Friday, August 28, 2020

17 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்

 



ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தோழர் நினைவு படுத்தி இருந்தார்.


பதினேழு வருடங்களுக்கு முன்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இதே நாளில் 28.08.2003 அன்று இரண்டு மணி நேர வேலை நிறுத்தம் மேற்கொண்டிருந்தது.

தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் மேற்கொள்வது வழக்கமானதுதானே! இந்த நாளில் என்ன சிறப்பம்சம் என்று கேட்கலாம்.

ஒரு துளி மையில் ஜெ ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். வழக்கு உச்ச நீதி மன்றம் சென்ற போது உச்ச நீதி மன்றம் தொழிலாளி வர்க்கத்தின் மீது ஒரு மிகப் பெரும் தாக்குதலை நடத்தியது.

ஆமாம்.

வேலை நிறுத்தம் செய்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று அந்த உரிமையையே பறித்தது. வேலை நிறுத்தம் செய்வதே சட்ட விரோதம் என்று தொழிலாளி வர்க்க வெறுப்பை வெளிப்படுத்தியது. 

அந்த தீர்ப்பு கடுமையான விவாதங்களுக்கு ஆளானாலும் அத்தீர்ப்பை மீறிய, வேலை நிறுத்த உரிமையை முதன் முதலில் நிலை நாட்டிய அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

ஆம்.

உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற முதல் வேலை நிறுத்தம் 28.08.2003 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய வேலை நிறுத்தமே.

ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கத்திற்கே உற்சாகமும் நம்பிக்கையும் அளித்த வேலை நிறுத்தம் அது.

தீர்ப்பில் ஒளிந்திருந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் அந்த வீரம் மிக்க போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு தோழருக்கும் வாழ்த்துக்கள். 

"வெளியே போ" கோச்சா யார்?

 


மாநிலங்கள் ஆனாலும் சரி மத்தியரசு ஆனாலும் சரி, ஒரு அமைச்சகத்தின் செயலாளர் பொறுப்பிற்கு வர வேண்டுமானால் அவர் பல வருடங்கள் பணி செய்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத்தான் இருப்பார்கள், அப்படித்தான் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள்.

 ஆனால் “வெளியே போ” வைத்ய ராஜேஷ் கோச்சா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அல்ல.

 ஆமாம்.

 பிரிலிமினரி, மெயின், நேர்முகத் தேர்வு என்று எந்த தேர்வு முறையை சந்திக்காதவர்.

 மாநில அரசுப் பணியில் க்ரூப் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணிக்கு வரும் அதிகாரிகள்,  பணி மூப்பு, பணித் திறன், சில சந்தர்ப்பங்களில் ஐ.ஏ.எஸ் அந்தஸ்து (Conferred IAS) பெறுவார்கள்.

 கோச்சா அப்படிப்பட்ட அந்தஸ்து பெற்றவரும் அல்ல.

 பின் எப்படி அவர் அமைச்சக செயலாளராக செயல்படுகிறார்?

 அங்கேதான் மோடி வருகிறார்.

 நீதித்துறை, தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம்,  ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, ஊடகம் என அனைத்து அமைப்புக்களையும் சீரழித்து சின்னா பின்னமாக்கிய நாசகர பேர்வழி அரசு நிர்வாகத்தை மட்டும் விட்டு வைப்பாரா என்ன?

 அரசுச் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பொறுப்பிற்கு நேரடியாக வெளிச் சந்தையில் உள்ளவர்களையும் நியமிப்பது என்று முடிவெடுக்கிறார்.

 அந்த அடிப்படையில் வைத்ய ராஜேஷ் கோச்சா ஆயுஷ் அமைச்சக செயலாளராகிறார்.

 அவருக்கு என்ன தகுதி?

 நம் ஊர் பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களில் வரும் டாக்டர் காளிமுத்து, டாக்டர் சேலம் சிவராஜ் போல ஒரு வைத்தியர்.

 அவர் ஒரு லேகிய கம்பெனி ஒன்றை துவக்குகிறார். அந்த கம்பெனியை அப்போது ஆட்5சிப் பொறுப்பு எதிலும் இல்லாது  வெறும் கட்சிப் பொறுப்பில் மட்டுமிருந்த ஒரு பிரபலம் துவக்கி வைக்கிறார்(அந்த பிரபலம் யார் என்பதை கடைசியில் சொல்கிறேன்).

 அதன் பின்பு அவருக்கு ஏறுமுகம்தான்.

 அவரது மாநிலத்தில் உள்ள அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு ஆயுர் வேத பல்கலைக் கழகத்தில் அவரை அந்த பிரபலம் துணை வேந்தராக்குகிறார்.

 அந்த துணை வேந்தர் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டே பின்பு ஆயுஷ் அமைச்சக செயலாளராகி விட்டார்.

 முழுக்க முழுக்க பிரபலத்தின் துணை கொண்டே மேலேறி வந்ததால் அவருக்கு ஆணவமும் திமிரும் வந்ததில் வியப்பென்ன இருக்கிறது!

 அந்த பிரபலம் யார் என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன?

 நீங்களே அது மோடி என்று சரியாக ஊகித்திருப்பீர்களே!

 சின்ன வீடு திரைப்படத்தில் டிபன் காரியரில் மல்லிகைப் பூ வைத்து அனுப்பியதற்கு பாக்யராஜின் அப்பாவாக நடித்த கே.கே.சௌந்தர் “எதை எடுத்தாலும் ஒரு திருட்டுத்தனம்,  ஒரு கேப்மாறித்தனம்" என்று திட்டுவார்.  

இந்த சூழலுக்கு அது கச்சிதமாய் பொருந்துகிறது. 

மேலும் இந்த கோச்சா மோடியின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டார்.

ஆமாம்,  சர்ச்சை வந்த பிறகு "அவரது கூட்டத்தை சில போக்கிரிகள் (HOOLIGANS) திட்டமிட்டு சீர் குலைத்தனர் என்று சாடி திசை திருப்பியுள்ளார்.

Thursday, August 27, 2020

மோடியோடு மோத முடியுமா?

 


“கான மயிலாட கண்டிருந்த வான் கோழி போல” பாவம் யாரோ ஒரு பையன் மோடி போல போட்டோவுக்கு போஸ் கொடுக்க முயற்சி செய்துள்ளான்.

 தம்பி,  உன்னால் நன்றாக தேசத்தை நிர்வாகம் செய்யக் கூட முடியலாம். உன்னால் வேலை வாய்ப்புக்களை கூட உருவாக்க இயலாம், இந்தியாவின் ஏழ்மையை ஒழிக்க இயலாம். மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த இயலாம். கல்வியை அனைவருக்கும் அளிக்க இயலாம். அண்டை நாடுகளோடு நட்புறவை ஏற்படுத்த இயலாம். பொய் சொல்லாமல் உண்மையாகக் கூட உன்னால் முடியலாம். இந்தியாவின் செல்வங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்காமல் பாதுகாக்க இயலாம். கொரானாவை ஒழிக்கலாம். கறுப்புப் பணத்தை ஒழித்து ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் பதினைந்து லட்ச ரூபாய் போடலாம். ஜனநாயகத்தை பாதுகாக்கலாம், சிபிஐ, உச்ச நீதி மன்றம், தேர்தல் ஆணையம், ஊடகம் இவை அனைத்தையும் சுயேட்சையாக செயல்படவைக்கலாம், மர்ம நிதி கணக்கைக் காண்பிக்கலாம்

 இவற்றில் எல்லாம் நீ கொஞ்சமாக ஏதாவது செய்தால் கூட மோடியை நீ சுலபமாக முந்தலாம். ஏனென்றால் இவை அனைத்திலும் அவர் பூஜ்ஜியம்.

 ஆனால்

ஆனால்

ஆனால்

ஆனால்

ஆனால்

 

போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் மட்டும் உன்னால் அல்ல, ராசுக்குட்டி பாக்யராஜால் கூட அவருடன்  மோத முடியாது.

 ஒரு போட்டோ எடுக்க வேண்டுமென்றால்

என்ன ஆங்கிளில் எப்படி தெரிவது?

பின்னணி என்ன?

செட் பிராப்பர்டி என்ன? (பெத்த தாயையே செட் ப்ராப்பர்டி ஆக்கிய பெருமை உண்டய்யா அவருக்கு)

காஸ்ட்யூம் என்ன?

 என்று துல்லியமாக திட்டமிட்டு கச்சிதமாக  போட்டோ எடுத்து அதை பிரம்மாண்டமாக விளம்பரப் படுத்தக் கூடிய வல்லுனர் உலகிலேயே அவர் போல கிடையாது.

 அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் எல்லாம் உன்னால் மோத முடியுமா?

 போப்பா, போ, நீயாவது வெட்டித்தனமாக பொழுதைக் கழிக்காமல்  உருப்படியாக ஏதாவது செய் . . . .

பிகு: மோடியிடம் உள்ள ஒரு சிறப்பம்சத்தை முதல் முறையாக பாராட்டி உள்ளேன். அதற்காக நீங்களும் என்னை பாராட்டுங்கள் சங்கிஸ்

 

வாத்து ராஜா - அரசியல் பதிவு அல்ல

 வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் ஏ.ஏ.கரீம் ஒரு குழந்தைகளுக்கான நூலை முக நூலில் அறிமுகம் செய்திருந்தார். அதை சுட்டு உங்களுக்காக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 தோழர் கரீம் சொன்னது போல இது வெறும் நூல் அறிமுகம் மட்டுமே. உயிருடன் இருப்பவர் யாரையும் குறிப்பதாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கு  அப்படி  உங்களை நினைப்பவர்தான் பொறுப்பு. நானோ, தோழர் கரீமோ அல்லது நூலாசிரியர் விஷ்ணுபுரம் சரவணனோ, ஏன் நீங்களே கூட பொறுப்பல்ல,

 வாத்து ராஜா – நூல் அறிமுகம்



ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... அந்த ராஜா செய்யறது எல்லாமே முட்டாள் தானமாகத் தான் இருக்கும்...

 ஒருமுறை அந்த பருவத்தில் நல்ல மழை வந்ததால் அதிகமான நெல் விளைச்சல் வந்தது.. அதை கொண்டாட மக்கள் அரசனிடம் அனுமதி கேட்ட போது "அதிகம் விளைந்தால்  திரும்ப வயலிலேயே கொட்ட வேண்டியது தானே... தேவை படும் போது எடுத்து கொள்ளலாம்" என்றார். இதை கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 இன்னொரு முறை ஒரு குடிமகன் தனது மகளுக்கு தாலி செய்ய நகை செய்பவரிடம் பணம் கொடுத்தார்... அவன் செய்து கொடுக்கவில்லை அரசனிடம் பிராது போனது விசாரிக்கிறார். அந்த பணத்தை  வாங்கிய பொற்கொல்லன் அதனை செலவு செய்து விட்டதாக கூறுகிறான்." செலவு செய்துவிட்டால் எப்படி நகை வாங்கி தாலி செய்ய முடியும். அதனால் இன்னொரு முறை பணம் கொடுத்து நகை செய்து கொள் என்று தீர்ப்பு கொடுக்கிறார்..

 மன்னரின் பல முட்டாள்தனமான செயல்பாடுகளை பார்த்த மக்கள் அவனுக்கு ஒரு பெயர் வைக்க முடிவு செய்தார்கள். அதன்படி பறவை இனத்திலையே முட்டாள் பறவை வாத்து அதனால் 

 " வாத்து ராஜா" என்று அவரை அழைத்தார்கள்.

 அருமை Vishnupuram Saravanan உங்கள் ஞான திருஷ்டியை கொண்டாடுகிறேன்... இது எந்த ராஜா என்று கேட்க மாட்டேன். நான் ஒன்றும் ராஜாவை போல முட்டாள் இல்லை

 இது அரசியல் பதிவு அல்ல

.. புத்தக அறிமுகம் மட்டுமே.

அவங்க எப்பவுமே அப்படித்தான்

 


இந்த பதிவை செழுமைப் படுத்திக் கொடுத்த தென் மண்டல துணைத் தலைவர்  தோழர் கே.சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன்.

 *நாளொரு கேள்வி*- *08.07.2020*

 இன்று நம்மோடு வேலூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் தோழர் *எஸ். இராமன்

*************************************

 *கேள்வி*

 இந்திய தொழிலதிபர்களின் "பாம்பே பிளான்" எப்படி விடுதலை இந்தியாவின் பொருளாதாரப் பாதையாக மாறியது?

 

*எஸ். இராமன்*

 திட்டமிடுதல் என்ற கோட்பாடு சோவியத் யூனியனிலிருந்து உருவானது என்பதை முதலில் நாம் மனதில் கொள்ள வேண்டும்

 இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த போது இந்தியாவின் பொருளாதாரப் பாதை எப்படி அமைய வேண்டும் என்று *வேறுபட்ட கருத்தாக்கங்கள்* இருந்தன. அக் கருத்தாக்கங்களுக்கு பின்புலத்தில் அவற்றை முன் வைப்பவர்களின் வர்க்கப் பார்வை சார்ந்தும் அமைந்திருந்தன

 1936 ல் பிரபல பொறியாளர் *எம்.விஸ்வேஸ்வரய்யா* ஒரு திட்டத்தை முன்வைத்தார். அது பொதுவாக ஓர் அமெரிக்க மாடல் பொருளாதாரப் பாதையாக இருந்தது.

 *ஸ்ரீமன் அகர்வால்* என்பவர்காந்தியத் திட்டம்என்ற ஒன்றை முன் வைத்தார். இத் திட்டத்திற்கான முன்னுரையை காந்தியே எழுதி இருந்தார். அதையே விரிவுபடுத்தி ஜெயப்பிரகாஷ் நாராயணனும், ஆசார்யா வினோபா வும் இணைந்துசர்வோதயா திட்டம்என்று முன்வைத்தார்கள். விவசாயத்தை மேம்படுத்துவது, கிராமப்புறத் தொழில்களை வளர்த்தெடுப்பது ஆகியவை சர்வோதயா திட்டத்தின் அடிப்படைகளாக இருந்தன.

 இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான *எம்.என்.ராய்,* “மக்கள் திட்டம்என்ற திட்டத்தை முன் வைத்தார். விவசாய நிலங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும், கிராமப்புற மக்களின் கடன் சுமை போக்கப்பட வேண்டும், சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள் அதிகரிக்கப்பட வேண்டும், தொழில்மயம் பெருக வேண்டும், சாதாரண மக்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சாலை, ரயில் வசதிகள் பெருக வேண்டும் ஆகியவை மக்கள் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

1944 ல் *ஜே.ஆர்.டி.டாட்டா, ஜி.டி.பிர்லா, பின்னாளில் இந்தியாவின் நிதியமைச்சரான ஜான் மத்தாய், உள்ளிட்ட எட்டு தொழிலதிபர்கள்* பம்பாய் நகரில் கூடி ஒரு திட்டத்தை உருவாக்குகிறார்கள். அதுதான் "பம்பாய் திட்டம்" என்று அழைக்கப்படுகிறது

 பம்பாய் திட்டம் சொல்வது என்ன?

 இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தின் அடிப்படையில் உள்ளது என்பது மாற்றப்பட்டு தொழில்மயத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்

 அரசின் தலையீடும் கட்டுப்பாடும் இல்லாமல் பொருளாதாரம் வளர முடியாது. ஆனால் அரசு உடமை என்பது கடைசி தெரிவாக இருக்க வேண்டும்

 கனரகத் தொழிற்சாலைகளை துவக்குகிற அளவிற்கு தனியார் முதலாளிகளிடம் மூலதனம் இல்லாததால் அவற்றை அரசே துவக்கிட வேண்டும்

 *அதில் முக்கியமான அம்சமும் இருந்தது. தனியார்கள் அந்த அரசுத் தொழில்களை எடுத்து நடத்துகிற வலுவை பெறுகிற காலம் வரும் போது அவை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது.* (உலகமயம் இந்தியாவில் இந்திய தொழிலதிபர்களால்  90 களில் ஏற்கப்பட்டதற்குமான தொடர்பு வியப்பை தரும். எவ்வளவு தொலை நோக்கோடு தங்கள் நலனுக்கான பாதையை சிந்தித்துள்ளார்கள் என்று.) 

 தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு அரசே நிதியுதவி செய்திட வேண்டும்.

 அன்னியக் கம்பெனிகளின் போட்டியால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படாமல்  இருப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசு விதித்திட வேண்டும்

 சுதந்திரச் சந்தையால் இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதால் அரசின் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

 விவசாயத்தைப் பொருத்தவரை ஜமீந்தார் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பம்பாய் திட்டம் சொன்னாலும் நிலச் சீர்திருத்தம் பற்றி வாய் திறக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

 பதினைந்து ஆண்டுகளுக்குள் தனி நபர் வருமானம் இரட்டிப்பாக வேண்டும் என்று கூட பம்பாய் திட்டம் சொன்னது.

 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த பங்கையும் தாங்கள் அளிக்க முதலாளிகள் தயாராக இல்லை என்பதையே பம்பாய் திட்டம் உணர்த்தியது

 இது தனிப்பட்ட எட்டு முதலாளிகளின் யோசனை என்று முதலில் சொல்லப் பட்டாலும் பின்பு இந்திய முதலாளிகள் கூட்டமைப்பு (FICCI) தனது கூட்டத்தில் பம்பாய் திட்டத்தை ஏற்றுக் கொண்டது

 சோஷலிச பாணியில் அரசு அமைப்போம் என்று ஆவடியில் நடந்த மாநாட்டில் காங்கிரஸ் முடிவெடுத்தது.

 பம்பாய் திட்டம், இந்தியப் பொருளாதார வளர்ச்சி அரசின் தலையீடு, கட்டுப்பாடு, நிதியுதவி இதனால் மட்டுமே சாத்தியம் என்பதை வலியுறுத்தியது

 நேருவின் அரசு உருவாக்கிய முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களில் பம்பாய் திட்டத்தின் பல கூறுகள் அடங்கி இருந்தது

 பம்பாய் திட்டத்தை பின்பற்றுகின்றோம் என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் இந்தியாவின் பொருளாதாரப் பாதை பம்பாய் திட்டத்தின் அடிப்படையில்தான் அமைந்திருந்தது

 அரசு பம்பாய் திட்டத்தைத்தான் பின்பற்றுகிறது என்று ஏன் நேரு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை என்ற கேள்விக்கு சமீபத்தில் கிடைத்த பதில் சுவாரஸ்யமானது.

 சஞ்சயா பாரு, மேக்நாத் தேசாய் ஆகியோர் எழுதிய *“மீண்டும் பம்பாய் திட்டத்தின் அவசியம்”* புத்தகத்தில்

 *“முதலாளிகள் உருவாக்கிய பம்பாய் திட்டத்தின் அடிப்படையில் அரசு செயல்படுவதாக ஒப்புக் கொண்டால், தன் முக்கிய அரசியல் எதிரிகளான கம்யூனிஸ்டுகள் கடுமையாக விமர்சிப்பார்கள் என்பதால் நேரு அவ்வாறு சொல்லவில்லை”*

 என்று எழுதப்பட்டுள்ளது.

 சுதந்திரச் சந்தையில் அன்னியக் கம்பெனிகளால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படும், பொருளாதார வளர்ச்சி உருவாக அரசின் தலையீடும் கட்டுப்பாடும் நிதியுதவியும் அவசியம் என்று சொன்ன இந்திய முதலாளிகள் உலகமயப் பின்புலத்தில் தங்கள் நிலையை முழுமையாக மாற்றிக் கொண்டு விட்டனர் என்பது ஒரு முரண் அல்ல

 *அன்னிய மூலதனத்துடன் அவர்களுக்கு தொடர்ந்து இருந்த ஊசலாட்டம், அரசுத் துறையை உருவாக்குவதில் அவர்களுக்கு முதலில் இருந்த நிர்ப்பந்தம் ஆகியனவற்றின் தர்க்க ரீதியான பயணம் எட்டியுள்ள இலக்கே உலக மயத்துடனான கை குலுக்கல்.*

 

*****************

*செவ்வானம்*

நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே இருந்த பதிவு இது. காலையில் வேறு சில பணிகள் இருந்ததால் இன்றைக்கு அதற்கு விமோசனம் கிடைத்தது