Friday, July 5, 2019

புமா ஜெமோ - அறுந்த ரீலையே


நாமா தேடிப் போகாவிட்டாலும் யாராவது லிங்க் அனுப்பி நம்மை டென்ஷன் செய்யறாங்க!

புளிச்ச மாவு ஜெமோவோட பக்கத்துக்கு போக வச்சிடறாங்க!

மண்டையோட்டையும் தவடையையும் இணைக்கும் குருத்தெலும்பில் அடிபட்டதால் குணமாக நாளாகுமாம். சிவாஜி படத்தில் எந்த இடத்தில் கத்தியால் குத்தினால் உயிர் போகாது என்று ரஜனிக்கு டாக்டர் சொல்லிக் கொடுத்தது போல ஒரு பில்ட் அப்.

ஜெயமோகன் தொண்டர் படை ஆட்கள் அவரிடம் கொஞ்சம் சொல்லுங்கள்.

இவர் மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்ட சில நிமிடங்களிலேயே ஒரு நல்லவர் முக்கியமான ஒரு உண்மையைச் சொல்லி விட்டார்.

"வெறும் வாய்த் தகராறுதான். போலீஸ் கேஸை ஸ்ட்ராங்காக்கவே மருத்துவமனையில் அனுமதி"

ஆக முதல் சீனிலேயே உங்கள் ரீல் அறுந்து விட்டது.

கெஞ்சிக் கூத்தாடி அவரை அந்த பதிவை நீக்க வைத்து விட்டாலும் ஸ்க்ரீன் ஷாட் என்ற விஷயத்தை மறந்து விட்டு மீண்டும் மீண்டும் அவரை அதே நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கச் சொல்லாதீர்கள். 

என்னத்தான் கதாசிரியராக இருந்தாலும் ஓவரா கதை விட்டால் அது தோசை மாவை விட அதிகமாகவே புளித்து விடும். 

"பொதுவாக எழுத்தாளர்கள் எந்நிலையிலும் வலியையோ துயரையோ தன்னை ஆட்கொள்ள விடக்கூடாது என்று நான் நம்புகிறேன். வலியை துயரை வெளிக்காட்டாமலிருந்தாலே போதும். பிறரிடமிருந்து அது நம்மிடம் திரும்பி வராமலிருந்தால் நம்மிலிருந்தும் மறைந்துவிடும். இருக்கும், ஆனால் நாம் கடந்து செல்ல முடியும். நான் நோயில் படுத்திருக்கும் காட்சியை, சோர்ந்து உதவிகோரும் நிலையை இவ்வுலகம் ஒருபோதும் காணப்போவதில்லை."

ஆமாம். இவ்வளவு சொல்லிட்டு எதுக்கு புலம்பிக்கிட்டே இருக்காருன்னு நான் கேட்டதாகவும் சொல்லிடுங்க . .

Thursday, July 4, 2019

இறுதியாய் கேட்ட முதல் கேள்வி




தோழர் ஜோசப் - அமைப்புக்கு மட்டுமல்ல, சொந்த இழப்பும் கூட

நினைவுகள் முழுதிலும்  மறைந்த தோழர் ஜோசப்தான் இருக்கிறார். 1986 ல் எல்.ஐ.சி பணியில் இணைந்து 1987 ல் தொழிற்சங்கப் பயணத்தை தொடங்கினாலும்  பல தலைவர்களின் பெயர் மட்டும்தான் அறிமுகம். 1990 ல் தென் மண்டல மாநாடு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போதுதான் பல தலைவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த மாநாட்டில் எட்ட  நின்று பிரமிப்போடு பார்த்த ஒரு தலைவர் தோழர் ஜோசப். கிட்டே நெருங்கும் வாய்ப்பு அந்த ஆண்டு இறுதியில் ஒடிஷா மாநிலத்தின் கட்டாக் நகரில் அகில இந்திய மாநாடு நடக்கும் போது கிடைத்தது.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஒரு பெரும் படையே மகாநதிக்குச் சென்று குளிக்கப் புறப்படும். அந்த பெரும் படையின் தலைவர்களாக தோழர் ஜோசப், எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன், தஞ்சைக் கோட்டத்தின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.

இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மகாநதிக்கு போகும் போதும் சரி, வரும் போதும் சரி, இயக்க அனுபவங்களையே பேசிக் கொண்டு வருவார்கள். சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் அந்த நடைப் பயிற்சி அமைந்திருந்தது. இன்னமும் மனதில் நிலைத்திருக்கிறது. அப்போதுதான் தனிப்பட்ட முறையில் அவரோடு அறிமுகமானேன்.

தொழிற்சங்கப் பொறுப்பாளர் என்பதைத் தாண்டி அவர் ஒரு சிறந்த பொருளாதார வல்லுனர் என்பதும் மார்க்சிய தத்துவத்தை எளிமையாக புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் வகுப்பெடுக்கிற ஆசான்.

தென் மண்டல செயற்குழு உறுப்பினராக 1994 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அவருடனான நெருக்கம் அதிகமானது. மதுரையில்தான் கல்லூரிப் படிப்பு என்று சொன்னவுடன் அவர் எங்கள் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலரின் பெயரைச் சொல்லி தெரியுமா என்று கேட்க, அதன் பின்பு அவர்கள் எல்லாம் கல்லூரி ஆசிரியர்கள் இயக்கத்தின் முக்கியமான தலைவர்கள் என்று சொன்னார். அது வரை அவர்களின் அருமை தெரியவில்லை என்பதுதான் நிஜம்.

நான் முதன் முறையாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருவண்ணாமலை மாநாட்டிற்கு அவர் வந்திருந்தார். வாழ்த்துக்களை தெரிவித்த பின்பு என்ன நெர்வஸாக இருக்கீங்க என்று கேட்டார். பெரிய பொறுப்பு என்பதால் வரும் நெர்வஸ்னஸ் என்றேன். இத்தனை நாளாக செய்து கொண்டிருந்த அதே வேலையைத்தான் வேறு ஒரு பெயரில் செய்யப் போகிறீர்கள். அதனால் நெர்வஸ் ஆக ஒன்றுமில்லை என்று தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தியதை மறக்கவே முடியாது.

நம் பணிகளை உற்சாகப்படுத்துவார். பாராட்டுவார். அதே நேரம் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கவும் தயங்க மாட்டார். மாற்று அமைப்பு  ஒன்று எங்கள் அமைப்பின் மீது ஒரு பொய்ப்பிரச்சாரம்  செய்த போது எதிர்வினையாக கடுமையான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.  “உங்களின் கோபம் நியாயமாக இருந்த போதிலும் எழுத்தில் இவ்வளவு சூடு அவசியமில்லை” என்று சுட்டிக்காட்டியவர்.

எங்கள் கோட்ட மாநாடுகளின் போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர்களில் அவரது கட்டுரை கண்டிப்பாக இருக்கும். குறித்த நாளுக்குள் நினைவுறுத்தல் இல்லாமலேயே அனுப்புவது அவருடைய சிறப்பு. அச்சுக்கு செல்வதற்கு முன்பு முற்றுப்புள்ளி, தொடர் புள்ளி ஆகியவற்றில் கவனமாக இருங்கள் என்று அறிவுறுத்துவார். அவை மாறினால் அர்த்தமே மாறி விடும் என்ற எச்சரிக்கை எப்போதுமே பயனுள்ளது.

அவருடையது என்றல்ல, வேறு யாருடைய கட்டுரையிலாவது ஏதாவது புரியவில்லை என்றால் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் நான் அவரைத்தான் தொடர்பு கொள்வேன். தமிழாக்கம் செய்யும் போது சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தையை பயன்படுத்த அகராதியை நாடியதை விட அவரை நாடியது அதிகம்.  தொலைபேசியில் பேசி முடித்த பிறகு சில சமயங்களில் ஒரு மணி நேரம் கழித்து அவரே அழைத்து இந்த வார்த்தை இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்வார். நீண்ட வாக்கியத்தை அப்படியே தமிழாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதன் அர்த்தம் கெடாமல் இரண்டு வாக்கியங்களாகக் கூட மாற்றுங்கள் என்ற அவரது ஆலோசனையும் பயனுள்ளது.

அவருடைய ஆங்கிலப்புலமை அபாரமானது. ஆங்கில மொழியின் சுவாரஸ்யம் குறித்து அவர் வலைப்பக்கம் தொடங்கி அவர் சில நாட்கள் எழுதிக் கொண்டிருந்தார். அதை ஏனோ அவரால் தொடர இயலவில்லை. ஆனால் புளிச்ச மாவு சர்ச்சைக்குப் பிறகு “மாவு  ஆங்கிலத்தில் BATTER என்று அழைக்கப்படும் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன்” என்று முக நூலில் அவர் எழுதியபோது ஆச்சர்யமாக இருந்தது. இதை அவர் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் புதிதாக இன்றுதான் தெரிந்து கொண்டேன் என்று எழுதியதில் வெளிப்படுகிறது அவரது தன்னடக்கம்.

கூட்டங்களில் அவர் பேசுகையில் சின்ன சலசலப்பு வந்தாலும் கொஞ்சம் டென்ஷன் ஆகி விடுவார் என்பது அவருடைய பலவீனம். ஆனால் ஒரு அவையில் அவரால் சலசலப்பு வந்தது. மகிழ்ச்சியூட்டும் சலசலப்பு அது. அவருக்குப் பிறகு மதுரைக் கோட்ட்சங்கத்தின் தலைவராக செயல்பட்ட பாரதி அண்ணன் என்றழைக்கப்படுகிற தோழர் சி.சந்திரசேகரன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மேடையில் தோழர் ஜோசப் இல்லை. எங்கே என்று கேட்ட போது கடந்த வாரம்தான் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது என்று மதுரைத் தோழர்கள் சொன்னார்கள். மருத்துவமனைக்குச் சென்று பார்க்க முடியுமா என்று கேட்டதற்கு இன்று டிஸ்சார்ஜ் செய்து விடுவதாக சொன்னார்கள். ஒருவேளை இந்நேரம் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என்றார்கள்.

விழா நடந்து கொண்டிருந்த போது ஒரு சலசலப்பு. என்னவென்று பார்த்தால் மருத்துவமனையிலுருந்து டிஸ்சார்ஜ் ஆன தோழர் ஜோசப் வீட்டிற்குச் செல்லாமல் தோழர் பாரதியைப் பார்த்து வாழ்த்து சொல்ல நேரடியாக விழா அரங்கத்திகே வந்து விட்டார். அன்று அவர் காண்பித்த தோழமை உண்ர்வு பிரமிக்க வைத்தது. 

கூட்டத்தில் பேசுகையில் சலசலப்பு வந்தால் டென்ஷன் ஆவாரே தவிர மிகவும் குறும்புக்காரர். அதிலும் இப்போது நாக்பூரில் இருக்கிற மூத்த தோழர் காஷ்யபன் அவர்களின் பதிவுகளில் அவர் போடுகிற பின்னூட்டங்கள் எல்லாமே அக்மார்க் குறும்பு ரகம்தான்.


சாம்பிளுக்கு ஒன்று


தோழர் காஷ்யபன்

1996ம் ஆண்டு என் மனைவியுடன் ஹைதிராபாத் சென்றேன் .சுந்தரய்யா கேந்திரம்,கொல்கொண்டா,சாலார் ஜங்,என்று என் மனைவியிடம் பெருமையாக காட்டினேன். பின்னர் சார்மினாருக்கும் சென்றேன்.அங்கு நான் கண்ட காட்சி என்னை குலை நடுங்க வைத்தது. அந்த பிரும்மண்டமான கிழக்குத்தூணை ஒட்டி காளியம்மன் கோவில் கட்டப்பட்டிருந்தது. அங்க்கு பூஜை நடந்துகொண்டிருந்தது.  கெட்டவார்த்தைகளாக கொட்டித்தீர்த்துவிட்டென்.சுற்றி இருந்தவர்கள் என்னை ஆசுவாசப்ப்டுதினர் .ஹைதிரபத்தில் தற்பொது அநுமார் ஜெயந்தி நடக்கிறது.அதோடு கலகமும் நடக்கிறது.ஊரடங்கு உத்திரவு போடப்பட்டுள்ளது.....என்ன செய்ய? மக்கா என்னசெய்ய?


தோழர் ஜோசப்

Dear Com.Kashyapan 

I visited your blogspot just now. The way you have presented your reminiscences of Hyderabad and Charminar is really nice.As I have moved with you for the past 42 years, I could imagine as to how you would have reacted on seeing a forced structure on Charminar done with a malicious intent. - EM Joseph



தோழர் காஷ்யபன்

Thank u Joseph,My first blog posting received by u and u r the very first to send comment.At the same time I like ur KUSUMBU in immagining my reaction to the structure Realy I enjoyed it....kashyapan.


தலைமுறை இடைவெளி என்பதே  இல்லாதவர் அவர். எவ்வளவு வேண்டுமானாலும் உரிமை எடுத்துக் கொள்ளலாம். எத்தனையோ சம்பவங்கள் நினைவுக்கு வந்தாலும் ஓரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு பழைய புகைப்படத்தை மதுரையில் கல்லூரியில் படித்த போது எடுத்தது என்று பகிர்ந்திருந்தேன்.

“ஓ! மதுரையைக் கெடுத்ததில் உங்களுக்கும் பங்கு இருக்கிறதா?” என்று அவர் பின்னூட்டம் இட்டிருந்தார்.

“நீங்கள் எல்லாம் இருக்கையில் எனக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது? நீங்கள் எல்லாம் கெடுத்த பின்பு எனக்கு என்ன மிச்சமிருக்கப் போகிறது என்று புரிந்து கொள்ள வேண்டாம்” என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர் இன்னொரு பின்னூட்டம்  இட்டார்.

“ஒரு ஞானி ஒரு கோப்பை முழுதும் தண்ணீர் நிரப்பி விட்டு இதனுள் இன்னும் ஏதாவது நிரப்ப முடியுமா என்று கேட்க மற்றவர்கள் முடியாது என்று சொல்ல, அந்த ஞானி அந்த கோப்பையின் மீது சில ரோஜா இதழ்களை மிதக்க விட்டார். நாங்கள் எல்லாம் கெடுத்த பின்னும் உங்களுக்கும் வாய்ப்பு இருந்திருக்கும் என்பதை சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்”

இதற்கு மேல் நான் என்ன எழுத?

திங்களன்று பகிர்ந்து கொண்ட தோழர் சுவாமிநாதனின் கட்டுரையில் தோழர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைக் கூட அவர் நினைவில் வைத்திருப்பார் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதை படிக்கையில் நான் கலங்கி விட்டேன்.

நவம்பர் மாதம் நெல்லையில் தமிழ் மாநில மகளிர் மாநாடு நடந்த போதுதான் அவரை இறுதியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி

“ரகுநந்தன் எப்படி இருக்கிறான்?’



அமித் ஷா தூங்கட்டும், தப்பில்லை







அமித் ஷா மக்களவையில் உறங்கிக் கொண்டிருக்கிற காணொளி மேலே உள்ளது.

அமித் ஷா வகையறாக்களை பொறுப்பானவர்கள் என்று கருதினால்தான் அவர்கள் தூங்குவது நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்!

அவர் கட்சியின் கர்னாடக மாநில, குஜராத் மாநில, கோவா மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் உட்கார்ந்து கொண்டு நீலப் படம் பார்த்தது போன்ற அசிங்கத்திற்கு தூங்குவது எவ்வளவோ மேல்!



மேலும் அவர் விழித்திருந்தால் யார் குடியை கெடுப்பது, எங்கே, எப்படி கலவரத்தை தூண்டுவது போன்றவற்றைத்தான் யோசித்துக் கொண்டிருப்பார். அந்த அழிவு சிந்தனை கொஞ்சமாவது குறைவதற்கு வாய்ப்புள்ள தூக்கம் தப்பில்லை. அவர் தூங்கட்டும். 

Wednesday, July 3, 2019

மாலனுக்கு சிக்கல் இல்லை


பாஜக ஆட்கள் இனி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்களாம்.

அம்மையாருக்கு நாராயணன்,சேகர் ஆகியோர் மீது என்ன கடுப்போ?

ஆனாலும் நம்ம மூத்த எழுத்தாளர் மாலன், சமூக ஆர்வலர் பானு கோம்ஸ் போன்ற பினாமி சங்கிகளுக்கு சிக்கல் இல்லை. அவர்கள் தொடர்ந்து முட்டு கொடுப்பார்கள்.

அவர்கள் காட்டில் இனி அடை மழைதான்.
டபுள் பேமெண்ட் 

Tuesday, July 2, 2019

இதெல்லாம் சரியில்லை பசங்களா!


நேற்று செய்யார் சென்றிருந்தேன். செய்யாரை நெருங்குகையில் முன்னே சென்ற மினி பஸ்ஸை பார்த்து பதறி விட்டேன்.

பின்னே உள்ள படிக்கட்டுக்களில் தொங்கிக் கொண்டு வந்த மாணவர்களைப் பார்த்து வந்த பதற்றம் அது.

பஸ்ஸை கடக்கையில் பார்த்தால் அத்தனை பேரும் உள்ளே நிற்பதற்கான இடம் இருந்தது.

ஆக ஒரு சாகஸ அனுபவமாகத்தான் அவர்கள் அப்படி பயணிக்கிறார்கள் என்பதும் புரிந்தது.

வேண்டாம்பா பசங்களா!

சில நிமிட சாகச அனுபவத்திற்காக உயிரை பணயம் வைக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தின் நிம்மதியை குலைக்க வேண்டாம்.

Monday, July 1, 2019

பு.மா ஜெமோ - சுத்தியலையே போட்டிருக்கலாம்



மேலே உள்ள கார்ட்டூன் ஓவியர் தோழர் ரவி பாலேட் வரைந்தது. 

ஆ! இது சரியா? ஒரு எழுத்தாளன் தாக்கப்படும் போது வருந்தாமல் நக்கலடிக்கலாமா என்றெல்லாம்  பல விதமான பின்னூட்டங்களும் வந்திருந்தது.

சாதாரண வாய்த்தகராறுதான். போலீஸ் கேசை ஸ்ட்ராங் ஆக்கவே மருத்துவமனையில் அனுமதி என்பதை படிக்கும் போதே ஜெமோ மீது அனுதாபப்பட ஏதுமில்லை என்பது தெளிவாகி விட்டது. 

அந்த சம்பவத்திற்குப் பிறகு ஜெமோ இரண்டு பதிவுகள் எழுதி உள்ளார். 

மனுசன் கொஞ்சமாவது மாறியுள்ளாரா என்று பார்த்தால் பிறவித் திமிர் அப்படியே உள்ளது.

எழுத்தாளனை மதிக்கத் தெரியாத ஜென்மங்கள் என்பது தொடங்கி அவர் வாழும் பகுதியில் உள்ள அத்தனை பேரையுமே குடிகாரர்களாக முத்திரை குத்திவிட்டார். இவரைப் போன்ற உத்தமர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதியாம் அது!

இன்னொரு பதிவிலோ காமெடி என்ற பெயரில் எரிச்சலை வர வைக்கிறார். தமிழில் எழுதி தஞ்சாவூர்ப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதால்தான் வசைகள் வாங்கி தவடையில் அடி வாங்கினாராம்.

ஊரில் உள்ள அத்தனை பேரையும் எள்ளி நகையாடி தான் மட்டுமே எழுத்தாளன் என்ற திமிரில் அலைவதுதான் அவர் மீது  விமர்சனங்கள் (வசை அல்ல)  குவிவதற்கு காரணம் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன ஒரு எழுத்தாளர்!

தஞ்சை பிரகாஷ், அசோக மித்திரன், இன்குலாப், சுஜாதா, சமீபத்தில் கிரீஷ் கர்னார்ட் ஆகியோர் இறந்து போனதற்குப் பிறகு இவர் எழுதியதைப் படித்த யாருக்கும் எந்த நாளும் இவர் மீது அனுதாபமே வராது.

அந்த இரண்டாவது பதிவைப் படிக்கும் போதுதான் படத்தில் இவர் மீது புளிச்ச மாவு பாக்கெட்டை போட்டதற்குப் பதிலாக நேசமணி மீது விழுந்த சுத்தியலையே போட்டிருக்கலாம் என்று தோன்றியது. 

பிகு : எழுதி சில நாட்களாகி ட்ராப்ட்லியே இருந்தது. புதிதாக எழுதும் மன நிலை இல்லாததால் இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

இனிய முகம், இனிய சொல், இனி என்று?

அத்துயரச் செய்தி நேற்று பேரிடியாக மனதில் வந்து இறங்கியது. பாசத்துக்குரிய தோழர் இ.எம்.ஜோசப் அவர்களின் மறைவுச் செய்தி அது. தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவரும் பொருளாதார வல்லுனரும் தத்துவ ஆசானுமான தோழர் இ.எம்.ஜோசப் அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பு.

புதன் கிழமை கூட அலுவலகம் சென்று ஓய்வு பெறும் தோழர்கள் அளித்த விருந்தில் பங்கேற்றுள்ளார். வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை உடல் நிலை மோசமாகி ஞாயிறு காலையில் எங்களை விட்டு பிரிந்து விட்டார்.

தோழர் ஜோசப் பற்றி தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதி தீக்கதிர் நாளிதழில் இன்று பிரசுரமாகியுள்ள கட்டுரை அவரது ஆளுமையை புரிந்து கொள்ள உதவும்.

செவ்வணக்கம் தோழர் ஜோசப்



மதுரை பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர், இன்சூரன்ஸ் தொழிற் சங்க இயக்கத்தின் முன்னோடித் தலைவர் இ.எம்.ஜோசப் ஜூன் 30 (ஞாயிறன்று) மறைவெய்தி விட்டார். அவர் மறைந்த அதே நாள் காலை தீக்கதிரில் “அமெரிக்க-சீன பொருளாதாரம்: ஓர் ஒப்பீடு” என்ற அவரின் கட்டுரையும் வெளி வந்திருந்தது. மரணம் தழுவுகிற வரை அவரது பொது வாழ்வுப் பயணம் இடையறாது தொடர்ந்ததன் அடையாளம் அது. தொழிற்சங்க இயக்க ஆளுமையாய், பொதுவுடமை இயக்கத் தலைவராய், தத்துவ ஆசானாய் அவரது 50 ஆண்டு கால பொது வாழ்க்கை கடைசி மூச்சு வரை தொடர்ந்திருக்கிறது.


பெரியகுளம் முதல் திருவனந்தபுரம் வரை

1960 களின் பிற்பகுதியில் பெரியகுளம் எல்.ஐ.சியில் பணியில் சேர்ந்தவர். 1970 களில் மதுரை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர், 1983 ல் பொதுச் செயலாளர், 1996 ல் தலைவர், 2000 ல் இருந்து 2004 வரை தென்மண்டல துணைத்தலைவர் (தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி) என அவரின் சங்கப் பணிகள் புதிய புதிய உயரங்களை தொட்டன.
அவரது நான்கு பங்களிப்புகள் முக்கியமானவை

♦ அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு பின்புலமாக உள்ள அரசியலை எளிமையாக உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துச் சென்றது.
♦ உலகமய சூழலில் பொதுத் துறை பாதுகாப்பு இயக்கத்திற்கான தர்க்கங்களை வலுவாக முன்வைத்தது.
♦ சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தொழிற்சங்க அரங்கின் நிகழ்ச்சி நிரலில் இணைத்தது.
♦ உழைக்கும் மகளிர் இயக்கத்தை எல்.ஐ.சியில் துவக்கி வளர்த்தெடுத்தது.

இவையெல்லாம் இயக்கத்தின் முடிவுகள்தான். முயற்சிகள்தான். ஆனால் அதை அமலாக்குவதில் இவரின் தனித்துவமும், மெருகேற்றியதும் மற்ற கோட்டங்கள், மண்டலங்களுக்கும் புதிய வெளிச்சத்தை தந்தது.

அரசியல் பின்புலம் கற்றுத் தந்த ஆசான்


இவர் ஊதிய உயர்வு போராட்டம் பற்றி உரையாற்றுவதை கேட்பவர்கள் நான்கு சுவர்களைக் கடந்து விரிந்த வானில் பறக்கிற உணர்வுக்கு ஆளாவார்கள். மக்களின் வாங்கும் சக்தி, சந்தை, ஆளும் வர்க்கங்களின் தேவைகள், போராட்டத்திற்கான உத்திகளை பொருளாதாரப் பாதை யோடு இணைத்தல்... இப்படி அறிவார்ந்த தளத்திற்கு அழைத்துச் செல்வார். அவரது உரைகள் ஒவ்வொன்றும் நேர்த்தியான தயாரிப்போடு அமையும். ஒன்று புதிய செய்தி இருக்க வேண்டும், அல்லது புதிய கோணத்தில் சொல்ல வேண்டும்; அல்லது புதிய திசை வழியைக் காண்பிக்க வேண்டும்; அதுவே சிறந்த பேச்சின் இலக்கணம் என்பதை அவரது உரைகள் நிரூபிக்கும். இவரது சுற்றறிக்கைகளின் தலைப்புகள் பல காலம் நினைவு கூரப்படும். ஊழியர்களின் விவாதங்களைத் தூண்டுகிற வகையில் அமையும். இவரின் ஆங்கிலப் புலமை அபாரமானது. ஆங்கில உச்சரிப்பில் மிக கவனமாக இருப்பார். 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மறைந்த தலைவர் என்.எம்.சுந்தரம் அவர்கள் ஆங்கில மொழியை கையாள்கிற ஆளுமையை பலரும் வியப்பார்கள். ஆனால் அவரே “என்ன புரொபசர் ஜோசப். என்னுடைய ஆங்கிலப் பிரயோகம் சரியா” என்று கேட்பார். நிர்வாகத்திற்கு அவர் எழுதுகிற ஆங்கிலக் கடிதங்களை படிப்பதற்கு டிக்சனரி வேண்டுமென்று சொன்ன உயர் அதிகாரிகள் உண்டு. இன்றும் ஆங்கில நகலை அனுப்பி அவரை சரிபார்க்க சொல்பவர்கள் பட்டியல் நீண்டது. ஆனால் அவர் எளிமையாக விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்று எடுக்கிற முயற்சிகள் மிக அற்புதமானவை. ஜி.டி.பி கணக்கீடுகளில் ஆட்சியாளர்கள் செய்கிற திருகல்கள் குறித்த கட்டுரைக்கு ‘செத்த பாம்பு வளருமா சார்’ என்ற தலைப்பை வைத்திருந்தார். அவர் ஒரு வேலையை ஏற்றுக் கொண்டால் சொன்ன நேரத்தில் முடிப்பார். நேர மேலாண்மையை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் சிறந்த ஆசானாக திகழ்ந்தார். அவரின் வாயிற் கூட்ட உரைகள், சங்கப் பேரவைக் கூட்டங்கள், கருத்தரங்கங் கள், வகுப்புகள் என ஒவ்வொரு வடிவத்திற்கும் அவரது தயாரிப்பு வித்தியாசப்படும். யாருக்காக பேசுகிறோமோ அவர்களுக்கு நமது செய்தி போய்ச் சேர வேண்டும் என்பதில் அவர் காட்டும் அக்கறை அதில் வெளிப்படும்.

உலகமய இருளும், கருத்து தீபமும்


உலகமயத்தை தவிர “வேறு வழியில்லை” (TINA) என்ற வாதத்தை ஆட்சியாளர்கள் முன் வைத்த காலத்தில் இவர் நிறைய தரவுகளோடு அதை எதிர்கொள்வார். தினமணியில் இவரது கட்டுரை ‘வேறு வழி உண்டு’ என்று வெளிவந்தது. அதற்கு பிரபல காங்கிரஸ் தலைவர் ஒருவர் பதில் எழுதினார். உருகுவே சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போது காட் உடன்பாடு பற்றி நிறைய தகவல்களை திரட்டி பேசுவார். 1994 ல் இன்சூரன்ஸ் துறை சீர்திருத்தங்கள் மீதான மல்கோத்ரா அறிக்கை வெளி வந்த சூழ்நிலையில் அதற்கு எதிரான கருத்தரங்கை சங்கத்தின் பொதுச் செயலா ளர் என்ற முறையில் இந்தியாவிலேயே முதன் முதலில் மதுரையில் நடத்தினார். அக் கருத்தரங்க தீர்மானத்தை அவர்தான் வடித்தார். அது ஒரு துறையின் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டத்தை எவ்வாறு மக்கள் நலன், தேச சுய சார்போடு இணைப்பது; மக்கள் ஆதரவைப் பெறுவது என்ற தெளிவோடு அமைந்திருந்தது. 

இன்சூரன்ஸ் தனியார்மயத்திற்கு எதிரான முதல் கையெழுத்து இயக்கத்தில் 175000 கையெழுத்துக்களோடு தென் மண்டலத்தில் மதுரைக் கோட்டம் முதலிடம், இரண்டாவது கையெழுத்து இயக்கத்தில் 7.5 லட்சம் கையெ ழுத்தோடு இந்தியாவிலேயே முதலிடம் என்ற சாதனை படைப்பதற்கு இவர் தந்த கருத்துத் தெளிவு ஓர் முக்கிய காரணம். அணுகுண்டு சோதனை நடந்த போதும், இந்திய- அமெரிக்க 123 அணுசக்தி ஒப்பந்தம் வந்த போதும் அது குறித்த அவரது உரையாடல்கள், பகிர்வுகள், உரைகள் பல கேள்விகளுக்கு விடை தருபவையாக இருந்தன. 

பொருளாதார அறிஞர் பேரா. பிரபாத் பட்நாயக்கின் ஆழமான கட்டுரைகள் அவரது எளிய தமிழில் நம்மோடு உரையாடும். தீக்கதிர் மற்றும் மகளிர் சிந்தனையில் அவரின் தொடர் கட்டுரைகள், “ பண வீக்கம் என்றால் என்ன?” நூல், அண்மையில் அமேசான் கிண்டிலில் வெளியிட்ட இரண்டு நூல்கள், தோழர் என்.எம்.சுந்தரம் நூலின் தமிழாக்கம் என அவரது எழுத்துப் பணி களச் செயல்பாட்டாளர்களுக்கு மிக முக்கியமான ஆயுதங்களாக அமைந்தன. நூற்றுக் கணக்கான வகுப்புகளில் ஆசிரியராக பணி யாற்றியவர். அரசு ஊழியர், ஆசிரியர், மாதர், வாலிபர், மாணவர் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பொருளா தாரம் குறித்த எளிமையான விளக்கங்களை இவர் வகுப்புகள் தந்தன.

சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பும் தொழிற்சங்க கடமையே!


.சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பை தொழிற்சங்கமே முன்னெடுப்பதைப் பற்றிய அவரது எழுத்துக்கள், பகிர்வுகள் காலத்தின் தேவையை நிவர்த்தி செய்தன. மேல வளவு, மந்திக்குளம், கருவனூர் போன்ற இடங்களில் சாதிய ஒடுக்குமுறைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்க ளை, உடமைகளை சூறையாடிய போது நேரடியாக களத்திற்கே சென்று தலையிடுகிற தெளிவை அவரது கண்ணோட்டங்கள் இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்திற்கு தந்தன. 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அன்றைய தினம் மதியமே மதுரை எல்.ஐ.சி கோட்ட அலுவலகம் முன்பாக சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 சர்ச்சைகள் வரும் என்று பின் வாங்கக் கூடாது; தார்மீக உணர்வோடு, நியாயங்களை வலுவாக முன்வைப்பதன் மூலமே ஊழியர்களை பிளவு சிந்தனைகளில் இருந்து வென்றெடுக்க முடியும் என்பார். சாதிய ரீதியிலான வெளிப் பாடுகள், சொல்லாடல்கள் ஊழியர் ஒற்றுமையை பாதிக்கும் என்று ஓர் கருத்தியல் போராட்டத்தை நடத்தினார். தென் மாவட்டக் கலவரங்களால் இன்சூரன்ஸ் ஊழியர்களும் உணர்ச்சி வயப்பட்டிருந்த சூழலில், பல ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்தோர் காவல் துறையின் எதிர் வழக்குகளில் சிக்கிய போது அந்த ஊழியர்களை பாதுகாக்கிற பணியையும் சங்கம் செய்தது. சிறைச் சாலை களுக்கு செல்வது, சட்ட உதவி செய்வது, ஜாமீனில் வெளிக் கொணர்வது போன்ற பணிகளில் அவர் நேரடியாக ஈடுபட்டார். மதுரை கோட்ட சங்கம் உணர்வுப் பூர்வமான வலிமை யோடு இருப்பதற்கு இத்தகைய பங்களிப்புகள் முக்கிய மானவை

பாலின சமத்துவம்


தோழர் இ.எம்.ஜோசப், மதுரைக் கோட்ட பொது செயலாளராக இருந்த போது முதன் முதலில் சங்கம் மதுரையில் நடத்திய மகளிர் மாநாடுதான் இந்தியாவி லேயே நடைபெற்ற முதல் மகளிர் மாநாடு. எதற்கு பெண்களுக்கு தனி மாநாடு என்ற கேள்வி சங்கத்தின் எல்லா மட்டங்களிலும் இருந்த காலம் அது. மகளிர் தொழிற்சங்க வகுப்பும் முதன் முதலாக மதுரையிலேயே நடத்தப்பட்டது. ஒரு அகில இந்திய முடிவை விரைந்து நிறை வேற்றுவது, கற்பனையோடு முன்னெடுப்பது, அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவது எப்படி என்பதை அவர் கற்றுத் தந்தார்.  இதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் ஆர். கோவிந்தராஜன் அவரோடு  விவாதித்து பல முன்முயற்சிகளை எடுத்தார். பணி ஓய்வுக்கு ப் பின்னரும் தற்போதைய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் எம்.கிரிஜா  போன்றோரிடம் அக்கறையோடு விவாதித்து ஆலோசனை கள் கூறி வந்தார்.

அரசியல் பணி


துவக்க காலங்களில் சுதந்திரா கட்சியின் ஆதரவாள ராக இருந்தவர். 1970 களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டார். கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த மறைந்த முதுபெரும் தலைவர் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன், தலைசிறந்த மார்க்சிய ஆசான்க ளில் ஒருவரான தோழர் கே.முத்தையா ஆகியோரின் அன்பையும் வழிகாட்டலையும் பெற்றவர். கட்சி மாநிலத் தலைமையகம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப் பட்ட போது தோழர் எம்.ஆர்.வி, இவரது இல்லத்திற்குச் சென்று விடைபெற்றதை நெகிழ்வோடு பகிர்ந்து கொள்வார். கே. முத்தையா அவர்களிடம் எப்படி உரை நடைத் தமிழை எளிமையாக எழுதுவது என்ற பயிற்சியை பெற்றவர். 

தீக்கதிரில் 1970, 80 களில் மாலை நேரங்கள், விடுமுறை நாட்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் கட்சியின் மாநகர் குழு, மாவட்ட குழு, மாவட்ட செயற்குழு என பொறுப்புகளை ஏற்றார். கல்விக் குழுவில் அவரது பங்கு மாநில அளவில் விரிந்தது. தேர்தல் காலங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐ.ஏ.எஸ் பார்வையாளர்களிடம் இவர் வாதாடுகிற ஆற்றல் பிரமிக்க வைக்கும். மார்க்சிஸ்ட் இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பிரபாத் பட்நாயக், வெங்கடேஷ் ஆத்ரேயா போன்ற ஆளுமைகளோடு தொடர்ந்து விவாதிப்பார். அரசியல் சர்ச்சைகளில் தொடர்ந்து தனது பங்களிப்பை செய்வார்.

 கணினியில் அவராக தேர்ச்சி பெற்று அயராமல் அவரே கட்டுரைகளை தட்டச்சு செய்து கொண்டார்.  முக நூலிலும், வாட்ஸ் ஆப்பிலும் நிறைய அரசியல் விவாதங்களை நடத்தினார். மாற்றுக் கருத்து உள்ளவர்களிடம் எப்படி உரையாட வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்க் கருத்துக்கள் எதிரிகளை உருவாக்குவதாக அல்லாது அவர்களை கருத்து  ரீதியாக வெல்வதும், வெல்லா இயலாவிட்டாலும் நட்பைத் தக்க வைத்து கருத்துப் போரை தொடர்வதுமே முக்கியம் என கருதுவார். நாம் முன்வைக்க கூடிய கருத்துக்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கிறது என்ற பட்சத்தில் என்றாவது ஒரு நாள் வெல்வோம் என்ற நம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்பார். கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராக உயர்ந்தார். தற்போது தீக்கதிரில் எழுத்துப் பணி ஆற்றி வந்தார். விமர்சனம், சுய விமர்சனம் இரண்டிலும் விருப்பு வெறுப்பற்று இருப்பது என பின்பற்றத்தக்க பண்புகளை கொண்டவர்.

மனித உறவின் அடையாளம்


தொழிற்சங்கம், கட்சி, நட்பு வட்டம் மூன்றிலும் மனித உறவுகளுக்கு சிறந்த சாட்சியமாக திகழ்ந்தார் தோழர் இ.எம்.ஜோசப். சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினரை பெயர் சொல்லி அழைக்கிற அளவிற்கு தெரிந்து வைத்திருப்பார். அவர் சிறந்த ஆலோசகராக பலருக்கு இருந்திருக்கிறார். அவரின் வார்த்தைகள் செதுக்கப்பட்டவை. யாரையும் புண்படுத்தாது. கடும் கோபத்துடன் வருபவர்கள் கூட அவரிடம் பேசிய சில நிமிடங்களில் சூடு ஆறிப் போவது வழக்கம். குடும்பத்திலும் இணையர், மகள்கள், தம்பிகள், பேரக் குழந்தைகளிடம் அவர் காட்டுகிற வாஞ்சை மிக அற்புதமானது. மூத்தவர்களை மிகவும் மதிப்பார். மாமனாரின் கடைசிக் காலங்கள் இவரின் இல்லத்தில், இவரது பராமரிப்பில் இருந்தது. அம்மா மீது மிக மிக பிரியமாக இருப்பார். அம்மா தீக்கதிரை தினமும் வாசிக்கிற முதல் வாசகர். கிறித்தவத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட அம்மா, மகன் ஜோசப்பின் கம்யூனிச ஈர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். “நீ அடிக்கடி வெளியூர் போய் விடுகிறாய். என் இறுதி மூச்சு விடுபடும் வேளையில் என்னோடு இருப்பாயா” என்று அம்மா அடிக்கடி கேட்பார்கள் என்பார். ஆனால் அம்மா மறைந்த நேரத்தில் சென்னை ரயிலில் விழுப்புரம் அருகில் இருந்தார். அவரை இறக்கி அழைத்து வந்தார்கள். பொது வாழ்வின் இழப்புகள் ஈடு செய்ய இயலாதவை. 

தோழர் ஜோசப்...செவ்வணக்கம்.  

அந்த இனிய முகம், இனிய சொல்... 

என்று இனி பார்ப்போம். கேட்போம்..!