Tuesday, December 30, 2025

கான்பூர்- புதுடெல்லி - நாக்பூர்

 



2007 ல் 21 வது மாநாடு கான்பூர் நகரில் நடைபெற்றது. நாங்களும் சேலம் கோட்டத் தோழர்களும் ஆக்ரா சென்று தாஜ் மஹாலைப் பார்த்து விட்டு பின்பு இன்னொரு ரயில் மூலமாக கான்பூர் செல்வதென்று திட்டமிட்டு புறப்பட்டோம். நாங்கள் ஆக்ரா சென்ற வெள்ளிக்கிழமையன்று தாஜ்மஹால் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று எங்களுக்கு தெரியாது. ஷாஜஹான் சிறை வைக்கப்பட்ட செங்கோட்டையிலிருந்து அவரைப்போலவே தூரத்திலிருந்து தாஜ் மஹாலை பார்த்து மனதை தேற்றிக் கொண்டோம்.

பொது உடமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் சுபாஷினி அலி வரவேற்புக்குழுவின் தலைவர். விடுதலைப் போராட்ட வேங்கை தோழர் கேப்டன் லட்சுலி அவர்களின் வருகையே மிகுந்த உற்சாகமளித்தது. பத்திரிக்கையாளர் திரு சாய்நாத் மாநாட்டை துவக்கி வைத்தார். இம்மாநாட்டில் அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  இம்மாநாட்டிற்காக தற்காலிக அரங்கம் உருவாக்கப் பட்டது. 

நேரடி ரயில் இல்லாததால் ஜான்சி வந்து வேறு ரயிலை பிடித்து திரும்பினோம். புறப்படும் போது வெள்ளை வெளேர் என்றிருந்த டாடா சுமோ ஜான்சியை வந்தடைந்த போது பழுப்பு நிறமாக மாறியிருந்தது. சாலையில் அவ்வளவு புழுதி.அதுதான் உத்திரப்பிரதேசத்தின் சிறப்பு. 




தோழர் அமானுல்லா கான் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 





22 வது பொது மாநாடு 2010 நவம்பரில் புதுடெல்லியில் நடைபெற்றது. இம்முறையும் ஆக்ரா சென்று தாஜ் மஹால் பார்க்கவும் அந்த நாள் வெள்ளிக்கிழமை இல்லாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டோம். ஒரு டிராவல் ஏஜென்சியோடு முன்பே பேசி முன்பதிவு எல்லாம் செய்திருந்தோம். ஆனாலும் எங்களை ஆக்ராவில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யாமல் அந்த ட்ராவல் ஏஜென்சி டெல்லி வரச் சொல்லி சொதப்பி  ரயிலின் கால தாமதம், போக்குவரத்து இடையூறு ஆகியவற்றால் நாங்கள் தாஜ்மஹால் சென்ற நேரத்தில் கதவுகளை அடைத்துக் கொண்டிருந்தார்கள். தன் முயற்சியில் சற்றும் தளராத தோழர்கள், டெல்லி வந்த பின்பு வெள்ளி நள்ளிரவில் தனி வேனில் ஆக்ரா புறப்பட்டு பேரணி துவங்கும் முன்பாக தாஜ் மஹால் பார்த்து விட்டு திரும்பினார்கள். அந்த பயணத்தில் எங்களுக்கு கைப்பிள்ளையாக திகழ்ந்தவர் மூத்த தோழர் வி.ஆர்.ராதாகிருஷ்ணன்.

ஒரு சிறப்பான பேரணிக்குப் பின்பு ராம்லீலா மைதானத்தில் துவக்க விழா நடைபெற்றது. திரிபுரா முதல்வர் தோழர் மாணிக் சர்க்கார் மாநாட்டை துவக்கி வைத்தார். அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட சிரிஃபோர்ட் அரங்கில்தான் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. 

பஞ்சாபின் பாங்க்ரா நடனம், கவாலி இசை என்று கலை நிகழ்ச்சிகள் அட்டகாசமாக இருந்தது. தகுதி காண் அறிக்கை தயாரிக்கும் மகுழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். எங்கள் தென் மண்டலத் தோழர்களின் படிவங்களை சேகரித்துக் கொடுத்ததைத் தவிர வேறு பணி எதுவும் நான் செய்யவில்லை. இப்போதைய தென் மத்திய மண்டலத் தலைவரும் அன்றைய ராஜமுந்திரி கோட்டச் செயலாளருமான தோழர் பி.சதீஷ்,தன் கோட்டத் தோழர்களின் உதவியோடு அறிக்கையை தயார் செய்தார். 

மாநாட்டில் தோழர் என்.எம்.சுந்தரம் கௌரவிக்கப்பட்டார். உணர்ச்சி பொங்கிய, நெகிழ்வான தருணமாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.




மாநாடு முடிந்து பாலிகா பஜார் சென்று ஷாப்பிங் முடித்து தங்குமிடத்தில் இருந்து பெட்டிகளை எடுத்து புறப்பட்டோம். ஆட்டோவில் சென்றால் மாட்டிக் கொள்வீர்கள் என்று டெல்லி தோழர்கள் அருகில் இருந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவுப் பொட்டலங்களோடு கொண்டு சேர்த்தார்கள். நியூ டெல்லி ரயில் நிலையத்திற்கு முந்தைய நிறுத்தத்தில் ஏறிய கும்பலால் நாங்கள் உள்ளே தள்ளப்பட்டோம். நியூ டெல்லி ரயில் நிலையத்தில் என்னாலும் திருப்பத்தூர் தோழர் சி.செல்வத்தாலும் இறங்க முடியவில்லை. அடுத்த நிறுத்ததில் இறங்கி எதிர் திசையில் செல்லும் ரயிலில் ஏறி வந்து சேர்ந்தோம்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் செல்லும் பிளாட்பாரத்திற்கு செல்லவே பதினைந்து நிமிடங்கள் ஆகி விட்டது. அங்கிருந்து எங்கள் பெட்டி இருக்கும் இடம் செல்ல இன்னொரு பத்து நிமிடம். ரயிலில் ஏறி  பெட்டிகளை அடுக்கி வைக்கவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. 








23 வது மாநாடு ஜனவரி 2014 ல் நாக்பூரில் நடைபெற்றது. முதல் நாள் மதியமே சென்ற நாங்கள் மாலை அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தீட்சா பூமிக்கு சென்று வந்தோம். 

நாக்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில்தான் எங்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணியில் வேலூர் கோட்டத் தோழர்கள் வெள்ளை சட்டை, வேட்டியில் நடை போட்டோம். தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டை துவக்கி வைத்தார். "தலைவர்கள் முக்கியமா, கொள்கைகள் முக்கியமா?" என்ற முக்கியமான கேள்வியை அவர் எழுப்பினார். இன்றளவும் இந்திய மக்கள் புரிந்து கொள்ளாத விஷயம் அது. 


அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்க இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 



தோழர் வி.ரமேஷ் புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இம்மாநாடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 

முதல் முறையாக ஒரு மகளிர் தோழர் அகில இந்திய செயலகத்தில் இடம் பெற்றார். தோழர் எம்.கிரிஜா அகில இந்திய இணைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இறுதி நாள் மாநாடு முடிந்து புறப்பட்ட அனைவருக்கும் நாக்பூரின் பிரசித்தி பெற்ற ஆரஞ்சு சோன்பப்டியை நாக்பூர் கோட்டச் சங்கம் கொடுத்தனுப்பியது. 

இரண்டு மாதங்கள் முன்பு முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டுக்கள், கடைசி வரைக்கும் காத்திருப்போர் பட்டியலிலேயே இருந்தது. வேறு வழியின்றி தட்காலில் பதிவு செய்து வீடு திரும்பினோம். 

No comments:

Post a Comment