Wednesday, February 15, 2017

கூத்துக்களை நிறுத்துங்கய்யா!





இப்போது தமிழகத்தில் நடக்கும்  கூத்துகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

எத்தனையெத்தனை கூத்துக்கள் !!!

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காததிலாவது ஒரு லாஜிக் இருந்தது. எடப்பாடி விஷயத்திலும் ஏன் கவர்னரின்  இடிச்சபுளித்தனம் தொடர்கிறது? அமைச்சரவையை அமைத்து விட்டு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வதுதானே ஆளுனரின் கடமை? அதை செய்ய என்ன தயக்கம்? அவரோ அல்லது அவரை இயக்கும் மோடியும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

சரி, ஆளுனர்தான் இப்படி என்றால் அதிமுக எடப்பாடி அணியினர் ஏன் அமைதியாக இருந்து கலைஞர், ஜெயலலிதா பாணியில் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்? தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சொன்ன “காஷ்மீர், பியூட்டிபுல் காஷ்மீர் புகழ் நவநீதக் கிருஷ்ணனோ அடுத்த நிமிடமே பல்டி அடித்து “ஆளுனர் நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு என்று புகழ்கிறார். ஆளுனரின், பன்னீர் செல்வத்தின் பின்னே ஒளிந்து கொண்டு விளையாடுகிற மோடியைப் பற்றிப் பேச ஏன் இவர்கள் வாய் மறுக்கிறது?

போவது ஜெயிலுக்கு, அதுவும் ஊழல் செய்து. என்னமோ மக்களுக்காக போராட்டம் செய்து, தியாகியாக சிறை போவது போல ஆரத்தியெல்லாம் எடுத்து அனுப்புகிற கொடுமையையெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது.

ஒங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்ற வசனத்தை நிஜமாக்க சமாதியில் ஓங்கி அடிக்கிற திகில் சீனை பார்க்கவே பயமாக இருக்கிறது.

உட்கட்சி விவகாரம்தான் என்றெல்லாம் தன் அக்கா மகனை கட்சியில் சேர்த்து துணைப் பொதுச்செயலாளராக்கியதை அசிங்கம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இவர் சிறையில் இருப்பதால் அவர்தானே நிஜமான பொதுச்செயலாளர்!

இரட்டைக் குழல் துப்பாக்கி என்ற வசனத்தை நிறைய முறை கேட்டுள்ளோம். நானும் அவரும் அதிமுகவின் இரண்டு கரங்களாக இருப்போம் என ஜெ வின் அண்ணன் மகள் என்ற ஒரே தகுதியோடு அரசியல் பேசுவதை கேட்கிற துர்ப்பாக்கியம் வேறு வந்து விட்டது.

அடுத்த தீர்ப்பும் ஒழுங்காக வந்தால் தங்கள் கட்சி ஆட்கள்தான் உள்ளே போகப் போகிறார்கள் என்ற சிந்தனையே இல்லாமல் உடன் பிறப்புக்கள் செய்யும் அட்ராசிட்டிக்கும் அளவே இல்லாமல் போய் விட்டது. இதிலே சில அறிவுஜீவி உடன்பிறப்புக்களோ இந்த பிரச்சினை அத்தனைக்கும் எம்.ஜி.ஆர் அதிமுகவை துவக்கிய போது கம்யூனிஸ்டுகள் அவரை ஆதரித்ததுதான் காரணம் என்ற அளவிற்கு அபத்தமாக பேசுவது இன்னொரு கொடுமை.  

வறட்சிப் பிரச்சினை பற்றியோ விவசாயிகள் தற்கொலை பற்றியோ மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு பற்றியோ யாரும் கவலைப்பட தயாரில்லை, இடதுசாரிகளைத் தவிர. அவர்களின் குரலைக் கேட்க எந்த ஊடகமும் தயாராக இல்லை.

கொஞ்சம் கூத்துக்களை நிறுத்தி உண்மையான பிரச்சினைகளுக்கு வர வேண்டுமென்றால் இடிச்ச புளி ஆளுனர் தன் கடமையை செய்ய வேண்டும்.

9 comments:

  1. முதலமைச்சர் பதவி சசிகலாவுக்கு அல்லது ஒபிஸ் அவர்களுக்கா
    எண்ணும்போதே மக்கள்;ஒபிஸ் அவர்களை மக்கள் ஆதரிக்கும்போது
    இப்போது பழனிச்சாமி என்கிற சசிகலாவின் proxy முதலமைச்சரை
    எப்படி ஆதரிப்பார்கள். இப்போது பழனிச்சாமியை ஆதரிக்கும் உறுப்பினர்கள்
    என்றாவது ஒரு நாள் தொகுதி பக்கம் வந்து பார்க்கட்டும் .அவர்கள் உள்ளாட்சி
    தேர்தல்களுக்கு ஒட்டு கேட்டு வந்தால் மக்கள் அவர்களை தெருவின் உள்ளே வரவே
    விடமாட்டார்கள்

    ReplyDelete
  2. ஒரு முதலமைச்சர் அவரோடு ஒரு மந்திரிசபை அமைந்து விட்டால் போதும் மக்களாட்சி வந்து விடும் என்று நம்புகின்ற ’ஜனநாயக’காதலர்களாக தோழர்கள் கருத்துரைக்கும் நிலை வந்துவிட்டது.நடப்பது நடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்பது போல.இந்த அரசு 2015 லிருந்தே செயல்படாத ஒரு அரசாக இருந்து வருகிறது என்பது கூட பொய்.இது ஒரு மக்கள் விரோத அரசாக இருந்து வந்திருக்கிறது என்பது அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.அந்த மக்கள் விரோத அரசின் தலைவராக இருந்த ஒரு முதல்வர் மரணமெய்தி விட்டார்.அவர் மீதான 21 வருட வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்துவிட்டது.அந்த தீர்ப்பிலிருந்து அந்த கட்சியோ அதன் தலைவர்களோ எந்த படிப்பினையும் பெற்றதாக காட்டிக்கொள்ளக்கூட தயராக இல்லை.இரு பிரிவாக அந்த கட்சி உடைபடும் நிலையில் ஒரு பிரிவின் முதல்வர் வேட்பாளர் பின்னால் நின்று இயக்குபவராக A2 வான சசிகலா இருக்கிறார்.மற்றுமொரு பிரிவிற்கு தலைமை தாங்குபவருக்கு பின்னால் காவிகள் இருக்கிறார்கள்.இந்த நிலையில் கவர்னர் யாருக்காவது அழைப்பு விடுத்து எவராவது ஆட்சிக்கு வந்து விட்டால் ஒரு நெருக்கடி தீரும் என்றால் இது யாருக்கான நெருக்கடி என்கிற கேள்வி வருகிறதல்லவா? அரசியல்சட்ட ‘நெறிமுறை’களின் படியே எல்லா தீர்வையும் பரிந்துரைப்பது மக்களுக்காக அரசியல் செய்பவர்களின் வேலையாக இருக்க முடியாது.
    //”சில அறிவுஜீவி உடன்பிறப்புக்களோ இந்த பிரச்சினை அத்தனைக்கும் எம்.ஜி.ஆர் அதிமுகவை துவக்கிய போது கம்யூனிஸ்டுகள் அவரை ஆதரித்ததுதான் காரணம் என்ற அளவிற்கு அபத்தமாக பேசுவது இன்னொரு கொடுமை”// செய்த கொடுமையை சொல்வதில் என்ன கொடுமை இருக்கிறது?திமுகவிலிருந்து அதிமுக என்றொரு கட்சி பிரிவதற்கு அவர்களுக்கிடையேயான பிணக்கை தவிர என்ன தத்துவார்த்த பின்னணி இருந்தது?ஒரு சினிமா ரசிகர் மன்றத்தின் நீட்சியாக அரசியல் இயக்கம் ஆரம்பித்த எம்ஜிஆரின் ‘அண்ணாயிஸத்தின்’ பொருள் என்ன? அவரை மேடையில் வைத்துக் கொண்டு ‘புரட்சித்தலைவர்’ என்று விளித்து பேசியது என்ன மாதிரியான புரட்சி? அந்த ரசிகர் பட்டாளத்திற்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்தது பிழையானதா? இல்லையா?கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ’கேப்டன்’என்று வாயார விஜகாந்த்தை அழைத்து இரு கம்யூனிஸ்டுகளும் அதே வேலையைத்தானே திரும்பவும் செய்தீர்கள்?இப்போதும் அதிமுக உடையாமல் இருக்க பேசி தீர்த்துக் கொள்ளவேண்டும் அது தான் அதிமுகவிற்கு நல்லது என்று மக்கள் நலக்கூட்டணியின் ஒரு அங்கமான திருமா கவலைப்பட்டு புத்தி சொல்கிறாரே? இது இடதுசாரிகளின் நிலையும் தானா?அதிமுக உடையாமல் இருக்க நீங்களெல்லாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
    ஒருவகையில் சில மாதங்களேனும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்தால் சில அழுக்குகளை துடைக்க முடியும் என்று தோன்றுகிறது.இப்போது வெளிவந்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியமான ஒரு அரசியல் நகர்தலை நோக்கி திரும்பாமல் சசி பன்னீர் மோதலாக மட்டும் கடந்து போவதை அனுமதிப்பது நாம் மக்களுக்கு செய்யும் துரோகம்.ஏனெனில் அதிமுகவின் எந்த பிரிவு ஆட்சிக்கு வந்தாலும் ஒரு குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை சட்டைபையில் வைத்துக் கொண்டு அம்மா குடிநீர், அம்மா உணவகம் என்றெல்லாம் 'அம்மா' புராணம் பாடிக்கொண்டிருப்பதை சகிக்க முடியாது. தவிரவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.தீர்ப்பின்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் பொறுப்பும் இதில் அடங்கும்.இதையெல்லாம் ஒரு அதிமுகவின் பிரிவு செய்யுமென்றோ, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வந்து செய்யுமென்றோ நம்புவதற்கு இடமேதுமில்லை.அதனை செய்ய ஒரு அதிகாரிகளால் ஆளப்படும் நிலைக்கு அரசு வந்தாக வேண்டியுள்ளது.அந்த அதிகாரிகளை நீதிமன்றத்தின் துணையுடன் சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கண்காணிப்பு வேலை.எனவே ஒரு இடைக்கால ஏற்பாடாக கவர்னர் ஆட்சியை ஏற்க நாம் மனதை தயார்படுத்திக் கொள்வது நல்லது.பின்வாசல் வழியாக பிஜேபி வரலாமா என்று பதற வேண்டியதில்லை.காவி சிந்தனையை பன்னீர் என்கிற ஜெ விசுவாச முகமூடி தரித்த முதல்வர் வழியாக எதிர்கொள்வதை விட நேரடியான கவர்னர் மூலமாக எதிர்கொள்வோம். நீட் தேர்வு, காவிரி, முல்லைப்பெரியார், விவட்சாயிகள் நலன் என மக்கள் பிரச்சினையை ஒன்றரை வருடங்களாக செய்யாதவர்கள் இந்த 6 மாதத்தில் செய்யப்போவதில்லை.

    ReplyDelete
  3. இடதுசாரிகளின் மீதான உடன்பிறப்புக்களின் வெறுப்பைத்தான் நீங்களும் வெளிப்படுத்தி உள்ளீர்கள். ஆளுனர் மூலமான அதிகார வர்க்க ஆட்சி என்பது சர்வாதிகார மோடியின் ஆட்சி என்ப்துதான். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. எடப்பாடி வந்தால் எல்லாம் மாறி விடும் என்ற மூட நம்பிக்கை எல்லாம் எனக்கோ எங்கள் இயக்கத்திற்கோ கிடையாது. எதுவாக இருந்தாலும் முடிவு செய்ய வேண்டிய இடம் சட்டப்பேரவை. அதன் உரிமையை ஆளுனர் பறிக்கக் கூடாது

    ReplyDelete
  4. Athan Sare...unkalluku aappu vechu assemblikku ulle varavendaamunu sollitangale makkal....innumuma makkalukku service pannureenge...

    ReplyDelete
    Replies
    1. இடதுசாரிகள் சட்டமன்றத்தில் செய்ய வேண்டிய பணியை மக்கள் மன்றத்தில் செய்வார்கள். கொள்ளையடிப்பதற்காக அரசியலில் இருப்பவர்கள் அல்ல நாங்கள்.

      Delete
  5. ”எல்லாமே முறைப்படிதான் நடக்க வேண்டும்” என்பது யாருக்கான “முறை” என்பதைத்தான் கேள்வி எழுப்பியிருக்கிறேன்.உங்களின் விருப்பத்தின் படியே ஆளுனர் எடப்பாடிக்கு முறைப்படி பதவி பிரமாணம் செய்வித்து விட்டார்.இனி அவர்களின் ’முறை’ப்படியே குதிரை பேரம் நடக்கும்.பதவி ஆசையில் கோடிகளைக்கொட்டி மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கி ’மக்களாட்சியை’அதாவது கவர்னரல்லாத ஆட்சியை நடத்தி மக்களிடமிருந்தே அந்த பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.பின்னே மக்களாட்சியல்லவா?!எப்படி மக்களிடமிருந்து விலை கொடுத்து இந்த ஆட்சியுரிமை வாங்கப்பட்டதோ அதே முறைப்படித்தான்.போகட்டும்.

    இன்னொரு முக்கியமான பிரச்சினை உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக செயலுக்கு கொண்டு வருவது.அதனை இந்த மக்களாட்சியில் யார் செய்வார்கள் என்பதை உங்களால் சொல்ல இயலுமா?ஓபிஎஸ் அல்லது எடப்பாடி அல்லது தினகரன்? இல்லையென்றால் திமுகவின் ஸ்டாலின்?யார் இதனை செய்வார்கள் என்று நம்புகிறீர்கள்?

    நான் தூய்மை படுத்த வேண்டியே அதிகார வர்க்க ஆட்சி வந்து போகட்டும் என்கிறேன்.சில முக்கியமான பழுதுகளை சரி செய்ய மின்சாரத்தை நிறுத்துவது போலத்தான் இதுவும்.எல்லா நேரமும் மின் சாதனங்கள் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் இந்த மாதிரியான பழுதுகளை நம்மால் சரி செய்யவே முடியாமல் போகலாம்.ஜனநாயகத்தில் பரிந்துரைக்கப்பட்டது,மரபு என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தால் அதன் பலனை மக்கள் அடையப்போவதில்லை.ஹாசினிக்கு கொடுமை இழைத்தவனை எப்படி தண்டிக்க வேண்டும் என்று வரும் போது வழக்கு விசாரணை, தண்டனை என்கிற ஜனநாயகத்தை நீங்களும் ஏற்கமுடியவில்லை தானே?

    ReplyDelete
    Replies
    1. ஜனநாயகத்தில் ஏற்படும் விபத்துக்களுக்காக சர்வாதிகாரத்திற்கு அழைப்பு விடுப்ப்து ஆபத்தானது.

      Delete
    2. ஆமாம். நீங்கள் எதுவும் எழுத மாட்டீர்களா? வெறும் பின்னூட்டம் மட்டும்தானா? உங்கள் வலைப்பக்கங்கள் காலியாக இருக்கிறதே?

      Delete
  6. நிச்சயமாக சர்வாதிகாரத்திற்கான அழைப்பல்ல, கவர்னரின் ஆட்சியும் இதே ஜனநாயகத்தின் ஒரு வடிவமாகவே அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    //”நீங்கள் எதுவும் எழுத மாட்டீர்களா? வெறும் பின்னூட்டம் மட்டும்தானா? உங்கள் வலைப்பக்கங்கள் காலியாக இருக்கிறதே?”// ஆம்.இன்னும் இல்லை.எழுத வேண்டும் என்கிற எண்ணமிருக்கிறது.ஆனால் ஒரு தளத்தை ஆரம்பித்து அதனை நிர்வகிப்பதில் அதில் வருகின்ற எதிர்வினைகளுக்கு உரிய முறையில் குறித்த நேரத்தில் பதிலளிப்பது என நிறைய காரியங்கள் இருப்பதால் அதற்கு நேர மேலாண்மை தேவைப்படுகிறது. அதற்கு நான் இன்னும் தயாராகவில்லை என கருதுகிறேன்.விரைவில் என்னை தயார்படுத்திக் கொள்வேன். நன்றி!!

    ReplyDelete