Thursday, July 30, 2015

மாயாபென் கோட்னானிக்கு எப்போது தூக்கு?




நீதி - 

சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதல்ல.
சாட்சியங்கள் சொல்லும் உண்மைகளின் அடிப்படையிலும் அல்ல. 
ஆட்களுக்கு ஏற்றார்போல், ஆட்சியாளர்களுக்கு ஏற்றார்போல்
வழங்கப்படுவதாகி விட்டது. பொதுப் புத்தி என்ன விரும்புகிறதோ
அதை வழங்குவதற்கு நீதி ஒன்றும் நேயர் விருப்பம் அல்ல.

கொலைகள், கலவரங்கள்  தவறுதான்.
தவறிழைத்தவர்களை தண்டிக்க வேண்டும்தான்.

மும்பை மாநகரத்தில் இரண்டு சம்பவங்கள்.

மசூதி இடிப்பின் தொடர்ச்சியாய் கலவரங்கள், உயிரிழப்புக்கள்
அதன் எதிர்வினையாய் குண்டு வெடிப்புக்கள்.

முதல் சம்பவத்திற்கு காரணமானவர் இறந்து போனார். அரசு மரியாதையோடு அவரின் உடலை அடக்கம் செய்தார்கள். இவரென்ன அவ்வளவு பெரிய தியாகியா என்று கேட்டதாலேயே  இரண்டு பெண்களுக்கு சிறைவாசமும் தந்தார்கள்.

குற்றம் - நடந்தது என்ன என்று பறந்து வந்து உண்மைகளை ஒப்புக் கொண்ட மனிதனுக்கு, குற்றவாளியின் தம்பியாய் பிறந்த காரணத்தாலேயே இன்று தூக்கு மேடை ஏற்றி மரணத்தில் மகிழ்ச்சி  கொள்கிறார்கள்.

இன்று மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்ததாய் பெருமைப் பட்டுக் கொண்டு நியாயம் நிலைநாட்டப் பட்டதாக பேசும் நண்பர்களுக்கு ஒரே ஒரு கேள்வி.

மும்பை கலவரங்கள் தொடங்கி குஜராத் கலவரங்கள் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காதது பற்றி எப்போதாவது சிந்தித்ததுண்டா?

இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனரே, அதற்காக யாரும் சிறையில் கூட அடைக்கப்படவில்லை என்று கவலைப்பட்டதுண்டா? ஜகதீஷ் டைட்லர் மத்திய அமைச்சராகவே காலம் கழித்தாரே!

யாகூப் மேனனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றிய இந்திய நீதிமான்கள், மோடியின் அமைச்சர் மாயாபென் கோட்னானியை தூக்கிலிடுவார்களா?

வாதத்திற்காக இப்படி கேட்டாலும் கூட அவருக்கும் தூக்கு தண்டனை வேண்டாம் என்றுதான் நாங்கள் சொல்வோம். நீதிமன்ற நீதி வேண்டுமானால் ஆட்களுக்கு ஏற்ப மாறலாம். ஆனால் மரண  தண்டனை கூடாது என்ற எங்கள் கொள்கை மாறாது.

தூக்கு தண்டனை வேண்டாம் என்று சொன்னவரின் உடல் மண்ணுக்குச் செல்லும் முன்னே அவரது கருத்து தூக்கிலேற்றப்பட்டது என்பது ஒரு பெரும் துயரம்

 

 

3 comments:

  1. மாயா கோட்னானி விரைவில் விடுதலை ஆவார். வேண்டுமென்றால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. சார்..இப்போதெல்லாம் எல்லாம் அரசியல்மயமாகி விட்டது. தூக்குத் தண்டனை ஒழிக்கும் அளவுக்கு இன்னும் நம் நாடு முதிர்ச்சி அடையவில்லை.

    ReplyDelete