Tuesday, March 28, 2017

நீங்க என்ன வேலை செய்யறீங்க எச்.ராஜா?



தமிழகத்தில் நாக்கில் விஷத்தை வைத்துக் கொண்டு அலைபவர்கள் இருவர். ஒருவர் ஜெயமோகன். இன்னொருவர் எச்.ராஜா.

தந்தை பெரியார் தொடங்கி தோழர் திருமா வரை அனைவருக்கும் தேசத்துரோகி முத்திரை குத்திய எச்.ராஜா, இப்போது தமிழர்களுக்கு சோம்பேறி முத்திரை குத்தியுள்ளார்.

கட்டுமான வேலைகளை ஒரிசாக்காரர்களும் பீகாரிகளும் செய்கிறார்களாம். ஹோட்டல்களில் அஸ்ஸாமியர்களும் நேபாளிகளும் வேலை பார்க்கிறார்களாம். வெட்டியாக  உள்ள தமிழர்கள் பொழுதைக் கழிக்க  போராட்டம் நடத்துகிறார்களாம்.

மத்தியரசு தமிழர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதற்கு எதிராக நடத்தும் போராட்டங்கள்  பாஜககாரர்களுக்கு உவப்பாக இருக்காதுதான். அதனால் ஒட்டுமொத்த தமிழர்களையும் வெட்டியாக இருக்கிறார்கள் என்று கொச்சைப் படுத்தும் அளவிற்கு வாய்க்கொழுப்பு எப்படி வந்தது இந்த எச்.ராஜாவிற்கு?

அவரின் ஆணவப் பேச்சுக்களுக்கு இடதுசாரிகளைத் தவிர விசிக தவிர வேறு யாரும், குறிப்பாக தமிழினக் காவலர்கள் என்று சொல்லும் பிரதானக் கட்சிகள் எதிர்வினையாற்றாமல் இருப்பதால் கிடைக்கிற தைரியத்தால் தொடர்ந்து இப்படி பேசிக் கொண்டே இருக்கிறார்.

சரி, சில நாட்களுக்கு முன்பாக பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை ரேஷன் கடைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தினாரே, அது கூட அவர் வெட்டியாக இருப்பதால்தானா?

ராஜா கூட ஏதோ போராட்டம் நடத்தி கைதானாரே (எதற்கு என்று நினைவில்லை, ஆனால் அவர்களை தங்க வைத்திருந்த கல்யாண மண்டபத்திற்கு ஒரு இஸ்லாமியர் குண்டு வைக்க வந்ததாக புரளி கிளப்பியது நினைவில் உள்ளது)

அப்படி என்றால் நீங்கள் நடத்திய போராட்டமும் பொழுதைக் கழிக்கத்தானா? உங்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் வெட்டியாகத்தான் இருக்கிறீர்களா?
  
ராஜா ஏதாவது உருப்படியாக வேலை பார்த்தாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் அப்பா அப்படி கிடையாது.

1972 முதல் 1982 வரை நாங்கள் காரைக்குடியில் சுப்ரமணியபுரம் ஒன்பதாவது வீதியில் இருந்தோம். அதே வீதியில்தான் எச்.ராஜாவின் குடும்பமும் இருந்தது. அழகப்பா பயிற்சிக் கல்லூரியில் (Alagappa Training College) உடற்கல்வி (Physical Education) விரிவுரையாளராக இருந்த அவரது அப்பா ஹரிஹரன், கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை திரைப்படத்து எம்.ஜி.ஆர் போல தலையில் தொப்பி, கூலிங் க்ளாஸ், கலர் கலராய் சட்டை அணிந்து சைக்கிளில் செல்வார். அவரே ஓய்வு பெற்ற பின்பு தலையில் குடுமி வைத்துக் கொண்டு புரோகிதம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

தமிழ்நாட்டில் யாரும் அப்படி ஒன்றும் வெட்டியாய் இருக்க விரும்ப மாட்டார்கள் என்பதை தன் தந்தையைப் பார்த்தாவது எச்.ராஜா உணர்ந்திருக்க வேண்டாமா?



Monday, March 27, 2017

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஜெயமோகா?




தவறான ஒரு செய்தியை சொல்லி விட்டீர்கள். வாய் தவறி தெரியாமல் சொல்லி இருப்பீர்கள்  என்று நம்ப யாருமே  தயாராக  இல்லை. ஏனென்றால் அவ்வளவு பெத்த பேரு உங்களுக்கு.

முக நூலில் பார்த்த சில விஷயங்களை (உங்கள் தொண்டர்கள் வாயிலாக உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றாலும் கூட) உங்களின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று ஆசைப்படுகிறேன்.

அசோகமித்திரன் எனும் எழுத்தாளரை ஒரு காரோட்டியாக பயன்படுத்தினார் என்று குற்றம் சுமத்தப்பட்ட திருமதி இந்துமதி அவர்களின் குமுறலைக் கேளுங்கள்.

 அசோகமித்திரனைப் பற்றி ஜெயமோகன் கூறியதைப் பார்த்து ரத்தம் கொதிக்கிறது.ஏதேதோ சொல்லி திட்டத் தோன்றுகிறது. அந்தப் பூ போன்ற மனிதர் மீது யார் வன்மம் கொண்டாலும் கோபப்பட்டாலும் கோபப்பட்டவர் மீதுதான் தவறு இருக்க வேண்டுமே தவிர சத்தியமாக அசோகமித்திரன் மீது கடுகளவு தவறு கூட இருக்கமுடியாது. எழுத்தையும் சேர்த்தே அவ்வளவு அப்பழுக்கற்றவர். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள். வாழ்விலே ஒரு முறையிலிருந்து அத்தனையும் படித்தவள். ஜானகிராமனும், அசோகமித்திரனும் எங்கள் ஆசான்கள். எங்கள் போற்றுதலுக்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள். அதிலும் அசோகமித்திரன் மிகவும் மென்மையானவர். சற்று அழுத்திக்கூடப் பேசாதவர். அவர் மீது ஒருவர் இப்படி வன்மம் கொள்ள முடியுமென்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆக்ரோஷமாகக் கோபம் வருகிறது.

ஜெயமோகன். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. முதலில் அசோகமித்திரனுக்கு டிரைவிங் தெரியாது என்பதை அவர் மகனே சொல்லி விட்டார். இரண்டாவது அசோகமித்திரனை காரோட்டியாக வைத்துக் கொள்ள நான் ஒன்றும் அர்ஜூனன் அல்ல. இதை எழுதுவதற்கே என் மனமும் கைகளும் கூசுகின்றன. என் வீட்டில் அசோகமித்திரன் சாயலில் கூட டிரைவர் கிடையாது. எனக்கு மகள் இல்லை. மகன் இது நாள்வரை அமெரிக்காவில் இருந்தவன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அசோகமித்திரனுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஜெமினியில் வேலை செய்ததற்குப் பின்னர் அவர் வேறு எங்கும் வேலை செய்யவுமில்லை.அப்படிப் பட்டவரை வேலைக்கு வைத்துக் கொள்ளும் தகுதி எங்கள் யாருக்கும் இல்லை. சாவி உட்பட. சாவியும் அவரும் ஒன்றாக ஜெமினி யில் வேலை பார்த்தவர்களே தவிர சாவி பத்திரிகையில் நீங்கள் சொன்ன மாதிரி அவர் டீ கொண்டுத்தரவுமில்லை. அவர் சாவி ஆபீஸூக்கு வந்திருந்தால் சாவி அவரை ஓடிப்போய் வரவேற்றிருப்பார்.தன் நாற்காலியில் அமரச்செய்திருப்பார்.சாவிக்கு எழுத்தையும் எழுத்தாளர்களையும் மதிக்கத் தெரியும். இரண்டுமே தெரியாத நீங்கள் எவ்வாறெல்லாம் கூறுவது எங்களுக்கு வேதனை மட்டுமல்ல. வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.

அசோகமித்திரன் சில இலக்கியப் பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தாரே தவிர நீங்கள் காழ்ப்புணர்ச்சியோடு குறிப்பிட்ட எந்த வேலையிலும் இல்லை. இது போன்ற அவதூறுகள் எழுதுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள்.அதுதான் உங்களுக்கு நல்லது.


அடுத்ததாக தோழர் இரா.எட்வின் கொஞ்சம் நாகரீகமாக சொல்லியது கீழே.

 தன் மரணத்திற்குப் பிறகு ஜெயமோகன் நம்மைப் பற்றி என்ன எழுதித் தொலைப்பாரோ என்ற பயத்தினால் இவர் எழுதுவதை நிறுத்தும்வரை தமக்கு சாவு வரக்கூடாதென்று பலர் வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள்

உங்களின் இரங்கற்பா கண்டு எழுத்தாளர்கள் அஞ்சுவது பற்றி தோழர் ஸ்ரீரசா, கொஞ்சம் காட்டமாகவே எழுதியதை அவசியம் படியுங்கள்.



சுயமோகனின் மரணத்துக்குப் பிறகே தமக்குச் சாவு வரவேண்டுமென்று பல தமிழ் எழுத்துப் பேனாக்களும், தட்டச்சுச் செய்யும் விரல்களும் நடுநடுங்கிக் கொண்டிருக்கின்றனவாம்...

பலர் தாம் எழுதிக் கொண்டிருக்கும் சிறுகதை, நாவல் போன்ற புனைவுகளை நிறுத்தி வைத்துவிட்டு முதல் வேலையாக முன்னரேயே தமது சுய சரிதையை அல்லது உயிலை எழுதி இரகசியப் பெட்டகத்தில் பதிந்து விட முடிவு செய்து விட்டார்களாம்...

ஆகையால் தமிழ் கூறும் பதிப்புலகில் இனிப் பலப்பல காலத்திற்கு, குறைந்த பட்சம் சுயமோகனின் மரணம் வரையிலுமாவது சுயசரிதைப் பிரதிகள்தான் கிடைக்கப் போகிறதாம்...

சுயசரிதைகளையும் புனைவுகளால் நிரப்பிக் கொள்வதா அல்லது புனைவுகளையே சுயசரிதைகளால் நிரப்புவதா என்று தமிழ் எழுத்தின் மூளைகளுக்குள் மிகப்பெரிய படைப்பு யுத்தமே நடந்து கொண்டிருக்கிறதாம்...


அசோகமித்திரனுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தோழர் யமுனா ராஜேந்திரன் கேட்கும் கேள்வி நியாயமாகத்தானே இருக்கிறது. 

 ஒரு உத்தம புத்திரன் எழுதுகிறார். இரண்டு பேருக்குத்தான் உண்மை தெரியுமாம். உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியாதாம். ஓருத்தர் இறந்துவிட்டார். இன்னொருவர் கடந்த காலத்தில் நிறையச் சரடு விட்டவர். இரண்டு பேருக்கும் தெரிந்த உண்மையை இறந்துபோனவர் வந்து சொல்லாமாட்டார் என்பதை இப்போது பிரச்சினையை அவிழ்த்து விடுகிற இருக்கிறவர் அறிவார்தானே? இருக்கிறவர் பொய்யே பேசாத உத்தமரா? அவர் என்ன அரிச்சந்திரன் வம்சமா? ஏன் அந்த பாசிபிலிடியை இந்த உத்தமபுத்திரன் யோசிக்க மாட்டானென்கிறார்? உண்மையைத் தெரிந்து கொள்ளவே முடியாது எனில், எதற்காக அந்தப் பிரச்சினையை முன் வைத்துப்பேசுகிறீர்கள்? நீங்கள் பேசுகிற ஓரு விஷயத்தையாவது குறிப்பாகப் பேசுகிறீர்களா?? நடிகையின் தொப்புள் படத்தை நாலு துண்டாக வெட்டிப் பிரசுரித்துவிட்டு கிசு கிசு எழுதுகிறவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? உறுதிப்படுத்த முடியாத ஒரு விஷயத்தை வைத்து மற்ற மனிதரை கேவலமாகப் பேசாமல் இருக்கப் பழகாத நீங்களெல்லாம் எழுதி என்ன பயன்?



அசோகமித்திரன் அங்கீகாரம் குறித்து பேசுகிற அநேகம் தமிழ் சுத்த இலக்கிய வெண்ணெய்கள் எல்லாம் இந்த மூன்று இலக்கிய விருதுகளைச் சுற்றித்தான் இருக்கிறார்கள். விஷ்ணுபுரம் விருது, விளக்கு விருது மற்றும் இயல் விருது. ஜெமோ தன்ர வீட்ல தல்ஸ்த்தோய் படத்துக்கு அப்புறம் அமி படந்தான் மாட்டிருக்காறாம். பெறவு என்லே அமிக்கு இதுவரை விஷ்ணுபுரம் விருது தரல? இந்துமதிக்கு அவரு கரோட்டினதா புளுகு விடுற பேமானியே இதுக்கு முதல்ல பதிலச் சொல்லு.. 

தமிழ் இலக்கியத்துக்கு வெளக்குப் புடிக்கிற விளக்கு இதுவரை ஏன் அமிக்கு விருது தரவில்லை? இன்று அமி நாள் என்று புளகத்துடன் அமி பற்றி எழுதுகிற இயல்விருது அமு ஏன் இதுவரை அமிக்கு விருது தரவில்லை எனச் சொல்வாரா?


இன்னும் நிறைய பதிவுகள் உள்ளது. என்னுடைய நேரத்தின் அருமை கருதி இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

இவ்வளவு கடுமையான எதிர்வினைகள் வந்த பின்னும் நீங்கள் கொஞ்சமாவது வருந்தியுள்ளீர்களா என்று பார்த்தால் வழக்கம் போல “நான் பிடித்த முயலுக்கு காலே கிடையாது. இறக்கை மட்டுமே” என சாதித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

அதோடு நின்றிருந்தாலாவது பரவாயில்லை.

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ஜாதி என்பதை நிரூபிக்கிற வகையில் ஜாதிக்குட்டைக்குள் புகுந்து இன்னும் அதிகமாக நாற்றமடிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.

ஒரு சர்ச்சையை எப்படியெல்லாம் திசை திருப்ப முடியும் என்பதற்கு உங்களது குறிப்பு ஒரு முன்னுதாரணம். காவிக்கூட்டத்தின் அறிவுஜீவி அல்லவா? திசை திருப்ப உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.

வழக்கமாக உங்களை வசை பாடுபவர்களை இஸ்லாமியர்கள் என்று முத்திரை குத்தி புறம் தள்ளுவீர்கள். இப்போது இப்பிரச்சினையில் உங்களை கண்டிப்பவர்களை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் பார்ப்பனர்களாக  ஜாதி மாற்றம் செய்து விட்டீர்கள். நல்ல வேளை, பாஜக பாணியில் தேச விரோதி என்று சொல்லவில்லை. அதுவரையில் மகிழ்ச்சிதான்.

உங்களைக் கண்டிப்பவர்கள் அனைவரும் நீங்கள் சொன்ன மூன்று பொய்களுக்காகத்தான் கண்டிக்கிறார்கள்.

காரோட்டுவதோ,
டீ வாங்கித் தருவதோ,
அப்பளம் விற்பதோ

கண்டிப்பாக மோசமான வேலைகள் அல்ல.

வறுமையில் வாடுவது என்பதும் இழிவானது அல்ல.

ஆனால் நீங்கள் சொன்ன அந்த மூன்றுமே அப்பட்டமான பொய்கள் என்பதுதான், அது மட்டும்தான் சர்ச்சைக்கான வித்து.

இறந்து போனவர்களைப் பற்றி இப்படி ஏதாவது கதை விடுவது என்பது உங்களது வாடிக்கை என்பதால்தான் இந்த முறை இவ்வளவு கோபம் வெளிப்பட்டுள்ளது.

இதை நீங்கள் உணர்ந்து கொண்டதால்தான் உங்களுக்கே உரிய வக்கிர குணாம்சத்தோடு  ஜாதிய முலாம் அளித்து திசை திருப்புகிறீர்கள்.

நீங்கள் அசோகமித்திரனுக்கு இழைத்த அநீதியை விட இப்போது கொடுக்கிற ஜாதிய நிறம் இன்னும் அசிங்கமாக உள்ளது.

ஆனால் ஒன்று உங்களை திட்டிய பதிவுகளாலோ அல்லது உங்களுக்கு ஆதரவாக உங்களின் தொண்டர்களின் பதிவுகளாலோ இணைய வெளி நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

“திருமண வீடானால் நானே மணமகன், எழவு வீடானால் நானே பிணம்” என்று இதற்குத்தானே நீங்கள் ஆசைப்பட்டீர்கள் !!!!!!


Sunday, March 26, 2017

ஜெமோ, யாரந்த கீழ்மகன்?

அதிகபட்ச கோபத்தோடுதான் ஒரே மனிதனைப் பற்றி உடனடியாக இன்னொரு பதிவு. 

கீழ்மகன் என்று அவர் பயன்படுத்தும் சொற்றொடருக்கு அவர்தான் மிகவும் பொருத்தம் என்பதை நீங்களும் உணர்வீர்கள்.

 




எனது முந்தைய பதிவில் சொல்லப்பட்டதை விட கொடூரமான விஷயங்கள் இதைக் கேட்கையில் தெரிய வருகிறது.

சாவி அலுவலகத்தில் அசோகமித்திரன் டீ வாங்கித் தரும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்  என்று இதிலே சொல்கிறார். 

அசோகமித்திரன் மட்டுமல்லாமல் சாவியையும் சேர்த்து இழிவுபடுத்துகிறார் ஜெயமோகன் என்று மாலன் கண்டனம் தெரிவித்திருந்ததை கீழே தந்துள்ளேன்.

 
திரு.ஜெயமோகன், SBS வானொலிக்கு அளித்த பேட்டியின் பாட்காஸ்ட்டை கேட்டேன், திடுக்கிட்டேன்.
சாவி இதழில் அவர் டீ வாங்கி வரும் கடைநிலைப் பணியாளாராக பணி அமர்த்தப்பட்டார் என்று ஒரு குண்டு வீசுகிறார். அனேகமாக சாவி இதழ்
தொடங்கப்பட்ட காலத்திலிருந்து எனக்கு அதனுடன் தொடர்பு உண்டு. அசோகமித்ரன் ஒரு போதும் சாவியில் பணி புரிந்ததில்லை. அதிலும் டீ வாங்கி வரும் பணி!

இது போல புனைவுகளை அவிழ்த்துவிடுவது அசோகமித்ரனை மட்டுமல்ல, சாவி அவர்களையும் இழிவு செய்வதாகும். அவர் எழுத்தாளர்கள் மீது பெரும் மரியாதை கொண்டவர். தி.ஜா, லஷ்மி, சிவசங்கரி, சுஜாதா போன்ற எழுத்தாளர்களோடு அவர் உரையாடுவதை நான் அருகிருந்து நேரில் பார்த்தவன். ஜெயகாந்தனை அவர் எப்போதும் உயர்வாகப் பேசுவார்.

அசோகமித்ரன், க.நா.சு , லாசரா போன்ற இலக்கிய ஆசிரியர்கள் மீது தனி மரியாதை கொண்டவர். லா.ச.ரா, தி.ஜா ஆகியோரது நாவல்களை மோனாவில் வெளியிட வேண்டும் என்ற யோசனையை ஏற்று செயல்படுத்தியவர். தி,ஜ,ர குடும்பத்திற்கு நிதி திரட்டிக் கொடுத்தவர். கு.ப.ரா மகனுக்கு உதவியவர். 

நல்ல எழுத்தைப் படித்தால், அதை எழுதியது பிரபலமோ, புதியவரோ, அவர் அடையும் மகிழ்ச்சி அலாதியானது. அந்த மகிழ்ச்சியின் பொருட்டுத்தான் அவர் பலரை அறிமுகம் செய்தார்.

அவர் அசோகமித்ரனை டீ வாங்கி வரும் வேலையில் அமர்த்தினார் என்று சொல்ல வன்மமும் வக்ரமான கற்பனையும் வேண்டும்

நான் மட்டுமல்ல, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு ஆகியோருக்கும் கூட சாவியோடு தொடர்பு இருந்தது

மூவருமே அசோகமித்ரன் மீது பெரும் மதிப்புக் கொண்டவர்கள். அதிலும் ராஜுவிற்கு அவர் மீது தேவதா விசுவாசம். அ.மி.யை இப்படி நடத்த நாங்கள் சம்மதித்திருப்போமா ?

ஒரு பெண் எழுத்தாளருக்கு அ.மி. டிரைவராக இருந்தார் என்று இன்னொரு புனைவு. அ.மி. அந்த எழுத்தாளரின் மகனை வைத்துக் காரோட்டிக் கொண்டு போவதை இவர் கண்ணால் வேறு பார்த்தாராம்!. அ.மி.க்கு கார் ஓட்டத் தெரியாது!. 

ஜெயமோகனின் இந்தப் புனைவுகள், அசோகமித்ரனை மட்டுமல்ல, ஆசிரியர் சாவியையும், சக எழுத்தாளர்களையும் அவமதிக்கின்றன. நான் என் ஆட்சேபங்களை SBS வானொலிக்கு எழுதியுள்ளேன்

அ.மி. மீது அன்பு கொண்டவராகவோ, சாவி சார் மீது மதிப்புக் கொண்டவராகவோ இருந்தால் நீங்களும் எழுதுங்கள். மின்னஞ்சல் வேண்டுவோர் என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்க

அதற்குப் பிறகு பார்த்தால் தமிழர்களை இழி மகன்கள்  என்று திட்டத் தொடங்குகிறார்.

அதன் பிறகு சாகித்ய அகாடமி விருது பற்றி சொல்கிற போது "ஒரு பார்ப்பனான அசோக மித்ரனுக்கு சாகித்ய அகாடமி தர முடியாது என்று சொன்ன ஒரு இழி மகனை இவரை சட்டையைப் பிடித்து சுவரோரம் சாத்தி அடிக்கப் போய் விட்டாராம். 

இவ்வளவு பேசுகிற ஜெயமோகனால் யார் அந்த இழி மகன் என்று சொல்ல முடியுமா?

அந்த இழி மகனை அம்பலப்படுத்த வேண்டியதுதானே?

பின் குறிப்பு : அசோகமித்திரனுக்கு முன்பாக சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்களின் பட்டியலைப் பார்த்தேன். அவருக்கு முன்பாக விருது வாங்கியவர்களில் பதிமூன்று பேர் (நானறிந்தவரை) அசோகமித்திரனின்  ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான்.  ஏன் எந்த இழிமகனும் அவர்களுக்கு விருது கொடுப்பதை தடுக்கவில்லை?

 

 

"அறம்" அழித்த ஜெமோ




புனைவுக்கு பொய் அழகு.
ஜெமோவுக்கோ எல்லாவற்றிலும் பொய்தான் அழகு.

சுஜாதா தொடங்கி தஞ்சை பிரகாஷ் வரை இறந்தவர்களைப் பற்றி தவறாகப்  பேசி வாங்கிக் கட்டிக் கொண்டாலும்

நிமிராத வாலோடு

அசோக மித்திரன் எழுத்தாளர் இந்துமதிக்கு காரோட்டியாய் வேலை பார்த்தார் என்றும் அவரது மனைவி அப்பளம் செய்து விற்றார் என்று சொல்லப் போக அது அவரது கற்பனை மட்டுமே அசோகமித்திரனின் மகனும் அம்பலப்படுத்தி விட்டார்.

ஆசானே,

இறந்து போனவர்களை ஏதாவது சொல்லி இழிவுபடுத்துவது உங்கள் இயல்பா இல்லை உங்களுக்கு வந்திருக்கும் வியாதியா?
 
இன்னும் எத்தனை நாள் இப்படி அசிங்கப்பட்டுக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்?

"அறம்" என்பது பற்றியெல்லாம் காகிதம் கிழிய  நீங்கள் எழுதாமல் இருந்திருக்கலாம். அதனால்தான் உங்கள் பொய்கள் எல்லாம் கடுமையான எதிர்வினைக்கு உள்ளாகிறது.

ஆனாலும் என்ன?

என்னை வசை பாட நினைத்தவர்கள் இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டனர் என்று சொல்லி  முகத்தை துடைத்துக் கொண்டே போகப் போகிறீர்கள்.

எத்தனை அடித்தாலும் தாங்குகிற "ரொம்ப நல்லவர்" நீங்கள்.

 

Saturday, March 25, 2017

செருப்படி பேர்வழிக்கு தடை மட்டும் போதுமா?





பாஜகவின் கூட்டாளிக்கட்சியான எம்.பி ரவீந்திர கெய்க்வாடை தங்களின் விமானத்தில் ஏற்ற முடியாது என நான்கு விமானக் கம்பெனிகள் தடை விதித்துள்ளனர். கூட்டமைப்பில் இல்லாத இன்னும் இரண்டு விமானக் கம்பெனிகளும் கூட தடையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

உண்மையிலேயே இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை. ஆளும் கூட்டணிக்கட்சியைச் சேர்ந்தவர், ரௌடிக் கட்சி உறுப்பினர் என்று பார்க்காமல் தங்களின் அதிகாரி ஒருவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக ஒரு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில்வேயும் இது போன்ற நடவடிக்கை எடுத்தால் நல்லது. எல்லா இடத்திற்கும் நடந்தே போகட்டும்.

விமானக் கம்பெனிகளின் நடவடிக்கை நல்லது. காவல்துறை எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்துள்ளார். அராஜகம் செய்தவர் “ஆம், இருபத்தி ஐந்து முறை செருப்பால் அடித்தேன்” என்று சொல்லியுள்ளார். “சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும் வரை சுட்டேன்” என்று ஜெனரல் டயர் சொன்னது நினைவுக்கு வந்தது. செருப்பால் அடிப்பது என்பது கடும் தண்டனைக்குரிய குற்றம். காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அந்த மனிதனை முதலில் கைது செய்ய வேண்டும். வழக்கு நடத்தி சிறைக்கு அனுப்பிட வேண்டும்.

அடுத்த நடவடிக்கையை நாடாளுமன்றம் செய்திட வேண்டும். மக்களவை சபாநாயகர் இந்த மனிதனை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இப்படிப்பட்ட இழி குணம் கொண்டவர்கள் எல்லாம் எம்.பி யாக இருந்து எதுவும் கிழிக்கப் போவதில்லை.

ஆளும் கட்சியின் கூட்டாளி என்பதால் குற்றவாளியை பாதுகாக்க யாராவது முயற்சிப்பார்களானால்????/

நிச்சயம் நடக்கும்.

என்ன செய்யலாமென்று அப்போது சொல்கிறேன். அதுவரை அந்த மனிதன் பயன்படுத்திய செருப்பை பத்திரமாக, பாதுகாத்திடுங்கள்.    

Friday, March 24, 2017

எச்.ராஜாவுக்கும் சுனா.சாமி மரியாதை வேண்டும் போல



கீழே உள்ள பதிவு ஒரு மாதத்திற்கு முன்பு எழுதி டிராப்டிலேயே இருந்தது. தோழர் தொல்.திருமாவளவனை எச்.ராஜா, தேசத்துரோகி என்று சொன்னதை கேள்விப்பட்டதும் இப்பதிவு நினைவுக்கு வந்தது. அநாகரீகமான தாக்குதல்களில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட எச்.ராஜா போன்ற ஆணவமான, அசிங்கமான மனிதனுக்கு இப்படிப் பட்ட வரவேற்பு தவறில்லை. 

திமிர் பிடித்த அந்த வாயையை அடைக்காவிட்டால் அந்த வாயிலேயே நாலு போடு போடலாம். தவறில்லை. 





சுனா சாமிக்கு அந்த மரியாதைதான் சரி

1992 ம் வருடம் நெய்வேலியிலிருந்து குடியாத்தத்திற்கு பதவி உயர்வு மூலம் வந்தேன். அலுவலகம் குடியாத்தமாக இருந்தாலும் வேலூரிலிருந்து தினம் சென்று வருவேன். Cash பிரிவில் அப்போது இருந்ததால் Safe ன் ஒரு சாவி என்னிடம் இருக்கும். காலை 9.45 மணிக்குள் சென்றால்தான் பணப்பெட்டியை வெளியில் எடுத்து பத்து மணிக்கு காசாளர் தன் பணியை துவக்க சரியாக இருக்கும்.

பெரும்பாலும் 8.30 மணி அல்லது 8.35 மணிக்கு புறப்படும் பேருந்தை பிடித்து விடுவேன். எட்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு டி.வி.எஸ் பிப்டியில் வந்து பேருந்து நிலையத்துக்கு பின்னே இருக்கும் ஒரே ஒரு பார்க்கிங் பாயிண்டில் (அப்போது ஒரு நாள் கட்டணம் ஒரு ரூபாய். மாதக்கட்டணம் இருபத்தி ஐந்து ரூபாய். அக்காலகட்டத்தில் அதுவே சிரமமாகத்தான் இருக்கும்) வண்டியை விட்டு வந்தால் சரியாக இருக்கும்.

இந்த காலக்கட்டத்தில் அன்றொரு நாள் பேருந்து நிலையத்திற்கு செல்கையில் லாங் பஜாருக்கு முன்பாக போக்குவரத்தை போலீசார் நிறுத்தி விட்டார்கள். வேறு வழியிலும் திரும்பிச் செல்ல முடியாமல் தடைகளை போட்டு விட்டார்கள். பையிலிருந்த safe key ஐ காண்பித்து பத்து மணிக்கு முன்பாக குடியாத்தம் செல்ல வேண்டும் என்று கேட்டதால் பெரிய மனது செய்து ஒரு சப் இன்ஸ்பெக்டர் அனுமதித்தார்.

காந்தி சிலையை கடக்கையில் கவனித்தேன். அங்கே பெரிய கூட்டம். அப்போதைய அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ வும் அதிமுக மாவட்டச் செயலாளருமான பெரிய மீசை பாண்டுரங்கன் (அதாங்க ஜெ வைப்பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வாரே அவர்தான்) ஏதோ கட்டளைகள் கொடுத்துக் கொண்டு இருந்தார். வேலூர் கோட்டை நுழைவாயிலுக்கு முன்பு பெண்கள் கூட்டம் திரண்டிருந்தது.

அலுவலகம் செல்லும் அவசரத்தில் இருந்தாலும் கூட ஆர்வம் தாங்காமல் ஒருவரிடம் என்ன விஷயம் என்று கேட்டேன். ஒரு முக்கியமான பிரமுகர் வரப் போகிறார். அவருக்கு வரவேற்பு கொடுக்கத்தான் என்று சொன்னார். சரி, சசிகலா குடும்பத்து ஆட்கள் யாராவது ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வருகிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டேன்.

சில வங்கி ஊழியர்களும் நான் செல்லும் பேருந்தில் வருவார்கள். அன்று யாரையும் காணவில்லை. போக்குவரத்தை திருப்பி விட்டதால் பேருந்தை பிடிக்க முடியாமல் அன்று விடுப்பு போட்டு விட்டதாக மறுநாள் சொன்னார்கள். அலுவலகம் முடிந்து வேலூர் திரும்புகையில் பெட்டிக்கடையில் தொங்கிய மாலை முரசு “வேலூரில் சுப்ரமணியசாமிக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்” என்று தலைப்புச் செய்தியில் சொன்னது.

ஆம் அன்றுதான் வேலூர் கோட்டைக்குள் இயங்கிய நீதிமன்றத்திற்கு வந்த சுனா சாமிக்கு முட்டையும் தக்காளியும் எறிந்து அதிமுக மகளிர் அணியின் ஆபாச நடனத்தோடும் வரவேற்பு கொடுத்தார்கள்.

அநாகரீகமான செயல் அது என்றுதான் அன்றைக்கு நினைத்தேன். ஆனால் தமிழர்களை தொடர்ந்து பொறுக்கி என்று சொல்லிக் கொண்டிருக்கிற, சாக்கடைக்குள் ஒளிந்து கொள்பவர்கள் என்று இழிவுபடுத்துக் கொண்டிருக்கிற சுனாசாமிக்கு அந்த அதிமுக மரியாதைதான் சரி என்று இன்று தோன்றுகிறது.

சுனாசாமி யின் ஆபாச மொழி மட்டும் சில சங்கிகளின் கவனத்திற்கு ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை.

Thursday, March 23, 2017

கா.கொ.கூ.க.வி.சு.சா.க.விளம்பரம்



காட்டிக் கொடுத்த கூட்டத்து கலப்பட வியாபாரி சுடிதார் சாமியாரின் கபட விளம்பரம்.


போலிச்சாமியாரும் புதிய கலப்பட வியாபாரியுமான ராம்தேவ், இன்று தனது பதஞ்சலி பொருட்களுக்காக ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். 



பன்னாட்டுக் கம்பெனிகளை புறக்கணிக்க வேண்டும் என்பது சரிதான். இதை பன்னாட்டுக் கம்பெனிகளின் தரகரான மோடியின் மடியில் அமர்ந்து கொண்டு சொல்வதுதான் அயோக்கியத்தனம்.

பகத்சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் தனது பொருட்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்துவது என்பது கேவலமானது.

கோட்சேவின் பெயரையோ, சவர்க்காரின் பெயரையோ சொல்லி விற்க முடியாது என்று தெரிந்ததால் பகத்சிங்கின் பெயரை பயன்படுத்துகிறார்.

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராக போலியாக விளம்பரத்தில் முழங்கிய ராம்தேவால் இக்கருத்தை மோடியிடம் நேரடியாக முழங்க முடியுமா?

தூக்குக்கயிற்றை தைரியமாக சந்தித்த ஒரு வீரனின் பெயரை உச்சரிக்க, காவல்துறை கைது செய்து விடுமோ என்று பயந்து சுடிதார் அணிந்து தப்பித்த இந்த கோழைக்கு அருகதை உண்டோ?

போலிகள், போலிகள், போலிகள்.
காசுக்காக எதையும் செய்ய வெட்கப்படாத இழி பிறவிகள்.