Friday, September 30, 2016

பூங்காற்று திரும்புமா - ரசிகன்யா!!!




இளங்கோ என்ற முக நூல் நண்பர், எல்.ஐ.சி நிறுவனத்தில் வளர்ச்சி அதிகாரியாகவும் பணியாற்றுபவர், முதல் மரியாதை படத்தின் "பூங்காற்று திரும்புமா" பாடலை நுணுக்கமாக ஆராய்ந்து அனுபவித்து எழுதியுள்ளார். அதை படிக்கிற போதே பாடலை கேட்ட உணர்வு உருவானது. 

அவர் எழுதியதை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தோடு அப்பாடலின் இணைப்பையும் அளித்துள்ளேன். படித்து விட்டு பாடலையும் பார்க்கவும். 

நல்லதொரு அனுபவத்தை அளித்த நண்பர் இளங்கோவிற்கு நன்றி

 
படம்: முதல் மரியாதை
பாடல்: பூங்காத்து திரும்புமா என் பாட்டை...
எழுதியவர்: வைரமுத்து
பாடிய்வர்: மலேசியா வாசுதேவன், ஜானகி
இசை: இசை ஞானி


தன் மனைவியின் கெட்ட குணங்களாலும் நடத்தை சரியின்மையாலும் உள்ளுக்குள் புழுங்கி மன அழுத்தத்தில் இருக்கும் ஒரு மனிதரின் உணர்வுகளை மயிலறகினிலே வருடுவது போல் தேற்றிட, ஆன்மாவின் இசையை நமக்கு வழங்கிட ஞானியைத் தவிர நமக்கு வேறு யாருமில்லை.

இப்பாடலின் சூழலுக்கு முன் தன்னுடைய மனைவி(வடிவுக்கரசி) பேசிய தகாத வார்த்தைகளால் மனம் வெறுத்துப் போய் இருக்கும் கணவன்(நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) தன் மன ஆறுதலுக்குப் பாடும் பாடலில் தாய்மை பரிவுக்கும் அன்புக்கும் ஏங்குவதை வார்த்தைகளினால் விவரிக்க முடியாத வலியை இயல்பான நடிப்பில் வெளிப்படுத்தி நம்மை சோகத்தினிலே மூழ்கச் செய்து விடுவார்.
நடிகர் திலகத்தை வெகு இயல்பான கிராமத்து மனிதர் போல் நம்மிடையே உலவச் செய்த இயக்குநர் இமயம் பாரதி ராஜாவை எப்படிப் பாராட்டுவது??

சிவாஜி அவர்கள் நடித்த அழியாக் காவியப் படைப்புகளால் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த அற்புத மாபெரும் கலைஞன். உடல் மொழியை பேச வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.

இப்பாடலில் சாய்த்து கிடக்கும் மரத்தின் மீது சிவாஜி ஆரம்பக் காட்சியில் அமர்ந்து இருப்பார். பாரதி ராஜாவின் இயக்கத்தின் திறமையில் வெட்டி வீழ்த்தபட்ட மரம் வெறுத்துப் போன மனதிற்கு சமம் என்பது போல் காட்சி அமைத்திருக்கும். 

மலேசியா வாசுதேவன் குரல் சிவாஜிக்கு
கனக் கச்சிமாக பொருந்தியிருப்பது இப் பாடலின் சிறப்பு. ஜானகியின் வெள்ளந்தி குரல் ராதா பாடுவது போலவே தெரியும். 


ஆரம்பத்தில் சிவாஜி தலை குனிந்தே
"பூங்காற்று திரும்புமா?
எம்பாட்டை விரும்புமா?"

பாடி பின் மரக் கிளையை மேலேக் கண்டு
தபேலா இசையுடன்

"பாராட்ட மடியில் வச்சுத் தாலாட்ட"
பாடி பிறகு ஆட்டுக் குட்டிகள் பாசம் கண்டு
"எனக்கொரு தாய் மடி கிடைக்குமா?"
என கண்களில் ஏக்கமும் மெல்லியப் புன்னகையுமாய் வாழ்ந்திருப்பார்.

பின் ராதா ஆற்றஙகரையோரம் ஆறுதல் தரும் ஜானகி குரலில்
"ராசாவே வருத்தமா?"
எனும் போது சிவாஜி அண்ணாந்து பார்க்க குயிலின் ஒசையை அற்புதமாக புல்லாங் குழலில் வடிவமைத்திருப்பார் ஞானியார். பின் மேகங்கள் விலகும் போது பியானோ இசையுடன் மன ஆறுதலுடன் ராதா பாடும்
"ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே! அதை ஓலகம் தாங்காதே!
அடுக்குமா? சூரியன் கருக்குமா?"


உலகம் என்பதை ஒலகம் என கிராமத்து பெண் வெள்ளந்தித் தனமாக பாடுவது போல் அழகுற ஜானகி பாடியிருப்பார். அடுத்து வரும் நாதஸ்வர இசையானது சோகத்தினை ஆழமாக்கச் செய்து பின் பியானோவும், புல்லாங் குழலும் ஆறுதல் செய்து விடும்.

பிறகு சிவாஜி அவர்கள் பாடும்
"என்ன சொல்லுவேன்! என்னுள்ளம்
தாங்கலே! மெத்தை வாங்குனேன்!
தூக்கத்தை வாங்கலை!"


என்று எதிர் பாடுவது யார் என்று கூடத் தெரியாமல் தன் சோகத்தினை முக பாவனைகளால் வெளிப்படுத்தி அழகுற நடித்திருப்பார்ர். பின்னர் ராதா ஆற்றங் கரையோரம் அமர்ந்து சிவாஜி மனதுக்கு ஆறுதல் பதிலைப் போல் கன்னத்தில் கை வைத்து

இந்த வேதனை யாருக்குத் தான் இல்லை
உன்னை மீறவே ஊருக்குள் ஆள் இல்லை

என பாட பிறகு சிவாஜி அவர்கள்
"ஏதோ என் பாட்டுக்குப் பாடி
சொல்லாத சோகத்தை சொன்னேனடி"

கடைசியில் சொன்னேன(டி) அந்த ஒரு சொல்லினை ம.வாசுதேவன் அழகாக இழுத்துப் பாடியிருப்பார் பாருங்கள் ஆஹா!

பின் ராதா பாடும்
"சொக ராகம் சோகம் தானே"
ஜானகி சுக ராகம் என்பதை ஏதோ வட்டார வழக்கு பாஷை போல் சொக ராகம் என பாடியிருப்பார். அடுத்து சோகம் தானே... முடியாமல் ஜானகி இழுக்கும் வேளை குயிலின் ஓசையை புல்லாங்குழலில் வழங்கி நம்மைத் தேற்றியிருப்பார்.

பின் சிவாஜி அவர்கள் பாடும்
"யாரது போறது?"
என்றவுடன் ராதா பாடும்
"குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா?"


என பாடி பரிசலில் சென்றவுடன் பின் வரும் சரணம் முன்பு புல்லாங் குழலில் தபேலாவுடன் மனதை வருடியிருப்பார். அடுத்து எதிர்ப் பாட்டு பாடும் பெண்ணை காணும் ஆவலில் வேகமாக நடந்து மரத்தின் மீது கை வைத்து

"உள்ள அழுகிறேன்! வெளிய
சிரிக்கிறேன்! நல்ல வேஷந்தான்!
வெளுத்து வாங்குறேன்!"

எனப் பாட ராதா பதிலுக்கு
"உங்க வேஷந்தான்
கொஞ்சம் மாறனும்
இந்தச் சாமிக்கு
மகுடம் ஏறனும்"


பின் சிவாஜி அவர்கள் அந்தப் பெண்ணை காணும் ஆவல் அதிகமாகிட அவர் பாடும்
"மானே என் நெஞ்சுக்குப்
பால் வார்த்த தேனே!
பொன்னே! என் பார்வைக்கு
வா! வா! பெண்ணே!


என ஏக்கத்தில் கரைந்து மரத்தின் ஓரத்திவ் பாடிட ராதா ஜானகி குரலில்
"எசப் பாட்டு படிச்சேன் நானே"
என பரிசல் ஓட்டிக் கொண்டே குயிலின் ஒசையில் புல்லாங்குழல் இசையுடன் பாட

பின் சிவாஜி அவர்கள்
"பூங்குயில் யாரது?"
என பாடி மரத்தினைத் தாண்டி எட்டிப் பார்க்க
ராதா பாடும்
"கொஞ்சம் பாருங்க"
பெண் குயில் நானுங்க"


பாடி பரிசலை குனிந்து ஒரு சிறிய் கட்டையில் கட்டி கைகளால் தலைமுடி கோதி நிமிரும் போது பிண்ணணி இசை இன்றி குயில்களின் ஓசையுடன் சிவாஜி அவர்கள் தோளில் உள்ள துண்டை எடுத்து வேட்டியை சற்று தூக்கி நடந்து வந்து ராதா எதிரில்

"நீதானா அந்தக் குயில்?"(குக்குக்.... கூ..)
யார் வீட்டு சொந்தக்குயில்?"(குக்குக்....கூ)

(குககுக்....கூ) குயிலின் ஓசையை புல்லாங் குழலில் இசைஞானி நன்றாக வழங்கியிருப்பார்.

பிறகு சிவாஜி அவர்கள் மெல்லிய புன்னகைக்யுடன் புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்! ஆஹா எந்த வயதிலும் அசத்தும் இப்பபடி ஒரு மகா கலைஞனை இனி நாம் காண முடியுமா? வாய்ப்பே இல்லை. பிறகு 

"ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே உலகமே மறந்ததே"


என பாடி சிவாஜி அவர்கள் ராதாவை கண்களால் மேலும் கீழும் அசைத்து புன்னகை செய்வார் பாருங்கள் கொள்ளை அழகு! பின் ராதா மெல்லிய நடையுடன் வெட்கய் யார்வையுடன் மெல்லிய சிரிப்புடன் தலையாட்டி 

"நான் தானே அந்தக் குயில்(குக்குகக் கூ)
தானாக வந்தக் குயில்(குக்குக் கூ)
ஆத்தாடி மனசுக்குள காத்தாடி
பறந்ததா? ஒலகமே மறந்ததா?


என பாடி முடிக்கும் தருணம் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் கையில் உள்ள துண்டினை தன் தோளில் போடும் சமயம் இசை ஞானி, இயக்குநர் இமயம், கவிப் பேரரசு ஆகிய அனைவருக்கும் அவர் பொன்னாடை போர்த்தியது போல் எனக்கு தோன்றியது

வெகு இயல்பாக சிவாஜியின் நடிப்பும், உறுத்தாத ஒப்பனையும் இருக்கும்.திரைக் கதையில் இவர்கள் உறவில் சிறிதளவும் காமம் கலக்காமல் இயக்கிய பாரதிராஜா போற்றுதலுக்குரியவர். ஏனெனில் சிறிய் இச்சையும் கள்ளக் காதலாக மாறிட வாய்ப்புண்டு. அதை நேர்த்தியாக கையாண்ட விதம் அருமை. ராஜாவுக்கு இப்படம் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றாலும் தனது உயிரை உருக்கி உன்னத இசையை வழங்கியுள்ளார்.

இப்பாடல் விமர்சனம் மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கும், பாடகர் மலேசியா வாசு தேவன் அவர்களது ஆன்மாவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். ...மிகவும் பொறுமைமாக இந்தப் பதிவினைப் படித்த என் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! எனக்குத் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் நண்பர்கள் அனைவரையும் தலை வணங்குகிறேன்!!! வாழ்க வளமுடன்!!! இசைஞானியின் இசை அருளால் அனைவரது ஆயுளும் நீடிக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்!!!! நன்றி!! வணக்கம்!!!!

இங்கே பாடலைப் பாருங்கள் 

 

Thursday, September 29, 2016

போர் முனையில் ஒரு பரிமாற்றம்




எப்போதோ படித்த ஒரு நகைச்சுவை இப்போது நினைவுக்கு வந்தது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உக்கிரமாக போர் நடந்து கொண்டிருந்தது. திருமணம் நிச்சயமாகியிருந்த ஒரு போர் வீரனுக்கு விடுமுறை தேவைப்பட்டது. அந்த வீரனின் உயரதிகாரி முதலில் விடுப்பு தர மறுத்து திட்டி அனுப்பி விட்டார். பிறகு மனம் மாறி அந்த வீரனை அழைத்து "பாகிஸ்தானின் டாங்க்  ஒன்றை கைப்பற்றிக் கொண்டு வந்தால் ஒரு மாதம் லீவ் தருகிறேன்" என்று சொல்ல, அன்று இரவே அந்த வீரன் பாகிஸ்தான் நாட்டு டாங்க் ஒன்றோடு வந்து விட அவனைப் பாராட்டி விடுப்பும் கூடவே பரிசுப் பொருட்களும் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

"எப்படி பாகிஸ்தான் டாங்கை நீ கைப்பற்றினாய்?" ஊரில் அவன் நண்பர்கள் கேட்டார்கள்.

பாகிஸ்தான் நாட்டு வீரன் ஒருவனுக்கும் விடுப்பு தேவைப்பட்டது. இந்திய டாங்க் ஒன்றை கைப்பற்றி வா என்று அவனுக்கும் உத்தரவு போட்டிருந்தார்களாம்.

நாங்கள் இருவரும் மாற்றிக் கொண்டோம். அவ்வளவுதான்.

பின் குறிப்பு: பாகிஸ்தானில் நிலவும் ஏராளமான பிரச்சினைகளிலிருந்து பாகிஸ்தான் மக்களின் கவனத்தை திசை திருப்ப நவாஸ் ஷெரிபீற்கும் இந்தியாவில் நிலவும் ஏராளமான பிரச்சினைகளிலிருந்து இந்திய மக்களின் கவனத்தை திசை திருப்ப நரேந்திர மோடிக்கும் "போர்" என்ற பரபரப்பு நிகழ்வு  தேவைப்படுகிறது என்றெல்லாம் இந்த நகைச்சுவை மூலம் நான் சொல்ல முன்வரவில்லை, அதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகவே இருக்கிறது என்றபோதிலும் கூட 

Wednesday, September 28, 2016

"பதஞ்சலி" ன்னா பாத்து . . . .




மேலே உள்ள படத்தை மறுபடி பாருங்க மக்களே!

இன்னிக்கு தேதி செப்டம்பர் 29.

மூன்று நாட்கள் முன்னாடியே ஒரு தோழர் முக நூலில் பதிவு செய்திருந்தார்.

அக்டோபர் மாதம் வருவதற்கு முன்பாகவே அக்டோபர் மாதத்தில் உற்பத்தி செய்ததுன்னு ஒரு  பொருள் வெளி வருகிறது என்றால் அது எவ்வளவு பெரிய மோசடி! மோடி கூட இருப்பதால் இப்படி மோசடியா? இல்லை மோசடிப் பேர்வழிகள் என்பதால் ரெண்டு பேரும் கூட்டா இருக்காங்களா?



எது எப்படியோ மக்களே, "பதஞ்சல" பொருட்களை வாங்கறதுக்கு முன்னாடி நல்லா பாத்து வாங்குங்க! ஆயுர்வேத பொருள் என்று சொல்லி விற்பதில் விலங்குகளின் கழிவும் எலும்பும் இருக்கு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் ஆதாரத்துடன் நிரூபித்ததையும் நினைவு படுத்திக் கொள்ளுங்க. 

எதுக்கு தேவையில்லாம குழம்பிக்கிட்டு?

வாங்கவே வேண்டாம்னு முடிவு எடுத்தீங்கன்னா, நீங்க புத்திசாலி.

நீங்க புத்திசாலிதானே?
 

Tuesday, September 27, 2016

பொட்டு வைத்தால் விட்டு விடுவார்கள்????????




கோட்டைமேடு, துடியலூர் பகுதிகளுக்கு மாதர் சங்க தூதுக்குழு போனோம். பல கடைகளில் பொருட்கள் களவாடப் பட்டுள்ளன. மீதி கொளுத்தப் பட்டுள்ளன. சமூக வலைத்தளத்தில் வந்த செல் போன் கடையைப் பார்த்தோம். உரிமையாளர் தற்கொலை மனநிலையில் உள்ளார். ரூ.60 லட்சம் இழப்பு. அவர் இசுலாமியர். பக்கத்தில் மகாலட்சுமி பேக்கரியும் சுத்தமாய் திருடப் பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தலா 2000 இரண்டு கோஷ்டிகள் கேட்ட போது இவர் 500 கொடுத்தது தான் காரணம். கடைகளின் உரிமையாளர்கள் வாய் விட்டு அழுகிறார்கள்.

 துடியலூரில் ஓர் இசுலாமிய குடும்பத்தில் இரண்டு நாட்களில் திருமணம். கட்சி தோழர்கள் முன் கூட்டியே தகவல் கொடுத்து அவர்களை அப்புறப்படுத்தியதால் தப்பித்தனர். 5,6 வீடுகள் அங்கு உள்ளன. எல்லாம் சில்லு சில்லாக நொறுங்கிக் கிடக்கின்றன. அவர்களின் மாட்டுக்கறி கடை தகர்க்கப்பட்டுள்ளது. மாட்டின் மீது அக்கறை என நினைத்து விடாதீர்கள். அங்கிருந்த மாடுகள் அடிக்கப் பட்டு, ஒரு கன்றுக்குட்டி இரு சக்கர வாகனத்தில் அபேஸ் செய்யப் பட்டுள்ளது.

 மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மக்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க முழுமையாகத் தவறி விட்டன. தெரிந்தே நடந்ததாகவே ஊகிக்க வேண்டியிருக்கிறது. இறுதி ஊர்வலம் 18 கிமீ தொலைவு செல்ல அனுமதி ஏன் அளிக்கப்பட்டது? கல்லெறி மற்றும் சூறையாட லின் போது போலீஸ் என்ன செய்தது? சில இடங்களில் போன் செய்தும் ஸ்டேஷனில் எடுக்கவில்லை. எஸ்.பி.க்கு செய்தால் ஸ்டேஷனுக்கு செய்யுங்கள் என்று சொல்லப் பட்டது.

 இரண்டு பள்ளிக் குழந்தைகளை இரு பக்கமும் இடுக்கிக் கொண்டு முகம் நிறைந்த பீதியோடு ஓர் இசுலாமியர் சாலையைக் கடக்கும் போட்டோ வலை தளத்தில் வந்தது. அந்தப் பள்ளியைப் பார்த்தோம். அவர் வெளியே போயிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை.

அனைவரும் கூறுவதிலிருந்து சில கேள்விகள் - பெரிய பெரிய கற்கள் கடைகளை உடைக்க பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. நினைத்த மாத்திரத்தில் அது தெருவில் கிடைக்காது. பல இடங்களில் கடப்பாரை வைத்து நெம்பப் பட்டுள்ளது. சின்ன கேஸ் சிலிண்டர் வைத்து ஷட்டர் அறுத்து எடுக்கப் பட்டுள்ளது. இது திட்டமிட்ட வன்முறை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

துடியலூரில் ஒரு பகுதியில் கணிசமாய் இசுலாமியர்கள். அச்சத்தில் நடுங்கியவர்களைக் காக்க அங்கிருந்த மாதர், வாலிபர் சங்க உறுப்பினர்கள் திரண்டு பகுதியின் நுழைவிடத்தில் வந்து நின்று விட்டனர். உயிரைத் துச்சமென மதித்து களத்தில் நின்ற அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அங்கிருந்த 5 வயது இசுலாமிய சிறுமி பொட்டு வைத்திருந்தாள். நம்மிடம் விளக்கினாள். பொட்டு வைத்திருந்தால் ஒன்றும் செய்ய மாட்டார்கள், இந்துக்கள் என விட்டு விடுவார்கள். நமக்கு நெஞ்சே வெடித்து விட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் உ.வாசுகி அவர்களின் முக நூல் பதிவுகளில் இருந்து. 

மேலே உள்ள படம் தோழர் உ.வாசுகி, அரக்கோணத்தில் நடைபெற்ற எங்கள் கோட்ட மாநாட்டை துவக்கி வைத்த போது எடுத்தது.  

உண்மையைச் சொன்னால் வதந்திகள் பரவாது




நேற்று இரவு வேலூர் நகரின் பல முக்கியப் பகுதிகளில் எல்லாம் கடைகள் முன்னதாகவே அடைக்கப்பட்டு விட்டது.

முதலமைச்சர் பூரண உடல் நலனோடு உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு அறிவிப்புக்கும் கடைகள் மூடப்பட்டதற்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கிறது.

முதல்வர் உடல் நலன் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமுமே. ஆனால் அவரது உடல்நிலை குறித்த தகவலை முழுமையாக பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் உண்மை நிலவரம் என்னெவென்றாவது அரசு அறிவிக்க வேண்டும்.

"காய்ச்சல் குணமாகி விட்டது. சீராக இருக்கிறார், உணவு சாப்பிடுகிறார் " என்று ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நாளும் அறிவிக்கும் போதுதான் காய்ச்சல் குணமாகி சீராக இருக்கையில் ஏன் மருத்துவமனையிலேயே தொடர்ந்து இருக்கிறார் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. 

"என் பெயரே மறந்து போகும் அளவிற்கு பாசம் காட்டிய மக்கள்" என்று வாட்ஸப்பில் சொன்னீர்களே, அந்த மக்களுக்கு கவலை இருக்காதா? உடல்நிலை சீராக இருக்கையில் ஒரு போட்டோவோ, வீடியோவோ, ஆடியோவோ அதே வாட்ஸப்பில் வெளியிட்டால் பிறகு வதந்திகள் எப்படி பரவும்?

வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தமிழக அரசு செய்ய வேண்டியது உண்மை நிலவரத்தை மறைக்காமல் சொல்வதுதான்.

Monday, September 26, 2016

மோடிக்கு குஜராத்தில் இவ்வளவுதான் மரியாதை. . .



தலித் மக்கள் மீது பரிவு காட்ட வேண்டும். அவர்கள் நம்மில் ஒருவர் என்றெல்லாம் மோடி அவரது கட்சி ஆட்களுக்கு உபதேசம் செய்தார். அவர் கட்சி ஆளுங்களோ அதையெல்லாம் கேட்பதற்குத் தயாராக இல்லை.

 "தலைவன் நல்லா நடிக்கிறான், சூப்பரா சீன் போடறான், பஞ்ச் டயலாக் பிரமாதம்"

என்பதெல்லாம் அவர்களுக்குத்தானே நன்றாகத் தெரியும். அதனால்தான் இறந்து போன மாட்டை அப்புறப்படுத்த மறுத்த தலித் பெண்மணியை, அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த போதும் தாக்கியுள்ளார்கள். 

மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

நாய் வால் நிமிராது,
நாகத்தின் நச்சு குறையாது.
பாஜக வின் அராஜகம் மாறாது. 

காவிகள், இனி . . . .என்றே. . . . .

கலவரம் செய்யப் போய் இன்று திருடர்களாகவும் காமெடி பீஸ்களாகவும் காட்சியளிக்கிற காவிகளுக்கு சமர்ப்பணம்.


இவங்க தேச பக்தி, மதப்பற்று இதெல்லாம் அவ்வளவு வொர்த் கிடையாதுன்னு இனிமேலாவது நம்புங்க மக்கழே . . . .

Sunday, September 25, 2016

சாட்சி சொல்ல . . . சாக அல்ல . . .



வண்ணக்கதிரில் இன்று வெளியான என் சிறுகதை, சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின்பு. கோட்டச்சங்க மாநாட்டுப் பணிகள்  காரணமாக மனதில் உருவான சில கருக்களுக்கு வடிவம் அளிக்க முடியவில்லை. அவற்றுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும். 

கருப்பாடுகள்

- வேலூர் சுரா


ஃபேன் காற்றில் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த காகிதம் படபடத்தது. பத்தாவது முறையாக அதை எடுத்து பாஸ்கர் படித்தான். அரசாங்க காகிதங்களுக்கே உரிய லட்சணத்துடன் பழுப்பு நிறத்தில் மக்கிப் போன வாடையடித்த காகிதம் ஒரு மிரட்டல் கடிதமாகவே அவனுக்கு தோன்றியது.

வரும் ஜூலை மாதம் பனிரெண்டாம் தேதி செவ்வாய் கிழமையன்று “உ.பி அரசு எதிர் தனஞ்சய்சிங்” வழக்கில் நீர் அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராக வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் உம் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்படும்” என்று எழுதப்பட்ட அந்த சம்மனில் யாரோ இந்தியில் கையெழுத்திட்டிருந்தார்கள்.

மீண்டும் அலகாபாத் செல்ல வேண்டும் என்ற நினைப்பிலேயே அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. வயிற்றைத் தொட்டுப்பார்த்துக் கொண்டான். சட்டை பனியனை மீறி அறுவை சிகிச்சையின் வடுவை உணர்ந்தான்.

எந்த சம்பவத்தை நினைவுகளிலிருந்து அழிக்க முடியாமல் அவ்வப்போது தூக்கத்தை தொலைத்து தவிக்கிறானோ, அதே சம்பவ இடத்திற்கு மீண்டும் செல்வதா? மரணத்தின் எல்லைக்கு தன்னை தள்ளிய அந்த கொடியவனின் முகத்தை மீண்டும் பார்த்திடத்தான் வேண்டுமா என்று குழப்ப நதியில் விழுந்து மீண்டெழ முடியாமல் தத்தளித்தான்.

மூன்று வருடங்களுக்கு முந்தைய அந்த அதிகாலைப் பொழுதிற்கு அவனது நினைவுகள் சென்றன.

பட்டப்படிப்பை முடித்த சில மாதங்களிலேயே வங்கி அதிகாரி வேலை கிடைத்தது ஒரு புறத்தில் மகிழ்ச்சி கொடுத்தாலும் அலகாபாத் அருகில் பஸ்வாரியா என்ற சின்ன ஊரில் உள்ள கிளையில் வேலை பார்க்க வேண்டும் என்பது கசப்பாக இருந்தது.

“உங்களையெல்லாம் விட்டுட்டு அவ்வளவு தூரத்துக்கு அவசியம் போகனுமாப்பா? வேற நல்ல வேலை கிடைக்காதா என்ன?”

என்று கிடைத்த வாய்ப்பை நிராகரிக்கும் மன நிலைக்கு வந்தவனை அவனது அப்பாதான் தேற்றி அனுப்பினார்.

‘இப்போ இருக்கிற வேலை இல்லா திண்டாட்டத்தில கிடைச்ச நல்ல வேலையை உதறக் கூடாது. இங்கேயே கிடைச்சு இரண்டு மூணு வருசத்தில டிரான்ஸ்பர் செஞ்சா என்ன பண்ண முடியும்? அது மாதிரி எடுத்துக்க. சின்ன வயசுலுயே ஆபிஸர் வேலை கிடைச்சுடுச்சுங்கிற பொறாமைல நிறைய சொந்தக்காரங்க வெந்துக்கிட்டு இருக்கானுங்க. அப்படி தூரமா போனாலாவது அவங்க கண்ணிலேந்து தப்பிக்கலாம். இந்த வயசுலயே எல்லா சூழ்நிலையையும் சமாளிக்கும் அனுபவம் கிடைச்சா, அது எதிர்காலத்திற்கும் உதவிகரமா இருக்கும்”
அப்பா பேசப் பேச பாஸ்கருக்கு தெளிவு கிடைத்தது.

பஸ்வாரியா போய் வேலையில் சேர்ந்தான் பாஸ்கர். சின்ன ஊராக இருந்தாலும் பொருளாதாரம் செழிப்பாகவே இருந்தது. யமுனையின் ஒரு கிளை நதி பாய்ந்து கொண்டிருந்ததால் விவசாயம் அமோகமாக இருந்தது. ஆனாலும் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கே உரிய புழுதிப் பூச்சோடுதான் சாலைகளும் வீடுகளும் இருந்தது.

தங்கியிருந்த அறையும் பக்கத்து வீட்டுக்காரர்கள் காசுக்குத் தரும் காய்ந்த சுக்கா ரொட்டிகள், எந்த எண்ணெய் என்று புரியாத ஒரு வாடையோடு ஒரு சப்ஜியும் அவனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு கார்சனா சின்ன நகரம், அங்கே போய் தங்கலாம் என்றால் அங்கிருந்து பஸ்வாரியா வரும் புளிமூட்டை பேருந்துகள் அச்சுறுத்தியது. மொழி தெரியாத இந்த ஊரில் வங்கியிலேயே முடங்கி அப்படியே துருப்பிடித்துப் போய் விடுவோமோ என்று மேலாளரிடம் சலித்துக் கொண்டிருந்த போதுதான் அவர்தான் அந்த யோசனையைக் கூறினார்,

“வேலையில சேர்ந்து மூணு மாசம் ஆயிடுச்சு. மூணு மாச சம்பள சிலிப்பை வைச்சு பைக் லோன் தரேன். டெய்லி பைக்கில வந்தா உனக்கு எந்த சிரமமும் கிடையாது” .

அவரும் பக்கத்து நகரத்திலிருந்து வருபவர்தான். என்னோடு தினம் காரில் வந்து விடு என சொல்வார் என்ற எதிர்பார்ப்பில்தான் அவரோடு பாஸ்கர் பேசினான். ஆனால் இந்த யோசனையும் நன்றாக இருந்தது. அலகாபாத்திற்குப் போய் வண்டியை முடிவு செய்து கொடேஷன் வாங்கி பின்பு காசோலையையும் எடுத்துப் போய் எல்லாம் அதி வேகத்தில் நடந்தது.

வங்கிக்கு ஒரு நாள் விடுப்பு போட்டு வண்டியை எடுத்து வந்திருக்கலாம். மாறாக வங்கி நேரம் முடிந்து அலகாபாத் போனால் கம்பெனியிலிருந்து வண்டியை வெளியே கொண்டு வர இரவு ஒன்பது மணியாகி விட்டது. பாஸ்கரோடு வங்கியில் சேர்ந்த இன்னொரு தமிழ்நாட்டு அதிகாரி அலகாபாத்திலேயே தங்கி இருந்தான். அவனுடைய அறையில் இரவு தங்கி அதிகாலை புறப்படலாம் என்று திட்டமிட்டான். அதனால்தான் பைக் வாங்கியதற்கு ட்ரீட் கொடு என்றதையும் சமாளித்து விட்டான். 



மறு நாள் அதிகாலை புறப்பட்டு விட்டான். புது வண்டி சுகமாகவே இருந்தது. சாலையின் மேடு பள்ளங்கள் கூட சுமையாகத் தெரியவில்லை. சின்னஞ்சிறு கிராமங்களை வேகமாக கடந்து வந்து கொண்டிருந்தான். சூரியன் இன்னும் உதிக்கத் தொடங்காத நேரம். கார்சனாவுக்கு கொஞ்சம் முன்னதாக வருகையில் சாலையின் ஓரம் இருவர் நின்று கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அவர்களை பாஸ்கர் நெருங்கும் நேரத்தில் அவர்கள் சாலையை மறிப்பது போல நின்றார்கள். அது என்ன? அவர்கள் கைகளில் என்ன வைத்திருக்கிறார்கள்? யோசிப்பதற்கு முன்பே அது கைத்துப்பாக்கி என்று தெரிந்து விட்டது.

இப்பகுதியில் வழிப்பறிக் கொள்ளைக் கூட்டம் ஒன்று இருப்பதாக பாஸ்கர் கேள்விப்பட்டிருக்கிறான். கொஞ்சம் கூட இரக்கமில்லாதவர்கள், யாராவது எதிர்த்தால் சுட்டுத் தள்ளி விட்டு கிடைப்பதை எடுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்களை தான் எதிர்கொள்ள நேரிடும் என்று பாஸ்கர் கனவிலும் நினைத்ததில்லை. தன்னிடம் பைக்கைத் தவிர பணமாக இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே இருக்கிறது. அதை பிடுங்கிக் கொள்வார்களோ இல்லை பைக்கை பறித்துச் செல்வார்களோ என்ற குழப்பத்தில் “எது நடந்தாலும் சரி, இவர்கள் நினைத்ததை நடத்த நான் அனுமதிக்கக் கூடாது” என்று மனதில் ஒரு தைரியத்தோடு பைக்கின் வேகத்தை மெல்லமாக குறைத்து அவர்களை நெருங்கிய போது திடீரென்று வேகம் எடுத்து அவர்களை மோதுவது போல போக்கு காட்டி விட்டு அதிகபட்ச வேகத்தைத் தொட்டான்.

துப்பாக்கி ஒன்று வெடிக்கும் ஓசையும் முதுகிலே ஏதோ வலி பரவுவதும் உணர மயக்கத்தில் ஆழ்ந்தான் பாஸ்கர். அதன் பின்பு அவன் கண் விழித்தது அலகாபாத் பொது மருத்துவமனையில்தான். அப்பா, அம்மா, மேனேஜர், இரண்டு டாக்டர்கள், நர்ஸ்கள், அவனோடு வங்கியில் சேர்ந்த நண்பன் ஆகியோர் கவலை தோய்ந்த முகத்தோடு சுற்றி நிற்பதைப் பார்க்க அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

பைக்கை நிறுத்தாமல் போனதால் கோபம் கொண்ட கொள்ளையர்கள் அவனை சுட்டு விட்டனர் என்றும் முதுகில் குண்டு பாய்ந்து மயக்கம் இழந்து விட்டானாம். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு பக்கத்து வயலில் இருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். பைக் அந்நேரம் ஸ்டார்ட் ஆகாததால் கொள்ளையர்களால் தப்பிக்க முடியவில்லை. துப்பாக்கி இருந்ததால் பக்கத்தில் நெருங்க கொஞ்சம் பயப்பட்டாலும் ஒருவர் கல்லை எறிந்து ஒருவனை காயப்படுத்தி உள்ளார். அந்த குழப்பத்தில் இன்னொருவன் ஓட முயற்சிக்க அவனையும் துரத்தி பிடித்து விட்டார்கள்.

அவர்களால்தான் வழியில் போன ஒரு காரை நிறுத்தி இவனை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு போலீசிடம் கொள்ளையர்கள் இருவரையும் ஒப்படைத்திருக்கிறார்கள். பைக் வாங்கிய கம்பெனியிலிருந்து விபரம் கிடைத்து அவன் அப்பாவும் அம்மாவும் விமானத்தில் வந்து விட்டார்கள். இரண்டு நாட்கள் கழித்துத்தான் அபாயகட்டத்தைத் தாண்டி கண் விழித்திருக்கிறான். பிறகு போலீஸ் வந்து ஸ்டேட்மெண்டெல்லாம் வாங்கிப் போனார்கள். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜாகி நேரே ஊருக்குப் போய் விட்டான். வங்கி நிர்வாகமும் பெருந்தன்மையாக அவனுக்கு தமிழ்நாட்டிற்கே மாறுதல் கொடுத்து விட்டது.

இதெல்லாம் முடிந்து இரண்டாண்டுகள் ஓடிய பின்பு இப்போதுதான் கோர்ட் சம்மன் வருகிறது. தன்னை சுட்ட கொள்ளையன் பெயர் தனஞ்சய்சிங் என்பதைக் கூட சம்மனைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டான். வாழ்க்கையில் மீண்டும் காலடி வைக்கக் கூடாது என்ற இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டுமா என்ற குழப்பத்தில் தவித்த போது  அவனது அலைபேசி ஒலித்தது. ஏதோ ஒரு புது எண். எடுத்துப் பேசினான். அலகாபாத்திலிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் தன்னை கணேஷ் யாதவ் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசினார்.

“அந்த தனஞ்சய்சிங் மோசமான கொள்ளைக்காரன். ஏராளமான குற்றங்கள் செய்தாலும் உங்கள் வழக்கில்தான் முதல் முறையாக பிடிப்பட்டுள்ளான். உங்கள் சாட்சியம் இருந்தால்தான் அவனை தண்டிக்க முடியும். அவசியம் நீங்கள் வர வேண்டும். உங்களுக்கு எல்லா பாதுகாப்பும் கொடுக்கிறோம். நீங்கள் தங்க ஹோட்டல் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்.”

என்று கெஞ்சாத குறையாக மன்றாட பாஸ்கரும் ஒப்புக் கொண்டான்.

“நீங்கள் தங்கும் ஹோட்டல் எது என்று எஸ்.பி யைத் தவிர டிபார்ட்மெண்டிலேயே யாருக்கும் தெரியாது. ஹோட்டலிலிருந்து நானே ஜீப்பில் அழைத்துச் செல்கிறேன்” என்று புறப்படும் முன்னால் கூட  கணேஷ் போன் செய்து சொன்னார். முதல் நாள் இரவு விமானத்தில் வந்து சேர்ந்த பாஸ்கரும் அவன் அப்பாவும் நேராக ஹோட்டலில் போய் தங்கினார்கள். அறைக்கே உணவை வரவழைத்து சாப்பிட்டார்கள், சீக்கிரமாய் தூங்கி விட்டார்கள்.

காலையில் எழுந்து தயாரானார்கள். மனதில் என்னமோ சின்ன உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் பாஸ்கர் உறுதியாகவே இருந்தான். அடுத்த சில நிமிடங்களில் வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அத்தனை உறுதியையும் புரட்டிப் போட்டு விட்டது. ஹோட்டல் அறைக்கு நேரடியாக வந்த அந்த தொலைபேசியில் பேசியவன் நல்ல ஆங்கிலத்தில் ஒரே ஒரு நிமிடம்தான் பேசினான்.

“தனஞ்சய்சிங்கை அடையாளம் காட்டினால் இந்த முறை உன் பிணம்தான் தமிழ்நாட்டுக்குப் போகும்”

கணேஷ் யாதவ் வந்து கோர்ட்டிற்குக் கூப்பிட்டுப் போனார். வழி முழுதும் அவர் பேசிக் கொண்டே வந்தார். அது எதுவுமே பாஸ்கர் மூளையில் ஏறவே இல்லை. கோர்ட் காம்பவுண்டில் காரிலிருந்து இறங்கி படிக்கட்டில் ஏறுகையில் இருவர் அவனையே முறைத்துக் கொண்டு நிற்பது போல தெரிந்தது. ஜெர்கின்ஸ் அணிந்த ஒருவன் அதை விலக்கிக் காண்பிக்க ரிவால்வர் துருத்திக் கொண்டு தெரிந்தது.

பொட்டு பொட்டாய் துளிர்த்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றான் பாஸ்கர். இவனது முறை வந்ததும் கூண்டிலேறி நீதிபதியை வணங்கினான்.

“எதிரே நிற்கிற மனிதர்தான் உங்களை சுட்டதா?”
என்று அரசு வழக்கறிஞர் கேட்க

 “சரியான வெளிச்சம் இல்லாததால் என்னை சுட்டவன் யார் என்று கவனிக்கவில்லை. இவர்தானா என்று சொல்ல முடியாது” என்று சொல்லி விட்டு கீழிறங்கி விட்டான்.

விமான நிலையத்துக்குச் செல்ல முன்னரே ஏற்பாடு செய்திருந்த டாக்ஸியில் ஏறும் தருவாயில் ஓடி வந்த கணேஷ் யாதவ்

“இப்படி ஒரு கோழையா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை” என்று கோபத்துடன் சொல்ல

அதே கோபத்துடன் பாஸ்கரும் சொன்னான்.

“நீங்களோ, இல்லை உங்க எஸ்.பி யோ இவ்வளவு பெரிய துரோகியா இருப்பீங்கன்னு நானும் எதிர்பார்க்கலை. நான் சாட்சி சொல்லத்தான் அலகாபாத் வந்தேன். சாகறதுக்கு இல்லை”

கரும்புகையை வெளியிட்டபடி டாக்ஸி புறப்பட்டு விட்டது.

Saturday, September 24, 2016

பாதாம் தேங்காய் பால் கேக்



குரங்கு அப்பத்தை பகிர்ந்து கொடுத்த கதை படித்துள்ளீர்கள் அல்லவா? கிட்டத்தட்ட அந்த கதை போலத்தான் இந்த கேக் செய்வதற்கான சூழலும்  கூட அமைந்தது.

பால் கொஞ்சம் மீதமானது. அதை பயன்படுத்த பாதாம் கீர் தயாரிக்கலாம் என்று யோசித்தேன். பாதாம் பருப்புக்களை ஊற வைத்திருந்தேன். பிறகு பார்த்தால் பாலின் அளவை விட பாதாம் பருப்புக்கள் அதிகமாக ஊற வைத்திருந்தது தெரிந்தது. எனவே ஊற வைத்த பாதாம் பருப்புக்களில் ஒரு பகுதியை தனியாக எடுத்து வைத்து விட்டு பாதாம்கீர் செய்து முடித்தேன்.

அதிகமாக உள்ள பாதாம்பருப்பைக் கொண்டு ஒரு கேக் செய்யலாமா என்று யோசித்தால் அந்த அளவு போதுமானது அல்ல என்று தோன்றியது.  அதனால் கொஞ்சம் தேங்காய் எடுத்துக் கொண்டேன். 

ஊற வைத்த பாதாம் பருப்பு, தேங்காய் இரண்டையும் பால் சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொண்டேன். பிறகு வாணலியில் சர்க்கரைப் பாகு வைத்து அறைத்து வைத்த கலவையைச் சேர்த்து நன்றாக கிளறி நெய், ஏலக்காய்ப் பொடி சேர்த்து இறக்கி வைத்தேன். 





கேக்காக துண்டு போடலாம் என்று நினைத்தால் வரவேயில்லை. வழக்கமான பிரச்சினைதான். அல்வா செய்ய நினைத்தால் கேக்காக வருவதும் கேக் அல்வா வடிவத்திலேயே வருவதும்தான்.

ஆனால் தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தனாய் மீண்டும் சர்க்கரைப் பாகு வைத்து அதை கேக் வடிவத்துக்குக் கொண்டு வந்து விட்டேன். 



வெற்றி, வெற்றி என்று நான் உற்சாகத்தில் துள்ளி குதிக்க முயன்றாலும் ஒரு வார்த்தையில் என் மனைவி என்னை மொக்கையாக்கி விட்டார்.

"அல்வாவாக இருந்த போதே நன்றாகத்தான் இருந்தது. எதற்கு வெட்டி வேலை செய்து சொதப்பிட்டீங்க"

"அப்படி ஒன்னும் சொதப்பலாக இல்லையே யுவர் ஹானர்" என்று சொல்லத்தான் நினைத்தேன். இன்னும் கறாரான விமர்சனத்தைக்  கேட்க வேண்டியிருக்குமோ என்பதால்  மௌனமாக இருந்து விட்டேன்

கோவைக்கலவரம் பற்றி மீண்டும் படியுங்கள்




சில மாதங்கள் முன்பு ஒரு நூல் பற்றி எழுதியிருந்தேன்.  நேற்று காவிப்படை கோவையில் நடந்து கொண்டதையும் அதற்கு உறுதுணையாக காக்கிகள் இருந்ததையும் பார்க்கையில் இக்கலவரமும் முன் கூட்டியே திட்டமிடப் பட்டது என்றும் கலவரத்துக்கான சூழலை பிள்ளையார் சதுர்த்தியில் இருந்தே திட்டமிட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.


 

Friday, September 23, 2016

போலிகளிடம் எச்சரிக்கை - அருகிலேயே இருப்பார்கள்





கடந்த வாரம் முக நூலில் இரண்டு சர்ச்சைகளை காண முடிந்தது. பெங்களூரைச் சேர்ந்த பதிவர் கிர்த்திகா தரனும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யாவுமே முகநூல் போலிகளின் தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள்.

திருமதி கிர்த்திகா தரன் மீதான தாக்குதல் என்பது தரம் தாழ்ந்து நாகரீகம் அற்று படு கேவலமாக இருந்தது. தனி நபர் தாக்குதல் என்பது எவ்வளவு கீழாக போக முடியும் என்பதற்கு அதுவே உதாரணம். ஊடகத்தில் இருக்கும் ஒரு பெரும்புள்ளிதான் ஆரம்பித்து வைத்தார். அதன் பின்பு களத்திற்கு வக்கிரம் ஒழுகும் நாக்கோடு போலிப் பெயர்களோடு ஒரு கோஷ்டியே வந்தது. அவர் பிரபலமாக இருப்பதும் அவரது பதிவுகளுக்கு அதிகப்படியாக விழுகிற லைக்ஸூம் பின்னூட்டங்களுமே இந்த போலிகளின் பொறாமைக்குக் காரணம்.

தோழர் ஆதவன் தீட்சண்யா பிரச்சினை வேறு. விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயரில் யாரோ ஒருவன் உள்ளே நுழைந்து அபத்தமான பல பின்னூட்டங்கள் போடுகிறார். அவர் பெயர் அமைந்திருக்கிற கட்சியின் கொள்கைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் காவிகளைப் போலவே பேசிக்கொண்டிருந்தார் அவர். தீவிரவாதி என்று குற்றம் வேறு சாட்டியிருந்தார்.

ஆணாதிக்க சிந்தனையும் காவிகளின் சகிப்பின்மையுமே போலிகளின் தாக்குதல்களுக்குக் காரணம். தங்களால் இயலாத ஒன்றை வேறு ஒருவர் செய்வதை தாள முடியாத பொறாமை கூட போலிப் பெயருக்குள் புகலிடம் பெற்று தாக்குதல் நடத்த வைக்கும்.   "தீவிரவாதிகள் அசிங்கமாக முகமெல்லாம் தழும்போடு இருக்க வேண்டும் என்பதில்லை. ஸ்மார்ட்டாக டீஸண்டாகக் கூட இருப்பார்கள்" என்று  அன்பே சிவம் படத்தில் கமல் சொல்வது இந்த போலிகளுக்கும் பொருந்தும்.

எனக்கும் அப்படி ஒரு கசப்பான சம்பவம் நடந்திருக்கிறது. எப்படி “விடுதலைச் சிறுத்தைகள்” என்ற பெயரில் தோழர் ஆதவன் தீட்சண்யா மீது தாக்குதல் நடந்ததோ அது போல ஒரு மிகப் பெரிய தலைவரின் பெயரைச் சூட்டிக் கொண்டு ஒரு இழிவான தாக்குதல் என் மீது நடந்தது.

அப்படி தாக்குதல் நடத்திய நபர் யாரென்று நன்றாகவே தெரியும். சமூகத்தில் முற்போக்கு முகமூடி அணிந்து கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் அந்த நபர் யாரென்று அம்பலப்படுத்தினால் பலர் அதிர்ச்சியடைவார்கள். இருப்பினும் அதை நான் விரும்பவில்லை. காலமே அப்படிப்பட்டவர்களை அடையாளம் காட்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். தரக்குறைவான தாக்குதல்கள் மூலம் எனது செயல்பாட்டை முடக்க நினைத்து யார்யாரோடோ கைகோர்த்துக் கொண்டு எப்படியெல்லாமோ முயன்றும் தொடர்ந்து தோற்றுப் போகும் தண்டனையே போதும்.

திருமதி கிர்த்திகா தரன் அவர்களுக்கும் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கும் நான் சொல்ல விழைவது ஒன்றைத்தான்.

போலிப்பெயர்களில் உங்கள் மீது வன்மம் கக்குபவர்கள் வெளியே யாரோ முகமறியா எதிரிகள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். உங்களின் நண்பர் என்ற இன்னொரு முகமுடி அணிந்து கொண்டு உங்கள் அருகிலேயே இருக்கக் கூடும். 

போலிகளால் தாக்கப்படும் அனைவருக்குமான எச்சரிக்கை இது.

Thursday, September 22, 2016

அப்போதும் இப்போதும் நாங்கள்தான் - நாங்கள் மட்டும்தான்




மேலே உள்ள படம், ஜாம்ஷெட்பூர் எல்.ஐ.சி கோட்டத்தின் அதிகாரிகள் ஊரியில் கொல்லப்பட்ட ஒரு ராணுவ வீரர் குடும்பத்திற்கு அவரது காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அளித்த போது எடுத்த படம்.

துயரமான சூழ்நிலையை அரசியல் லாபத்திற்காக மோடி வகையறாக்கள் பயன்படுத்தும் நேரத்தில் தன்னுடைய கடமையை விரைவாக நிறைவேற்றி உள்ளது எல்.ஐ.சி.

சியாச்சின் பனிப் பொழிவிலும் இவ்வாறு விரைந்து செயல்பட்டது உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

Wednesday, September 21, 2016

இது மட்டும் நடக்கவில்லையென்றால் ??????????

 நாராயணா, இந்த கொசுத்தொல்லை தாங்கலை என்று கவுண்டமணி சொன்னது போல நானும் சொல்ல வேண்டியுள்ளது. நேற்றிலிருந்து வாட்ஸப்பில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் செய்தி இது.

இதெல்லாம் நடக்காமல் போகட்டும். (நடக்காது என்பதுதான் உண்மை) அப்போ வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை.

மக்களை பயமுறுத்தியே வைக்கறதில என்னத்தான் அற்ப ஆசையோ?

 
 
நம்பினால் நம்புங்கள் …!!!! துர்முகி ஆண்டு 2016 (oct 2016 – Jan 2017)
@கோவை, ஈரோடு, சேலம் , பொள்ளாச்சி ,உடுமலை , வால்பாறை போன்ற ஊர்களில் மிக அதிகமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது !!!
சுமார் 400 ஆண்டுகளூக்கு முன்பு பெய்த மழையைவிட அனைத்து ஆறுகளிலும் வற்றாத நீர்பெருக்கு ஏற்படும் !!!
புரட்டாசி மாதம் : தமிழ்நாடு முழவதும் மழை , ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்…கோடி போகும் ..!!!இரவில் அடிக்கடி இடி மின்னல் தோன்றும் !
கார்த்திகை மாதம் அதிக மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடங்கள் சேதம் !!!அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் !!!
7.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1200 கி.மீ இலங்கை , அந்தமான் ,இராமேசுவரம் பாதிப்பு !!
15.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1100 கி.மீ…பூமிஅதிர்ச்சி…!!
15.10.2016-15.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1100 கி.மீ 20. 10.2016-வங்க கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம் 1215 கி.மீ..!!
3.11.2016 முதல் மழை சென்னையை உலுக்கும் …!!!
6.11.2016 -காற்றழத்த தாழ்வு மண்டலம் 1400 கி.மீ-புயல் வீசும்..!
13.11.2016 –முக்கிய அணைகள் நிரம்பி வழியும் ..!
17.11.2016 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1053 கி.மீ இலங்கை , தென்மாவட்டங்கள்  பாதிப்பு !!அதிக சேதாரம் !!!
அனைத்து இடங்களிலும் வெள்ளம் !!!
22.11.2016 ஜப்பான்,இந்தோநேசியா பூகம்பம் !!
4.12.2016 முதல் மதுரை பாதிப்பு ..!உலகத்தில் பிரளயம் ..!
10.12.2016 மழை சென்னையை 1 வாரம் உலுக்கும் !!! தாம்பரம் பாதிப்பு 
          அந்தமான் பூகம்பம் …!!!
11.12.2016 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1130 கி.மீ ஒரிசா,மகாராஷ்டிரா    
         பாதிப்பு!!!
11.12.2016 மழை சென்னை பாதிப்பு !!!காசி , நீலகிரி மாவட்டம் மழையால் பாதிப்பு !!!
7.1.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1800 கி.மீ –லேசான நில நடுக்கம் …!!!
----ஆற்காடு வே.சீதாரம்மய்யர் பஞ்சாங்க கணிப்பு…!!! 
 
பின் குறிப்பு : படம் போடுவதற்காக தேடிய போது போன வருடத்து பஞ்சாங்கம்தான் கிடைத்து