Friday, July 24, 2015

போலீஸ் கமிஷனருக்கு எதற்கு இந்த அரசியல்?



மாநில அரசுக்கு எதிராக எந்த ஒரு காவல்துறை உயரதிகாரியும் மோத மாட்டார்கள் என்பதுதான் பொதுவான நடைமுறை. அரசு அநியாயமான ஒரு செயலைச் செய்யச் சொல்லும் போது கூட அடங்கிப் போவதுதான் காவல்துறையின் இயல்பாகவும் இருக்கிறது.

ஆனால் டெல்லியின் போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்ஸி என்பவர் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜிரிவாலோடு மோதிக் கொண்டிருக்கிறார். நியாயமான விஷயத்திற்காக அவர் மோதினால் நிச்சயமாக அந்த மனிதரை பாராட்டலாம்.

ஆனால் அவர் செய்துள்ளது என்ன?

டெல்லி நகரத்தில் கொலையுண்ட ஐநூறு பேருடைய பட்டியலைக் கொடுத்து கொலையுண்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் டெல்லி மாநில அரசு தலா ஐந்து லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இதிலென்ன தவறு என்று கேட்கிறீர்களா?

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது பரிதாபப்பட்டு அவர் ஒன்றும் நிவாரணம் கொடுக்கச் சொல்லவில்லை. சில தினங்கள் முன்பாக ஒரு பத்தொன்பது வயதுப் பெண் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டுள்ளாள். அந்த குடும்பத்திற்கு டெல்லி மாநில அரசு ஐந்து லட்ச ரூபாய் நிதி கொடுத்துள்ளது. அந்த வழக்கை டெல்லி காவல்துறை சரியாக கையாளவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சுமத்துகிறது.

அந்த குடும்பத்திற்கு உதவும் போது மற்ற குடும்பங்களுக்கு உதவ முடியாதா என்ற நக்கல் கேள்வியோடு இந்த பட்டியலைக் கொடுத்துள்ளார் போலீஸ் கமிஷனர்.

டெல்லி போலீஸ் கமிஷனர் நியாயமாகப் பார்த்தால் அந்த பட்டியலை மோடியிடம்தான் கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் டெல்லி காவல்துறை மத்தியரசின் கட்டுப்பாட்டில்தான் வருகிறது. டெல்லி போலீசை கேள்வி கேட்கவோ கட்டுப்படுத்தவோ டெல்லி மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. டெல்லி மாநில அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்படாத டெல்லி கமிஷனருக்கு இந்த பட்டியலைக் கொடுக்க மட்டும் எங்கிருந்தது வந்தது உரிமை? மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான மோதலில் குளிர் காய்வது ஒரு அதிகாரிக்கு அழகல்ல.
இப்படி அரசியல் செய்வதைக் காட்டிலும் அவருக்கு இன்னும் முக்கியமான பல வேலைகள் இருக்கிறது.

உலகிலேயே பாதுகாப்பற்ற நகரம் புதுடெல்லிதான் என்று பி.பி.சி ஆய்வு சொன்னதை அவர் மறந்து விட்டார் போலும்.

அது மட்டுமல்ல

தேசிய குற்ற ஆவண ஆணையம் கொடுத்துள்ள 2013 ம் ஆண்டிற்கான அறிக்கை புது டெல்லிக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுத்துள்ளது.

இந்தியா முழுதுமுள்ள 53 பெரிய நகரங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் மிக அதிகமாக 13 %  குற்றங்கள் புது டெல்லியில் நிகழ்ந்தவையே.

மிகப் பெரிய வன்முறைக் குற்றங்களில் 54 % புதுடெல்லியில் நடந்தவை.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அகில இந்திய அளவில் 52 % உயர்ந்துள்ள நிலையில் புது டெல்லியில் 146.8 % அதிகரித்துள்ளது.

காவலர்கள் மீது அதிக அளவில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் கூட புது டெல்லியில்தான். 16.4 %

2014 ம் ஆண்டு நிலவரத்தில் மிகப் பெரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அதுதான் 500 பேர் கொலை செய்யப்பட்டார்கள் என்ற பட்டியலை கமிஷனர் வைத்திருப்பதே ஒரு ஒப்புதல் வாக்குமூலம்தான்.

ஆகவே அரசியல் செய்வதை விட்டு டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி அவரது வேலையை ஒழுங்காகச் செய்யட்டும்.

கமிஷனரை கொம்பு சீவி விடுகிற வேலையை மோடி வகையறாக்களும் நிறுத்திக் கொள்ளட்டும்.

2 comments:

  1. ///உலகிலேயே பாதுகாப்பற்ற நகரம் புதுடெல்லிதான் என்று பி.பி.சி ஆய்வு சொன்னதை அவர் மறந்து விட்டார் போலும்///
    வேதனையாக இருக்கிறது நண்பரே

    ReplyDelete
  2. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியின் நாற்றம் தாங்க முடியல்ல, அப்படியிருக்க அங்கேயுள்ள போலீஸ் கமிஷனர் செய்கிற வேலையா இது!

    ReplyDelete