மறைந்த ஓவியர் மனோகர் தேவதாஸ் குறித்து மக்களவை உறுப்பினருமான எழுத்தாளர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய நெகிழ்ச்சியூட்டும் பதிவு. பாக்யராஜின் "இது நம்ம ஆளு" படத்தில் "அம்மாடி இதுதான் காதலா?" என்ற பாடலை இப்பதிவு நினைவுபடுத்தியது என்பதுதான் உண்மை.
திரு மனோகர் தேவதாஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.
அவரைப் பற்றிய தோழர் சு.வெ வின் இன்னொரு பதிவையும் அவரது ஓவியங்களையும் நாளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மஹிமாவின் இதயத்துள் நிறைத்திடுங்கள் மனோ
சு.வெங்கடேசன்.
மனோ - மஹிமாவின் காதல் எழுதித்தீராது. வாஞ்சையின் வடிவம் மனோ. வெடித்துச் சிரிக்கும் மனோவின் வாழ்வெல்லாம் நிறைந்திருந்தார் மஹிமா. அப்படித்தான் மஹிமாவின் வாழ்வெல்லாம் நிறைந்து இருந்திருப்பார் மனோ. அவரின் ஒவ்வொரு நேர்ப்பேச்சிலும் தாங்கள் கொண்ட காதலின் திளைப்பைப் பேசிக்களிப்பார்.
அவரைக் காணும் ஒவ்வொரு முறையும் புத்துணர்ச்சியின் பேரலை நம்முள் இருந்து மேலெழும். மனிதனின் மகத்துவத்தை, அன்பின் வலிமையை, நம்பிக்கையின் எல்லையில்லா ஆற்றலை மனோவிடமிருந்து உணர்வதற்கு நிகராக இன்னொருவரிடம் உணரமுடியுமா என்று தெரியவில்லை.
ஒவ்வொரு முறை அவரின் வீட்டுக்குச் செல்லும்பொழுதும் ஆற்றலின் விசைகூடித்தான் வெளியே வருவோம். ஒருமுறை அவரின் வீட்டுக்குச் செல்லும்பொழுது வழக்கத்தைவிட அதிகக் குதூகலத்துடன் இருந்தார். வாசலில் கோலம் போட்டு “வருக சு.வெ” என்று எழுதியிருந்தார்.
அவர் வரவேற்க நின்றிருந்தைப் பார்த்து உற்சாகத்தோடு வேகமாக கைகுலுக்கப் போனேன். அருகிற்போன பிறகுதான் கோலத்தையும் எழுத்தையும் பார்த்தேன். உடல்கூசி நின்றுவிட்டேன். ”ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கோபித்தேன். “காவல்கோட்டம் எழுதிய எழுத்தாளனை இதைவிடச் சிறப்பாக எப்படி வரவேற்பது! மதுரைக்கோட்டை இடிப்பை நீங்கள் எழுதியுள்ளதை நான் ஓவியமாக வரைய வேண்டும். அது எனது பெருங்கனவு” என்று சொல்லியபடி உள்ளே அழைத்துச்சென்றார்.
மனோவின் பேச்சு மஹிமாவில் தொடங்கும் வேறு எந்த ஒன்றைப்பற்றிப் பேசினாலும் மஹிமாவில் நிறையும். அடுத்த அறையில் இருப்பவரைப் பற்றிய பேச்சின் பாவனையில்தான் இருக்கும். மதிய உணவுக்குப் பின்னும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மாலை நெருங்கியதும் ”இன்று ஒரு இடத்துக்கு உங்களை அழைத்துச்செல்லப் போகிறேன், வாருங்கள்” என்று சொல்லிப் புறப்பட்டார். மனோவின் உற்சாகத்துக்கு இசைந்து செல்வதே அழகு. அவருடன் காரில் புறப்பட்டேன்.
சிறிது தொலைவுப் பயணத்துக்குப் பிறகு காரை நிறுத்தச்சொல்லி இறங்கினார். எனது தோளில் அவரது கை இருந்து. எங்கே அழைத்துச்செல்கிறார் என்பது புரியத் தொடங்கியது. கல்லறைத்தோட்டதினூடே நடந்து சென்றோம். எப்படி எதிர்கொள்வது என மனம் தடுமாறிக் கொண்டிருந்தது. அவரது மஹிமா துயில்கொள்ளும் இடத்தைக் காண்பித்தார். நான் அதிர்ந்து நின்றேன்.
அருகிருந்த ஒருவர் நீர் கொண்டுவர அக்கல்லறையை நீரூற்றிக் கழுவினர். அந்தக் கல்லறையை அவரது கைகள் தொடும்பொழுது அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் மஹிமாவையே பார்த்துக் கொண்டிருந்து தெரிந்து. அவரது கண்களில் இருந்து மஹிமா எப்பொழுதும் நீங்கியதில்லை என்பதும் தெரிந்தது. மறைவில் இருக்கும் ஒன்று இல்லாத ஒன்றாக ஆகிவிடாது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மறைந்தும் ஒளிந்தும் திளைக்கத் திளைக்க விளையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் வாழ்ந்த வாழ்வைப்பற்றி அவர் பேசியதெல்லாம் மிகமிகக் குறைவு என்பதை அவரது முகத்தின் பேரொளி சொல்லிக் கொண்டிருந்தது.
மனோவின் முகத்தையே நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். கல்லறையின் நடுவில் கைவைத்து ”இதனைப் பார்த்தீர்களா சு.வெ?” என்றார். நான் அப்பொழுதுதான் குனிந்து பார்த்தேன்.
மஹிமாவின் கல்லறையின் மேல் இடப்பட்டிருந்த சிலுவை குறியின் நடுவில் ஒரு துளை இருந்தது. அந்த துளையின் மேல் விரல் வைத்து, ”இந்தத் துளை ஏன் தெரியுமா சு.வெ?” என்று கேட்டார்.
மனோ ஒரு காவியக்காட்சியை வரைந்து காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிந்து. மற்றபடி அவர் சொல்லப்போகும் பதிலை எதிர்நோக்கி இருந்தேன்.
மனோ சொன்னார். ”என் மறைவுக்குப் பின் எனது சாம்பலை இத்துளையில் நிரப்ப வேண்டும். நான் என் மஹிமாவுடனே துயில வேண்டும்” என்றார்.
நான் உறைந்து நின்றேன்.
”இவ்விடம் வாருங்கள்” என்றார். ”இது உங்களுக்கான இடம் மனோ. நீங்கள் மட்டும் நில்லுங்கள்” என்று சொல்லி எனது செல்போனின் புகைப்படம் எடுத்தேன்.
காலம் அன்பையும் துயரத்தையும் வலியையும் வல்லமையும் தந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் இவற்றை எதிர் கொண்டு கடக்கிற பொழுது நாம் என்னவாகிறோம் என்பதே முக்கியம்.
எல்லாவற்றையும் எதிர்கொண்ட பின்பும் மனோ மஹிமாவின் காதல் மலர்ந்த தருணத்தின் மகிமை குறையாமல் காலம் முழுவதும் அப்படியே இருந்தது.
மனோ மஹிமா போல காதல்கொள்ள வேண்டும். கொண்ட காதலைக் கொண்டாடித்தீர்த்த வேண்டும். காவியங்கள் பாடியது குறைவு. மனிதன் அதனினும் செழிப்பாய் வாழ்வான்.
மனோ.. உங்கள் விருப்பப்படி மஹிமாவின் இதயத்துள் நிறைத்திடுங்கள்.
No comments:
Post a Comment