எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் இணைச்செயலாளர் தோழர் ஆர்.கோவிந்தராஜன் சற்று முன் இயற்கை எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவின் உறுப்பினராக செயல்பட்ட அவர் இப்போது மாநிலக்குழு சிறப்பு அழைப்பாளர். மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர்.
எண்பது வயதை சில தினங்கள் முன்பு கடந்த தோழர் ஆர்.ஜி, சங்கத்தின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் ஆதாரமாக அமைந்த தோழர்களில் முக்கியமானவர்.
தஞ்சையை அடிப்படையாகக் கொண்ட தோழர் 1988 ல் அகில இந்திய இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்திற்காக அவர் மிகவும் நேசித்த தஞ்சை மண்ணை விட்டு சென்னையில் குடியேறினார்.
மார்க்சிய தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட தோழர் ஆர்.ஜி, அதனை தோழர்களின் மனதில் பதியும்படி அற்புதமாக வகுப்பெடுப்பவர். ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி மிகச்சிறப்பாக பேசுவார். எழுதுவார். "அன்பு கெழுமிய தோழர்களே" என்று அவர் கம்பீரமாக பேசத்துவங்குவதை ரசிப்பவர்கள் நாங்கள்.
அவரது உரையை முதன் முதலில் கேட்கும் வாய்ப்பு 1988 ல் கிடைத்தது. அப்போதுதான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைமையகம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறியதை ஒட்டி சென்னையில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சரோஜ் சவுத்ரி, சந்திர சேகர் போஸ் போன்ற ஸ்தாபகத் தலைவர்கள் பங்கேற்ற அந்த விழாவில் தோழர் ஆர்.ஜி பேசுகிற போது "சூரியனைப் போல எங்களால் பிரகாசிக்க முடியாவிட்டாலும் சூரிய ஒளியை பெற்றுக் கொண்டு அகல் விளக்கு போல வெளிச்சம் தருவோம்" என்ற ரவீந்திரநாத் தாகூரின் கவிதை வரிகளை அவர் சொன்னதும் உடனடியாக தோழர் சரோஜ் சவுத்ரி அக்கவிதையை பெங்காலியில் முழுமையாக சொன்னது மட்டுமல்லாமல் நீங்கள் எல்லாம் அகல் விளக்கு அல்ல, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இளைய சூரியன்கள் என்று சொன்னதும் இன்னமும் மனதில் பசுமையாக உள்ளது.
சோவியத் யூனியனின் சிதைவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட மாற்றமும் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அந்த சமயத்தில் தென் மண்டலக் கூட்டமைப்பின் மாநாடு 1990 ஜூனில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் தோழர் ஆர்.ஜி ஆற்றிய உரை, இல்லை நிஜத்தில் அது ஒரு மார்க்சிய வகுப்பு, ஒரு தெளிவை அளித்தது மட்டுமல்ல, மார்க்சியம் என்ற தத்துவத்திற்கு அழிவில்லை என்ற நம்பிக்கையையும் அளித்தது.
எங்கள் கோட்டத்தின் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு தோழர் ஆர்.ஜி வந்துள்ளார். கோட்டத்தின் பெரும்பாலான தோழர்களை அவருக்கு தனிப்பட்ட முறையிலும் தெரியும்.
மிகவும் எளிமையான தோழர். மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு கட்சி வகுப்புக்காக அவர் வேலூர் வந்த போது பஸ் நிலையத்தில் அவரை அழைக்கச் சென்றேன். நீங்கள் ஆட்டோவில் வாருங்கள் என்று சொன்ன போது கூட அதனை மறுத்து என் இரு சக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்து வந்தார்.
எத்தனையோ நினைவுகள் அலை அலையாக வந்து மனதில் மோதிக் கொண்டிருக்கின்றன. எதை எழுத? எதை விட ?
நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்ற போது நாங்கள் இருவரும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தோம். ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு காலையும் அந்த நான்கு நாட்களும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். பல சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கமளிப்பார். வயது வித்தியாசம் என்பதே அவரிடம் கிடையாது.
மிகக் கடுமையான உழைப்பாளி. நீண்ட பயணங்களுக்கு சளைக்காதவர்கள். பொருளாதார விஷயங்களை எளிமையாய் புரியும்படி சொல்பவர்.
அவர் எப்போது எங்கள் கோட்டத்து நிகழ்ச்சிக்கு வந்தார் என்று யோசித்துப் பார்த்தேன்.
2012 ல் எங்கள் வெள்ளி விழா ஆண்டில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அதன் பின்பு அவர் வருகை தந்தது கடந்தாண்டு இறுதியில் எங்கள் அன்புத்தோழர் சி.வெங்கடேசன் இறந்து போன போது அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க சிதம்பரம் வந்திருந்தார்.
கடைசியாக எப்போது பேசினார் என்று யோசித்தால் அதுவும் எங்களது இனிய தோழர் லிடியா அவர்களின் மறைவின் போதுதான்.
அவரது கம்பீரக் குரலை, அர்த்தம் மிக்க அவரது உரையை இனி கேட்க வாய்ப்பில்லை. அவரது அனுபவங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இனி இல்லை.
ஆனால் அவர் என்றென்றும் எங்கள் மனதில் இருப்பார்.
செவ்வணக்கம் தோழர் ஆர்.ஜி.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
ReplyDelete