Wednesday, May 22, 2019

தியான மோடி : வெளம்பரம்தானாம்!



தியான மோடிக்கு முட்டு கொடுக்கும் . . .

ரேடார் விஞ்ஞானம் அவரை ஒரு முட்டாள் என்று காண்பித்தது. அதனால் சங்கிகளால் அவருக்கு முட்டு கொடுக்க முடியவில்லை. வாயைப் பொத்திக்கொண்டு இருந்தார்கள்.

டிஜிட்டல் காமெரா,. ஈமெயில் விவகாரம் அவர் ஒரு பொய்யர் என்று நிரூபித்து விட்டது. அதனால் அதற்கும் முட்டு கொடுக்க முடியவில்லை. கப்சிப்பென்று இருந்து விட்டார்கள்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிலோ அவரே வாய் திறக்கவில்லை. அதனால் இவர்களுக்கும் வாய் திறக்க வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்து கேதார்நாத் காமெடி. குகையில் அந்த கால முனிவர் போல கடுந்தவம் இருப்பதாக ஒரு பில்ட் அப் செய்ய முயன்றார். ஃபேன்ஸி ட்ரெஸ் காம்படிஷன் போல முதலில் ஒரு அலங்கார ஆடை அணிந்து கொண்டவர் பின்பு முகத்தைத் தவிர முழுமையாக காவி உடை அணிந்து கொண்டு விஸ்வாமித்திரர் (ராஜரிஷி படத்தில் சிவாஜி, அப்பறம் ஒரு சீரியலில் யாரோ ஒருவர் {பெயர் மறந்து விட்டது}  )  போல  போஸ் கொடுத்தார்.

பிறகுதான் தெரிய வந்தது. அந்த குகையே மோடி போல ஒரு டுபாக்கூர் என்று. குகை போல வடிவமைக்கப்பட்ட, ஏசி, அட்டாச்ட் பாத்ரூம், ரூம் சர்வீஸ்,  நல்ல மெத்தை போன்ற வசதிகள் நிரம்பிய ஒரு காட்டேஜ் ரூம் என்று.  அதன் பின்பு மோடி மீண்டும் வறுபடத் தொடங்கினார்.

பாவம் பக்தாளால் தாங்க முடியவில்லை.

வேறு வழியில்லாமல் மோடிக்கு முட்டு கொடுக்க ஒரு வாதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

கேதார்நாத்தில் வெள்ளம் வந்ததால் (அந்த சமயத்தில் குஜராத்திலிருந்து வந்த ஆயிரக்கணக்கானவர்களை இன்னோவா மூலம் ராம்போ போல மோடி காப்பாற்றினார் என்று அடித்து விட்ட கதை நினைவுக்கு வருகிறதா?)  ஏற்பட்ட மிகப் பெரிய அழிவிற்குப் பிறகு அங்கே சுற்றுலாப்பயணிகள், அதிலும் குறிப்பாக வெளி நாட்டினர்  (கவனிக்க, கேதார் நாத் கோயிலுக்கான பக்தர்கள் என்று சொல்லவில்லை, சுற்றுலாப் பயணிகள் என்றுதான் சொல்கிறார்கள்) வருகை குறைந்து விட்டதாம். அவர்கள் வருவதை ஊக்குவிக்கத்தான் அந்த குகை காட்டேஜ் ஹோட்டல் கட்டப்பட்டதாம். அப்படியும் அங்கே வருகையில் முன்னேற்றம் கிடையாதாம். 

ஆகவே சுற்றுலாப்பயணிகள் வருவதை ஊக்குவிக்க, அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கவே மோடியே போய் குகையில் தங்கினாராம். அவரது நோக்கம் கேதார்நாத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமாம். இந்த உயர்ந்த நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் கிண்டலடிக்கிறார்களாம்.

இதுதான் அந்த முட்டு . . .

சரி இதையெல்லாம் எப்போது  சொல்கிறார்கள்?

நாட்டின் நன்மைக்காக பிரார்த்தனை குகை ஒன்றில் தன்னை சிரமப்படுத்திக் கொண்டு தியானத்தில் ஈடுபடுகிறார் என்று புல்லரித்துப் போய் பில்ட் அப் தான் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படியெல்லாம் அது ஒன்றும்  இயற்கையான குகை அல்ல, தியானம் செய்யப் போனவர் ஏனய்யா போட்டோகிராபர்களோடு போனார் என்ற கேள்விகள் வந்த பின்னர் இப்போது புது காரணத்தை கண்டு பிடித்துள்ளனர்.

இதிலும் சில கேள்விகள் வருகிறது.

குகைகள் முன்பே கட்டப்பட்டிருந்தாலும் அவை மோடி வரும் வரை அது பூட்டியே வைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. காட்டேஜ் குகையை பூட்டி வைத்து விட்டு யாரும் வரவில்லை அதனால்தான் மோடி அங்கே போனார் என்று ஏன் இப்போது கதை விடுகிறீர்கள்?

மோடி அங்கே போனது வெறும் விளம்பரத்திற்காக என்றுதான் எல்லோரும் கிண்டலடித்தார்கள். இப்போது நீங்கள் சொல்வதும் அதுதான். விளம்பர தூதுவர் என்று சேர்த்து சொல்கிறீர்கள்.

சரி, சரி

ஜியோவிற்கும்
பேடிஎம் மிற்கும்

விளம்பர தூதுவராக வேலை பார்த்தவர்தானே!

ஆட்சி ஊசலாடும்போதே இப்படி!


எடப்பாடியின் திமிர் அடங்க வேண்டும்

எட்டு வழிச்சாலையை வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழு விவசாயிகள் மட்டும்தான் எதிர்க்கிறார்களாம். சாகுபடி செய்து வரும் இதர விவசாயிகள் தங்கள் நிலத்தைக் கொடுக்க தயாராகத்தான் இருக்கிறார்களாம். அந்த சாலை இல்லாவிட்டால் எல்லாம் நாசமாகப் போய்விடுமாம்.

இப்படிச் சொல்வது யார்?

யானை மாலை போட்டதால் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர், மகாராணியான “சரஸ்வதி சபதம்” கதை போல

சசிகலா சிறைக்குப் போகும் முன்பு  ஒரு குழந்தை  போல தவழ்ந்து  போய் சசிகலா காலிலே மண்டியிட்டு விழுந்து முதல்வர் பதவியை பெற்ற எடுபிடி பழனிச்சாமி.  

உயர் நீதிமன்றம் தடை செய்துள்ள ஒரு திட்டத்தை, தேர்தல் பிரச்சாரத்தின் போது வாய் திறக்காமல் இருந்து விட்டு, வாக்கு எண்ணிக்கை துவங்கும் முன்பாக பேசினால் அதை திமிர் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

நிதின் கட்கரியிடம் வாங்கிய காசுக்கு விசுவாசமாக வாலாட்டுகிறாரா எடுபிடி?

நேற்றே ஒரு கிராமத்திலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.

தடை உத்தரவு பெற நாங்கள் தொடுத்த வழக்குதான் காரணம் என்று பீற்றிக் கொள்ளும் டாக்டரய்யாக்கள் எடுபிடியின் திமிர்ப் பேச்சுக்கு ஏன் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்? கட்காரியின் கவனிப்பு வளையத்துக்குள் அவர்களும் வந்து விட்டார்களா?

ஆட்சியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் போதே எடுபிடிக்கு இவ்வளவு ஆணவம் என்றால் தப்பித்தவறி பிழைத்து விட்டால் ஆட்டம் ஓவராகி விடும்.

போராட்டத்தின் மூலம் எடுபிடியின் திமிரை அடக்க தயாராவோம்.


மறக்க மாட்டோம் மாபாதகக் கொலைகளை . . .

மோடி எடப்பாடி கொலைகாரக் கும்பலால் உயிர் நீத்தவர்களுக்கு இன்று முதலாமாண்டு நினைவு நாள், 



கடந்த ஆண்டு இதே நாளில்தான்  விஷம் பரப்பிய ஸ்டெரிலைட் ஆலையை மூட வேண்டும் என்று அமைதியாக பேரணியாகச் சென்றவர்கள் மீது காக்கி உடை அணிந்த கொலைகாரர்களை ஏவி விட்டு பதிமூன்று உயிர்களை குடித்தார்கள். பின்பு இன்னும் இருவர் இறந்து போனார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக யாரும் எந்த காலத்திலும் எந்த இடத்திலும் போராடக் கூடாது என்பதற்காக கார்ப்பரேட்டுகளின் சேவகன் மோடி ஏவி விட்ட அராஜகம். மோடி வீசும் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும் எடப்பாடி நிகழ்த்திய கொடூரம்.

தமிழகத்தில் ஜனநாயகம்  புதை குழிக்கு போய் விட்டது என்பதன் உதாரணம் இக்கொடிய சம்பவம்.

உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம்.

உங்களையும் எந்நாளும் மறவோம்.
உங்களது மரணத்திற்கு பின் நின்ற பாவிகளையும் மறவோம். அவர்களை வீழ்த்தும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 


Tuesday, May 21, 2019

மோடி மன்னிக்க மறுத்தது ஏன்?



கோட்சேவை பாராட்டிய வெடிகுண்டு சாமியாரை மன்னிக்க மாட்டேன் என்று மோடி சொல்லியுள்ளார்.

ஏன் மன்னிக்க மாட்டார் தெரியுமா?

மோடியின் மங்கி பாத்தைக் கேளுங்க, அதாங்க மனதின் குரல்

“எதுக்குய்யா மன்னிப்பு கேட்கனும் அந்தப் பொண்ணு, எதுக்கய்யா மன்னிப்பு கேட்கனும்?
அப்படி என்னய்யா தப்பா சொல்லிடுச்சு அந்த பொண்ணு?
காந்தியைக் கொன்னவரு தேச பக்தருன்னு சொல்லிடுச்சு.
யாருய்யா காந்தியைக் கொன்னது? 
முஸ்லீமா? கிறிஸ்துவனா? இல்லை கம்யூனிஸ்டா?
நம்மாளுதான கொன்னாரு!
யாரு சொல்லி கொன்னாரு?
நம்ம தலைமை சொல்லி கொன்னாரு!
நம்ம குரு பீடம் சொல்லி காந்தியை போட்டுத் தள்ளின ஒத்தரை நாம பாராட்டாம திட்டவா முடியும்?
ஏதோ நான் இப்ப பிரதமரா இருப்பதால வாய் திறந்து சொல்ல முடியலை. அந்த பொண்ணு தைரியமா சொல்லிடுச்சு. நான் விரும்பற ஒரு விஷயத்தை சொன்ன ஒரு பொண்ணை எதுக்கய்யா நான் மன்னிக்கனும்? என்னை நானே மன்னிச்சுக்க முடியுமா?
அந்த பொண்ணு மேல எனக்கு கோபம் இருந்தா எம்.பி சீட்டு கொடுத்திருப்பேனா?
கோட்சே துப்பாக்கியால சுட்டா, வெடிகுண்டு வச்சு அடுத்த லெவலுக்கு  போன பொண்ணுய்யா அது. அஞ்சு வருஷத்துக்கு முன்னையே எம்.பி ஆக்கி மந்திரியாக்கிருக்கனும்யா . . .
மன்னிக்க மாட்டேன்னு சொன்னதை சில கேணையங்க ஏதோ எனக்கு கோபம்னு நினைச்சுக்கறாங்க,
மன்னிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பதுதான்  அர்த்தம்னு புரிஞ்சுக்கோங்கய்யா!

பிகு
ரெண்டு நாள் முன்னாடியே எழுதியதுதான். கொஞ்சம் லேட்டுதான். ஆனாலும் எழுதியது வேஸ்டாகக் கூடாது என்பதற்காக பதிவிடுகிறேன்

கொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி


நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக, நானும் என் மனைவியும் மகனும் வாக்களிக்கச் சென்றோம். வாக்களிக்க மட்டும்தான் சென்றோம். 

சுமார் பதினைந்து குண்டர்கள், அவர்கள் அத்தனை பேரையும் நான் அவர்களின் பெயரோடு அறிவேன். எங்களை திரும்பிப் போகச் சொல்லி வற்புறுத்தினார்கள். நாங்கள் மறுத்தோம்.

அப்போதுதான் தற்போதைய ஆட்சியின் முழுமையான குணாம்சம் வெளிப்பட்டது. மம்தா பானர்ஜியின் சமூக விரோத சக்திகள் எங்களை அடிக்கத் தொடங்கினர். என் கண்ணாடி நொறுங்கியது. ஸ்டென்ட் பொறுத்தப்பட்ட இடது பக்க  நெஞ்சின் மீது குத்துக்கள் விழுந்தது. இடது கண்ணிற்குக் கீழே சிறு வெட்டுக்காயம். 

மிகவும் கடுமையாக தாக்கப்பட்ட என் மகன் வலியில் துடிக்கிறான். அடிகளைப் பெற்ற என் மனைவியின் இடது கையில் கடுமையான வலி. 

இங்கே வலி என்பது பிரச்சினை. இடதுசாரிகளான நாங்கள் ஏழெட்டு வருடங்களாக இதே கதியைத்தான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். 

ஜனநாயகத்தின் கல்லறையின் மேல் அடிபட்டு இழிவுபடுத்தப்பட்ட நாங்களும் எங்களைப் போன்றவர்களும் ஜனநாயகத்தை சிதைத்த அழிவு சக்திகளை பழி வாங்கும் சரியானதொரு தருணத்திற்காக காத்திருப்போம். 

இங்கே நிர்வாகமும் நிர்வாகத்தை நடத்துபவர்களும் போலியானவர்கள்.  எதற்கும் தகுதியற்ற கூட்டம் இது. தேர்தல் ஆணையமோ ஒரு மூன்றாந்தர அமைப்பாகி விட்டது. 

இச்சம்பவம் நடக்கும் வரையில் நான் சட்டத்திற்குட்பட்ட ஒரு உண்மையான குடிமகனாகவே இருந்து வருகிறேன். இனியும் அவ்வாறு இருக்க வேண்டுமா என்று சிந்திக்க வைத்துள்ளார்கள்.

என் இதர சகாக்கள், என்னைப் போலவே தாக்குதலுக்குள்ளானாலும் உயிருடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.


மேலே உள்ளது எங்கள் சங்கத்தின் பொது இன்சூரன்ஸ் பிரிவின் கிழக்கு மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கௌதம் மைத்ரா மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட வாக்கு பதிவு நடந்த நாளான 19.05.2019 அன்று முக நூலில் பகிர்ந்து கொண்டது.

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட தோழர் சுனில் மைத்ராவின் மகன் தோழர் கௌதம் மைத்ரா.

மேற்கு வங்கத்தில் எப்படிப்பட்ட அராஜக ஆட்சியை மம்தா பானர்ஜி  நடத்திக்  கொண்டிருக்கிறார் என்பதற்கு இது ஒரு சோற்றுப் பத உதாரணம்.

எனக்கு ஏற்பட்ட காயம் என்பது முக்கியமல்ல. ஜனநாயகம் காயமடைகிறதே என்பதுதான்  தோழர் கௌதம் மைத்ராவின் ஆதங்கம்.


குண்டர்களை வைத்துக் கொண்டு ஒரு ஆட்சி நடத்த முடியும் என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்து வருகிறார். கத்தி பிடித்தவனுக்கு கத்தியால்தான் முடிவு என்பது  போல வன்முறையால் ஆட்சி நடத்தும் அவரது ஆட்சிக்கு  அதே வன்முறைதான் முடிவுரை எழுதும்.  



Monday, May 20, 2019

டெல்லியை மறந்துட்டீங்களா மீடியாஸ்?



இந்திய ஊடகங்கள் வாங்கிய காசுக்கு விசுவாசமாக நன்றாகவே வாலாட்டியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பாஜகவிற்கு சாதகமான ஒரு கருத்துத் திணிப்பை நிகழ்த்தி உள்ளது. யார் வந்தால் தங்களுக்கு நல்லதோ, அவர்களே வரப் போவதாய் மக்கள் சொன்னதாய் ஒரு நாடகம் நடத்தியுள்ளன.

ஆனால் பாவம் இந்திய ஊடகங்கள்!

கடந்த ஐந்தாண்டுகளில் அவர்களின் ஆரூடம் எதுவும் பலிக்கவே இல்லை.

கர்னாடகாவில் பாஜக பெரும்பான்மை பெறும் என்றது. அதிக எண்ணிக்கை பெற்றதே தவிர குதிரை பேரம் நடத்தியும் கூட பெரும்பான்மைக் கோட்டை நெருங்க முடியவில்லை.

பீகாரிலும் பாஜகவின் வெற்றிக் கொடி பறக்கும் என்றது. மகா கூட்டணியின் கொடி பறக்க காவிக் கொடி கிழிந்து தொங்கியது. அங்கே சி.பி.ஐ மூலம் காய் நகர்த்தி நிதிஷ் குமாரோடு ஒட்டிக் கொண்டது ஒரு வெட்கம் கெட்ட செயல்.

சமீபத்தில் முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் கூட மண்ணைக் கவ்வியது பாஜக மட்டுமல்ல, அங்கே எல்லாம் அவர்களுக்கே வெற்றி என்று கூவிய ஊடகங்களுக்கும்தான். 

இவை அனைத்தையும் விட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்களை மறக்க முடியுமா?

பாஜகவிற்கே வெற்றி என்ற ஊடகங்களின் கொக்கரிப்பிற்கு அம்மக்கள் பலத்த அடி கொடுத்து வாயை மூட வைத்தார்கள்.

வரலாற்றை மறக்கும் போது அது மீண்டும் நிகழ்ந்தே தீரும் என்பது விதி. ஊடகங்களுக்கு வரலாறு மீண்டும் பாடம் கற்றுக் கொடுக்கும். 


திடீருன்னு ஒரு டவுட்டு

எலும்புத் துண்டுகளை வீசி எறிபவர்களின் கதை முடிந்து போனால்

வாலாட்டுபவைகளின் நிலை என்ன ஆகும்?



அடுத்த எஜமானனை நோக்கித்தான் செல்லும் . . .

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு செய்யும் ஊடகங்களையோ அல்லது அந்த ஊடக முதலாளிகளையோ சொல்வதாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.