Monday, February 6, 2017

கொடுத்ததை சொல்லாத விமு





ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது எழுத்தாளர் திரு வினாயக முருகன் அவர்கள் “சாகித்ய அகாடமி விருதை யாராவது திருப்பித் தந்தால் விருது தொகையைப் போல மூன்று மடங்கு தொகையை நான் தருகிறேன்”  என்று முகநூலில் எழுதியிருந்தார். பழைய அனுபவத்தின் அடிப்படையில் அதற்கான வாய்ப்பு எங்கே வரப்போகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பின்பு நான் எங்கள் அகில இந்திய மாநாட்டிற்காக எர்ணாகுளம் சென்று விட்டேன். ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக அரசால் மத்தியரசு பாணியில் நசுக்கப்பட்டது. நானும் திரு வினாயக முருகனின் அறிவிப்பை மறந்தே போய் விட்டேன்.

இரண்டு நாட்கள் முன்பாக திரு லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” படித்து விட்டு அந்த நூலைப்பற்றியும் பகிர்ந்து கொண்டேன். படிக்காதவர்கள் இந்த இணைப்பிற்குச் சென்று கொஞ்சம் படித்து விடுங்கள்.

திரு லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் முக நூல் பக்கத்திற்கு சென்று நான் எழுதியதை பின்னூட்டமாக பகிர்ந்து கொண்ட போதுதான் அவர் கானகன் நாவலுக்காக பெற்ற சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை திருப்பித் தந்ததும் திரு வினாயக முருகன் தான் சொன்னபடியே நடந்து கொண்டதையும் அறிந்து கொண்டேன்.

லக்ஷ்மி சரவணகுமார், முகநூலில் எழுதியதை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 போராட்டம் துவங்கிய நாளில் நண்பர் விநாயக முருகன் முகநூலில் ஒரு அறிவிப்பு செய்திருந்தார். சாகித்ய அகதெமி விருதை திருப்பி அளிப்பவர்களுக்கு மூன்று மடங்கு தொகையை தருவதாக. நான் விருதை திருப்பி அளிப்பதாக சொன்னவுடனேயே என்னிடம் வந்து பணம் அனுப்ப வங்கிக் கணக்கு கேட்டார். நான் மறுத்துவிட்டாலும் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் உங்களுக்காக இல்லாவிட்டாலும் பதிப்பகத்துக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னதால். மோக்லி பதிப்பகத்தின் பெயரில் அத்தொகை பெற்றுக் கொள்ளப்பட்டது. அவரது நிதியில் இருந்து வெளிவரும் முதல் நூல் தை எழுச்சி. அவர் கொடுத்த தொகைக்காக புத்தக பதிப்பு விவரங்கள் அவ்வபொது அவருக்கு அனுப்பி வைக்கபடும்.
நன்றி விநாயக முருகன்.

தான் வாங்கிய யுவ புரஸ்கார் விருதை திருப்பி அளித்த திரு லக்ஷ்மி சரவணகுமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

சொன்னபடியே பணம் கொடுத்தாலும் அதைப் பற்றி திரு வினாயக முருகன் ஒரு வார்த்தை கூட எங்கேயும் குறிப்பிடவில்லை. மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்க வேண்டாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிற திரு வினாயக முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நேசமும்.

ஸ்கூட்டி கேட்பதை மட்டும் விட்டு விடாதீர்கள் வி.மு. அதற்கான முழு உரிமை உங்களுக்கு உண்டு.

No comments:

Post a Comment