Sunday, May 20, 2012

டைரக்டர் ஷங்கர் கற்பனை, மம்தா ஒரிஜினல்



முதல்வன்  திரைப்படத்தின் முக்கியமான காட்சி ரகுவரனை
அர்ஜூன் பேட்டியெடுப்பது. நிழலில் தோன்றியது நேற்று 
நிஜத்தில் நடந்தது. மம்தா எனும் அராஜகப் பேர்வழியின்
அடாவடித்தனத்தை  மேலும் ஒரு முறை வெளிச்சம் போட்டுக்
காட்டியது.

ஒரு தொலைக்காட்சிப் பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிலே ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மம்தாவை
கேள்வி கேட்டார்கள்.

அவர் ஆட்சியின் அலங்கோலங்கள், அத்து மீறல்கள்,
பெண்கள் மீதான தாக்குதல்கள், சீர் கெட்டுப் போயிருக்கும்
சட்டம் ஒழுங்கு, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள்,
கார்ட்டூனுக்காக கைது ஆகியவை பற்றியெல்லாம்
கேள்வி வந்ததும் அம்மையாரால் தாங்க முடியவில்லை.
பொங்கியெழுந்து விட்டார். 

உடனே மாணவர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் 
சி.பி.எம், மாவோயிஸ்டுகள். உங்கள் கேள்விக்கெல்லாம்
பதில் சொல்ல முடியாது. நீங்கள் காட்டுக்கு செல்லுங்கள்
என்றெல்லாம் சத்தம் போட்டு விட்டு காவல்துறையைப்
பார்த்து அத்தனை பேரையும் புகைப்படம் எடுத்து 
நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளார்.

அவரால் பதில் சொல்ல முடியாததனால் மாணவர்கள்
சி.பி.எம், மாவோயிஸ்டுகள் ஆகி விட்டார்கள். பேட்டி 
எடுத்த பெண்மணி அவர்களெல்லாம் மாணவர்கள் என்று
சொன்னதற்கு மாவோயிஸ்டுகளாவதற்காக தேர்ந்தெடுக்கப்
பட்டவர்கள் என்று மீண்டும் திட்டியுள்ளார்.

பேட்டி பாதியில் நின்று விட்டது. சகிப்புத்தன்மை சிறிது
கூட இல்லாதவர், ஜனநாயகத்தின் மீது சிறிதும் 
நம்பிக்கை இல்லாதவர் என்பது நிகழ்ச்சியில் பங்கேற்ற
மாணவர்கள் முன்வைத்த விமர்சனம். அதை தங்கள் 
பெயரோடுச் சொல்ல அவர்களுக்கு பயம். உயிரைப்
பாதுகாத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திலியே இந்தக் கூத்து.
இன்னும் நான்காண்டு காலம் மேற்கு வங்க மக்கள்
என்னவெல்லாம் அனுபவிக்கப் போகின்றார்களோ?

Friday, May 18, 2012

முடிவுகள் இரண்டு, உண்மை ஒன்று




உலகம் முழுதும் உள்ளவர்களின் கவனத்தை ஐரோப்பாவில் நடைபெற்ற இரண்டு நாடுகளின் தேர்தல் முடிவுகள் ஈர்த்துள்ளன. அம்முடிவுகள் சொல்லும் செய்திகளும் மிக முக்கியமானவை.

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி அடிப்படைவாதக் கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான நிக்கோலஸ் சர்கோஸ்கி தோற்றுப் போயுள்ளார். சோஷலிஸ்ட் கட்சியின் ஹாலன்டே புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

கிரீஸ் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒரு கூட்டணி அரசை உருவாக்கும் முயற்சி தோற்றுப்போய் வரும் ஜீன் மாதம்  மீண்டும் தேர்தல் நடைபெறப் போகின்றது.

இந்த தேர்தல்கள் உணர்த்தும் உண்மை என்ன?

சர்வதேச நிதி மூலதனத்தின் அளவு கடந்த லாப வெறி சர்வதேச பொருளாதர நெருக்கடியாக உருவெடுத்தது. பெரும் நிறுவனங்கள் திவாலாகின. திவாலின் விளிம்பிற்குச் சென்றன. நிறுவனங்களைப் பாதுகாக்க அரசுகள் தங்கள் கஜானாவை திறந்து விட்டன. அதனால் நாடுகளே திவாலாகும் நிலைக்குச் சென்றன.

நாடுகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களின் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்க மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர், உழைப்பாளிகள் மீது தாக்குதல் தொடுத்தனர். நலத் திட்டங்கள் வெட்டி சுருக்கப்பட்டன. சலுகைகள் பறிக்கப்பட்டன. தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அவர்கள் வீதிக்கு வந்தனர்.

முதலாளித்துவத்தின் அடையாளமான அமெரிக்கப் பங்குச்சந்தை அமைந்திருக்கும்  “வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்” என்ற முழக்கத்தோடு தொடங்கிய போராட்டம் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. அப்போராட்டம் தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்துள்ளது.

அடிப்படைவாத வெறியைத் தூண்டி மிகப் பெரிய ஆரவாரத்தோடு ஆட்சிக்கு வந்த சர்கோஸிக்கு பிரஞ்சு மக்கள் ஐந்தே ஆண்டுகளில் வீட்டிற்குப் போகும் வழியைக் காண்பித்து விட்டார்கள். தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதன் அடையாளம் இந்த முடிவு. ஆட்சிக்கு வந்த ஹாலண்டே லத்தீன் அமெரிக்க சோஷலிஸ ஆட்சியாளர்களைப் போல அமைப்பு முறையை மாற்றியமைப்பார், பறிக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் தானே வழங்கிடுவார் என்ற பிரமை நமக்கு இருக்க வேண்டியதில்லை.

அதே நேரம் சர்கோஸி வழியில் சென்றால் மக்கள் சர்கோஸி போலவே தன்னையும் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்  என்ற எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

கிரீஸின் நிலைமை மாறுபட்டது. அங்கே பொருளாதாரம் அதள பாதாளத்தில் உள்ளது. அதனை கைதூக்கி விட ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது. ஆனால் அதற்கான விலையை அந்நாட்டு மக்கள்தான் ஏற்றாக வேண்டு. ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றால் ஏற்கனவே கடுமையான தாக்குதல்களைச் சந்தித்து போராட்ட களத்தில் நிற்கும் மக்கள் மீது இன்னும் கூடுதல் சுமையினை சுமத்த வேண்டியிருக்கும்.

தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி அரசு அமைக்க தடையாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்பதில் கருத்தொற்றுமை வராததுதான். அதனால்தான் அந்த நாடு மீண்டும் தேர்தலை எதிர் நோக்கியுள்ளது. மீண்டும் தேர்தலுக்காக அங்கே உள்ள அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகள் குறித்து தங்களின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்திட வேண்டிய கட்டாயம் உள்ளது.

கட்சிகள் மேற்கொள்ளும் நிலைதான் கிரீஸின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அக்கட்சிகளின் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யப் போகின்றது. முதலாளிகளின் நலனுக்காக மக்களின் எதிர்காலமா அல்லது மக்களின் நலனுக்காக முதலாளிகளின் எதிர்காலமா, யார் எதை காவு கொடுக்கப் போவதாகச் சொல்லுகின்றார்களே அதற்கேற்றார்போலத்தான் தேர்தல் முடிவும் அமையும்.

உலகமயமாக்கல் கொள்கைகளை அமுலாக்குவதை இனியும் நாங்கள் 

அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் பிரான்ஸ் மற்றும் கிரீஸ் மக்கள் 

தெரிவித்துள்ள திட்டவட்டமான செய்தி. இதை எல்லா நாட்டு 

ஆட்சியாளர்களுமே புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இந்திய 

ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

Thursday, May 17, 2012

அமைச்சர்களுக்கு அப்படி என்ன கிழிக்கிற வேலை?



நேற்று நாடாளுமன்ற மக்களவைக் காட்சி இது. பூஜ்ஜிய நேரம்
என்று அழைக்கப்படுகின்ற சீரோ ஹவரில்  கபில் சிபல் தவிர
வேறு மத்திய அமைச்சர் யாருமே இல்லை.

பிரதமர் உட்பட முப்பத்தி நான்கு கேபினட் அமைச்சர்கள்,
தனிப் பொறுப்போடு எட்டு இணை அமைச்சர்கள், 
முப்பத்தி ஏழு  இணை அமைச்சர்கள் என மொத்தம் உள்ள
எழுபத்தி ஒன்பது அமைச்சர்களில் ஒருவர் மட்டும்தான்
மக்களவையில் இருந்தார் என்றால், இவர்கள் நாடாளுமன்ற
ஜனநாயகத்தை மதிக்கும் லட்சணம் இதுதான்.

பூஜ்ஜிய நேரம்தான் முக்கியப் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள்
எழுப்பும் நேரம். இதில் கூட இல்லாமல் இவர்கள் எல்லாம்
எங்கே போய்த்தொலைந்தார்கள்?

காண்டீனா இல்லை அமைச்சர் பங்களாவில் சுகமாக 
உறங்கிக் கொண்டிருந்தார்களா?

நாடாளுமன்றத்தின் மாண்பைக் காக்க வேண்டும் என்று 
மூன்று நாட்கள் முன்பாகத் தான் எல்லோரும் பேசியுள்ளார்கள்.

மிகப் பெரிய வெட்கக் கேடு.

பி.கு : கபில் சிபல்ஜி , யாருமே இல்லாமல் தனியாக இருக்க
பயமாக இல்லை?
 

Wednesday, May 16, 2012

சென்னை வரக்கூடாது என்று நிபந்தனை போட்ட நீதிபதி நீடூழி வாழ்க என கலைஞர் வாழ்த்து.




ஸ்பெக்ட்ரம்  ராசாவிற்கு ஜாமீன் கிடைத்து விட்டது.கனிமொழி போல இழுத்தடிக்காமல் ஒரே வாய்தாவில் கிடைத்து விட்டது. ராசாவுக்கு பெயில் கிடைத்ததை விட பெயில் நிபந்தனைகள்தான் கலைஞருக்கு மிக்க மகிழ்ச்சி அளித்துள்ளதாம்.

சென்னை வரக்கூடாது என்ற நிபந்தனை கலைஞருக்கு ரொம்ப சந்தோஷமாம். ஏனென்றால்  கனிமொழிக்கு  ஜாமீன் கிடைத்து சென்னை வந்தபோது கொடுக்கப்பட்ட வரவேற்பு போல ராசாவிற்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கனிமொழி, ராஜாத்தியம்மா வகையறாக்களால் முன்வைக்கப் பட்டதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன.

விடுதலைப் போரில் சிறைப்பட்டு செக்கிழுத்த சிம்மல் வ.உ.சி சிறையிலிருந்து வெளியே வரும் போது அவரை வரவேற்க பத்து பேர் கூட இல்லை என்று படித்ததாக நினைவு.

ஆனால் கனிமொழி வெளியே வந்த போது அளிக்கப்பட்ட ஆரவார வரவேற்பு, மக்கள் முகத்தை சுளிக்க வைத்தது. அது போன்ற வரவேற்பை ராசாவிற்கு அளித்தால் மீண்டும் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டிருக்கும். அப்படி அளிக்காவிட்டால் துணைவி மற்றும் மகளின் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும்.

மக்களின் அதிருப்தி பற்றி கவலைப்பட வேண்டாம் என்று வரவேற்பு அளித்தால் சகோதர யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் மகன்கள், மீடியாவை கையில் வைத்திருக்கும் மாறனின் மகன்கள் ஆகியோருடைய வெறுப்பிற்கு ஆளாக வேண்டியிருக்கும்.

இப்போது ராசா சென்னை வரக்கூடாது என்று நிபந்தனை போட்டதால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் கலைஞருக்கு விடுதலை.

ஆகவேதான் என் வயிற்றில் பாலை வார்த்த நீதிபதியே, நீவிர் வாழ்க என கலைஞர் பாராட்டு மடல் வாசித்துக் கொண்டிருக்கிறாராம்.

Tuesday, May 15, 2012

சமத்துவ இந்தியா படைத்திடுவோம்



நாடாளுமன்ற 60ம்ஆண்டு விழாவில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்



புதுதில்லி, மே 13-
ஒளிரும் இந்தியாவுக்கும் துயரத் தில் ஆழ்ந்திருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முரண்பாட்டை - சமத் துவமின்மையை-ஏற்றத்தாழ்வை ஒழித்து சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்பினை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன் றக் குழுத்தலைவரும், மாநிலங்கள வை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்தார்.அதைச்செய்ய மறுத்தால், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் கூறியது போல, சமத்துவமின்மை யால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியா வின் அரசியல் ஜனநாயக கட்டமைப் பையே தகர்த்துவிடுவார்கள் என்றும் சீத்தாராம் யெச்சூரி எச்சரித்தார்.


சுதந்திர இந்தியாவின் ஜனநாயகக் காவலனாக உயர்ந்து நிற்கும் மேன் மைமிகு நாடாளுமன்றத்தின் அறுப தாம் ஆண்டு துவக்கவிழா ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது. அதனை யொட்டி நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:நாடாளுமன்றத்தின் அறுபதாம் ஆண்டு பிறந்தநாளை நாடே சிறப் பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கி றது. சஷ்டியப்த பூர்த்தி என்றால் புதிய வாழ்க்கைத் துவங்குவதாக முன் னோர்கள் நம்பினார்கள். ஆயினும் அது ‘சிறந்ததோர் வாழ்க்கை’யாக இருக்கும் என்று அவர்கள் கூறவில் லை. ஆயினும் நாடாளுமன்ற மக்கள வையையும் மாநிலங்களவையையும், நம் ஜனநாயக அமைப்பு முறையை யும் எதிர்காலத்தில் சிறந்ததொன்றாக மாற்றுவது நமது கடமையாகும். இதற் குக் குறைந்தபட்சம் நான்கு அம்சங் களை நாம் பரிசீலிப்பது அவசிய மாகும்.நமது நாடாளுமன்ற நடவடிக்கை கள் குறித்து பிரிட்டன் பிரதமராக இருந்த சர் அந்தோணி ஈடன் மிகவும் புகழ்ந்து கூறிய வாசகங்களை நினை வுகூர விரும்புகிறேன். 

‘‘இந்தியாவில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மிகவும் கிளர்ச்சியூட்டக்கூடிய விதத்திலும், உற்சாகமளிக்கக்கூடிய விதத்திலும் அமைந்திருக்கின்றன. அவர்கள் நம் முடைய நடைமுறையை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றவில் லை. மாறாக, அவர்கள் நாம் கனவி லும் கருதமுடியாத அளவிற்கு பன் மடங்கு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்’’ என்று கூறி னார். உண்மைதான். 


கடந்த அறுப தாண்டுகளில், நாம் இதன் உள்ளடக் கத்தை செறிவூட்டியிருக்கிறோம். உள் நாட்டு அவசரநிலைப் பிரகடனம் மற் றும் பாபர் மசூதி இடிப்பு போன்ற சவால்களையும் எதிர்கொண்டு முன் னேறியிருக்கிறோம். 100 நாட்கள் கூடுவது அவசியம்நம் அரசமைப்புச் சட்டத்தின் மையக்கருத்து, நம் மக்களின் இறை யாண்மையையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இது நாடாளுமன் றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக் கும் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களால் நடைமுறைப் படுத் தப்படுகிறது. ஆட்சியாளர்கள் நாடாளு மன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள். நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் மக்களுக்குப் பதில் கூறக் கடமைப் பட்டவைகளாகும். நாடாளுமன்றம் முறையாக, குறிப்பிட்ட கால அளவிற்குச் செயல் படுவதன் அடிப்படையில் அதன் செயல்திறனும், பயன்பாடும் அமைந் திடும். இது தொடர்பாக இன்னும் சரி யான நடவடிக்கை நமக்குத் தேவைப் படுகிறது. கடந்த இருபதாண்டுகளில், நாடாளுமன்றம் எந்தவொரு ஆண்டி லும் நூறு நாட்களுக்கு மேல் அமர் வினை நடத்தியதில்லை. 1992இல் அதிகபட்சமாக 98 நாட்கள் நடை பெற்றிருக்கிறது. 


14ஆவது மக்களவை நாடாளு மன்ற நடவடிக்கை வரலாற்றிலேயே மிகவும் குறைவான அமர்வுகளைக் கொண்டதாக மாறிப்போனது. அதா வது 332 அமர்வுகள்தான் நடைபெற் றிருக்கிறது. சராசரியாக ஓராண்டிற்கு 66 அமர்வுகள் மட்டுமே. அதிலும் மோசமான விஷயம் என்னவெனில், இதிலும் 24 விழுக்காடு நேரம் குறுக் கீடுகளிலும், ஒத்திவைப்புகளிலும் வீணாய்ப் போயின. பிரிட்டிஷ் நாடாளுமன்றம் சராசரி யாக ஆண்டில் 160 நாட்கள் தங்கள் அமர்வினை நடத்துகின்றன என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.நாடாளுமன்றம் அதிக நாட்க ளுக்கு நடைபெறாவிட்டால், அதனால் மிகவும் விழிப்புடனிருந்து அரசாங்கத் தைக் கண்காணிப்பது என்பது வலு வாக அமைந்திடாது. இதனால், ஆட்சி யாளர்கள் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்பது பெயரளவிலான தாக மாறிப் போகிறது. இது நம் அரச மைப்புச் சட்டத்தின் அடிப்படையையே அரித்து வீழ்த்தி, ஆட்சியாளர்களை எதேச்சதிகார அணுகுமுறையுடன் செயல்படத் தள்ளிவிடுகிறது. நாடாளு மன்ற அமர்வு ஓராண்டில் குறைந்த பட்சம் 100 நாட்களாவது இருந்திட வேண்டும் என்கிற வகையில் ஓர் அர சமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். நீதித்துறையின் பங்குஇரண்டாவது பிரச்சனை, நம் நாட்டின் நீதித்துறையின் பங்கு குறித்த தாகும். நம் அரசமைப்புச் சட்டத்தை யும், நாட்டின் அனைத்துச் சட்டங்களை யும் வியாக்கியானம் செய்யக்கூடிய, நாட்டு மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாவலனாக இருக்கக்கூடிய நீதித் துறையின் நிலை எப்படி இருக்கிறது? சென்ற அமர்வின்போது நமது நிதியமைச்சர், உயர் நீதிமன்றங்களி லும் கீழமை நீதிமன்றங்களிலும் 3.2 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்ப தாகவும், உச்சநீதிமன்றத்தில் மட்டும் 56 ஆயிரத்து 383 வழக்குகள் நிலு வையில் இருப்பதாகவும் கூறினார். 


2010 டிசம்பர் மாதத்தில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 003 விசாரணைக் கைதிகள் விசாரணை முடியாமல் சிறையில் உழன்று கொண்டிருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டது. நீதி வழங்கு வது தாமதமாவது என்பது நீதி வழங் குவதை மறுப்பதாகும் என்று கூறுவார் கள். நீதி வழங்கும் முறையானது இவ்வாறு வலிமையூட்டவேண்டிய நிலையில் இருக்கிறது. தற்சமயம் நீதித்துறையின் செயல் பாடுகள் ஜனநாயகத்தின் மூன்று அங்கங்களுக்கும் இடையேயான வரம்புகளை மீறுகிறதோ என்கிற எண்ணத்தினை ஏற்படுத்தி இருக் கிறது. நீதித்துறை சட்டத்தை வியாக்கி யானம் செய்யலாம். ஆனால் அது அர சின் கொள்கைகளை உருவாக்குவ தோ அல்லது தீர்மானிப்பதோ கூடாது. நாட்டின் ஜனநாயகத்தின் மூன்று அங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதி களுடன் கலந்து ஒரு தேசிய நீதித் துறை ஆணையம் அமைக்க வேண்டி யது குறித்து ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இதன் மூலம் நீதிபதிகள் நியமனம், மாற்றல், நீதிபதிகள் மீதான ஊழல்கள் குறித்து ஆய்வு செய்தல், நீதித்துறை துர்நடத்தை குறித்து வரும் புகார் களை விசாரித்தல் மற்றும் நீதித்துறை யினரும் ஓர் அமைப்பிற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என் பதை உத்தரவாதம் செய்திட முடியும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைமூன்றாவதாக, நம் நாட்டின் முதிர்ந்த ஜனநாயக அமைப்பை, சில அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் மேலும் சிறப்பான தாக மாற்றுவதாகும். நாட்டின் வர லாற்றில் பொதுத் தேர்தல்கள் 1952ல் தொடங்கியது.
அதிலிருந்து இதுவரை மத்தியில் அமைந்த அனைத்து கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஒரு ஆண்டிலும் நாடாளுமன்றம் 100 நாட்களுக்கு மேல் அமர்வினை நடத்தவில்லை. அவசியம் 100 நாட்கள் அமரும் வகையில் அரசமைப்புச் சட்டத்திருத்தம் 

கொண்டுவரவேண்டும்.நீதித்துறை சட்டத்தை வியாக்கியானம் செய்யலாம். ஆனால் அது அரசின் கொள்கைகளை உருவாக்குவதோ அல்லது தீர்மானிப்பதோ கூடாது. நீதித்துறையினரும் ஓர் அமைப்பிற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்பதை உத்தரவாதம் செய்ய தேசிய நீதித்துறை ஆணையம் அமைப்பது அவசியம்.1952ல் இந்திய வரலாற்றில் பொதுத்தேர்தல்கள் துவங்கின. அன்றிலிருந்து இன்றுவரை மத்தியில் அமைந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் ஆதரவாக வாக்களித்த மக்களைவிட, எதிராக வாக்களித்த மக்களே அதிகம். இடையில் தப்பிப்பிழைத்தது ராஜீவ்காந்தி அரசாங்கம் மட்டுமே.
எனவே இந்திய ஜனநாயகம் உண்மையான அர்த்தம் பெற வேண்டுமானால் விகிதாச்சார பிரதிநிதித்துவத்துடன் கூடிய நாடாளுமன்ற அமைப்பே சரியானது.ஒளிரும் இந்தியர்கள், துயருறும் இந்தியர்கள் என முரண்பாடுகளுடனான வாழ்க்கையை இன்னும் எத்தனை காலத்திற்கு நீட்டிக்கப்போகிறோம். மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை மறுப்பதை இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரப்போகிறோம்?

நன்றி - தீக்கதிர் நாளிதழ்

Monday, May 14, 2012

குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை. எலலா முஸ்லீம்களும் தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார்கள்

























குஜராத் கலவரம் பற்றிய சி.பி.ஐ யின் சிறப்பு புலனாய்வுக் குழு
அறிக்கை அயோக்கியத்தனமானது என்று கூறினால் அது
தவறே கிடையாது.

நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் கொடுப்பது மட்டுமே அதன்
நோக்கமாக இருக்கிறது. அதே போல் முஸ்லீம்கள்தான் தவறு
செய்தார்கள் என்று சொல்வது அதன் இன்னொரு நோக்கம்.

காவல்துறையிலும் புலனாய்வுத்துறையிலும் எவ்வளவு 
தூரம் காவிப்படை ஊடுருவி உள்ளது என்பதற்கு இந்த 
அறிக்கை ஒரு சான்று.

குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடிதான் காரணம் 
என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். கலவரக்காரர்களை
மோடி எப்படியெல்லாம் ஊக்குவித்தார் என்பதை டெஹல்கா
ஏற்கனவே நிரூபித்து விட்டது. விசாரணைக் கமிஷன் 
நீதிபதிகள் பற்றி மோடியின் சகாக்கள் காமெரா பதிவு
செய்வது  பற்றி அறியாமலே ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்த பின்னரும் கூட எஸ்.ஐ.டி நரேந்திர மோடி
யோக்கியர் என்றே அறிக்கை கொடுத்துள்ளது.

அது மட்டுமா, இந்துக்கள் தங்கள் கோபத்தை நன்றாக
வெளிப்படுத்தட்டும், காவல்துறை தற்போதைக்கு வேடிக்கை
பார்த்தால் போதும் என்று நரேந்திர மோடி சொன்னதை
அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி கூறியதை எஸ்.ஐ.டி
பொருட்படுத்தவேயில்லை. இதை விட கொடுமை என்ன
தெரியுமா?

அப்படி நரேந்திர மோடி சொல்லியிருந்தாலும் கூட அது
ஒரு குற்றமேயில்லை எனச்சொல்கிறது எஸ்.ஐ.டி. 

இந்திராகாந்தி இறந்த போது சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
ஆலமரம் விழும் போது பூமியில் அதிர்வுகள் ஏற்படத்தான்
செய்யும் என்று ராஜீவ் காந்தி சொன்னது எவ்வளவு பெரிய
அராஜகமோ அது போலத்தான் இந்த எஸ்.ஐ.டி யின் கூற்றும்.

அதே போல் எஸ்.ஐ.டி செய்துள்ள இன்னொரு அயோக்கியத்தனம்
குல்பர்கா சொசைட்டி படுகொலைகள் பற்றிய கருத்து. 

அங்கே எழுபது முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள், அதிலே
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஷான் ஜாஃப்ரீ 
ஒருவர்.அவர் இருந்த வீட்டை ஆயிரக்கணக்கானவர்கள்
தாக்குகின்றனர். நரேந்திர மோடி உள்ளிட்டு ஏராளமான
ஆட்களுக்கு தொலைபேசியில் உதவி செய்யுமாறு கதறுகின்றார்.
அரசு நிர்வாகம் அசையவில்லை. அங்கிருந்தவர்கள் உயிரோடு
கொளுத்தப்படுகின்றனர்.


இது பற்றி எஸ்.ஐ.டி என்ன சொல்லியுள்ளது தெரியுமா?


பத்தாயிரம் பேர் கும்பலாய் தாக்கிய போது தற்காப்பிற்காக
அவர் வானில் துப்பாக்கியில் சுட்டார் என்று முதலில் சொன்ன
எஸ்.ஐ.டி பிறகு அப்படியே பல்டி அடித்து விட்டது.

அவர் துப்பாக்கியால் வானில் சுட்டதால் கோபமான கும்பல்
அத்தனை பேரையும் உயிரோடும் கொளுத்தி விட்டதாம்.

பத்தாயிரம் பேர் சூழ்ந்து கொண்டு கல்லால் எறிவார்களாம்,
காவல்துறை கண்டு கொள்ளாதாம். முதல்வர் ரசித்துக்
கொண்டிருப்பாராம். தற்காப்பிற்காக அவர் வானில் 
சுடாவிட்டாலும் அக்கும்பல் நிச்சயம் அவரை கொலை
செய்திருக்கும். 

காவல்துறை ஏன் உதவிக்கு வரவில்லை, அதன் பின் 
நடந்த சதி என்ன என்றெல்லாம் பேசாத எஸ்.ஐ.டி 
இறந்து போன மனிதனையே குற்றவாளியாக்கி விட்டது.

இதை விட எஸ்.ஐ.டி வேறு ஒன்று செய்திருக்கலாம்.

 குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை. எலலா முஸ்லீம்களும் தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார்கள்  என்று
அறிக்கை கொடுத்து விட்டு மோடியிடம் இன்னும் சில
எலும்புத்துண்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.




Sunday, May 13, 2012

அம்பேத்கர் பற்றிய கார்ட்டூன் – வக்கிர மனதின் வெளிப்பாடே, அம்பலப்பட்டுள்ள வேறு சில உண்மைகள்




இந்திய அரசியல் சாசனம் தயாரிக்கப்படுவதற்கு கால தாமதம் ஆவதை விமர்சனம் செய்கின்றது போல 1949 ல் வெளியான ஒரு கார்ட்டூனை இப்போதைய பாடப் புத்தகத்தில் இணைத்து ஒரு சர்ச்சையை உருவாக்கினார்கள்.

நாடாளுமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, சி.பி.எம், சி.பி.ஐ மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவை பிரச்சினை எழுப்பிய பின்பு கபில் சிபல் அப்பகுதியை அப்புத்தகத்திலிருந்து நீக்குவதாக ஒப்புக் கொண்டார்.

பிரச்சினை இத்துடன் ஓயவில்லை.

இந்த கார்ட்டூனை பாடப் புத்தகத்தில் இணைத்த கல்வியாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சுஹாஸ் பாஷில்கர் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் மத்தியரசு நடவடிக்கையைக் கண்டித்து என்.சி.இ.ஆர்.டி அமைப்பிலிருந்து விலகி விட்டனர்.

அதிலே சுஹாஸ் பாஷில்கர் நேற்று குடியரசுக் கட்சியினரால் தாக்கப்படுகின்றார். பிரச்சினை வந்த போதும் சரி, இப்போதும் சரி பாஷில்கர், அந்த கார்ட்டூனை புத்தகத்தில் இணைத்தது சரி என்றே வாதிடுகின்றார்.

அப்படியென்றால் இந்த மனிதனின் நோக்கம் என்ன?

அரசியல் சாசனம் தயாராக தாமதமானது என்றே கூட வைத்துக் கொள்வோம். அதை பாடத்திட்டத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

இந்திய அரசியலில் எத்தனையோ கமிஷன்கள்  அமைக்கப்பட்டு அவை நீண்ட காலமாக அறிக்கை தராமலே இருந்திருக்கின்றன. அளிக்கப்பட்ட அறிக்கைகள் அரசால் வெளியிடப் படாமலே இருந்திருக்கின்றன.  


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் அறிக்கை எத்தனை காலம் தூசு படிந்தே கிடந்தது?

இந்திரா காந்தி கொலை தொடர்பான தாக்கர் கமிஷன் அறிக்கையை மத்தியரசு வெளியிடவே இல்லையே?

இந்திரா காந்தி கொலைக்குப் பின்பாக சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க பத்து விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டும் ஒரு நபர் கூட குற்றவாளி என்று சட்டத்தின் முன் நிறுத்தப்படவே இல்லையே?

இப்படி ஏராளமாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இது போன்ற தாமதம் பற்றி எதுவும் சொல்லாமல் டாக்டர் அம்பேத்கர் பற்றிய கார்ட்டூனை மட்டும் பதினோராவது பாடப் புத்தகத்தில் போட வேண்டிய அவசியம் என்ன?

அவர் பற்றி மோசமான பிம்பம் உருவாக்க வேண்டும் என்பதைத் தவிர இந்த இருவருக்கு வேறு எண்ணம் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது. அவர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் வர்ணாசிரம வெறி தங்கள் செயலை நியாயப்படுத்த வைக்கிறது.

இவர்கள் தீண்டாமை வன் கொடுமைச்சட்டத்தின் படி கைது செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள்.

இன்னொரு அபாயகரமான உண்மையும் இப்பிரச்சினையில் வெளி வந்துள்ளது.

தலித் அமைப்புக்கள், இடதுசாரிக் கட்சிகள் தவிர வேறு யாருமே இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்திலும் சரி பொது வெளியிலும் சரி வாய் திறக்கவேயில்லை.

காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, முலாயம், லாலு வகையறாக்கள் என யாருமே நாடாளுமன்றத்தில் பேசவேயில்லை. இதையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.