Tuesday, February 21, 2017

காவல் தெய்வத்தையே




சில நாட்கள் முன்பு ஒரு ஆளும் கட்சி தாதா ஒருவர் வேலூரில் கொல்லப்பட்டது பற்றி எழுதியிருந்தேன்.

அந்த மனிதருக்கு அஞ்சலி தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான  பேனர்களில்  அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த ஒரு அடைமொழி 

"எங்கள் காவல் தெய்வமே"

காவல் தெய்வத்தால் தன்னையே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய முகை நரண்!!!

அந்த பேனர்களை பார்த்த போது  தங்கப்பதக்கம் சோதனை மேல் சோதனை பாட்டும் அதன் நடுவில் வரும் வசனமும்தான் நினைவுக்கு வந்தது. 

Monday, February 20, 2017

சட்டை கிழியவில்லை என சந்தோஷப்படு




முன் குறிப்பு : சனிக்கிழமை அன்றே எழுதத் தொடங்கியது. எங்களின் மகத்தான தலைவர் தோழர் ஆர்.ஜி அவர்களின் மறைவால் பாதியிலேயே நின்று விட்டது.  அவரது இறுதி நிகழ்ச்சிக்காக நேற்று சென்னை சென்று விட்டதால் இப்போதுதான் முடிக்கிறேன்.

தமிழக சட்டப்பேரவை பலப்பரிட்சை களேபரங்களுடன் சட்டை கிழிப்புக்கள், உண்ணாவிரதம், கைதுகளோடு நடந்து முடிந்து எடப்பாடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்த எதுவுமே சரியில்லை. அதிமுகவின் இரண்டு அணிகள், சபாநாயகர்,  திமுக  என யாருமே ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் யதார்த்தம்.

சட்டப்பேரவையில்தான் பெரும்பான்மை தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் உடனடியாக அவை கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டிருந்த திமுக நம்பிக்கை வாக்கெடுப்பான நாள் அறிவிக்கப்பட்டதும் வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ரகசிய வாக்கெடுப்பு என்ற கோரிக்கையையும் முன்வைத்தது. இதிலே ரகசிய வாக்கெடுப்பு என்ற கோரிக்கையை மட்டும் அவர்கள் வலியுறுத்தி இருக்கலாம். இன்னொரு நாள் என்று சொல்லும் போதே அவர்களால் கூவாத்தூரில் அடைபட்டுக் கிடந்த ஆட்டு மந்தையிலிருந்து யாரையும் இழுக்க முடியவில்லை என்பதையே காண்பித்தது.

கூவாத்தூரில் சகல சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த ஆட்டு மந்தைக் கூட்டத்தை அப்படியே போதையில் அழைத்து வந்து சாவி கொடுத்த பொம்மைகளாக மாற்றி எழுந்து நிற்க வைத்து வெற்றி பெற்றதில் எடப்பாடிக்கு எந்த பெருமையோ, வெற்றியோ, ஓங்கி அடிச்ச ஒன்றரை டன் சத்தியத்தை நிறைவேற்றிய திருப்தியோ கிடையாது. ரகசிய வாக்கெடுப்பு கூடாது என்று சபாநாயகரை முடிவெடுக்க வைத்ததே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள எம்.எல்.ஏ க்கள் மீதான நம்பிக்கை குறித்த அச்சம்தானே! ரகசிய வாக்கெடுப்பு நடந்திருந்தால் ஒரு வேளை மனசாட்சி என்ற ஒன்று அந்த மந்தை ஆடுகளுக்கு இருந்திருந்தால் இன்றைக்கு ஐந்து கோப்புகளில் கையெழுத்து போடும் வாய்ப்பு கிடைக்காமல் கூட போயிருக்கலாம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முதல் சில நாட்கள் எதுவும் செய்யாமல் இருந்த போது "மிக்ஸர் பன்னீர்" என்று ஒரு பட்டம் கொடுத்தார்கள். அந்த பட்டத்திற்கு தான் தகுதியானவர் என்பதை சனிக்கிழமை மீண்டும் நிரூபித்தார் அவர். பாவம் அவருக்கு ஆலோசனை சொன்னவர்கள்  அந்தர்தியானத்துக்கு சென்று விட்டார்களோ?

திமுக நல்ல வாய்ப்பை கோட்டை விட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் செயல் திட்டத்தில் ஏதோ கோளாறு. க்ளைமேக்ஸ் சீனில் வ்ர வேண்டிய சண்டைக் காட்சியை ஓபனிங் சீனிலே நடத்தி விட்டதால் க்ளைமேக்ஸ் காட்சியில் அவர்களுக்கு வேலையே இல்லாமல் போய் விட்டது. 

வாக்கெடுப்பு வரை அவர்கள் பொறுமை காத்திருந்தால் நிலைமைகள் ஒரு வேளை மாறி இருக்கலாம். தேவே கௌடா நம்பிக்கை வாக்கெடுப்பு சமயம் பேசுகிற போது சீத்தாராம் கேசரியைக் காண்பித்து "The Old Man is in a hurry" என்று சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. அது போல Stalin was in a hurry. பாவம் அவரும் என்ன செய்வார்? இலவு காத்த கிளி கதை அல்லவா அவருடையது. 

கடைசி காட்சி வரை திமுக பொறுமை காத்திருக்கலாம்.
இப்போ சட்டை கிழிந்ததுதான் மிச்சம்.

சபாநாயகரைப் பற்றி என்ன சொல்ல? கூவாத்தூரில் அடைபடாமலே கூவாத்தூர்  மனோபாவத்துடன்தான்  இருந்தார். நடந்த களேபரங்கள் ஏற்புடையது அல்ல. ஆனால் அதற்கு அவர் ஜாதிய முலாம் பூசியது மோசமானது. தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமையோ அல்லது ஆணவக் கொலைகளோ கிடையாது என்று முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ் சொன்ன போது அதை மறுத்திருந்தால் அவர் நியாயவான். அவருடைய மாவட்டத்தில்தான் கோகுல்ராஜ் கொலை நடந்தது. டி.எஸ்.பி  விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அப்போதெல்லாம் அவர் வாய் திறக்கவே இல்லை.

இப்படி எதுவுமே சரியில்லாத போது எதை எழுதுவது என்று எரிச்சல்தான் வருகிறது. அதுவும் இத்தனை கூத்துக்களுக்கு மத்தியில் எடப்பாடி தக்கவைத்துக் கொண்ட பதவி தினகரனுக்கு முதல்வராகும் ஆசை வரும் வரையில்தான் (எடப்பாடியைப் பார்த்து ஸ்டாலின் சிரித்தால் அந்த ஆசை வந்து விடும்) என்று நினைக்கும்போது இன்னும் எரிச்சல் அதிகமாகிறது.

இந்த கூத்துக்களில் ஒரே ஒரு சந்தோஷம்.

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நம் சட்டை கிழியவில்லை. 

இனி அந்த ஸ்பரிஸம் தந்த நம்பிக்கையோடு . . . .


Saturday, February 18, 2017

மகத்தான தலைவர் மறைந்தார்




எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் இணைச்செயலாளர் தோழர் ஆர்.கோவிந்தராஜன் சற்று முன் இயற்கை எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவின் உறுப்பினராக செயல்பட்ட அவர் இப்போது மாநிலக்குழு சிறப்பு அழைப்பாளர். மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர்.

எண்பது வயதை சில தினங்கள் முன்பு கடந்த தோழர் ஆர்.ஜி, சங்கத்தின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் ஆதாரமாக அமைந்த தோழர்களில் முக்கியமானவர். 

தஞ்சையை அடிப்படையாகக் கொண்ட தோழர் 1988 ல் அகில இந்திய இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்திற்காக அவர் மிகவும் நேசித்த தஞ்சை மண்ணை விட்டு சென்னையில் குடியேறினார்.

மார்க்சிய தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட தோழர் ஆர்.ஜி, அதனை தோழர்களின் மனதில் பதியும்படி அற்புதமாக வகுப்பெடுப்பவர். ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி  மிகச்சிறப்பாக பேசுவார். எழுதுவார். "அன்பு கெழுமிய தோழர்களே" என்று அவர் கம்பீரமாக பேசத்துவங்குவதை ரசிப்பவர்கள் நாங்கள். 

அவரது உரையை முதன் முதலில் கேட்கும் வாய்ப்பு 1988 ல் கிடைத்தது. அப்போதுதான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைமையகம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறியதை ஒட்டி சென்னையில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சரோஜ் சவுத்ரி, சந்திர சேகர் போஸ் போன்ற ஸ்தாபகத் தலைவர்கள் பங்கேற்ற அந்த விழாவில் தோழர் ஆர்.ஜி பேசுகிற போது "சூரியனைப் போல எங்களால் பிரகாசிக்க முடியாவிட்டாலும் சூரிய ஒளியை பெற்றுக் கொண்டு அகல் விளக்கு போல வெளிச்சம் தருவோம்" என்ற ரவீந்திரநாத் தாகூரின் கவிதை வரிகளை அவர் சொன்னதும் உடனடியாக தோழர் சரோஜ் சவுத்ரி அக்கவிதையை பெங்காலியில் முழுமையாக சொன்னது மட்டுமல்லாமல் நீங்கள் எல்லாம் அகல் விளக்கு அல்ல, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இளைய சூரியன்கள் என்று சொன்னதும் இன்னமும் மனதில் பசுமையாக உள்ளது. 

சோவியத் யூனியனின் சிதைவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட மாற்றமும் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அந்த சமயத்தில் தென் மண்டலக் கூட்டமைப்பின் மாநாடு 1990 ஜூனில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் தோழர் ஆர்.ஜி ஆற்றிய உரை, இல்லை நிஜத்தில் அது ஒரு மார்க்சிய வகுப்பு, ஒரு தெளிவை அளித்தது மட்டுமல்ல,  மார்க்சியம் என்ற தத்துவத்திற்கு அழிவில்லை என்ற நம்பிக்கையையும் அளித்தது.

எங்கள் கோட்டத்தின் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு தோழர் ஆர்.ஜி வந்துள்ளார். கோட்டத்தின் பெரும்பாலான தோழர்களை அவருக்கு தனிப்பட்ட முறையிலும் தெரியும். 

மிகவும் எளிமையான தோழர். மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு கட்சி வகுப்புக்காக அவர் வேலூர் வந்த போது பஸ் நிலையத்தில் அவரை அழைக்கச் சென்றேன். நீங்கள் ஆட்டோவில் வாருங்கள் என்று சொன்ன போது கூட அதனை மறுத்து என் இரு சக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்து வந்தார்.

எத்தனையோ நினைவுகள் அலை அலையாக வந்து மனதில் மோதிக் கொண்டிருக்கின்றன. எதை எழுத? எதை விட ?

நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்ற போது நாங்கள் இருவரும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தோம். ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு காலையும் அந்த நான்கு நாட்களும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். பல சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கமளிப்பார். வயது வித்தியாசம் என்பதே அவரிடம் கிடையாது. 

மிகக் கடுமையான உழைப்பாளி.  நீண்ட பயணங்களுக்கு சளைக்காதவர்கள். பொருளாதார விஷயங்களை எளிமையாய் புரியும்படி சொல்பவர். 

அவர் எப்போது எங்கள் கோட்டத்து  நிகழ்ச்சிக்கு வந்தார் என்று யோசித்துப் பார்த்தேன்.

2012 ல் எங்கள் வெள்ளி விழா ஆண்டில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார். 

அதன் பின்பு அவர் வருகை தந்தது கடந்தாண்டு இறுதியில் எங்கள் அன்புத்தோழர் சி.வெங்கடேசன் இறந்து போன போது அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க சிதம்பரம் வந்திருந்தார்.

கடைசியாக எப்போது பேசினார் என்று யோசித்தால் அதுவும் எங்களது இனிய தோழர் லிடியா அவர்களின் மறைவின் போதுதான்.

அவரது கம்பீரக் குரலை, அர்த்தம் மிக்க அவரது உரையை இனி கேட்க வாய்ப்பில்லை. அவரது அனுபவங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இனி இல்லை.

ஆனால் அவர் என்றென்றும் எங்கள் மனதில் இருப்பார். 

செவ்வணக்கம் தோழர் ஆர்.ஜி.

 

Friday, February 17, 2017

மாதா கோயிலில் மணியடித்துக் கொண்டு . . . .




ஒரு பழைய கதை.

அந்த மாதா கோயிலுக்கு புதிதாக ஒரு பாதிரியார் வந்திருந்தார். அங்கே மணியடிக்கும் ஊழியம் செய்து கொண்டிருந்த ஒருவருக்கு எழுதப் படிக்க தெரியாது. ஊதியத்தைக் கூட கைநாட்டு வைத்துதான் வாங்குவார். அது அந்த பாதிரியாருக்கு பிடிக்கவில்லை. எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். ஆனால் அந்த ஊழியரால் அது முடியவில்லை. ஆகவே பாதிரியார் ஒரு நூறு ரூபாய் கொடுத்து வேலையிலிருந்து அனுப்பி விட்டார்.

அந்த நூறு ரூபாயை வைத்து சந்தையில் கறிகாய் வாங்கி வீடு வீடாக விற்க ஆரம்பிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கடைசியில் சூப்பர் மார்க்கெட் வைக்குமளவு முன்னேறுகிறார். கையில் உள்ள லாபத்தை வங்கியில் போட கணக்கு ஆரம்பிக்கிறார். கணக்கு ஆரம்பிக்கையில் படிவத்தில் கைநாட்டு வைக்கிறார்.

வங்கி மேலாளர் அதிசயத்தோடு கேட்கிறார்.

எழுதப் படிக்க தெரியாமலேயே இவ்வளவு முன்னேறியுள்ளீர்களே, ஒரு வேளை நீங்கள் படித்திருந்தால் என்னவாகியிருப்பீர்கள்?

அந்த முன்னாள் ஊழியர் சொன்னார்.

மாதா கோயிலில் மணியடித்துக் கொண்டிருப்பேன்.

பின் குறிப்பு : ஆங்கிலம் தெரியாவிட்டால் கேவலம் என்று சொல்பவர்கள் அனைவருக்கும் இக்கதை சமர்ப்பணம்.

செங்கோட்டையனை திட்டவோ, விமர்சிக்கவோ  ஊழல், சந்தர்ப்பவாதம், முறைகேடு, பதவி மோகம், இன்னும் இன்னும் என்று ஆயிரம் காரணம் உள்ளது.  அதை விட்டு விட்டு ஆங்கிலம் பேசத்தெரியாததையெல்லாம் நக்கல் செய்யாதீர். 

நல்லவேளை காமராஜர் இப்போது உயிரோடு இல்லை. 

பின் குறிப்பு 2 : மாதா கோயில் மணி என்பதால் மட்டுமே ஞான ஒளி படத்து காட்சி. மற்றபடி வேறு எந்த தொடர்பும் கிடையாது. 




கூவாத்தூர் சுகபோகம் இன்றோடு????????

கீழேயுள்ள படங்கள் எல்லாம் கூவாத்தூர் கோல்டன் பே  ரிசார்ட்டின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

தமிழகத்தின் மானமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த சுகபோக வசதிகள் இன்றோடு  முடிந்து விடும் என்று நினைக்கிறேன். நாளைக்கு சட்டமன்றத்திற்கு கூட்டிப்போய் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டால் ஆடுகளை பட்டியிலிருந்து அவிழ்த்து விட்டு விடுவார்கள் அல்லவா?

பாவம் அவர்களாலும்தான் எத்தனை நாள் கட்டிப்போட்டு மேய்க்க முடியும்?

பின் குறிப்பு : ஏராளமானவர்கள் அந்த இணையதளத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள் போல. சர்வர் பிஸி, பேண்ட்வித் வரம்பைக் கடந்து விட்டது என்று சொல்லி ஒரு கட்டத்தில் காணாமல் போய் விட்டது.


















Thursday, February 16, 2017

கமல் சொல்ல வருவதென்ன?

ஆங்கிலக் கட்டுரைகளை படிக்கவும் தமிழாக்கம் செய்யவும் அகராதி பயன்படுத்தியுள்ளேன். ஆனால் தமிழில் எழுதப்பட்டதை படிக்கவே அகராதி பயன்படுத்த வைக்கிறீர்களே கமல், நியாயமா இது? கொஞ்சம்  புரியும்படி நேரடியாய், எளிமையாய் எழுதினால்தான் என்ன?