Friday, February 17, 2017

மாதா கோயிலில் மணியடித்துக் கொண்டு . . . .




ஒரு பழைய கதை.

அந்த மாதா கோயிலுக்கு புதிதாக ஒரு பாதிரியார் வந்திருந்தார். அங்கே மணியடிக்கும் ஊழியம் செய்து கொண்டிருந்த ஒருவருக்கு எழுதப் படிக்க தெரியாது. ஊதியத்தைக் கூட கைநாட்டு வைத்துதான் வாங்குவார். அது அந்த பாதிரியாருக்கு பிடிக்கவில்லை. எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். ஆனால் அந்த ஊழியரால் அது முடியவில்லை. ஆகவே பாதிரியார் ஒரு நூறு ரூபாய் கொடுத்து வேலையிலிருந்து அனுப்பி விட்டார்.

அந்த நூறு ரூபாயை வைத்து சந்தையில் கறிகாய் வாங்கி வீடு வீடாக விற்க ஆரம்பிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கடைசியில் சூப்பர் மார்க்கெட் வைக்குமளவு முன்னேறுகிறார். கையில் உள்ள லாபத்தை வங்கியில் போட கணக்கு ஆரம்பிக்கிறார். கணக்கு ஆரம்பிக்கையில் படிவத்தில் கைநாட்டு வைக்கிறார்.

வங்கி மேலாளர் அதிசயத்தோடு கேட்கிறார்.

எழுதப் படிக்க தெரியாமலேயே இவ்வளவு முன்னேறியுள்ளீர்களே, ஒரு வேளை நீங்கள் படித்திருந்தால் என்னவாகியிருப்பீர்கள்?

அந்த முன்னாள் ஊழியர் சொன்னார்.

மாதா கோயிலில் மணியடித்துக் கொண்டிருப்பேன்.

பின் குறிப்பு : ஆங்கிலம் தெரியாவிட்டால் கேவலம் என்று சொல்பவர்கள் அனைவருக்கும் இக்கதை சமர்ப்பணம்.

செங்கோட்டையனை திட்டவோ, விமர்சிக்கவோ  ஊழல், சந்தர்ப்பவாதம், முறைகேடு, பதவி மோகம், இன்னும் இன்னும் என்று ஆயிரம் காரணம் உள்ளது.  அதை விட்டு விட்டு ஆங்கிலம் பேசத்தெரியாததையெல்லாம் நக்கல் செய்யாதீர். 

நல்லவேளை காமராஜர் இப்போது உயிரோடு இல்லை. 

பின் குறிப்பு 2 : மாதா கோயில் மணி என்பதால் மட்டுமே ஞான ஒளி படத்து காட்சி. மற்றபடி வேறு எந்த தொடர்பும் கிடையாது. 




1 comment:

  1. உண்மைதான் நண்பரே
    ஒரு மொழி தெரியவில்லை என்ற காரணத்திற்காக குறைசொல்வது
    சரியான செயல் அல்லதான்

    ReplyDelete