Monday, September 19, 2016

போர் வருமோ என்றோர் அச்சம் . . .




இந்திய ராணுவ வீரர்கள் மீது நடந்த தாக்குதல் என்பது கடுமையான கண்டனத்திற்குரியது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு எனது இதய அஞ்சலி. இந்தியாவிற்காக உயிரையும் கொடுப்போம் என்று மோடி வகையறாக்கள் வெற்று முழக்கம் இடுகையில் ராணுவத்தினர் அதனை நிஜமாகவே செய்துள்ளனர். 

இத்தாக்குதல்களை நிகழ்த்தியவர்கள் நான்கு பேர் என்றும் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கண்காணிப்பு பணியை வீரர்கள் மாற்றும் நேரத்தில் இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. அதனால்தான் இறப்புக்கள் அதிகமானது என்றும் செய்திகள் சொல்கிறது. உள்ளுக்குள்ளேயே யாராவது துரோகி ஒற்று வேலை பார்த்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. 

இச்சம்பவத்தை வைத்து மோடி அரசு வில்லங்கமான வேலைகளில் ஈடுபடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஐம்பத்தி ஆறு இஞ்ச் மார்பு கொண்ட மோடி பிரதமரானால் ஒரு ஈ,காக்காய் கூட எல்லையை ஊடுறுவி உள்ளே வராது என்ற வசனங்கள் எல்லாம் எப்போதோ காலாவதியாகி விட்டது. 

அது மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்த அரசாகவே மோடி அரசு காட்சியளிக்கிறது. சாமானிய மக்களுக்கான உறுதிமொழிகளை அலட்சியப்படுத்துகிற, மதவெறி செயல்திட்டத்தை அமலாக்க அலைகிற, பெரு முதலாளிகளின் தரகராக மாறி விட்ட பிரதமர் என்ற பிம்பம் மக்கள் மனதில் தோன்றி விட்டது.

அவர் வெளிநாடு கிளம்பினாலே, நாடெங்கிலும் கிண்டல்களும் நையாண்டியும் கிளம்பி விடுகிறது. ஜியோ வின் விளம்பரத் தூதர் என்று வேறு கழுவி கழுவி ஊற்றி விட்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் குஜராத்திலும் உ.பி யிலும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புக்கு சவக்குழி தயாரிக்க துவங்கி விட்டார்கள். 

எனவே செல்வாக்கை தக்கவைக்க ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் மோடிக்கு உள்ளது. ஆக்கபூர்வமாக எதையும் அவர்களால் செய்ய முடியாது. அழிவுதான் அவர்களின் ஆயுதம்.

எனவே சர்வரோக நிவாரணியாக பாகிஸ்தான் மீது போர் என்றோ, அதை முன்வைத்து அவசரநிலை என்றோ முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஜனநாயகத்தை முடக்கினால் இந்தியாவை பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு விற்பதும் எளிது. 

எனவே இந்திய மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.

தேசபக்தி என்று மோடி முழங்கினால் அதை நிராகரியுங்கள்.

மறந்து விட வேண்டாம். கார்கில் போரில் சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் செய்த பாரம்பரியம் பாரதீய ஜனதா கட்சியுடையது.

No comments:

Post a Comment