Monday, July 8, 2019

சிவகங்கையிலிருந்து சிக்காகோ வரை . . .

சிவகங்கையில் துவங்கி சிகாகோ வரை வந்துவிட்ட கீழடியே நம் தாய்மடி



சிகாகோ, ஜூலை 7- சிவகங்கையில் துவங்கி சிகாகோ வரையில் வந்திருக்கிற கீழடி எனும் நமது தாய்மடி, பத்தாயிரம் ஆண்டுகள் மனிதன் ஒரே இடத்தில் வாழ்ந்ததற்கான தொடர்ச்சியான தடயங்களையும், அடையாளங்களையும் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது; அதை உலகத் தரம் வாய்ந்த அகழாய்வு அறிஞர்களைக் கொண்டு வெளிக்கொணர வேண்டும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார். 

வடஅமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து சிகாகோவில் ஜூலை 3 - 7 தேதிகளில் நடத்திய 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், கீழடி நம் தாய்மடி என்ற மையப் பொருளில் நடைபெற்ற மாபெரும் அமர்வினை துவக்கி வைத்து மதுரை மக்களவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவருமான சு.வெங்கடேசன் உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதன் முக்கிய சாராம்சம் வருமாறு: கீழடி என்பது தமிழர்களுடைய தொல்லியல் அரசியலின் குறியீட்டுச் சொல் என்று நாம் சொல்லலாம். இப்படி ஒரு  தொல்லியல் அரசியல் குறியீட்டுச்  சொல்லை உருவாக்கியதற்கு சமகால இந்தியச் சூழல்தான் காரணம். குறிப்பாக வரலாற்றை அகற்றிவிட்டு, வரலாற்றின் இடத்தில் புராணங்களை நிலைநிறுத்துகிற சூழ்நிலை அப்பட்டமாக துவங்கி யிருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் தமிழர்களின் வரலாற்றை தோண்டி எடுத்து இந்திய அறிவுலகின் மையப்புள்ளிக்கு கொண்டுவருவதற்கான மிகப்பெரிய வாய்ப்பினை கீழடி வழங்கியிருக்கிறது.  கீழடி அகழாய்வு துவங்கப்பட்டு இது ஐந்தாண்டு. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கீழடி  அகழாய்வு என்பது மத்திய அரசாலும், மாநில அரசாலும்  வேறு பல நிறுவன அமைப்புகளாலும்  பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஒன்றை அடிப்படை யாகச் சொல்ல முடியும். இந்த நான்காண்டுகளாக கீழடி என்பது மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வருவதற்கும் அங்கு அகழாய்வு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதற்கும், தமிழகத்திலும் உலகம் முழுவதிலும் இருக்கிற தமிழர்கள் இந்த அகழாய்வின் மீது காட்டிய அக்கறையும், அதன் முடிவுகளை தெரிந்துகொள்வதில் இருந்த ஆர்வமும், இந்த அகழாய்வு முடிவுகளின் அடிப்படையில் - முன்பு எழுதப்பட்ட வரலாற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதும், எழுதப்பட்ட வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து எழுப்ப வேண்டிய வினாக்களை தொடர்ந்து எழுப்பியதும்தான் காரணம். அந்த அகழாய்வு தொடர்பாக வினாக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால்தான் அதிலிருந்து விட்டு விலகிச் செல்ல முடியாத ஒரு புறச்சூழல் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிர்பந்தமாக எழுந்திருக்கிறது. 

இந்த புறச்சூழலை உருவாக்கியதற்கு நமது மக்கள்தான் பிரதான காரணம். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி சொல்கிறேன். குறிப்பாக இன்றைக்கு கீழடி என்பது சிவகங்கையில் துவங்கி சிகாகோவிற்கு வந்து சேர்ந்துள்ளது. முதல் மூன்று ஆண்டுகள் மத்திய அரசும், அடுத்த இரண்டு ஆண்டுகள் மாநில அரசும் அகழாய்வில் ஈடுபடு கின்றன. ஆனால் இதுவரை இந்த அகழாய்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ. 2 கோடிக்கும் குறைவானதுதான். ஒரு நான்குவழிச்சாலையில் நான்கு கிலோ மீட்டர் அமைப்பதற்கு ஒதுக்கப்படுகிற நிதியைவிட குறை வான நிதி தான் இது. வெறும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அந்த ஆய்வே இவ்வளவு பெரிய கேள்வியை எழுப்புமானால், இவ்வளவு பெரிய பதற்றத்தை மத்திய  ஆட்சியாளர்களுக்கு உருவாக்குமானால் அங்கே புதைந்து கிடக்கும் உண்மை எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை நாம் உணர வேண்டும். 

குறிப்பாக, கீழடி என்று மட்டுமே துவங்கிய இந்த ஆராய்ச்சி கீழடி யோடு நிற்காமல், அதைச் சுற்றியுள்ள கொந்தகை, மண லூர், அல்லிநகரம், அகரம் ஆகிய கிராமங்களுக்கும் விரிகிறது. இந்த ஐந்து கிராமங்களும் சங்ககால வாழ்விட பகுதிகள் நிறைந்து கிடந்த இடங்களாக இன்றைக்கு கண்டறியப்பட்டுள்ளன. எனவே இவற்றை சங்ககால வாழ்விடப் பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஏனென்றால் அவ்வளவு தடயங்கள், அடையாளங்கள் இந்தப் பகுதியிலேயே புதைந்திருக்கின்றன. தொல்லியல் என்பது இன்றைக்கு ஒரு வலிமை மிக்க அரசியல் சொல்லாடாலாக பரிணமித்திருக்கிறது. 

இந்தச் சூழலில்தான் தமிழகத்திலும், கீழடி பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. பிரம்மாண்டமான ஒரு அகழாய்வின் மிகச்சிறிய துவக்க நிலையில்தான் இப்போது அங்கே நின்றுகொண்டிருக்கிறோம். இந்த துவக்க நிலை, வருகிற காலங்களில் மிகப்பெரிய வியப்பை, மிகப்பெரிய உண்மையை எடுத்துச் சொல்லும். குறிப்பாக புதிய கற்காலம் துவங்கிய வரலாற்றுக் காலம் வரை - ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டு வரை, தொடர்ச்சியாக ஆதாரங்களும் தடயங்களும் கிடைக்கிற இடமாக கீழடி இருக்கிறது. சுமார் 10 ஆயிரம்  ஆண்டுகாலம் மனிதன் ஒரே இடத்தில் வாழ்ந்திருக் கிறான் என்பதற்கு வரிசைப்படி தடயங்களும், ஆதாரங் களும் கிடைக்கிற நிலமாக கீழடி இருக்கிறது. இது மிக மிக  அபூர்வமானது. எனவே கீழடியை பாதுகாப்பதும் கீழடி  அகழாய்வை தொடர்ந்து நடத்துவதும் கீழடி அகழாய் வில் உலகத்தரமான தொல்லியல் அறிஞர்களை ஈடுபடுத்த வைப்பதும், 

உலக அளவில் நடக்கிற பல அகழாய்வு களில் கீழடி அகழாய்வு முடிவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதும் இன்றைக்கு மிக மிக முக்கியமானவை. சிகாகோவில் நடக்கிற இந்த பெரு விழா, கீழடி நம் தாய்மடி என்று தலைப்பிட்டு நடத்தப்படுவது தமிழுக்கு பெருமை சேர்ப்பதாகும். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.

நன்றி - தீக்கதிர் 08.07.2019

Sunday, July 7, 2019

நண்டு உடைத்த அணை . . .



மஹாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி என்ற இடத்தில் ஒரு அணை உடைந்து ஒன்பது பேர் இறந்து விட்டனர். பதினைந்து பேர் காணாமல் போய் விட்டனர்.

அணை உடைந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?

அங்கே நண்டுகள் அதிகமாக அன்று வந்து அணையை துளைத்து விட்டதாம். 

இப்படிச் சொன்னவர் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தானாஜி சவந்த்.

அணையில் ஏற்பட்ட விரிசல்கள் பற்றி மக்கள் எத்தனையோ முறை சொன்ன பின்பும் அலட்சியமாக இருந்து விட்டு இப்போது நண்டுகள் மீது பழி போடுகிற இவர் எந்த கட்சியாக இருப்பார்?

இல்லையில்லை

செல்லூர் ராஜூவின் அண்ணன் போல கருத்து தெரிவித்தாலும் அதிமுக கிடையாது.

ரேடார் புகழ் மோடியின் பாரதீய ஜனதா கட்சிதான். . .


யானைகள் காதல் செய்தால் . . .

எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்களின் கட்டுரை




*புற நானூறு பாடலும்...*
*சாமானிய மக்களின் பாடும்...*
*********************************
க.சுவாமிநாதன்

*புற நானுற்று பாடலை இந்திய நாடாளுமன்றம் கேட்டதில் மகிழ்ச்சி.*

*அப் பாடலின் கருத்தும் முக்கியம். கதிரை அறுத்து யானைக்கு கொடுத்தால் அதன் பல நாள் பசி தீரும். அதுவே வயலுக்குள் இறங்கினால் பயிர் முழுக்க அழிந்து விடும். இதுவே கருத்து.*

பொருத்தமான மேற்கோள். உலகமய காலத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு உவமானம் யானைதான். கார்ப்பரேட்டுகளின் லாப போட்டியில் சாதாரண மக்களின் நலன்கள், உரிமைகள் பாதிக்கப்படுகிமன்றனவே.. என்ற கேள்வி எழுந்த போது

*யானைகள் காதல் செய்யும் போது புல்வெளிகள் நசுங்கத்தான் செய்யும்* (When elephants make love, grass is bound to suffer)

*என்றுதான் கூறப்பட்டது.*

*ஆகவே நிர்மலா சீதாராமன் அவர்களும் யானை பசி பற்றியே கவலைப்பட்டுள்ளார். யானைக்கு எப்படி செல்வ பங்கீட்டில் பங்கு கொடுப்பது என்பது பற்றிய முதலாளித்துவ சமூகத்தின் நுட்பமான அரசியலை விளக்கியுள்ளார்.*

*இந்த சமூகத்தின் உள்ளார்ந்த ஆதிக்க குணத்தை மறைக்கிற அழகான முகமூடியே அரசியல். மக்கள் தாக்கப்படுவதற்கான இசைவை மக்களிடமே பெற்றுத் தருகிற "சமூக ஒப்புதல்" (Social Consent) உத்தி அது.*

*இனி பட்ஜெட்டிற்கு வருவோம்.* 

*2009 தேர்தலின் போதே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருமானவரி விலக்கு வரம்பை ரூ 5 லட்சம் ஆக்குவோம் என்று பா.ஜ.க மேடைகளில் பேசப்பட்டது. 2014 ல் இருந்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வரி முன்மொழிவுகள் வாசிக்கப்படும் போது நடுத்தர வர்க்கத்தினர் இதயங்கள் படபடக்க கேட்பார்கள். ஆனால் நடக்கவில்லை. இந்த முறையும் அழகு தமிழில் புறநானூறு பேசிய புதிய நிதியமைச்சர் 5 லட்ச வாக்குறுதியை மட்டும் மறந்து விட்டார்.*  

*ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் உச்ச வரம்பு உயர்ந்து விட்டது. ரூ 250 கோடிகள் வரை மட்டுமே 25 சதவீத கார்ப்பரேட் வரி என்பது ரூ 400 கோடி வரை என்று மாற்றப்பட்டு விட்டது. அதாவது இவர்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து ஒரே அடியில் 5 சதவீத சலுகை. மொத்த நிறுவனங்களில் 99.3 சதவீதத்திற்கு இந்த சலுகை விரிவாக்கப்பட்டு விட்டது என்றால் பாருங்கள்.*

*ஆனால் சூப்பர் ரிச் மீது சர்சார்ஜ் அதிகரிப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு "ராபின் ஹுட் டேக்ஸ்" என்பது வணிக இதழ்கள் சூட்டியுள்ள பெயர். குடம் குடமாக சில வணிக இதழ்கள் கண்ணீர் விட்டுள்ளன. உண்மையில் 74983 பேர்தான் ஒரு கோடி முதல் 5 கோடி வரை வருமானம் காட்டுகிறார்கள். 5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளதாக 6361 பேர் மட்டுமே கணக்கு காண்பிக்கிறார்கள். இது சந்தேகத்திற்குரிய என்ணிக்கை. 1 கோடிக்கும் 5 கோடிக்கும் இடைப்பட்ட வருமானம் பெறுகிற 74983 பேரிலும் பெரும்பான்மையோர் 1 கோடிக்கும் இரண்டு கோடிக்கும் இடைப்பட்டவர்களே. அவர்களுக்கு இந்த சர் சார்ஜ் உயர்வு கிடையாது.* 

*இதனால் ஐந்து கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களின் வரி விகிதம் 37 சதவீதத்தை தொட்டு விட்டது, இது உலகில் மிக அதிகம், இது தொழிலதிபர்களின் முனைப்பை பாதிக்கும் என்று பக்கம் பக்கமாக வணிக இதழ்களில் எழுதுகிறார்கள். ஆனால் உண்மை என்ன ஜெர்மனியில் 2 கோடி வருமானம் உள்ளவர்களுக்கே 45 சதவீத வரி. ஜப்பானில் 2.5 கோடி வருமானம் உள்ளவர்களுக்கு 45 சதவீத வரி. பிரிட்டனில், சீனாவில் உச்ச பட்ச வரி 45 சதவீதம். ஆகவே தொழிலதிபர்கள் காண்பிப்பது செல்ல கோபம். தேர்தல் பத்திரங்களில் 95 சதவீதத்தை ஆளும்கட்சிக்கு கொடுத்தவர்களுக்கு கோபம் வராதா! வருகிறது. அவர்களுக்கே புற நானூறு கதையை சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர். யானைகளே கொஞ்சம் காத்திருங்கள்... விளைச்சல் முழுவதும் உங்களுக்குதான் என்று.*

*ஆனாலும் மூலதனம் பரபரக்கிறது. அடம் பிடிக்கிற "அசுரக்" குழந்தையல்லவா அது. (புராண அசுரர்கள் நல்லவர்கள்). "கூட்டுக் களவு முதலாளித்துவம்" (Crony Capitalism) என்கிற வகையில் என் பசிக்கு சோளப் பொரியா என்கிறது. சாமானிய மக்களின் வாழ்க்கை எனும் பயிர் அழிகிறது.*

வேலூர் மெட்ரோவைக் காணோம் மேடம்



"நீங்கள் வசதியாக பயணம் செய்வதற்காக நான் மெட்ரோ ரயில்கள் அமைத்துத் தருவேன். ஆனாலும் நான் என்னுடைய காரில் நான் மட்டும்தான் பயணிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தால் பெட்ரோல் விலை உயர்வையும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும்"

நிர்மலா அம்மையாரின் இந்த பேட்டியை காலையில் ஹிந்து நாளிதழில் படித்தவுடன் காபி கூட குடிக்காமல் வேலூர் நகரம் முழுதும் சுற்றிப் பார்த்தேன், காட்பாடியில் வழக்கமான ரயில்கள் கூட ஓடிக் கொண்டிருந்ததே தவிர மெட்ரோ ரயிலைக் காணவே இல்லை.

ஆகவே முதல் வேலையாக வேலூரில் காணாமல் போன மெட்ரோ ரயிலை உடனடியாக கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா முழுதும் இதுவரை கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய மாநகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்கள்  ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த நகரங்களில் அவற்றில் பயணிக்காமல் ஒத்தை ஆளாக காரில் செல்பவர்களுக்கு மட்டும்தான் பெட்ரோல் விலை உயர்வு என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது போல ஆணவமாக பேசுகிறார் அம்மையார்.

இந்தியா முழுதும் கிராமங்களிலும் நகரங்களிலும்  சாதாரண இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை பல கோடி. அவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்.

அதை அப்படியே மறைத்து விட்டு ஏதோ பெரு நகரங்களில் கார்களில் பயணிப்பவர்களுக்குத்தான் பாதிப்பு, அவர்கள் கூடுதல் விலை கொடுக்கட்டுமே என்ற ரீதியில் திமிராகப் பேசுவதுதான் பாஜக ஆணவம். நிர்மலா அம்மையார் வெளிப்படுத்துவது அந்த ஆணவத்தைத்தான்.


Saturday, July 6, 2019

இப்போ ஃபாரீன் புரோக்கர்ஸ் . . .


நிர்மலா அம்மையார் சமர்ப்பித்துள்ள பட்ஜெட்டைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பாக முதலில் ஒரு டீஸர்.

இன்சூரன்ஸ் துறையில் செயல்படும் புரோக்கர் கம்பெனிகளில் நூறு சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இன்சூரன்ஸ் துறையில் தனியார் நுழைவதற்கு முன்பாக புரோக்கர் கம்பெனிகள் என்ற அமைப்பே கிடையாது. இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும்  பாலிசிதாரர்களுக்கும் நேரடித் தொடர்புதான் உண்டே தவிர சேவைகளை செய்வதற்கு புரோக்கர் கம்பெனிகள் கிடையாது.

தனியார் கம்பெனிகள் இன்சூரன்ஸ் துறையில் நுழைந்த போது புரோக்கர் கம்பெனிகளும் சேர்ந்தே வந்தார்கள்.

எப்படி தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் அன்னியக் கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளின் கூட்டாளியாகத்தான் இருக்க முடியுமோ, அது போலத்தான் புரோக்கர் கம்பெனிகளிலும் அவர்கள் 49 % மூலதனம் மட்டுமே வைத்திருக்க முடிந்த இளைய பங்காளிகளாகத்தான் இருப்பார்கள்.

அதை இப்போது நூறு சதவிகித அன்னிய மூலதனமாக மாற்றி விட்டார்.

இது இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் நூறு சதவிகித அன்னிய மூலதனத்தை கொண்டு வருவதற்கான முதல் நடவடிக்கையே.

அன்னிய இன்சூரன்ஸ் கம்பெனிகள் நூறு சதவிகித மூலதனத்தோடு கடை திறந்தால் என்ன ஆகும்?

அவர்கள் மக்களிடமிருந்து திரட்டுகிற பிரிமிய வருமானம் முழுதும் அவர்களது நாட்டிற்கே சென்று விடும். இந்திய மக்களின் சேமிப்பு இந்தியாவில் சுற்றுவதற்குப் பதிலாக வேறு நாட்டு பொருளாதாரத்திற்குப் பயன்படும்.

அதைப் பற்றி நமக்கென்ன கவலை!

ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற கற்பனை செய்து கனவில் காலத்தை கழித்திடலாம் . . .

புற நானூறு பாடலைச் சொல்லி தமிழுக்கு பெருமை சேர்த்து விட்டார் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம்


அவர் இருந்திருந்தால்



கீழே உள்ள கட்டுரை மறைந்த எங்கள் தோழர் இ.எம்.ஜோசப் எழுதியது. அவர் எழுதிய இறுதிக்கட்டுரையும் இதுதான். அவர் மறைந்த 30.06.2019 அன்று தீக்கதிர் இதழில் பிரசுரமானது. அதை அன்று காலை பகிர்ந்து கொண்ட பலருக்கும் இன்னும் சில நிமிடங்களில் அவர் அனைவரை விட்டும் பிரிந்து விடுவார் என்று தெரியாது. 

நேற்று பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. பட்ஜெட்டைப் பற்றிய அவரது ஆய்வு இன்று வந்திருக்கும்.  அந்த வருத்தத்துடன் அவரது இறுதிக் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அமெரிக்க சீனப் பொருளாதாரம் - ஓர் ஒப்பீடு!



உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா இன்று சீனாவுடன் வர்த்தகப் போரினைத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்க மக்களின் துயரங்களுக்கு அமெரிக்கப் பொருளாதார அமைப்பு தான் காரணமேயொழிய, சீனா அல்ல. இந்தப் பின்னணியில் இதனை விளக்கி, அமெரிக்காவின் முன்னாள் தொழிலுறவு அமைச்சர் ராபர்ட் ரீச், ‘தி கார்டியன்’  ஏட்டில் (23,ஜூன், 2019) எழுதிய கட்டுரையின் சுருக்கம் இங்கு தொகுத்து தரப்படுகிறது.
அமெரிக்க அமைப்பு!

அமெரிக்கப் பொருளாதார அமைப்பு என்பது, அடிப்படையில், அமெரிக்காவில் தலைமையகம் கொண்ட அதனுடைய 500 பகாசுரக் கம்பெனிகளை மையமாகக் கொண்டது தான். உலக முழுவதும் அவர்கள் உற்பத்தி செய்வது, வாங்குவது, விற்பது ஆகியவற்றிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதே. அதுவே அதனுடைய அடிப்படைக் கடமை.  அமெரிக்கக் கம்பெனிகளின் ஊழியர்களில் 50 சதவீதத்தினர் அமெரிக்கர் அல்லாதவர்களே. இவர்கள் அமெரிக்காவிற்கு வெளியே இருக் கின்றனர். அதே போன்று, இந்தக் கம்பெனிகளின் மூன்றில் ஒரு பங்குதாரர்கள் அமெரிக்கர் அல்லாதவர்களே.  இந்தக் கம்பெனிகள் அமெரிக்க நாட்டிற்கோ மக்களுக்கோ குறிப்பிட்ட அளவு விசுவாசம் எதுவும் கொண்டவர்கள் இல்லை. தங்களது பங்குதாரர்களுக்கு மட்டுமே இவர்கள் கடமைப் பட்டவர்கள், விசுவாசம் உள்ளவர்கள். 

இவர்களது பங்குகளின் விலைகளை எவ்வளவு உயர்த்த வேண்டுமோ அவ்வளவு உயர்த்துவதற்காக, இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.  ஊழியர்களின் ஊதியங்களை குறைப்பது, தொழிற்சங்கங்களை உடைத்தெறிவது, ஊழியர்களில் ஒரு பகுதியினரையே  “காண்டிராக்டர்கள்” என்று மறு வரையறை செய்வது, உலகில் உழைப்பு மிக மலிவாகக் கிடைக்கும் நாடுகளுக்கு உற்பத்தியினை இடம் மாற்றிக் கொள்வது, வரிகள் மிகக் குறைவாக இருக்கும் நாடுகளுக்கு தங்களது லாபங்களை இடம் மாற்றிக் கொள்வது, தங்களது முதன்மை அதிகாரிகளுக்கு (CEOs) மிக அதிகமான ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்குவது என அனைத்து வித்தைகளும் அதில் அடங்கும்.

சீனப் பொருளாதாரம்!

மறுபுறத்தில் சீனப் பொருளாதாரத்தை பாருங்கள்! அது சீனாவை விரிவாக்குவதிலேயே குறியாய் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அது ஒரு பின் தங்கிய வேளாண் பொரு ளாதாரம் தான். ஆனால், இன்று அது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருமாறி யிருக்கிறது. மோட்டார் உற்பத்தித் தொழிலில்  முதல் இடம். மிக உயர்ந்த தொழில்நுட்ப கம்பெனி களின் தாயகம். கடந்த நாற்பது ஆண்டுகளில், பல கோடி சீன மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.  அதில் பொதுத்துறைக் கம்பெனிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்தக் கம்பெனிகள் அரசு வங்கிகளிலிருந்து (செயற்கையாகக் குறைக்கப்பட்ட) மிகவும் சொற்ப வட்டியில் கடன் பெறுகின்றன. சீனப் பொருளாதாரத்தில் உருவா கும் ஏற்றத்தாழ்வுகளை இந்த பொதுத்துறைக் கம்பெனிகளே சமனப்படுத்துகின்றன. தனியார் கம்பெனிகள் அதிகம் செலவு செய்யத் தயங்கும் போது, இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் தான் அந்த வெற்றிடங்களை இட்டு நிரப்புகின்றன.  சீன நாடு சுபிட்சப் பாதையில் செல்வதற்கும், உயர் தொழில் நுட்பங்களில் ஈடுபடுவதற்கும், தேவைப்படுகிற முதலீடுகளை இந்த பொதுத் துறைக் கம்பெனிகள் செய்வதால், அவையே பொருளாதாரத்தினை இழுத்துச் செல்லும் உந்து விசையாகச் செயல்படுகின்றன.  சீன மக்களின் நல்வாழ்வினை மேம்படுத்து வதற்கு தேவைப்படும் அனைத்தையும் செய்வ தற்கும், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பொருளா தாரமாக சீனாவை மாற்றுவதற்கும், சீன அரசின் திட்டமிடலும், பொதுத்துறைக் கம்பெனிகளுமே அடிப்படையாக இருந்து வருகின்றன.  1978லிருந்து இன்று வரை சராசரியாக 9 சதவீத வளர்ச்சியினைப் பெற்று வருகிறது. அண்மையில் அதன் வளர்ச்சி விகிதம் குறைந்தி ருக்கிறது. அமெரிக்க வர்த்தகப் போர் அதனை 6 அல்லது 7 சதவீதமாகக் குறைக்கக் கூடும். எப்படி இருப்பினும், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டுப் பொருளாதாரத்தையும் விட, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அதிகமானதாகவே இருக்கும்.

கார்ப்பரேட் சுயநலம்!

அமெரிக்க மக்களின் நலன்களை முன்னெடுக்கும் நோக்கில், வரிகள், மானியங்கள், ஒழுங்காற்றல் முறைகள் போன்ற வற்றின் மீதே அமெரிக்கப் பொருளாதார அமைப்பு அதிகம் நம்பிக்கை வைக்கிறது. ஆனால், இதில் கிடைக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி, பங்குதாரர்களின் லாபத்தைப் பெருக்கிக் கொள்வதிலேயே, கம்பெனிகள் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றன.  எடுத்துக்காட்டாக, கடந்த வாரத்தில், உலகின் மிகப் பெரும் கம்பெனியான வால் மார்ட், 570 ஊழியர்களை லே ஆஃப் செய்தது. டிரம்ப் வழங்கிய கார்ப்பரேட் வரிச்சலுகைகள் மூலம் 2 பில்லியன் (200 கோடி) டாலர் கூடுதல் லாபம் ஈட்டிய பின்னரும் இது நடந்திருக்கிறது. இதே கம்பெனி சென்ற ஆண்டு சாம்ஸ் கிளப் ஸ்டோர்களை மூடி, ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை இழக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து 20 பில்லியன் (2000 கோடி) மதிப்புள்ள தனது கம்பெனியின் பங்குகளை, பங்குச் சந்தையிலிருந்து மீண்டும் விலைக்கு (Buy back) வாங்கிக் கொண்டது. இதன் பயனாக வால் மார்ட் அதிகாரிகளின் ஊதியம் உச்சிக்கு சென்றது. பங்குதாரர்களின் லாப ஈவு (டிவிடெண்ட்) ஊதிப் பெருத்தது.

லஞ்சத்திலும் உச்சம்!

வால் மார்ட் ஒரு உலகளாவிய கம்பெனி என்பதனையும், வெளி நாடுகளின் அரசு அதிகாரிகளுக்கு தாராளமாக லஞ்சம் கொடுக்கும் கம்பெனி என்பதனையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். அத்தகையதொரு குற்றச் சாட்டின் பின்னணியில், சென்ற வியாழக்கிழமை வெளி நாடுகளுக்கு நஷ்ட ஈடாக 282 மில்லியன் (28.2 கோடி) டாலர் வழங்குவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது. பிரேசிலில் இடைத்தரகராக பணியாற்றிய பெண் ஒருவருக்கு கிடைத்த தொகை மட்டும் 5 லட்சம் டாலர். எந்தக் கட்டிடத்தை எங்கு, எப்படிக் கட்டினாலும் அரசு அதிகாரிகளிடமிருந்து எந்த ஆட்சேபணையும் வராமல் பார்த்துக் கொள்ளும் இந்தப் பெண்ணை “பெண் மந்திரவாதி” (Sorceress) என்று அழைக்கிறார்களாம்.  

வேலைகளுக்கு அல்ல! 

மொத்தத்தில் டிரம்ப் வழங்கிய வரிச் சலுகைகள் அமெரிக்காவில் வேலைகளை உருவாக்கவில்லை, தொழிலாளர்களின் ஊதியத்தையும் உயர்த்தவில்லை. மாறாக, கார்ப்பரேட் உயர் அதிகாரிகள் ஊதிய உயர்வு போன்ற வற்றிற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் சேமிப்புக்களை மறு முதலீடு செய்வதற்குப் பதிலாக, சந்தையில் விற்றிருந்த தங்களது பங்குகளை மீண்டும் வாங்கி தங்கள் பங்கு களை அதிகரித்திருக்கின்றனர் என ஐ.எம்.எப் அறிக்கை கூறுகிறது.

ஜனநாயகம் உண்டா?

கொஞ்சம் பொறுங்கள்! அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு, சீனா ஒரு சர்வாதிகார நாடு என்று தானே சொல்கிறோம்? ஆனால், அமெரிக்க அரசின் கொள்கைகளை உருவாக்குவதில் அமெரிக்க மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? இது தான் பேராசிரியர்களான மார்ட்டின் கிலன்ஸ் (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்), பெஞ்சமின் பேஜ் (நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகம்) ஆகியோரின் ஆய்வறிக்கை முடிவு.  மாறாக, அமெரிக்காவின் பெரும் செல் வந்தர்கள் (அநேகமாக, கார்ப்பரேட் எக்சிக்யூட்டிவ்கள், வால் ஸ்ட்ரீட் முதலாளிகள்) சொல்வதைத் தான், அமெரிக்காவில் சட்டமியற்றுபவர்கள் கேட்பார்கள். அமெரிக்க கார்ப்பரேட்டுக்களை குற்றம் சொல்வதில் பொருள் இல்லை.  அமெரிக்க மக்களின் நலன்கள், புதிய வேலைகள், அமெரிக்கப் போட்டித்தன்மையினை மேம்படுத்தல் ஆகியனவெல்லாம் முதலாளிகளின் வேலை அல்ல. அப்படியானால், சீனப் பொருளாதார அமைப்பு முறைக்கு மாறி விட வேண்டும் என நான் சொல்லவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் குறித்து அதீத திருப்தி அடைந்து விட வேண்டாம் என்பது தான் நான் சொல்வது.  

சீனா தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்வதைக் காட்டிலும், அமெரிக்கக் கார்ப்பரேட்டுக்கள் அமெரிக்கக் கொள்கைகள் மீது ஆதிக்கம் செலுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நான் கூறும் யோசனை.    இப்போது சொல்லுங்கள்! கடந்த நாற்பது ஆண்டுகளாக அமெரிக்க மக்களில் அரைப் பங்கினருக்கு வருமான உயர்வு எதுவும் இல்லாததற்கு சீனாவா காரணம்?

தொகுப்பு : இ.எம்.ஜோசப் 
 நன்றி : “தி கார்டியன்” (23.06.019)

Friday, July 5, 2019

அதே சரக்கு! அதே பாட்டில்!



புற நானூற்றுப் பாடலைத் தாண்டி பட்ஜெட்டில் புதிதாக ஏதும் இல்லை என்பதே உண்மை. அந்த பாடல் படி நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.

இப்போதைக்கு சொல்ல இதுதான்.

பழைய பாட்டிலில் பழைய சரக்கு!

பிறகு விரிவாக எழுதுகிறேன்