வந்தாலும் அதை பதிவு செய்யவில்லை. எல்.ஐ.சி எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்ததும்தான் இது நினைவிற்கே வந்தது. அவசரம் அவசரமாக கடலூர் சென்று அலுவலகம் திறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பே வரிசையில் நின்றால், விண்ணப்பத்தை வாங்கி வைத்துக் கொண்டு சரியாக ஒன்று முப்பது மணிக்கு வந்து விடு என அனுப்பி விட்டார்கள். மூன்று மணி நேரம் என்ன செய்வது என்று தெரியவில்லை. இது போன்ற தருணங்களில் திரைப்பட அரங்கைத் தவிர வேறு புகலிடம் இருக்க முடியாதல்லவா?
கடலூர் நியூ சினிமா தியேட்டரில் இரண்டு நாட்கள் முன்புதான் வெளியாகியிருந்த மிஸ்டர் பாரத் படத்தின் காலைக் காட்சிக்கு அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று விட்டேன். ரசிகக் கண்மணிகளின் உற்சாகத்தில் திரைப்படத்தை ஒழுங்காக பார்க்கவே முடியவில்லை. கைக்கடிகாரத்தை வேறு பார்த்துக் கொண்டே இருந்தேன். க்ளைமாக்ஸில் ரஜனி, என் தாயின் மீது ஆணை என்று பாடத் தொடங்கிய போது நேரமாகி விட்டதால் வெளியேறி வேலை வாய்ப்பகம் வந்து விட்டேன். ஆனால் மூன்று மணிக்கு மேல்தான் வேலை முடிந்தது. திரைப்படத்தையும் முழுமையாக பார்க்க முடியவில்லை. பசியால் அவதிப்பட்டதுதான் மிச்சம்.
ப்ளூ டைமண்ட் ஹோட்டல், நெய்வேலி : நெய்வேலியில் அலுவலக நேரம் முடிந்ததும் தோழர்கள் சங்கமிக்கும் இடம் ஹோட்டல் ப்ளூ டைமண்ட் ஹோட்டல். வாகனங்களை நிறுத்துவதற்கு விஸ்தாரமான இடம் உண்டு. கிட்டத்தட்ட இரவு ஒன்பது மணி வரை அங்கேதான் பொழுது போகும். அவ்வப்போது காபி, சிகரெட் துணையோடு வானின் கீழே உள்ள எல்லா விஷயங்களையும் விவாதிப்போம். ஒரு காலகட்டத்தில் நண்பர்கள் வட்டாரம் அப்படியே கரைந்து விட்டது. நேற்று மதிய உணவை அங்கே சாப்பிட்ட போது பழைய நாட்களை நினைத்து பெரு மூச்சுதான் விட முடிந்தது.
கொளஞ்சியப்பர் கல்லூரி, விருத்தாசலம் : பள்ளிக் கல்வி முடிந்து பி.காம் படிப்பிற்காக விண்ணப்பம் வாங்கப் போனால் விண்ணப்பமே தர முடியாது, வேண்டுமானால் பி.எஸ்.சி கணக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள், அப்ளிகேஷன் தருகிறோம் என்று அலுவலகத்திலேயே நிராகரித்து விட்டார்கள். என்னை விட அதிக மதிப்பெண் எடுத்த மாணவன் ஒருவன் கூறினான். நான் பிரின்ஸிபால் காலிலேயே விழுந்தேன். அப்போதும் பி.காம் கிடையாது என சொல்லி விட்டார்கள் என்றான். காலில் விழும் எண்ணம் இல்லாததால் நான் நடையைக் கட்டி விட்டேன்.
நேற்று இத்தனை இடங்களையும் பார்த்த்தால் இந்தப் பதிவு.
No comments:
Post a Comment