Saturday, September 24, 2016

பாதாம் தேங்காய் பால் கேக்



குரங்கு அப்பத்தை பகிர்ந்து கொடுத்த கதை படித்துள்ளீர்கள் அல்லவா? கிட்டத்தட்ட அந்த கதை போலத்தான் இந்த கேக் செய்வதற்கான சூழலும்  கூட அமைந்தது.

பால் கொஞ்சம் மீதமானது. அதை பயன்படுத்த பாதாம் கீர் தயாரிக்கலாம் என்று யோசித்தேன். பாதாம் பருப்புக்களை ஊற வைத்திருந்தேன். பிறகு பார்த்தால் பாலின் அளவை விட பாதாம் பருப்புக்கள் அதிகமாக ஊற வைத்திருந்தது தெரிந்தது. எனவே ஊற வைத்த பாதாம் பருப்புக்களில் ஒரு பகுதியை தனியாக எடுத்து வைத்து விட்டு பாதாம்கீர் செய்து முடித்தேன்.

அதிகமாக உள்ள பாதாம்பருப்பைக் கொண்டு ஒரு கேக் செய்யலாமா என்று யோசித்தால் அந்த அளவு போதுமானது அல்ல என்று தோன்றியது.  அதனால் கொஞ்சம் தேங்காய் எடுத்துக் கொண்டேன். 

ஊற வைத்த பாதாம் பருப்பு, தேங்காய் இரண்டையும் பால் சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொண்டேன். பிறகு வாணலியில் சர்க்கரைப் பாகு வைத்து அறைத்து வைத்த கலவையைச் சேர்த்து நன்றாக கிளறி நெய், ஏலக்காய்ப் பொடி சேர்த்து இறக்கி வைத்தேன். 





கேக்காக துண்டு போடலாம் என்று நினைத்தால் வரவேயில்லை. வழக்கமான பிரச்சினைதான். அல்வா செய்ய நினைத்தால் கேக்காக வருவதும் கேக் அல்வா வடிவத்திலேயே வருவதும்தான்.

ஆனால் தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தனாய் மீண்டும் சர்க்கரைப் பாகு வைத்து அதை கேக் வடிவத்துக்குக் கொண்டு வந்து விட்டேன். 



வெற்றி, வெற்றி என்று நான் உற்சாகத்தில் துள்ளி குதிக்க முயன்றாலும் ஒரு வார்த்தையில் என் மனைவி என்னை மொக்கையாக்கி விட்டார்.

"அல்வாவாக இருந்த போதே நன்றாகத்தான் இருந்தது. எதற்கு வெட்டி வேலை செய்து சொதப்பிட்டீங்க"

"அப்படி ஒன்னும் சொதப்பலாக இல்லையே யுவர் ஹானர்" என்று சொல்லத்தான் நினைத்தேன். இன்னும் கறாரான விமர்சனத்தைக்  கேட்க வேண்டியிருக்குமோ என்பதால்  மௌனமாக இருந்து விட்டேன்

1 comment:

  1. "அப்படி ஒன்னும் சொதப்பலாக இல்லையே யுவர் ஹானர்" என்று சொல்லத்தான் நினைத்தேன்.

    :) யானைக்கு அடி சறுக்கிவிட்டது அவ்வளவே தான்.

    ReplyDelete