Sunday, March 28, 2021

மோடியை நம்பலைனா பாகிஸ்தானுக்கு போ

 


மோடி 

முதலையோடு சண்டையிட்டார்,

ரயில் நிலையத்தில் டீ விற்றார்.

காட்டிலே வாழ்ந்தார்,

இமயமலையில் யோகா செய்தார்.

1980 களிலேயே ஈமெயில் அனுப்பினார்.

1988 லியே டிஜிட்டல் காமெரா பயன்படுத்தினார்.

"ஒட்டு மொத்த அரசியல் விஞ்ஞானம்" என்ற பட்டப்படிப்பை முடித்தார்.

கழிவறை வாயுவிலிருந்து டீ தயாரித்தார்.

வங்க தேச விடுதலைக்காக போராடினார்.

இவற்றையெல்லாம் நம்ப தயாராக இல்லாத தேச விரோதிகள் எல்லாம் பாகிஸ்தானுக்குச் செல்லலாம். 


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் முக நூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை தமிழில் மேலே அளித்துள்ளேன். தேச விரோதி என்பது மட்டும் என்னுடைய இடைச்செருகல்.

பிகு: வழக்கமாக எந்த பதிவிற்கும் இவ்வளவு வண்ணங்களை பயன்படுத்த மாட்டேன். கலர் கலரா மோடி கதை விடும் போது பதிவும் கலர்ஃபுல்லா இருக்கனும்ல!

Saturday, March 27, 2021

பிரதமர்யா! சிரிக்காதீங்கய்யா!

 


வங்க தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றேன் என்று மோடி சொன்னதற்கு இப்படி 1200 பேர் சிரித்து வைத்துள்ளீர்களே, இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லை. 

ஒரு பிரதமரை இப்படி காமெடியனாக கருதுறாங்களே!

சரி, கொஞ்சம் சீரியசாகவும் பேசலாமா?

வங்க தேச விடுதலைப் போரில் இந்திய ராணுவமும் விமானப் படையும் தீவிரமாக தங்கள் உயிரை பணயம் வைத்து போர் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் 

பாஜகவின் முன்னாள் வேஷமான ஜன சங்கம் டெல்லியில் ஒரு நாள் போராட்டம் ஒன்றை நடத்தியது. ஆர்.எஸ்.எஸ் காவிகளை ராணுவத்தில் இணைத்து எல்லைக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான தர்ணா அது. 

காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை ஆன அந்த நிகழ்வு அது.

அதில் மோடி கலந்து கொண்டாரா இல்லையா என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது.

ஆனால் அந்த நிகழ்வுக்காக ஏதோ பெரும் தியாகம் செய்ததாக மோடி பில்டப் கொடுப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

இதற்காக சிரிப்பதோடு நிறுத்திக் கொண்டதற்காக மோடி மோகிகள் மகிழ்ச்சியடைய வேண்டும்.


மல்லய்யா சிஷ்யனா பாஜக வேட்பாளர்?

 


திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளர் திருவண்ணாமலை கோயிலுக்கு தன் சொந்த செலவில் யானை வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.



 அவருடைய பின்னணி என்ன என்பதை கீழே உள்ள தகவல் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.



 கர்னாடகாவில் உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு தங்கக்கதவு, சபரிமலையில் பதினெட்டு படிகளுக்கும் தங்கத் தகடுகள் வேய்த்துக் கொடுத்து விட்டு இந்திய வங்கிகளை ஏய்த்து விட்டு வெளி நாட்டுக்கு ஓடிய விஜய் மல்லய்யாவின் சிஷ்யப் பிள்ளையாக இந்த தணிகை வேல் இருந்திருக்க வேண்டும்.

 ஸ்டேட் வங்கியை ஏமாற்றிய பணத்தை வைத்துக் கொண்டு ஒரு யானை என்ன, ஒரு யானைக் கூட்டத்தையே கூட வாங்கித் தர முடியும்.

Friday, March 26, 2021

நிர்மலா அம்மையார் எப்போதுமே . . . .




 *நாளொரு கேள்வி: 24.03.2021*


இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *ஆர். தர்மலிங்கம்*
######################

*கேள்வி:*

இன்சூரன்சு சட்டத்திருத்த மசோதா விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதில் எவ்வளவு  உண்மைகள் இருந்தன?

*ஆர். தர்மலிங்கம்*

இன்சூரன்சு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவின் விவாதத்தில் கலந்து கொண்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நான்கு அம்சங்களை 
குறிப்பிட்டு பேசினார்.

*ஒன்று...* அந்நிய நேரடி முதலீடு உயர்த்தப்பட்டால் இன்சூரன்சு பரவலாக்கம் வேகமாக இருக்கும் என்றார். நிதியமைச்சர்களின் இந்த வாதத்தை காலகாலமாக கேட்டுவருகிறோம். 1999 ல் இன்சூரன்சு துறையை தனியாருக்கு திறந்துவிட்டு அந்நிய நேரடி முதலீட்டிற்கு 26 சதம் வரம்பு
நிர்ணயித்த அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்காவும் இதைத்தான் கூறினார். பின்னர் 2015 ல் 26% லிருநது 49% மாக உயர்த்திய போதும் அன்றைய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் இதையே 
சொன்னார்.தற்போது 2021ல் நிர்மலா சீதாராமனும் இதையே பேசுகிறார்.

இன்சூரன்சு வணிகத்தின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடையது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பவே இன்சூரன்சு பரவலாக்கமும், வளர்ச்சியும் இருக்கும். *வேலைவாய்ப்பு, மக்களின் வாங்கும் சக்தி, சேமிக்கும் திறன் மேம்படாமல் பரவலாக்கம் சாத்தியமல்ல.*

இன்று மத்திய அரசின் தவறான தாரளமய கொள்கை காரணமாக வேலைவாய்ப்பு கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய தனிநபர் சராசரி வருமானம் ஆண்டுக்கு ரூ.1.35 லட்சம். இதன்படி ஒரு தனிநபரின் மாத வருமானம் ரூ.11000 மட்டுமே.மக்களின் வாங்கும் சக்தியும்,சேமிக்கும் திறனும் பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 
சூழலில் அந்நிய முதலீட்டை உயர்த்துவதால் மட்டும் இன்சூரன்சு பரவலாக்கம் வேகமாக நடந்து விடாது.

*இரண்டு...* அந்நிய நேரடி முதலீடு குவியும் என்கிறார். நிதியமைச்சரின் எதிர்பார்ப்பாக வேண்டுமானால் இது இருக்கலாம். ஆனால் நடைமுறையில் இது நடக்க போவதில்லை. 1999 ல் இன்சூன்சு துறையில் 26% அந்நிய நேரடி முதலீடு அனுமதித்தால்   ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் முதல் 1.5  லட்சம் கோடி வரை வரும் என்றார் அப்போதைய துணைப்பிரதமர் *எல்.கே.அத்வானி.* ஆனால் இந்நாள் வரை இன்சூரன்சு துறையில் வந்துள்ள அந்நிய நேரடி முதலீடு வெறும் ரூ.26 ஆயிரம் கோடி மட்டுமே.

*மூன்று...* அந்நிய நேரடி முதலீடு 74% மாக உயர்ந்தாலும் உள்நாட்டு சேமிப்பின் மீதான அரசின் கட்டுப்பாடு அப்படியே இருக்கும்;
அந்நிய நேரடி முதலீடு உயர்வு கட்டாயமல்ல, அது அந்தந்த கம்பெனிகளின் விருப்பம்; மேலும்   கம்பெனியின் இயக்குனர் குழுவில் 50 சதமான இயக்குநர்கள் உள்நாட்டில் வசிப்பவர்களாக இருப்பார்கள்;
இந்தியாவில்   திரட்டப்படும் நிதியை இங்கேதான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளோம் எனக் கூறுகிறார்.

நிதியமைச்சரின் இந்த அறிவிப்புகள் நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பாஜக அரசின் இலக்கு 100% அந்நிய நேரடி முதலீடு என்பதே.
ஆனால் அதில் அவர்களால் வேகமாக  முன்னேற முடியாததோடு சில கட்டுப்பாடுகளை விதிக்க   வேண்டிய நிலைக்கு  காரணம் நமது போராட்டங்கள்தான். ஆனால் *இந்த கட்டுப்பாடுகள் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பதே நமது கேள்வி!*

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கோ அல்லது மக்களுக்கு சேவை செய்வதோ  அந்நிய மூலதனத்தின் நோக்கமாக ஒரு போதும் இருக்க முடியாது. 

நிதி மூலதனத்திற்கு லாபம் எங்கே கிடைக்குமோ அங்கே பறந்து செல்லும். சந்தையில் லாபம் ஈட்டுவதே  பிரதான நோக்கம். இதுதான் நிதி மூலதனத்தின் இயல்பான குணாம்சம். இன்று இன்சூரன்சு துறையில் 74% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்து இந்திய மக்களின் சேமிப்புகளை பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்கு மத்திய பாஜக அரசு இரையாக்கியுள்ளது. வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை கடன் வாங்கி கொண்டு திருப்பி செலுத்தாமல் வங்கிகளை நெருக்கடிக்கு தள்ளிய விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களையே கட்டுப்படுத்த
முடியாத இவர்கள் அந்நிய மூலதனத்தை கட்டுப்படுத்துவோம் 
என்று சொல்வது வேடிக்கைதான்.

*நான்கு...* பொதுத்துறை இன்சூரன்சு நிறுவனங்களின் சந்தை பங்கு வெறும் 38.78% மட்டுமே.
தனியார் கம்பெனிகளின் சந்தை பங்கு 48.03% மாக உள்ளது என கூறி முழுப் பூசணிக்காயை  சோற்றில் மறைத்துள்ளார் நிதியமைச்சர். 

ஆயுள் காப்பீட்டில் 24 தனியார் 
கம்பெனிகள் உள்ளன.இதில் எஸ்.பி.ஐ. லைப், ரிலையன்ஸ் தவிர மற்ற  கம்பெனிகள் அனைத்தும் அந்நிய பகாசுர கம்பெனிகளோடு கூட்டு வைத்துள்ளன.
பொதுக்காப்பீட்டில் 27 தனியார் 
கம்பெனிகள் இருக்கின்றன.
6 பொதுத்துறை பொதுக்காப்பீடு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சந்தை பங்கு என்று சொல்லும் போது ஆயுள் காப்பீட்டையும்,
பொதுக்காப்பீட்டையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். ஏனெனில் ஆயுள் காப்பீடு நீண்ட கால முதலீடாகும்.
பொதுகாப்பீடடு குறுகிய அல்லது குறிப்பிட்ட கால முதலீடாகும்.

பொதுக்காப்பீட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை பங்கு 38.78% மற்ற தனியார் கம்பெனிகளின் சந்தைப் பங்கு தனித் தனியே 10 % க்கும் குறைவே. பொதுக்காப்பீட்டில்  தனியார் கம்பெனிகளில் முதலிடத்தில் இருக்கும்    *ஐசிஐசிஐ லொம்பார்டின்* சந்தைபங்கு 7.6 % மட்டுமே. மற்ற கம்பெனிகள் இதற்கும் கீழேதான் உள்ளன.உண்மை இவ்வாறிருக்க பொதுத்துறை இன்சூரன்சு நிறுவனங்களின் சந்தை பங்கு தனியாரைவிட குறைவு என சொல்வது விவாதத்தை திசைதிருப்பும் முயற்சியாகும்.

ஆயுள் காப்பீட்டை பொறுத்தவரை எல்.ஐ.சி. தொடர்ந்து சந்தை பங்கில் முதலிடத்தில் இருக்கிறது. 31.3.2020 ஐ.ஆர்.டி.ஏ. அறிக்கையின்படி பாலிசி எண்ணிக்கையில் *எல்.ஐ.சி.யின் சந்தை பங்கு 75.90%.*
முதல் வருட பிரிமிய வருவாயில் 68.74%  ஆகும். கடந்த இருபது வருடங்களாக போட்டியை வெற்றிகரமாக எதிர் கொண்டு ஆயுள் காப்பீட்டு சந்தை பங்கில் முதலிடத்தில் இருக்கும் எல்.ஐ.சி. சந்தை பங்கின் உண்மைகளை சொல்ல நிதியமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

இன்சூரன்சு துறையில் எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை பொதுகாப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பையும்,தனியார் கம்பெனிகளின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில்  விரிவான விவாதத்தை நடத்தி முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய    நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர்  அந்நிய மூலதனத்திற்கு ஆதரவாக  நின்று வாதாடியதை  நாடு ஒரு போதும் மறக்காது.

*செவ்வானம்* 

மோடி போட்டோ போட்டா கேடி.ராகவா?

 



மோடி போட்டோவை போட்டு ஓட்டு கேட்டா விழற சில்லறை ஓட்டு கூட விழாதுன்னு அவங்களுக்கு தெரியும்.

உனக்கென்னப்பா, சீட்டு கிடைக்காத கடுப்பில நோட்டாவை விட கம்மியா வாங்க மோடி போட்டோவை வைக்க சொல்ற!

Thursday, March 25, 2021

சீமான் கட்சி பெண் வேட்பாளர்களுக்கோர் வேண்டுகோள்

 


117 பெண் வேட்பாளர்களை நிறுத்துவதல்ல முக்கியம்

 சீமான் கட்சி 117 பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்திய போது அதை மூத்த பத்திரிக்கையாளர் உட்பட ஏராளமானவர்கள் பாராட்டினார்கள். சீமானின் காணொளிகள் சிலவற்றைப் பார்த்ததால், சீமானின் தம்பிகள் முக நூலில் பயன்படுத்தும் வாசகங்களை படித்ததால், சீமான் மீது பாலியல் குற்றம் சுமட்டிய நடிகைக்கு நிகழ்ந்த கதியைப் பற்றி அறிந்ததால் அச்செய்தி என்னவோ ஈர்க்கவே இல்லை.

 நாதகவின் பேராவூரணி தொகுதி வேட்பாளர் திலீபன் பேசிய காணொளியை காண நேர்ந்த கொடுமை நிகழ்ந்தது.

 நாதகவின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு என் பணிவான வேண்டுகோள் ஒன்று உண்டு.

 தயவு செய்து அந்த காணொளியை பாருங்கள். உங்கள் சக வேட்பாளர் பேசிய கருத்துக்களில் உடன்பாடு உண்டா என்று சொல்லுங்கள். உடன்பாடு உண்டு என்று சொல்பவர்களோடு பேச எனக்கு ஏதுமில்லை.

 உடன்பாடு இல்லாதவர்கள் உங்கள் தலைவர் சீமானிடம் சொல்லி அந்த திலீபனை கட்சியிலிருந்து விலக்கச் சொல்லுங்கள்.

 அப்படி அவர் நீக்க மறுத்தால் நீங்கள் அக்கட்சியிலிருந்தும் தேர்தல் களத்திலிருந்தும் உடனடியாக விலகுங்கள்.

 பெண்களை மதிப்பதென்பது பெண் வேட்பாளர்களை நிறுத்துவதை விட மிகவும் முக்கியம் என்பதை உணர்த்துங்கள்.

மதுரை AIIMS ஆஸ்பத்திரியை காணோம்.

 


ஆம்.

மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துமனையை காணவில்லை.

அந்த மருத்துவமனையை உதயநிதி ஸ்டாலின் அப்படியே ஒற்றைக் கையால் தூக்கி வந்து விட்டாரே!


இந்த நக்கல் எல்லாம் தாத்தா ஸ்டைல்