Saturday, September 30, 2023

மீண்டும் உறுதியானது நீதி . . .

 


பெண்களுக்கு  வாச்சாத்தியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புக்கள் முன்னெடுக்க தமிழக வரலாற்றில் இல்லாத அளவு இருநூறுக்கும் மேற்பட்ட காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் சிறைத் தண்டனை பெற்றனர். தீர்ப்பு வந்தது 2011 ல். 

உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ய, நேற்று அந்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு விட்டது. அன்றைய தர்மபுரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வன அலுவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்ப்பு சொல்லியுள்ளது.

மேலிடத்தின் கருணைப்பார்வை இருப்பதால் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அயோக்கியத்தனம் புரியலாம், அராஜகம் செய்யலாம், பொய்ப்பிரச்சாரம் செய்யலாம், அவதூறு பரப்பலாம், நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற ஆணவத்தோடு திரிகிற அனைத்து நாணயமற்றவர்களுக்கும் இது சரியான சவுக்கடி. செங்கோட்டையன்கள் இனியாவது திருந்தி வாழ முயற்சிக்க வேண்டும்.

முந்தைய தீர்ப்பு வந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்ற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் தோழர் பெ.சண்முகம் அவர்களை வேலூரில் எங்கள் சங்கத்தின் நிகழ்வொன்றில் உரையாற்ற அழைத்திருந்தோம்.

அப்போது 20.12.2011 அன்று எழுதிய பதிவை மீண்டும் பகிர்கிறேன். . .

 

கண்ணியமற்ற காவலர்கள் - விலங்கினும் கீழானவர்கள்


 

கண்ணீர்  வர வைத்த  கருத்தரங்கு



 

இன்று  எங்கள் சங்கத்தின்  சார்பில்  அண்ணல் அம்பேத்கர்  நினைவு நாள் - வெண்மணி  தியாகிகள்  நினைவு கருத்தரங்கம்  நடைபெற்றது.


தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர்  பெ.சண்முகம் அவர்கள் "வாச்சாத்தி - நீதிக்கான  நெடும் பயணம் "  என்ற  தலைப்பில்   சிறப்புரையாற்றினார்.


வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையும் வனத்துறையும்  இளம் பெண்கள் மீது நிகழ்த்திய  பாலியல் வன்கொடுமை பற்றி  அவர் விவரித்த போது, அவர்கள் அளித்த சாட்சியம் பற்றி  உணர்ச்சி பொங்க  அவர் பேசிய போது அரங்கில் அமர்ந்திருந்த  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்ணில் கண்ணீர்  வழிந்தது. 


இப்படி கூட அரக்கத்தனமாக நடந்து கொள்ள முடியுமா  என்ற கோபமும், பாதிக்கப்பட்ட மக்கள் இறுதி வரை உறுதியாக  இருந்தார்கள் என்பதை அறிந்த போது நெகிழ்வாக   இருந்தது.    


பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறுதியில் நியாயம் கிடைத்தது, தவறிழைத்தவர்கள்  தண்டனை  பெற்றார்கள் என்ற போது நிறைவாகவும்  இருந்தது.


இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் சிறைத் தண்டனை பெற்ற பின்பும்  காவல்துறையின் அரக்க குணம் மாறவில்லை. திருக்கோயிலூரில்  மீண்டும்  அதே அரக்கத்தனம் அரங்கேறியுள்ளது.


தோழர் சண்முகம் பேசுகிற போது கூறினார். " விலங்குகள் போல  நடந்து கொண்டார்கள் என்று சொல்லி விலங்குகளை கேவலப்  படுத்தாதீர்கள்" 

அது சரிதான் என காக்கிச்சட்டைகள்  நிரூபித்துக் கொண்டே உள்ளனர்.

No comments:

Post a Comment