Friday, July 3, 2015

எம்.பி க்கள் ஊதியத்தை உயர்த்தும் முன்பாக

 http://im.rediff.com/news/2012/aug/24ls1.jpg

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை நூறு சதவிகிதமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை எழுபத்தி ஏழு சதவிகிதமும் மற்ற படிகளில் கணிசமான உயர்வும் அளிக்க வேண்டும் சாமியார் அவைத்யநாத்  தலைமையிலான நாடாளுமன்றக்குழு பரிந்துரை செய்துள்ளதுதான் இன்றைய தலைப்புச் செய்தி.

நானூறுக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் எம்.பிக்களாக உள்ள போது அவர்களுக்கு ஊதியமே தேவையா என்ற கேள்வி பலர் மனதில் எழுகிறது. இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் ஊதியத்திற்கான தேவை என்பதே கொஞ்சமும் கிடையாது. ஊதியமே கொடுக்காவிட்டால் கூட அவர்களது பிழைப்பு அமோகமாக நடக்கும். ஊதியத்திற்காகவா  கையூட்டு கொடுத்து சீட் வாங்கி, வாக்குக்கு பணம் கொடுத்து எம்.பி யாகிறார்கள்! 

ஆனாலும் வந்தவரை ஆதாயம் என்று ஊதியமும் வாங்கிக் கொள்கிறார்கள். என்னென்ன சலுகைகள் உண்டோ, அதையெல்லாம் வாரி சுருட்டிக் கொள்கிறார்கள். முன்னொரு காலத்தில் தொலைபேசி இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு இவையெல்லாம் விற்கப்பட்டது நினைவில் உள்ளதா? எங்கள் ஊர் முன்னாள் எம்.எல்.ஏ  தனது கடைசி இரண்டு டேர்மில் "எம்.எல்.ஏ க்களுக்கு சென்னையில் வீட்டு மனை வேண்டும்" என்ற கோரிக்கைக்காக மட்டுமே வாய் திறந்தார் என்பது ஒரு கிளைக்கதை.

எங்களைப் போன்ற ஊழியர்கள், எங்களுக்கு மேலேயுள்ள அதிகாரிகள் என ஊதியம் வாங்கும் எல்லோருக்குமே சில பொறுப்புக்கள், பணிகள் உண்டு. அந்த பணிகளைச் செய்து விட்டுத்தான் நாங்கள் ஊதியம் வாங்குகிறோம். 

அது போல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட பல பணிகள், கடமைகள் உண்டு.

முதல் கடமையாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். (இப்படி ஒரு நிபந்தனை போட்டால் மோடி பெயில்)

மசோதாக்கள் உள்ளிட்டவற்றில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். 

தனது தொகுதிப் பிரச்சினைகளை எழுப்பிட வேண்டும்.

தொகுதிக்குள் இருந்து மக்களின் குறை கேட்டு சரி செய்ய வேண்டும்.

தொகுதி வளர்ச்சி நிதியை முழுமையாக முறையாக பயன்படுத்திட வேண்டும்.

இவையெல்லாம் குறைந்த பட்சக் கடமைகள். இதையெல்லாம் எல்லா எம்.பிக்கள் சரியாக செய்து விட்டு பிறகு ஊதிய உயர்வை கோருவது சரியாக இருக்கும்.

இன்னும் முக்கியமான இரண்டு விஷயங்கள் இருக்கிறது. 

எம்.பி க்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் முன்பாக மத்தியரசு, மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதை நிறுத்த வேண்டும்.   

குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து பதினைந்தாயிரம் ரூபாயை குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்திட வேண்டும். இந்த கோரிக்கை நிகழவிருக்கும் இரண்டு செப்ட்ம்பர் வேலை நிறுத்தப் போராட்டத்தின் மிக முக்கியமான கோரிக்கை. 

முதலில் இந்தியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய்ங்கள். பிறகு உங்கள் ஊதியத்தைப் பற்றி கவலைப்படுங்கள்.

 

 

1 comment:

  1. //முதலில் இந்தியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். பிறகு உங்கள் ஊதியத்தைப் பற்றி கவலைப்படுங்கள்.//
    நாயமான வேண்டுகோள்!
    ஆனால் செய்ய மனம் வராதே!

    ReplyDelete