Wednesday, November 28, 2018

கொலையுண்டவர் குடும்பங்களை நோக்கி . . .





அடுத்தடுத்து நடந்த மூன்று கொலைகள் தமிழகத்தில் மனசாட்சி உள்ளவர்களின் மனதை பாதித்தது.

பாலியல் இச்சைக்கு பணிய மறுத்ததால் தலை வெட்டிக் கொல்லப்பட்ட ராஜலட்சுமி.

வெறியர்களால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி, காவல்துறையின் அலட்சியத்தால் மரணித்த சௌம்யா,

ஆணவக்கொலையின் சமீபத்திய பலி நந்தீஷ்.

இந்த மூவர் குடும்பங்களையும் நேரில் சந்தித்து நீதி கோரும் அவர்களின் போராட்டத்தில் துணை நிற்போம் என்று நம்பிக்கை விதைகளை தூவி வந்துள்ளது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

அகில இந்திய இணைச்செயலாளர் தோழர் எம்.கிரிஜா, தென் மண்டல மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணை அமைப்பாளர் தோழர் ஜே.விஜயா, தென் மண்டலப் பொருளாளர் தோழர் ஆர்.கே.கோபிநாத், சேலம் கோட்டச்சங்கத் தலைவர் தோழர் லட்சுமி சிதம்பரம், பொதுச்செயலாளர் தோழர் ஏ.கலியபெருமாள் உள்ளிட்ட தோழர்கள் நேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்து உறுதி கொடுத்து விட்டு வந்தனர். 

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான 
சர்வதேச தினம் மூன்று நாட்கள் முன்பாகத்தான் கடந்து போயிருக்கிறது. சர்வதேச மகளிர் தினத்தைப் போல இத்தினத்தையும் ஒரு கொண்டாட்ட தினமாக நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியை முதலாளித்துவ ஊடகங்கள் தொடங்கி உள்ளன.

பத்திரிக்கைகளில் ஒரு நாள் புகைப்படத்துடன் செய்தி வருவதோடு முடிந்து போவதல்ல, வன்முறைக்கு எதிரான போராட்டம் என்பது. களத்தில் தொடர்ந்து நிற்பது. 

அந்த கள அனுபவத்தை உணர்வுபூர்வமாக எங்கள் அகில இந்திய இணைச்செயலாளர் பகிர்ந்து கொண்டுள்ளார். நிஜமான அக்கறையோடு, புரிதலோடு அவர் எழுதியுள்ளது நெகிழ்ச்சியூட்டுகிறது. 

அவசியம் முழுமையாய் படியுங்கள்.




ஒசூரிலிருந்து புறப்பட்டு நகரத்திலிருந்து விலகி இருபுறமும் பச்சைப்பசேலென்ற வயல்களிடையே தார்ச் சாலையில் பயணித்தோம். அடுத்து வந்த கரடுமுரடான சாலையில் சிறிது தூரம் சென்ற எங்களது கார் சூடுகொண்டபள்ளி கிராமத்தை அடைந்தது. வலதுபுறம் திரும்பியவுடன் காவல்துறையிரின் விசாரிப்புகளை முடித்து உள்ளே சென்றோம். 

கீத்துக் கொட்டாய் குளியறை, ஷீட் போட்ட வீடு(!) ... நந்தீஷின் சகோதரியும், தாயும் வெளியே வந்தனர்.  எங்களோடு வந்திருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகியும், விச-வின் நிர்வாகியும் எங்களை அறிமுகப்படுத்தினர்.  'இந்த கொலைல சம்பந்தப்பட்ட எல்லாரையும் ஜெயில்ல போடணும்.. எங்க 15 குடும்பத்துக்கும் பாதுகாப்பு இல்ல' என கண்ணீர் மல்க நந்தீஷின் குடும்பத்தினர் பேசத் துவங்கினர். அவர்கள் சொல்வதைக் கேட்க கேட்க மனம் பதைபதைத்தது. தேற்ற வார்த்தைகளின்றி மனம் கனத்தது. ஆதரவின் அடையாளமாக 5000/- ரூபாய்களை அக்குடும்பத்தினரிடம் அளித்தோம். சாதி ஆணவக் கொலையை எதிர்த்த அவர்களது போராட்டத்தில் என்றென்றும் AIIEA தோழர்கள் உடனிருப்போம் என உறுதியளித்தோம்.

அரூரில் மதிய உணவை முடித்துவிட்டு சிட்லிங் நோக்கி துவங்கியது பயணம்.. மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகியும்,  மாதர் சங்கத்தின் செயலாளரும் எங்களோடு வந்தனர். கோட்டப்பட்டியை நெருங்கும்போது, இனி கொஞ்சம் ரோடு மோசமாக இருக்கும் என தோழர் சொன்னார். கொஞ்சம் இல்லை, நடுல கொஞ்ம் ரோட்டையே காணோம். நெடுஞ்சாலைல எங்கள சொகுசா சுமந்த கார், இப்ப குலுக்கி தூக்கிப் போட்டது. 

20 நிமிட பயணத்தில் சிட்லிங்கை அடைந்தோம். செளமியாவின் வீட்டை அடைந்தோம். வாசலில் கயித்துக் கட்டில், நெருப்பு கனன்று கொண்டிருந்த மண் அடுப்பு ... அக்குடும்பத்தின் ஏழ்மையை எடுத்துரைத்தது. செளமியாவின் தாய், அண்ணி, பாட்டி, அக்கம்பக்கம் இருப்போர் அவசரமா உட்கார சேர்களைப் போட்டனர். தன் ஆசை மகளுக்கு நேர்ந்த கொடுமையை, இழைக்கப்பட்ட அநீதியையும் அழுகையோடு சொன்னபோது, நீரில் மிதக்கும் கண்களோடு கேட்டுக் கொண்டிருந்த எங்கள்  கண் முன் அதிகாரத்தில் இருப்பவர்களின் அலட்சியத்தால் உயிரோடு கொல்லப்பட்ட செளமியா முகம் வந்து மனதைப் பிசைந்தது.

 கனத்த இதயத்தோடு சிட்லிங்கிலிருந்து ஆத்தூருக்குப் புறப்பட்டோம்.  ஐபிஎஸ் பாசாகி காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற சௌமியாவின் கனவு, இயற்கை உபாதைக்காக ஓடைப்பக்கம் ஒதுங்கியபோது அவளோடு சேர்த்து கலைக்கப்பட்டது சொல்லொணாத் துயரத்தை அளித்தது.  வனத்துறையின் காடுகளினிடையே பயணித்த பின், கிராமம் ஒன்றை எட்டியபோது, இயற்கை உபாதைக்கு ஒதுங்க இடம் தேடினோம்.  மினி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை பார்த்ததும் காரை நிறுத்தினோம். அங்கே இருந்த இரு பெண்களிடம் எங்கள் சிரமத்தை சொல்லி உதவி கேட்டோம். மலர்ந்த முகத்தோடு எங்களை கழிப்பறைக்கு அழைத்து சென்றார். மனதார அவர்களுக்கு நன்றியை சொன்னோம். 

அப்போது நீங்கல்லாம் எங்கே இருந்து வர்றீங்க? என கேட்க, நாங்க விவரங்களை சொன்னோம். நெகிழ்ந்து போன அவர்கள், 'நீங்க செஞ்சிருக்கறதோட பார்த்தா நாங்க உங்களுக்கு ஒண்ணுமே செய்யல' என சொன்னதோடு, அங்கே கிண்ணத்துல இருந்த அவிச்ச கடலையை எடுத்து, 'எங்க தோட்டத்து கடலை.. மருந்தடிக்காதது' என சொல்லி அள்ளித் தந்தனர்.  'இந்த பக்கம் வரும்போது எங்க கடைக்கும் வாங்க' என்றவர்களிடம் விடைபெற்றோம். இச்சமூகத்தில் மனிதம் இன்னும் முற்றிலுமாக மரணித்து விடவில்லை என்ற ஆறுலோடு பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஆத்தூரின் தளவாய்பட்டி நோக்கி கார் வேகம் பிடித்தது.  நெடுஞ்சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி ராஜலட்சுமி வீடு நோக்கி பயணித்தோம். இருபுறமும் இருந்த வயல்வெளிகளில் சோளம், பருத்தி, மரவள்ளிகிழங்கு, மஞ்சள் ஆகியன பயிரிடப்பட்டிருந்தன.  அங்கொன்றும் இங்கொன்றாகவும் இருந்த சாலை வீடுகளைப் பார்த்தபடி போனோம். அங்க ஒரு வீட்டுக்கு போற வழி முட்களும், கம்பிகளும், கட்டைகளும் போட்டு மறிக்கப்பட்டிருந்தது. உடன் வந்த மாதர் சங்க சகோதரியிடம் கேட்டபோது இதுதான் ராஜலட்சுமிய கொன்னவன் வீடு என்றார். 

மீண்டும் வலப்புறம் திரும்பி கார் நிற்க இறங்கினோம். அங்கிருந்த காவலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ராஜலட்சுமி வீட்டை அடைந்தோம். குடும்பத்தினரை சந்தித்து பேசத் தொடங்கினோம். அச்சிறுமியின் தாயும், தகப்பனும், சகோதரி & சகோதரன் நடந்ததை விவரித்தபோது மனம் பதைபதைத்தது. பாப்பாவோட தலையில்லாத ஒடம்பு இங்கதாம்மா துடிச்சுச்சு என அத்தாய் கை காட்ட அவரோடு நாங்களும் துடிதுடித்துப் போனோம். சாதி வெறிக்கெதிரான போராட்டத்தில் நாமும் அவர்களோடு உள்ளோம் என்று சொல்லி,  விடை பெற்றோம்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் கண்களில் நன்றி ஒளிர்ந்தது. 

காலை முதல் தொடர் பயணம்... நம்ப வைத்து கொலை செய்த சுவாதியின் பெரியப்பா, காதும் காதும் வைத்து  வழக்கை முடித்து குற்றவாளிகளை காப்பாற்ற சௌமியாவின் குடும்பத்தாரை  வஞ்சித்த காவல்துறை, அரசு மருத்துவமனை, பெண்கள் காப்பகம் ஆகியற்றைச் சார்ந்தவர்கள், 8ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் கழுத்தை துள்ளத் துள்ள, துடிக்கத்துடிக்க கொன்றவன் ... இவர்களை எதிர்த்த போராட்டத்தில் களம் கண்டு வரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய, சமூரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்ற நிறைவோடு ஊர் திரும்ப பயணம் கார் நோக்கி நகர்ந்தோம்.

SZIEFன் பொருளாளர் கோபிநாத், LICSZWWCCன் இணை அமைப்பாளர் விஜயா, சேலம் கோட்டச் சங்க பொதுச் செயலாளர் கலியபெருமாள், தலைவர் லக்ஷ்மிசிதம்பரம், சேலம் கோட்ட மகளிர் துணைக்குழுவின் அமைப்பாளர் பொன்மொழி, கோவை மண்டல பொது இன்சூரன்சு ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக்குழுவின் அமைப்பாளர் ஷோபனா ஆகியோரோடு நானும் சென்றேன். ஒசூர் கிளையின் ஹரிணியும் இதர முன்னணி தோழர்களும் நந்தீஷ் குடும்பத்தினரை சந்திக்க எங்களோடு வந்தனர். சேலம் கோட்ட மகளிர் துணைக் குழுவின் அமைப்பாளர் தோழர் சாந்தி சிட்லிங்கிற்கும், தளவாய்ப்பட்டிக்கூம் எங்களோடு பயணித்தார்.

Tuesday, November 27, 2018

தமிழிசையக்கோவ் பதில் சொல்லுங்க!


தோழர் பிணராயி விஜயனும் ஒரு நாள் இருமுடி கட்ட வேண்டி வரும் என்று சொன்ன தமிழிசை அம்மையாரிடம் தீக்கதிர் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் கேட்ட கேள்வி அருமையானது.



பதில் சொல்லுங்கம்மா? நீங்க இருமுடி கட்டுவதற்கு உங்க காவிக்கட்சி  அனுமதிக்குமா?

மோடியை அழ வைக்காதீர் . . .




மோடி ஒரு கேடியென்பதை மறவாதீர்

இந்த அரசு பதவியேற்கும் போது ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு ராகுல் காந்தியின் வயதாக இருந்து, சோனியாவின் வயதாக அதிகரித்து இப்போது மன்மோகன்சிங்கின் வயதாகி விட்டது என்று இன்றைய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அன்று நக்கல் செய்ததின்

எதிர்வினையாகக் கூட

“ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது மோடியின் தாயின் வயது அளவுக்கு உயர்ந்து விட்டது”

என்று இப்போது

ராஜ் பாப்பர் நக்கல் அடித்திருக்கலாம்.

மோதிலால் நேரு தொடங்கி ராகுல் காந்தி வரை உள்ள நேரு குடும்பத்தினரை காவிகள், கண்ணியமற்று தரக்குறைவாக பேசிக் கொண்டே இருப்பதாலும் அதிலே பிரதான வசையாளராக உள்ள நரேந்திர மோடி ராகுல் காந்தியை மக்களவையிலேயே “பப்பு" என்று கிண்டல் செய்ததாலும்

ஏற்பட்ட எரிச்சலின் விளைவாக

“மோடி குடும்பத்திற்கு என்ன பாரம்பரியம் உள்ளது?” என்று காங்கிரஸ் கட்சியின் சி.பி.ஜோஷி கேட்டிருக்கலாம்.

காங்கிரஸ் காரர்கள் பேசியது ரசனைக்குறைவாக இருந்த போதிலும் அதனை துவக்கி வைத்தது என்னமோ மோடியும் காவிகளுமே!

இருப்பினும் காங்கிரஸ் கட்சி அவற்றை எல்லாம் தவிர்த்திருக்க வேண்டும்.

ஏன்?

என்னுடைய நேற்றைய பதிவில் சொன்னதையே நினைவு படுத்துகிறேன்.

மோடி ஒரு சிறந்த விற்பனைப் பிரதிநிதி.

வாயையே மூலதனமாக்கி பிரதமரான ஒரு மோசடிப் பேர்வழி. நான்காண்டுகளில் மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யாத காரணத்தால் அவர்களின் கடுமையான அதிருப்தியை சேகரித்து வைத்துள்ளதால்

மீண்டும் வாக்கு வேட்டை நடத்த

ராமர் கோயில் எனும் வழக்கமான ஆயுதத்தை

தூசி தட்டி துடைத்து பயன்படுத்தும் வேளையில்

இதுபோன்ற எதிர்வினைகள் வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் மோடிக்கு பீட்ஸா கொடுத்தது போலாகி விடும்.

எதுவுமே இல்லாத போதே

பத்து லட்ச ரூபாய் கோட் அணிந்து கொண்டு “ஏழைத்தாயின் மகன்”

வெண்முரசுக்கு போட்டியாக பல பக்க வசனம் பேசுகிற போது இப்போது கேட்கவா வேண்டும்.

எம்.ஜி.ஆர் தூணைப் பிடித்துக் கொண்டு அழுவதைப் போல  மோடி மைக்கைப் பிடித்துக் கொண்டு அழுகாச்சி சீனை ஆரம்பித்து விட்டார்.

பெரு முதலாளிகளின் தரகர் செய்யும் அராஜகங்களை அம்பலப்படுத்துங்கள். ஆட்சியின் அவலங்களை தோலுரியுங்கள். ஆனால் அனுதாபம் தேட மட்டும் வாய்ப்பளிக்காதீர் . . .

பிகு

சி.பி.ஜோஷி பேசியதை ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.  நல்ல விஷயம் இது.

காவிகள் அநாகரீகமாக பேசுவதை மோடி எப்போதாவது கண்டித்துள்ளாரா? இல்லை. அநாகரீகமான பேசுவது என்பதே அவரிடத்திலிருந்துதான் துவங்குகிறது. அவர் காட்டிய அசிங்கமான பாதையில்தானே அத்தனை காவிகளும் பயணிக்கிறார்கள்!


கேஜ்ரிவாலிடம் எடப்பாடி கற்கட்டும்



புதுடெல்லி ஆம் ஆத்மி அரசு நேற்று ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது. 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான முந்தைய பென்ஷன் திட்டம் என்பதில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு எவ்வளவு பலன் கிடைக்கும் என்பது தெளிவாக தெரியும் (Defined Benefit Scheme)

அதுவே 0.04.2004 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மாறி விட்டது. இதிலே பங்களிப்பு என்ன என்பது வரையறுக்கப் பட்டுள்ளது. அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றில் 10 % ஊதியத்தில் பிடிக்கப்பட்டு அதே தொகை அரசாலும் அளிக்கப்பட்டு அத்தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வு பெறுகிற போது என்ன தொகை மிஞ்சுகிறதோ அத்தொகைக்கு ஏதாவது ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் (அது தனியார் கம்பெனியாகவும் இருக்கலாம்) ஆன்யுட்டி (ANNUITY) பாலிசி எடுக்கப்பட்டு அதிலிருந்து பென்ஷன் வழங்கப்படும்.

வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு 01.04.2010 முதல் இத்திட்டம் திணிக்கப்பட்டுவிட்டது.

இந்த பங்களிப்பு வரையறுக்கப்பட்ட (Defined Contribution Scheme) ல் பென்ஷன் எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியாது.

ஊழியர்களின் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தைக்கு கொண்டு வந்து சூறையாடுவது என்ற திருப்பணியை துவக்கி வைத்தது வாஜ்பாய் என்பது நினைவிருக்கட்டும்.

இப்போது தேசிய பென்ஷன் திட்டம் என்ற பெயரில் அழைக்கப்படும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்தியரசு, மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என்பது ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதி.

இச்சூழலில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் விளைபயனாக புதுடெல்லி அரசு தேசிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தையே அமலாக்கப் போவதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். மிக்ச்சரியான முடிவெடுத்த கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்று லெப்டினன்ட் கவர்னருக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதன் அமலாக்கத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு குறைவு.

அம்மா வழி ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் எடப்பாடி அரவிந்த் கேஜ்ரிவால் வழியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அவர்களின் அம்மா அளித்த உறுதிமொழியை காப்பாற்றட்டும். 

பிகு

அனாமதேயங்களின் புத்தி கூர்மையை சோதிக்கவே ஒரு முக்கியமான தகவலை இங்கே தவிர்த்துள்ளேன்.

நான் எதிர்பார்க்கும் கேள்வி வருகிறதா என்று பார்ப்போம்


Monday, November 26, 2018

ஜெமோ, சாரு பின்னே மோடி



மோடி மட்டும் எல்.ஐ.சி யின் வளர்ச்சி அதிகாரியாக இருந்தால் எல்.ஐ.சி ஏப்ரல் மாதத்திலேயே தன்னுடைய புது வணிக இலக்கை எட்டி விடும். அந்த அளவு சிறந்த விற்பனைப் பிரதிநிதி என்று எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.

மோடி மட்டும் நாவல் எழுதத் தொடங்கினால் ஜெமோ, சாரு நிவேதிதா போன்றவர்கள் எல்லாம் நாவல் எழுதும் பிழைப்பை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்பது என் கருத்து.

அப்படி அவர்கள் ஓடிப்போவது இலக்கியத்திற்கு நல்லதுதான் இருந்தாலும் அந்த இடத்திற்கு இன்னொரு மோசமானவர்தான்  வர வேண்டுமா என்ற உங்கள் கேள்வி என் காதில் விழத்தான் செய்கிறது. மோசமானவர்கள் இடத்திற்கு மோசமானவர்கள்தானே வர முடியும்!

மோடியின் கற்பனைத்திறனுக்காகத்தான் நாவல் எழுதலாம் என்று சொன்னேன்.

“பாபர் மசூதி வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளிப் போட்டதற்கு அவர்கள் மீது பதவி பறிப்பு தீர்மானத்தை (Impeachment Motion) கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் அச்சுறுத்தியதுதான் காரணம்”

என்று ஒரு தேர்தல் கூட்டத்தில் வழக்கம் போல அள்ளி விட்டுள்ளார் மோடி.

·         அமித் ஷா வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி யோயாவை மர்மமான முறையில் சாகடித்தவர்கள்,
·         அந்த வழக்கை மறு விசாரணை செய்யக் கூடாது என்று தீபக் மிஷ்ராவை தீர்ப்பளித்தவர்கள்,
·         அமித்ஷா விடுதலைக்காக ஆளுனர் பதவியை பேரம் பேசியவர்கள்
·         குதிரை பேரத்தை உத்தர்கண்டில் அனுமதிக்காதவரை நீதிபதியாக்க மறுத்து, கடைசியில் அவர் பணி மூப்பில் மோசடி செய்தவர்கள்

எல்லாம் நீதிபதிகளை மிரட்டுவதாக பேசுவது வெட்கக் கேடானது.

அப்படி காங்கிரஸ் கட்சி நீதிபதிகளை மிரட்டியிருந்தால் காங்கிரஸ் கட்சியின் மீதும் அப்படி மிரட்டியவர்கள் மீதும், வழக்கு போடுங்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவதில் என்ன பிரச்சினை உள்ளது?

காங்கிரஸ் கட்சியின் எந்த தலைவர் அப்படி சொன்னாரோ, அவரை தூக்கி ஜெயிலில் போடுங்கள்.

எந்த தலைவர் அப்படி மிரட்டினார் என்று அவருடைய பெயரைக் கூட வெளிப்படையாக சொல்லாமல் கிசுகிசு பாணியில் ஏனய்யா பேசுகிறீர்?

மிஸ்டர் நரேந்திர மோடி. நீதிபதிகளை பாதுகாக்க வேண்டியது பிரதமராகிய உங்கள் கடமை. அதைச் செய்வதற்கான அதிகாரமும் அரசு இயந்திரமும் உங்களிடம்தான் உள்ளது.

அதை விடுத்து ஒரு நாலாந்தரப் பேச்சாளராக தேர்தல் கூட்டத்தில் கிசுகிசு பாணியில் பேசுவது என்பது உங்களின் கற்பனைத் திறனை மட்டுமே காண்பிக்கிறது

இப்படி பொய்யும் புளுகுமாக கட்டுக்கதை பரப்புபவரெல்லாம் பிரதமராக இருப்பது இந்தியாவிற்கு நேர்ந்த இழிவு.

யாருய்யா அந்த மந்திரி ?????


நேற்று அயோத்தியில் வெறி பிடித்தவர்கள் நடத்திய அதர்ம சபையில் தேர்தலின் போது மட்டுமே கிளப்பப்படும் ராமர் கோயில் பிரச்சினை மீண்டும் உசுப்பி விடப்பட்டுள்ளது.

எத்தனை யுகங்கள் கடந்தாலும் அயோத்தியில் காவிகள் ராமருக்கு கோயில் கட்டப் போவது கிடையாது. அந்த பிரச்சினையை அப்படியே வைத்திருந்து தேர்தல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்கள் நோக்கம்.

ராமர் கோயில் என்ற ஆயுதம் கொண்டு அவர்களின் ஆட்சி முனை மழுங்கிய அம்பாகி விட்டதை மறைக்க முயல்கிறார்கள்.

வெறியர்கள் கூட்டத்தை திரட்டி விட்டு வெறுங்கையோடு அனுப்பக் கூடாது என்பதற்காக அந்த கூட்டத்தில் பேசிய சித்ரகூட மடாதிபதியும் பத்மவிபூஷன் விருது பெற்றவருமான ஜகத்குரு (ஆளுக்காளு உலக குருன்னு உங்களுக்கு நீங்களே பட்டம் கொடுத்துக்கிட்டா எப்படி? எத்தனை ஜகத்குருக்களை உலகம் தாங்கும்?) சுவாமி ராம்பத்ராச்சார்யா என்பவர் பேசியுள்ளது கவனத்துக்குரியது.

"மோடி அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் எனக்கு சில உறுதிமொழிகளை கொடுத்துள்ளார். ஐந்து மாநிலத் தேர்தல் காரணமாக டிசம்பர் 11 வரை தேர்தல் நடத்தை விதி உள்ளது. அதன் பின்பு நாங்கள் மிக முக்கிய முடிவொன்றை எடுக்க உள்ளோம். அந்த முடிவின் படி ராமர் கோயில் கட்டுவதை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு அழுத்தமான முடிவு. அது ஒரு அவசரச்சட்டமாகவும் இருக்கலாம். மோடி இந்துக்களை ஏமாற்ற மாட்டார்"

இதெல்லாம் நடக்குமா, நடக்காது என்பது வேறு விஷயம். 

அரசு எடுக்கப்போகும் முடிவு பற்றி ராம்பத்ராச்சாரியா சாமியாரிடம் சொன்ன அந்த முக்கிய மந்திரி யார்?

ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறிய அந்த மந்திரியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


Friday, November 23, 2018

அனைத்தும் சிவாஜிக்குத்தான் பொருத்தம்






சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் இதழில் தற்போதைய நடிகர்களுக்கு இந்தியாவின் முக்கியத் தலைவர்களின் வேடங்களைப் போட்டிருந்தது.

அவர்களுக்கெல்லாம் ரொம்பவே மெனக்கெட்டால்தான் அந்த தலைவர்களின் வேடம் பொருந்தும். அதிலும் ஒருத்தருக்கு ஒரு தலைவர் வேடம்தான்.

ஆனால் அனைத்து வேடங்களும் பொருந்தக் கூடிய ஒரே முகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடையதுதான். அந்த தலைவர்களாக அவர் நடிக்கவும் செய்துள்ளார்.

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

வ.உ.சி யாக,
பகத்சிங்காக,
நேதாஜியாக,
விவேகானந்தராக,

எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!

தாகூராக அவர் தோன்றவில்லை. ஆனால் சாக்ரடீஸ் வேடப் பொருத்தத்தை பார்க்கையில் அவருக்கு தாகூர் வேடம் போட்டிருந்தால் அதுவும் கூட பொருந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது.

கடைசியில் உள்ள படம் “கை கொடுத்த தெய்வம்” படத்தில் “சிந்து நதியின் மிசை”  பாடலில் ஒரிரு நொடிகள் மட்டுமே வரும் “சிங்க மராட்டியர் தம் கவிதைகட்கு” என்ற வரிக்காக அவர் திலகர் போல காட்சியளித்தது.  அந்த பாடலிலேயே பாரதி தவிர வேறு சில தோற்றங்களிலும் வருவார். அந்த நேர்த்தியும் உழைப்பும் மெனக்கெடலும் இன்றைய நடிகர்களுக்கு இல்லை என்பதையும் கூட சொல்லித்தான் ஆக வேண்டும்.