அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாள் இன்று.
பி.யு.சி படிக்கும் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பத்து மாத காலம் சிறைத்தண்டனை பெற்றவர். சுதந்திரப் போராட்ட தியாகிக்கான எந்த சலுகையையும் பெறாதவர்.
தனியார் கம்பெனிகள் காலத்தில் பணியில் சேர்ந்த அவர், சங்கத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் நாக்பூர், கோவை, அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ரூகர் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றார். என்ன ஆனது? அங்கேயெல்லாம் சங்கம் வலிமையானது.
தேச உடமையாக்கப்பட்ட பிறகு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னணித் தலைவராகிறார். சங்கத்தின் போர் அமைச்சர் என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு உத்திகளை வகுப்பதில் விற்பன்னர்.
அவரது போராட்ட உணர்வும் திறமையும் ஞானமும் அவரை மேலும் மேலும் உயரங்களுக்கு எடுத்துச் சென்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை 1980 ல் கல்கத்தா வட கிழக்கு தொகுதியில் மக்களவைக்கு போட்டியிட வைத்தது. ராஜிவ் காந்தி காலத்தில் அமைச்சரான அஜித் குமார் பஞ்சா என்ற பெரும் பணக்காரரை வென்று நாடாளுமன்ற உறுப்பினர்.
பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பீப்பிள்ஸ் டெமாக்ரஸியின் ஆசிரியராகவும் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர்.
நாடாளுமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்ட காலத்தில்தான் எல்.ஐ.சி நிறுவனத்தை ஐந்து கூறுகளாக பிரிக்கும் மசோதாவை 19.12.1983 அன்று அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்மொழிகிறார். அப்போதே தோழர் சுனில் மைத்ரா கடுமையாக எதிர்க்கிறார். 48 மக்களவை உறுப்பினர்களிடமிருந்து உடனடியாக கடிதம் பெற்று சபாநாயகரிடம் அளிக்கிறார்.
அவரது கடுமையான முயற்சி காரணமாக மசோதா நிதியமைச்சகத்தின் நிலைக்குழுவின் ( STANDING COMMITTEE) பரிசீலனைக்குச் செல்கிறது. அங்கே ஒருமனதான கருத்து எட்டப்படாததால் நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் (SELECT COMMITTEE) பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த தேர்வுக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்ட தோழர் சுனில் மைத்ரா, யாரெல்லாம் தங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று விழைகிறார்களோ, அவர்கள் அனைவரது கருத்துக்களையும் குழு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதனை குழுவும் ஏற்றுக் கொள்கிறது.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒரு புறத்தில் வேலை நிறுத்தம், பிரச்சார இயக்கம், கையெழுத்து இயக்கம் போன்ற நடவடிக்கைகளையும் மறுபுறம் தொழிற்சங்க அமைப்புக்கள், அறிவு ஜீவிகள், பல துறை ஆளுமைகள் ஆகியோரை தேர்வுக்குழுவிற்கு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கடிதம் எழுத வைக்கிறது.
இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தேர்வுக்குழு நூற்றுக் கணக்கானவர்களின் கருத்துக்களை கேட்கிறது. தேர்வுக்குழுவின் முன்பாக நானும் சாட்சியம் சொன்னேன் என்று இந்தியாவின் முக்கிய பொருளாதார நிபுணர்களில் ஒருவரான தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா அவரோடு பேசிக் கொண்டிருக்கையில் ஒரு முறை கூறினார்.
ஆளும் கட்சியே பெரும்பான்மை என்பதால் தேர்வுக்குழு எல்.ஐ.சி யை பிரிப்பதற்கு ஆதரவாகவே பரிந்துரை அளித்தது. 25.08.1984 அன்று மசோதா மீது விவாதம் நடக்கிறது. தோழர் சுனில் மொய்த்ரா ஆவேசமாக உரையாற்றுகிறார். முடிவு எதுவும் எடுக்கப்படாமல் அவை ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டத் தொடரும் கூட.
சில மாதங்களிலேயே இந்திரா அம்மையார் கொல்லப்படுகிறார். புதிய பிரதமரான ராஜீவ் காந்தி மக்களவையைக் கலைத்து தேர்தலுக்கு ஆயத்தமாகிறார்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தேர்தல் காலத்தில் இதனை ஒரு முக்கியமான பிரச்சினையாக முன்வைக்கிறது. அனைத்து வேட்பாளர்களிடமும் ஆதரவு கோருகிறது.
தேர்தலுக்குப் பின்பு மீண்டும் பிரதமரான ராஜீவ் காந்தியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தலைவர்கள் சந்தித்து எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிப்பதன் பாதகங்களை விளக்கி பேசுகின்றனர்.
மத்தியரசு தன் முடிவை கைவிடுகிறது. தன் அன்னை எடுத்த முடிவை மாற்றுவதா என்று ராஜீவ் காந்தி ஈகோ பார்க்கவில்லை. எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்கும் முடிவை கைவிடுகிறோம் என்று ராஜீவ் காந்தியே தோழர் சுனில் மைத்ராவுக்கு நேரடியாக கடிதம் அனுப்புகிறார்.
எல்.ஐ.சி இன்று 54 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பெரும் நிறுவனமாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, பாலிசிதாரர்களின் நம்பிக்கையாக திகழ்கின்றதென்றால் அது ஒரே நிறுவனமாக நீடிப்பதால்தான் சாத்தியமானது. ஐந்து கூறுகளாக பிரிக்கும் சதி முறியடிக்கப்பட்டதன் காரணமாக மட்டும் எல்.ஐ.சி ஒரே நிறுவனமாக நீடிக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் தோழர் சுனில் மைத்ரா என்பதற்கு ராஜீவ் காந்தியின் கடிதமே சான்று.
எல்.ஐ.சி யின் இயக்குனர் கூட்ட அறையில் (BOARD ROOM) ஆயுள் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கிய அன்றைய நிதியமைச்சர் திரு சிந்தாமணி தேஷ்முக் அவர்களின் படம் உள்ளதாம். அங்கே வைக்க வேண்டிய இன்னொரு படம் தோழர் சுனில் மைத்ராவுடையது. எல்.ஐ.சி, எல்.ஐ.சியாகவே நீடிப்பது அவரால்தானே!
செவ்வணக்கம் தோழர் சுனில் மைத்ரா
பிகு: அவரைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ உள்ளது. அவை பிறிதொரு சந்தர்ப்பத்தில் . . .
அருமையான பதிவிற்கு நன்றி தோழா 🙏
ReplyDelete