Saturday, December 27, 2025

கட்டாக்கில் முதல் முறையாக

 




நான் கலந்து கொண்ட முதல் அகில இந்திய மாநாடு 1990 ல் ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற 14 வது மாநாடு. சொல்லப் போனால் வேலூர் கோட்டத்திற்கே அதுதான் முதல் மாநாடு. 12.06.1988 அன்றுதான் வேலூர் கோட்டம் உதயமானது.

வேலூர் கோட்டத்திலிருந்து பங்கேற்ற தோழர்களில் நெய்வேலியிலிருந்து கலந்து கொண்ட நாங்கள் எழுவர் மட்டும் சென்னையிலிருந்து சென்னை கோட்டத் தோழர்களுடன் பயணித்தோம்.  மற்ற தோழர்கள் வேலூர் காட்பாடியிலிருந்து  நேரடியாகவே கட்டாக் செல்லும் வண்டியில் சென்று விட்டனர்.  நாங்கள் அத்தனை பேரும் ஒரே பெட்டியில் பயணிக்கவில்லை. வேறு பெட்டியில் பயணித்த இரண்டு தோழர்கள் விசாகப்பட்டிணத்தில் இரண்டு தோழர்கள் பெட்டியின் கதவை தட்டி மீண்டும் இங்கே ஏறிக் கொண்டார்கள். 

ஏன்?

அவர்களை அந்த பெட்டியிலிருந்து வட மாநிலப் பெண்கள் இறக்கி விட்டு விட்டார்கள்.

ஏன்?

அதில் ஒருவர் நிறத்தில் மிகவும் கருப்பாக இருப்பார். அதனால் அவரை எல்.டி.டி.இ என்று சொல்லி இறக்கி விட்டுள்ளனர். இத்தனைக்கும் அப்போது ராஜீவ் காந்தியெல்லாம் கொல்லப்படவில்லை.

கட்டாக்கில் உள்ள  ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில்தான் மாநாடு நடைபெற்றது. ஒடிஷா முன்னாள் முதல்வர் பிஜு பட்னாயக்கின் பங்களா ஒன்றில் மதுரை, தஞ்சை, வேலூர் கோட்டத் தோழர்கள் தங்க வைக்கப் பட்டிருந்தோம். காலை 5 மணிக்கெல்லாம் டீயுடன் தொண்டர்கள் எழுப்பி விடுவார்கள். எங்களை எழுப்பி விட்டவர் அருகில் உள்ள பாரதீப் துறைமுகத்தின் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்பது கடைசி நாளன்று தெரிந்தது.

ஒவ்வொரு நாளும் தோழர் ஜோசப் மதுரை, தோழர் ஜகதீசன், வேலூர், தோழர் எஸ்,ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று கோட்டப் பொதுச்செயலாளர்கள் தலைமையில் தினசரி மகாநதியில் குளிக்கச் செல்வோம். வழியெங்கும் தலைவர்கள் பேசிக் கொண்டு வருவார்கள். நாங்கள் கேட்டுக் கொண்டு வருவோம், அதுவே ஒரு நல்ல அனுபவம்.

மாநாட்டை மேற்கு வங்கத்தின் அன்றைய நிதியமைச்சர் தோழர் அசோக் மித்ரா துவக்கி வைத்தார். அவர் பேசியதில் பல, அன்றைக்கு புரியவில்லை என்பதை மனசாட்சியோடு சொல்ல விரும்புகிறேன்.

விவாதங்கள் மிகச் சிறப்பாக இருந்தன. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை நாடு முழுதும் வழி நடத்திச் செல்லும் தூண்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. 

வி.பி.சிங் ஆட்சி கலைக்கப்பட்டு, பின்பு சந்திரசேகர் ஆட்சியும் கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது.  ரத யாத்திரை முடிந்திருந்தது. மண்டல் கமிஷனுக்கு எதிராக போராட்டங்களும் நடந்து முடிந்திருந்த காலம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மத வெறிக்கு எதிரான அமைப்பு, சமூக நீதிக்கு ஆதரவான அமைப்பு என்பதை அனைத்து தோழர்களுக்கும் உறுதி செய்தது கட்டாக் மாநாடு.

மாநாடு நடைபெற்ற உள்ளரங்கிற்கு அடுத்தாற்போல் இருந்தது பாரபதி ஸ்டேடியம். மாநாட்டின் கடைசி நாளன்று இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதல் நாளன்று அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் என்.எம்சுந்தரம் "No Comrade should be tempted to see a cricket match" என்று தெளிவாக சொன்னார். 

மாநாடு முடிந்து பேரணி நடந்து கொண்டிருந்த போது ஸ்டேடியத்தில் இருந்து  ஏழெட்டு தோழர்கள் மட்டும் ஓடி வந்து பேரணியில் இணைந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 1500 பேரில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் போட்டிக்கு போயிருந்தனர். அந்த போட்டியில் இந்தியா தோற்றுப் போனது என்பது வேறு விஷயம்.

நான் கலந்து கொண்ட முதல் மாநாடு கட்டாக் மாநாடு. அநேகமாக முழுமையாக கலந்து கொள்ளக் கூடிய இறுதி மாநாடு புவனேஸ்வர் மாநாடு. இரண்டும் ஒடிஷா மாநிலத்தில்தான்.

பிகு" மேலே உள்ள படத்தில் உள்ள வேலூர் கோட்டத் தோழர்களில் தோழர் பாலாஜி, பாலு ஆகிய இருவர் மட்டும் அதிகாரிகளாக பணியில் உள்ளனர். தோழர்கள் ஆர்.வெங்கடேசன், டி.எஸ்.முத்துசாமி, கே.ஆர்.ஸ்ரீதர், ஜி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காலமாகி விட்டனர். இரண்டு படங்களிலும் எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அருகில் நான் உள்ளேன். 




No comments:

Post a Comment