நேற்றைய தீக்கதிர் இதழில் வெளியான வழக்கறிஞர் தோழர் மு.ஆனந்தன் அவர்களின் கட்டுரை ஜக்கி சாம்ராஜ்யத்தின் அராஜக நடவடிக்கைகளையும் கையாலாகாத அரசு நிர்வாகத்தையும் அம்பலப் படுத்துகிறது.
அழிக்கும் கடவுள் சிவன் என்று புராணம் சொல்கிறது. இங்கே இயற்கையை அழித்து சிவனுக்கு சிலை.
ஆதியோகியின் பெயரால் அழித்தொழிப்புகள்
( இன்றைய ( 22.02.2017 ) தீக்கதிரில் பிரசுரமாகியுள்ள எனது கட்டுரை ) - மு.ஆனந்தன் -
சத்குரு
உங்களை பிரதிஷ்டைக்கு அழைக்கிறார். யோகாவை அருளிய ஆதியோகி – சிவன்
திருவுருவப் பிரதிஷ்டைக்கு சத்குரு உங்களை வரவேற்கிறார். தெய்வீகம்
கொஞ்சும் தென்கைலாய மலைச்சாரலில் மகத்துவம் ததும்பும் மகாசிவராத்திரி
நன்னாளில் பிப்ரவரி 24, 2017 அன்று சத்குருவின் சங்கல்பத்தில் கருணையின்
துறைமுகமாய் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி
திறந்து வைக்க உள்ளார். உலகிலேயே பெரிய சிவன் முகத்தை காண வாருங்கள். கடந்த
ஒரு மாதமாக துண்டறிக்கைகள், பதாகைகள், பேனர்கள், போஸ்டர்கள் , பேரூந்து
விளம்பரங்கள், தொலைகாட்சிகள், சிலையின் மாதிரியுடன் ஊர்வலங்கள் வாயிலாக
சத்குரு உங்களை அழைத்துக் கொண்டிருப்பது உங்கள் காதுகளில் விழுகிறாதா
மக்களே…
பல்லுயிர்ப் பெட்டகம் ;
ஈஷா
யோகா மையத்தின் முகவரியில் வெள்ளியங்கிரி மலையடிவாரம் அல்லது
வெள்ளியங்கிரி மலைச்சாரல், கோவை என்றிருக்கும். துபாய் குறுக்குச் சந்து
எனபது போல் வெள்ளியங்கிரி மலைசாரல்தான் இவர்கள் முகவரியாம். அதனால் நீங்கள்
முதலின் தென்கையாலம் எனப்படுகிற வெள்ளியங்கிரி மலையையும் அதன் அடிவாரப்
பரப்பையும் தெரிந்து கொள்ள வேண்டும்
மேற்குத்
தொடர்ச்சி மலையின் கோவை குற்றாலம், தொள்ளாயிரமூர்த்திகண்டி எனப்படுகிற
வைதேகி நீர்வீழ்ச்சி, சாடியாத்தா பாறை நீரூற்று, வெள்ளியங்கிரி மலை ஆகியவை
நொய்யலின் பிறப்பிடங்கள். உலகின் இரண்டாவது சுவையான குடிநீரை வழங்கும்
சிறுவாணியின் பிறப்பிடமும் இதுவே. வெள்ளியங்கிரி மலை என்பது உச்சிப்
பிள்ளையார் கோயில், கைதட்டி சுனை, பாம்பாட்டி சுனை, ஒட்டர்சித்தர் சமாதி,
பீமன் களியுருண்டை பாறை, அர்ச்சுனன் தவப்பாறை, திருநீறு மலை, கிரிமலை என 7
மலைகளின் தொடரியாக ஆறுகளை உருவாக்கும் பசும் புல்வெளிகள், அரிய மரங்கள்,
காணுயிர்கள் நிறைந்த பல்லுயிர்ப் பெட்டகமாகும். பசும்புல்வெளிகள் தங்களின்
நாடி நரம்புகளில் நதிகளின் ஜீவிதத்துளிகளை தேக்கி வைத்து ஆண்டு முழுவதும்
கசிந்துருகுகிறது. அவை சுனைகளாகவும், நீரூற்றுகளாகவும், சிற்றோடைகளாகவும்
உயிர்ப்பிடிக்கிறது. அவ்வாறு பெருக்கெடுக்கிற ஒரு நீரோடை
'சாமிமுடியாறு'. மலையே சிவமாக கருதப்பட்டதால் மலையிலிருந்து கூந்தல்போல்
தொங்குகிற நீரோடை சாமிமுடியானது. இது பாவநாச ஆறு என்றும்
அழைக்கப்படுகிறது. கீழே இறங்கியவுடன் தரையில் தவழ்கிற இவளுக்கு பெயர்
'நீலிஆறு'. சாமிமுடியாறு, 300 மீட்டர் உயரத்தில் தாணிக்கண்டி பழங்குடி
கிராமத்திற்குப் பின்னால் அணையாத்தா பாறை பகுதியில் உறையூர் சோழன்
கரிகாலன் கட்டிய பழங்கால கல்லனையில் தடுக்கப்படுகிறது. இங்கிருந்து
நீலியாறு, ராசியாறு ( சவுக்காடு ஆறு ) என இரண்டாகப் பிரிகிறது. சமவெளி
வந்தவுடன் நீலியாற்றை நீலியாறு தடுப்பணை வரவேற்கிறது. இதிலிருந்து
ராஜவாய்க்கால் வழியாக பாசனத்திற்கு பாய்ந்து முட்டத்துவயல் பகுதியில்
நொய்யலின் முதல் குளமான உக்குளத்தை நிரப்புகிறது . இது 187 ஏக்கர்
பரப்பளவுள்ள அழகிய சங்ககால குளம். இந்த உக்குளம் நிரம்பியதும் ஊமை
மதகுக்கண்டி மதகுகள் வழியாக வெளியேறும் நீர் பெரியாறுடன் கலந்து நொய்யலாக
பாய்கிறது.
இந்த நீராதாரங்களின் சங்கல்பத்தில்
கனிந்ததுதான் செம்மேடு போளுவாம்பட்டி வருவாய் கிராமப் பகுதிகளில்
பல்லாயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பின் பச்சையமும் விவசாயமும். இது தவிர
மழைக்காலங்களில் பெருக்கெடுக்கிற ஏராளமான நீரோடைகளும் குறுக்கும்
நெடுக்குமாய நடைபயில்கின்றன. இது காணுயிர்களின் காதல் தேசம். யானைகள்
திருவீதி உலா செல்லும் வலசைப்பாதைகளின் சங்கமம். தாணிக்கண்டி,
முள்ளாங்காடு, மடக்காடு, முட்டத்துவயல், குளத்தேரி போன்ற பழங்குடி
கிராமங்களின் புகலிடம். நகர விரிவாக்கத்தால் மெல்ல மெல்ல
விரட்டியடிக்கப்பட்ட இருளர்களுக்கு மீதமுள்ள ஒரே நிலத்தட்டு. 14 சதுர
கிலோமீட்டர் பரப்புள்ள போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குள் அமைந்துள்ள
வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட நொய்யல் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்தும்
காப்புக்காடுகளாகும். இந்தகைய வெள்ளியங்கிரி மலைச்சாரலில் நீலியணையின்
கரையில்தான் ஈஷா யோக மையம் கம்பீரமாய் தரிசனம் தருகிறது.
மலைதள பாதுகாப்பு அரண்கள் :
இயற்கை
வளங்களையும், நீராதாரங்களையும் பாதுகாக்க நொய்யல் நீர்ப்பிடிப்புப்
பகுதிகளைச் சுற்றியுள்ள 27 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளை
தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை 22.04.1990 தேதியிட்ட அரசாணை
எண் G.O. M.S. No. 44/1990 ன் மூலம் மலைதள பாதுகாப்புக் குழுமத்தின்
அதிகார வரம்பின் கீழ் கொண்டுவந்தது. இதன்படி, இக்குழுவின் அனுமதியின்றி
விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றவோ, 300 சதுர மீட்டருக்கு மேல்
எந்த கட்டிடங்களும் கட்டவோ கூடாது. புதிய லே-அவுட்டுகளை உருவாக்க
முடியாது மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனம், வருவாய், நகர் ஊரமைப்புத்
துறை, பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரப் பிரிவு, மாசுக்கட்டுப்பாடு
வாரியம், வேளாண் பொறியியல், மின்சாரம், தீயணைப்பு, காவல், நெடுஞ்சாலை,
உள்ளாட்சி, கனிம வளம் ஆகிய துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்றுகள்
பெறவேண்டும்.
இதே போன்ற நிபந்தனைகள் வீட்டுவசதி
மற்றும் நகர் வளர்ச்சித் துறையின் 24.03.2003 தேதியிட்ட அரசாணை எண். G.O.
M.S. No. 49/2003 மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து
கட்டுமான விதிகள் 1997 ன் விதி 25 பொதுப்பயன்பாட்டு கட்டுமானங்களுக்கு
பஞ்சாயத்து செயல் அதிகாரி , நகர் ஊரமைப்புத் துறையின் ஆலோசனை இல்லாமல்
அனுமதியளிக்கக்கூடாது என்கிறது. மேலும் விதி 4 (3) பொது வழிப்பாடு அல்லது
மத பயன்பாட்டு கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயமாகும்.
நீலியணையின் கேவல் சப்தம் ;
ஈஷா
அமைந்துள்ள இக்கரை போளூவாம்பட்டி ஊராட்சியும் இதற்கு உட்பட்டதாகும். ஆனால்
மலைகளைத் துண்டுகளாக்கி பாளங்களாக அடுக்கப்பட்ட ஈஷாவின் பல லட்சம் சதுரடி
தியான மண்டபங்கள் கட்டிடங்கள் எந்த அரசுத் துறைகளின் அனுமதியைப் பெறாதவை.
இதனால் இப்பகுதியின் இயற்கைவளம், சுற்றுச்சூழல். பச்சையம், நீர்மை,
வேளாண்மை, பல்லுயிர்ப் பெருக்கம், காணுயிர் வாழிடம், வலசைகள் அனைத்தும்
சூறையாடப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட ஓடைகள்,
மழைக்கால நீரோடைகள், காலங்காலமாக வேளாண் குடிகள் பயன்படுத்தி வந்த
வண்டிப்பாதைகள் ஆகியவை ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளதாக இப்பகுதி
பழங்குடிகளும் வேளாண்குடிகளும் குமறுகிறார்கள். ஈஷாவின் கக்கத்தில்
சிக்குண்ட நீலியணையின் கேவல் சப்தம் சத்குருவின் அருளுரையில்
அமுக்கப்படுகிறது. அக்னி குண்டத்திலும் தீர்த்த குண்டத்திலும் நீங்கள்
ஜலகிரிடை செய்தால் புதைக்கப்பட்ட நீரோடைகளின் எலும்புத்துண்டுகள் உங்கள்
கால்களை இடரலாம். கழுத்தறுக்கப்பட்ட வலசைப் பாதைகளின் விசும்பலைக்
கேட்கலாம்.
மிக்சர் துறைகள் ;
இது
குறித்த பொதுமக்களின் புகார்கள் அரசுத் துறைகளின் கருவறைகளில் தியானம்
புரிகின்றன. தொடர் பிரார்த்தனைகளின் விளைவாக நகர் ஊரமைப்புத் துறை
இயக்குனர் 05.11.2012 தேதியிட்ட ந.க.எண்1866/2012/கோ.ம.4 ஆணையின் மூலம்
சட்ட விரோத கட்டுமானப் பணிகள் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். அதனை மீறி
கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டதால் 21.12.2012 தேதியில் அதே ந.க.எண்
1866/2012/கோ.ம. 4 எண்ணிலும் 26.11.2014 தேதியில் ந.க.எண் 661/2014/கோ.ம.4
எண்ணிலும் தியானலிங்கம், சிவபாடம் போன்ற அதன் சட்ட விரோத கட்டிடங்களை
மூடி முத்திரையிடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அந்த உத்தரவோ
ஈஷாவின் ஈசான மூலையில் மூன்று வருடமாய் குதிங்காலிட்டு மிக்சர்
தின்கிறதாம். அரசுத் துறைகளுக்கு மூட்டை மூட்டையாக மிக்சர் சப்ளை
செய்வதற்காகவே அங்கு ஒரு பத்மபூஷ மண்டபம் செயல்படுகிறதாம்.
ஆதியோகியின் திருப்பாதங்களில் ;
ஈஷாவின்
மர்மங்களும் அதற்கு எதிரான புகார்களும் போராட்டங்களும் விசாரனைகளும்
சுழன்றெழுந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் முட்டத்துவயல் பகுதியில் 112 அடி
ஆதியோகி சிலையையும் லட்சம் சதுரடி கட்டிடங்களையும் மீண்டும் எழுப்பி
பிரதிஷ்டைக்கு அழைகிறார் சத்குரு. இது தற்போது ஈஷா யோகா மையம் அமைந்துள்ள
நீலியணைக்கும் நொய்யலின் முதல் குளமான உக்குளத்திற்கும் இடையில் பரந்து
விரிந்துள்ள பச்சை வயல்வெளிகள், பாக்குத் தோப்புகள், தென்னந்தோப்புகள்
நீள்கிற பச்சயம் கமழும் நிலத்துண்டை ஊடறுத்து நிற்கிறது. இவை பல
வேளாண்குடிகளின் குடிகளைச் சிதைத்து பெறப்பட்ட பலநூறு ஏக்கர் விவசாய
நிலங்களின் மூச்சடக்கி மண்ணிட்டு மேடுயர்த்தப்பட்டவை. ஆதியோகியின்
திருப்பாதங்களில் நீலியணையிலிருந்து நீள்கிற ராஜவாய்க்கால், பல நீரோடைகளை,
வண்டிப்பாதைகளை, வலசைகளை உயிர்ப்பலி கொடுத்து கட்டப்பட்டவை. மேலே
சொன்னதைப் போல் இந்தக் கட்டுமானங்களும் மலைதள பாதுகாப்புக்குழுமம், வனம்,
நகர் ஊரமைப்புத் துறை உள்ளிட்ட எந்த அரசுத் துறையின் அனுமதியைப் பெறாதவை.
சட்டவிதிகளையும் அரசாணைகளையும் அப்பட்டமாக மீறிய சட்டவிரோத கட்டிடங்கள்.
மாயமான அணைகளும் குளங்களும் ;
சிலை
எழுப்புவதற்கும் 300 சதுர மீட்டர் கட்டிடங்களுக்கும் 29.09.2016 அன்று
ந.க.எண். 6901/2016/ஈ2 நடவடிக்கைகளின்படி மாவட்ட ஆட்சியர் அருளாசி
அளித்துள்ளதார். ஆனால் மற்ற எந்தத் துறைகளிடமும் அனுமதி பெறவில்லை. எனவே
இது சட்ட விரோத கட்டுமானம்தான். மாவட்ட ஆட்சியர் அனுமதியை பரிசீலித்தாலும்
300 சதுர மீட்டரை மீறி ஒரு லட்சம் சதுரடிக்கு மேல் கட்டிடங்கள்
எழுப்பியுள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் அனுமதிகூட அப்பட்டமான விதிமீறல்
அதிகார மீறல். அந்த உத்தரவில் எழுதப்பட்டுள்ள வரிகளை அந்த ஆதியோகியே
ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி என்னதான் எழுதப்பட்டுள்ளது. இந்த
நிலங்களுக்கு எந்தவித நீர்ப்பாசன வசதியும் இல்லை. நிலத்தடி நீராதாரம்
மட்டுமே உள்ளது. கள ஆய்வின் போது எவ்வித பயிர்களும் இல்லை. மூன்று
ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யப்படவில்லை. நீர்வழிப்பாதைகள் திசை
திருப்பப்படுவதற்கான சாத்தியங்களோ நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கான
சாத்தியங்களோ இல்லை அதனால் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு
மாற்றுவதற்கு அனுமதி அளிப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய
மோசடித்தனம். உக்குளத்தின் கரையிலிருந்து சில நூறடிகள் தூரத்தில்தான் இந்த
ஆதியோகி சிலை கட்டெழுப்பப்பட்டுள்ளது. இப்பகுதில் பாய்கிற நீலியாறு,
நீலியணை, ராஜவாய்க்கால், 187 ஏக்கர் பரப்புள்ள உக்குளம் ஆகியவை அனைத்தும்
அரசதிகாரிகள் கண்களுக்கு மட்டும் எப்படி மாயமானது. வயல்களின் சொர்க்கபுரி
என்பதால் தான் இப்பகுதி ஊர்கள் முட்டத்துவயல், சாடிவயல், நல்லூர்வயல் எனப்
பெயர் பெற்றுள்ளது. இதெல்லாம் அரசதிகாரிகளுக்கு தெரியாதா. ஆண்டு முழுவதும்
உயிர்ப்பிடிப்போடு வாழ்கிற நொய்யலின் நீர்ப்பிடிப்புப் பகுதியையே
நீர்ப்பாசனமற்ற பகுதியென பொய்யுரை பொழிவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு யார்
அதிகாரம் அளித்தது.
சிவன் மலையும் ஈஷாவின் வர்த்தகமும்;
பலநூறு
ஆண்டுகளாக ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று பல்லாயிரம் பக்தர்கள் சிவன்
மலையாக கருதப்பட்ட வெள்ளியங்கிரி மலையேறி வழிபாடுகள் நடத்திவந்த போதும்
எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. ஏனெனில் மலையுச்சியிலும் அடிவாரத்திலும்
சிறு கோவில் கட்டிடங்களே உள்ளன. இதில் ஆன்மீகம் மட்டுமே தரிசனம் தந்தது.
வர்த்தகம் அண்டவில்லை. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் பல லட்சம் சதுரடி
கட்டிடங்களால், நீர்வழிகள், காணுயிர் வலசைகள் அழிப்பால் இப்பகுதியின்
இயற்கை வளமும், சூழலும் , நீராதாரமும் பல்லுயிர்ப் பெருக்கமும் பெருமளவு
சூறையாட்டுள்ளது. தற்போது ஆதியோகியின் பெயரால் மேலும் மேலும்
அழித்தொழிப்புகளை அரங்கேற்றுகிறார்கள். ஈஷாவுடன், காருண்யா, அமிர்தா,
சின்மயா போன்ற கல்வி நிறுவனங்கள், ரேக்கண்டோ நகர்த் திட்டம், கேளிக்கை
விடுதிகள், மினரல் வாட்டர் நிறுவனங்கள் போன்றவையும் தங்கள் பகுதிகளில் இந்த
அழித்தொழிப்புகளை முன்னெடுத்துள்ளார்கள்.
தியான மண்டபங்களில் எதிரொலிக்கும் யானைகளின் விசும்பல்;
சில
மாதங்களுக்கு முன் ஒரு காணொளி சமூக வலைத் தளங்களில் வலம் வந்தது.
நடுப்பகலில் பத்திற்கும் மேற்பட்ட யானைக்கூட்டம் பயத்தால் வால்களை
முறுக்கிக்கொண்டு ஈஷா வாயில் முன்பாக பீதியில் பிளிறிக்கொண்டு ஓடுகிற
காணொளிதான் அது. காணுயிர் வாழிடங்கள் வலசைகள் அபகரிக்கப்பட்டுள்ளதால்
யானைகளும் விலங்குகளும் குடியிருப்புகளுக்குள்ளும் விவசாய
நிலங்களுக்குள்ளும் புகுந்து சேதங்களை விளைவிக்கின்றன. மனித விலங்கு
மோதல்களும் இருதரப்பு உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக வனத்துறை வழங்கிவரும் இழப்பீடு விபரங்களில்
இந்த உண்மையை காண முடியும். சமீபத்தில் கடந்த 18.09.2016 அன்று கூட ஈஷாவின்
மாகாமுத்ரா என்ற சட்டவிரோத கட்டிடத்தின் அருகில் பொன்ராஜ் என்பவர் யானை
தாக்குதலால் மரணமடைந்தார். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 300 யானைகள்
உயிரிழந்துள்ளதாம். 1999 க்கு முன்பு பாதுகாப்பான பகுதியாக இருந்த இந்த
வனச்சரகம் இந்தியாவிலேயே தற்போது ஹை ரிஸ்க் ஏரியாவாக மாறிவிட்டது
என்கிறார்கள் வன உயிரின ஆய்வாளர்கள்.
மகாசிவராத்தியும் நிசப்த மண்டலமும் ;
அதேபோல்
ஒவ்வொரு ஆண்டும் விடிய விடிய நடந்தேறும் ஈஷாவின் மகா சிவராத்திரி
கொண்டாட்டங்களில் மேலெழும்புகிற ஒலிமாசு வன உயிர்களின் இயல்பு வாழ்க்கைக்கு
மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கின்றன. அவை பீதியடைந்து மனித உயிர்களையும்
குடியிருப்புகளையும் தாக்குவது தொடர்கதையாகிறது. 2013 உயர்நீதிமன்றம்
அப்பகுதி மனித வாழ்க்கைக்கும் வன உயிரன இயல்பிற்கும் பாதிப்பு ஏற்படாத
அளவில் ஒலிமாசு ஏற்படாத அள்வில் மகா சிவராத்திரி கொண்டாடப்பட வேண்டுமென
உத்தரவு பிறப்பித்துள்ளது. வன உயிர்களின் இயல்பை பாதுகாக்க இது இரவுநேர
நிசப்த மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறும் வகையில்
எதிர்வரும் பிப்ரவரி 24 நடைபெறுவுள்ள மகாசிவராத்திரி நிகழ்வுக்கும் பல
லட்சம் மக்களை திரட்டவும் கொண்டாட்டங்களை அரங்கேற்றவும்
ஆயுத்தமாகிவருகிறது. ஆகவே இதற்கு தடை விதிக்கக் கோரி தென்மண்டல பசுமைத்
தீர்வாயத்தில் பூவுலகின் நண்பர்கள் வழக்கு தொடுத்து தற்போது அது நிலுவையில்
இருந்து வருகிறது. அதேபோல் ஈஷாவின் சட்ட விரோத கட்டுமானங்களுக்கு
தடைவிதிக்கவும் இடிக்கவும் கோரி வெள்ளியங்கிரி மலை பழங்குடிகள்
பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் முட்டத்துவயல் முத்தம்மா சென்னை
உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு ( W.P.No. 3556/2017) தாக்கல் செய்து
அது விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது வரை எவ்வித
தடையுத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
ருத்ரதாண்டவமாட வாருங்கள் ;
பிரட்சனைகள் எழும்போதெல்லாம் மத்திய அமைச்சர்களை அழைத்துவந்து விழா
நடத்துவதுதான் ஈஷா நிலைநிறுத்தும் சட்டத்தின் ஆட்சி. தற்போது ஆதியோகி
சிலையை திறந்து வைக்க பிரதமர் வருகிறார். இந்த சட்ட விரோத செயல்களுக்கு
எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு நிர்வாகமும் காவல்துறையும் சல்யூட்
வைக்கிற விசுவாசத்தில் முண்டியடித்து முட்டி மோதிக்கொள்ளும். அரசின்
பாதுகாப்பில் சட்டவிரோதங்கள் அரங்கேறும். சத்குரு அழைகிறார் ஆதியோகியின்
பெயரில் அழித்தொழிப்புகளை பிரதிஷ்டை செய்ய செல்வீர்களா இல்லை ஈஷாவின்
அதிகார லிங்கத்தை தகர்த்தெறிந்து இயற்கை வளங்களை காத்திட ருத்ர தாண்டவமாட
வருவீர்களா ? பதில் சொல்லுங்கள் !
- மு.ஆனந்தன் - 94430 49987 – anandhan.adv@gmail.com