ஊழலற்ற முதலாண்டு என்று மனதறிந்து பொய் சொன்னார் திருவாளர் மோடி. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டுமே என்பது போல லலித் மோடி விவகாரம் வெடித்தது. கடலை மிட்டாய் வாங்குவதில் கூட இருநூறு கோடி ரூபாய் ஊழல் செய்ய முடியும் என்று மஹாராஷ்டிர மாநில இளைய அமைச்சர் நிரூபித்தார். இவையெல்லாம் ஜூஜூபி என்று சொல்லக் கூடிய விதத்தில் "வியாபம்" ஊழல் மோடி அரசை சூறாவளியாய் தாக்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் போல மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேர்வாணையம்தான் "வியாபம்". மருத்துவம், பொறியியல், கணிணியியல், ஆசிரியர் தேர்வு என்ற பல பிரிவுகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனத்திற்கான தேர்வில் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடுகள் செய்ததுதான் பிரச்சினை. ப்ல வருடங்களாக இதிலே ஊழல் நடந்து கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவில் லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக் கணக்கானோர் முறைகேடுகள் மூலம் பலனடைந்து அதே எண்ணிக்கையில் தகுதியுடையவர்களின் வாழ்வை நாசமாக்கியுள்ளனர். முக்கியக் குற்றவாளி உட்பட நூற்றுக்கணக்கில் கைதாகியுள்ளனர்.
இதோடு மட்டும் நின்று போயிருந்தால் வழக்கமான ஊழல் என்ற அளவில் நின்று போயிருக்கும். ஆனால் இதில் தொடர்புடையவர்கள் என நாற்பத்தி நான்கு பேர் மர்மமாக இறந்து போயிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
ஊழலுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல ஊழலில் தொடர்புடையவர்கள் என இரு தரப்பிலும் மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது. முதலமைச்சர் மீதும் ஆளுனர் மீதும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, திங்கட்கிழமை என்று கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாட்களில் மூன்று மரணங்கள். ஆளுனர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவ் கூட சில மாதங்கள் முன்பாக திடீரென இறந்து போனதும் அது தொடர்பான கோப்பு மூளைச் சிதைவு என்று அவசரம் அவசரமாக மூடப்பட்டது என்பதும் நினைவுக்கு வருகிறது.
தற்செயலான துயரத்தை ஊழலோடு இணைக்காதீர்கள் என்று பாஜக முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் மன்றாடுகிறார். அதெப்படி இந்த ஊழல் தொடர்பானவர்களுக்கு மட்டும் காரணம் என்னவென்றே தெரியாத தற்செயல் மரணங்கள் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு மட்டும் பாஜக பெருந்தலைகள் பதில் சொல்லவில்லை.
தேர்தல் நேரத்தில் காது வரை வாய் நீண்ட மோடி, மன்மோகன் சிங்கை மவுன சாமியார் என்று நக்கல் செய்தார். ஆனால் இப்போது அவர் கட்சி ஆட்கள் மீது ஊழல் புகார் வரும் போது அவரும் மவுன சாமியாராக மாறி விட்டார். இந்தியாவில் இருந்தால்தானே பிரச்சினை என்று கஜகஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், உஜ்ஜாலாஸ்தான், உல்லாஸ்தான் என்று ஊர் சுற்றக் கிளம்பி விட்டார்.
இப்போது மரணப்பிரதேசமாக மாறியுள்ள மத்தியப் பிரதேச மர்மங்களை சி.பி.ஐ விசாரிக்கப் போகிறது. ஆளும் கட்சியின் கைப்பிடியில் அடங்கிக் கிடக்கிற சி.பி.ஐ நியாயமாக விசாரணை செய்யுமா என்பதுதான் மக்கள் மனதில் அலைமோதும் கேள்வி.
பார்ப்போம். என்ன ஆகிறது என்று.
என்ன ஆகப்போகிறது அங்க ஒரு கொமாரசாமி இல்லாமலா போகப்போகிறார், அதே 20% இல்லை என்றால் திறமையான நிர்வாகி, பெரும்பான்மை என்று எத்தனையோ இருக்கிறது. நிர்வாகம் விசாரணக்கு போகிறது என்றாலே எல்லாம் துடைச்சாச்சு என்ற மறைபொருள் தானே வேறு என்ன.......
ReplyDeleteபார்ப்போம்
ReplyDelete