Tuesday, August 28, 2012

வெறியூட்டும் போலி தேச பக்தர்கள்


செகுவாராவின் படம் போட்ட டி.ஷர்ட்டுகளை புறக்கணித்து விட்டு விவேகானந்தர், பகத்சிங், நேதாஜி, சந்திர சேகர் ஆஸாத் ஆகியோர் படங்களை அணிந்து கொள்ளுங்கள் என்று உபதேசம் செய்த கும்பல் வெளியிட்டுள்ள கும்பல் வெளியிட்டுள்ள புதிய படம் கீழே.

ரூபாய் நாட்டுக்களில் காந்தி படத்தை எடுத்து விட்டு சிவாஜி, பகத்சிங், நானா சாஹிப் (அப்படித்தான் நினைக்கிறேன்)   ஆகியோர் படங்களை போட வேண்டும் என்பது இப்போதைய  உபதேசம். இவர்களுக்கு உண்மையிலேயே தேச பக்தி இருந்தால், இன்று நாடும் மக்களும் சந்திக்கும் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஏதாவது செய்ய வேண்டும்.

வறுமைக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக, உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை முன் வைக்க வேண்டும். அதற்காக மக்களை அணி திரட்டி போராட வேண்டும்.

அதை விட்டு விட்டு இது போன்ற வெற்று கோஷங்களை முன்வைப்பது எவ்விதத்திலும் பயன் தராது.

இன்று சிலருடைய படங்களை புதிதாக ரூபாய் நோட்டில் அச்சடித்தால் நாளை  அதுவே ஒரு கோரிக்கையாக, தலை வலியாக மாறிப் போகும்.  ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்று ஆரம்பிப்பார்கள். பிறகு டாடா, அம்பானி என்று கூட கேட்பார்கள்.

தேச பக்தி என்ற பெயரில் வெறியூட்டும் வேலை மட்டுமே இது.



Monday, August 27, 2012

அப்துல் கலாமின் அபத்தம்





சரியான அரசியல் புரிதல் இல்லாதவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
என்பது இடதுசாரிகள் அவர் மீது வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு.
உலகமயமாக்கல் கொள்கைகள்  இந்திய மக்களையும்
இந்தியப் பொருளாதாரத்தையும் எப்படி பாதிக்கிறது என்ற
உணர்வே இல்லாமல் மன்மோகன், சிதம்பரம் வகையறாக்கள்
போல உலக மயத்திற்கு ஆதரவாக நிற்பவர் கலாம்.

இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று கனவு காணச் 
சொல்பவர், அதற்கான கதவுகளை மத்தியரசு அடைத்து
வருகின்றது என்ற யதார்த்தத்தை கண்டு கொள்ளாமல்
இருப்பவர்.

அவரது அரசியல், பொருளாதார புரிதலுக்கு இன்னொரு
உதாரணம், இதோ நேற்று கொல்கத்தாவில் அவர் 
பேசியது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 
அனுமதிக்கலாம் என்று அவர் ஒபாமாவின் வார்த்தைகளை
எதிரொலித்துள்ளார். மார்க்கெட்டிங்கில் தீவிரமாக நாம்
இருந்தால் அன்னிய முதலீட்டுக்காக அச்சப்பட வேண்டிய
அவசியம் இல்லை என்றும் திருவாய் மலர்ந்துள்ளார்.

சில்லறை வர்த்தகம் என்ன வெறும் மார்க்கெட்டிங் 
பிரச்சினையா?

பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் நெறிமுறையற்ற
உத்திகளோடு சாதாரண வணிகர்கள் எப்படி போட்டி
போட முடியும்? அவர்களின் மூலதனத்திற்கு முன்பாக
இந்திய வணிகர்கள், அதுவும் சாதாரண, சிறு வணிகர்கள்
எப்படி சமமாக முடியும்?

சென்னையில் உள்ள பெரிய ஜவுளி நிறுவனங்களும்
நகை விற்பனையாளர்களும் செய்வது போன்ற 
விளம்பரங்களை சாதாரண துணிக்கடை, நகைக்கடை
உரிமையாளர்களால் செய்ய முடியாத போது
வால்மார்ட் போன்ற நிறுவனங்களோடு எப்படி
மார்க்கெட்டிங்கில் தீவிரம் காண்பிக்க முடியும் என்று
அப்துல் கலாம் எதிர்பார்க்கிறார்.

அமெரிக்கா எப்படி  ஆடை களைந்து அசிங்கப்
படுத்தினாலும் அதன் சொல்லே வேத வாக்கு என்று
அப்துல் கலாம் இருந்தால் இறுதியில் அவமானப் படப்போவது
அவர்தான்.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க
மாட்டோம் என்று வீரம் பேசும் மம்தா தீதி அவர்களே!

உங்களால் ஜனாதிபதியாக முன்மொழியப்பட்டவர்,
உங்களுடைய கருத்துக்கு எதிராக, அதுவும்
கொல்கத்தாவிலேயே பேசியுள்ளாரே!
என்ன செய்யப் போகின்றீர்கள்?

உங்கள் வசை மொழி கேட்க ஆவலோடு உள்ளேன்.
உங்களைப் பாராட்டிய அப்துல் கலாமிற்கு நீங்கள்
அளிக்கப்போகும் இழிவுத் தண்டனை என்ன?


Sunday, August 26, 2012

நிலவின் முதல்வனே உனக்கு வணக்கம்



நிலவில் கால் வைத்த முதல் மனிதனே,
சந்திரன் ஒரு கடவுள் அல்ல,
பூமியின் துணைக் கோள் என்ற
அறிவியல் கருத்தை
நிலை நாட்டிய 
மனிதனே,
நீல் ஆம்ஸ்ட்ராங்கே,
கல்லை மிதித்து
அகலிகை சாபம் போக்கிய
ராமன் கதை கற்பனை.
நிலவில் நீ கால் வைத்து
பல கற்பனைக் கதைகளை
கல்லாக்கினாய்,
உலகம் இருக்கும் வரை,
நிலவு இருக்கும் வரை
உன் பெயரும் இருக்கும்
அழியா புகழோடு.
நிலவின் முதல்வனே
உனக்கு வணக்கம்.
 

முருகப் பெருமானே, இந்த அநீதிக்கு நீயும் துணையா?





கிங் பிஷர் விமானம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. வாங்கிய கடனை திருப்பி கட்ட வழியில்லை, கடன் கொடுத்த வங்கிகளும் கூட எப்படி வசூல் செய்வது என்று திணறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் உல்லாச புருஷன் விஜய் மல்லய்யாவிற்கு எந்த கவலையும் இல்லை. எப்படியானாலும் மன்மோகன்சிங் தனக்கு கை கொடுத்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

மன்மோகன்சிங்கோடு நிற்காமல் கடவுளையும் இப்போது துணைக்கு அழைத்திருக்கிறார். கர்னாடகத்தில் உள்ள பிரபலமான குக்கே சுப்ரமணியா ஆலயத்திற்கு தங்கக் கதவுகள் தயாரித்து காணிக்கை வழங்கியுள்ளார்.

அதன் மதிப்பு என்ன தெரியுமா? மூன்று கிலோ தங்கத்தில் எண்பது லட்சம் ரூபாய் செலவில் அந்தக் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. கம்பெனி பிழைக்குமா, பிழைக்காதா, வேலை நீடிக்குமா, நீடிக்காதா, பாக்கி வைத்துள்ள சம்பளத்தொகை கிடைக்குமா, கிடைக்காதா என்று கிங்பிஷர் விமான ஊழியர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விஜய் மல்லய்யாவோ கடவுளுக்கு தங்கக்கதவுகள் தருகிறார்.

திருப்பதி போன்ற பெரிய பெரிய கோவில்களில் கொட்டப்படும் காணிக்கைகள்  உழைப்பவர்களை சுரண்டி சேர்க்கப்பட்ட பணம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

கடவுள் என்பவர் உண்மையிலே இருந்தால், அவர் புராண இதிகாசக் கதைகள் சொல்வது போல நேர்மையானவராக இருந்தால் அவர் விஜய் மல்லய்யா போன்ற மோசடிப் பேர்வழிகள் தரும் காணிக்கைகளை ஏதாவது ஒரு வகையில் நிராகரித்திட வேண்டும்.

அந்த சக்தி கடவுளுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்தான். எப்படி அண்ணா ஹசாரே ஊழலுக்கு காரணமான உள்நாட்டு நிறுவனங்களிடம் ஸ்பான்ஸர் வாங்கிக் கொண்டு ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்தினாரோ, அது போல கடவுள்களின் கோயில்களும் பெரும்பாலும் பணக்காரர்கள் அளிக்கும் காணிக்கை கொண்டே நடக்கிறது.

அநியாயம் செய்பவர்களையும் அராஜக, ஊழல் பேர்வழிகளையும் எந்த கடவுளும் இப்போது துஷ்ட நிக்கிரக பரிபாலனம் செய்வதாகத் தெரியவில்லை. மாறாக அவர்களுக்குத்தான் அருள் பாலிக்கிறார்கள். அவர்களும் கடவுளுக்கு கையூட்டாய் காணிக்கை வழங்குகிறார்கள்.

எனவேதான் நான் கேட்கிறேன்.

விஜய் மல்லய்யாவிடம் தங்கக் கதவுகள் வாங்கிய

முருகப் பெருமானே இந்த அநீதிக்கு நீயும் துணையா?

பின் குறிப்பு : நேற்று நான் அளித்திருந்த தலைப்பு வேறு. கடவுள்
நம்பிக்கை உள்ளவர்கள் மனம் புண்படுவதாக சிலர் தெரிவித்தனர்.
கம்யூனிஸ்டுகள் மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர்கள்.
தலைப்பை விட கருத்துதான் முக்கியம். ஆகவே தலைப்பை
மாற்றி விட்டேன்.

Friday, August 24, 2012

இந்தத் தகவல் உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் வயிறெரிச்சல் அதிகமாகும் ....



மிகக் குறைவான விலையில் பெட்ரோல் விற்கும்  பத்து நாடுகள் எவை என்று தெரியுமா? அங்கேயெல்லாம் ஒரு லிட்டர்  பெட்ரோல் எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா?

இதோ உங்களுக்காக அந்த தகவல்

வெனிசூலா                 7.01
எகிப்து                      7.89
சவுதி அரேபியா            8.76
கத்தார்                      10.52
பஹ்ரைன்                  13.15
லிபியா                     13.15
குவைத்                     14.90
துர்க்மேனிஸ்தான்         14.90
அல்ஜீரியா                  14.90
இராக்                       18.41


இது அத்தனையும் ரூபாய் மதிப்பில்தான். இந்தியாவில் ஒரு லிட்டர் ரூபாய் எழுபத்தி ஏழு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நாடுகள் எல்லாம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், அதனால் அங்கே விலை மலிவு என்று சிலர் வாதிடலாம். நாம் மறக்க முடியாத ஒரு உண்மை ஒன்று உண்டு.

கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து சந்தைக்கு அனுப்ப ஆகும் செலவை விட பல மடங்கு நாம் வரியாக அரசுக்கு தண்டம் அழுது கொண்டிருக்கிறோம். உள்நாட்டு உற்பத்திக்கும் இறக்குமதி ஆகும் எண்ணெய்க்கான விலையை தந்து கொண்டிருக்கிறோம்.

இன்னொரு விஷயமும் உண்டு. இந்த நாடுகள் எண்ணெய் உற்பத்தி செய்வதாலேயே தனது மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. கூடுதல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளை லாபம் அடிக்கலாமே?

இந்திய அரசைப் போல அவ்வளவு மோசமான அரசாக அவர்கள் இல்லை என்பதுதான் உண்மை!

Thursday, August 23, 2012

தின மலர் பத்திரிக்கையின் வக்கிரம்

வக்கிரமான செய்திகளையும் தலைப்புக்களையும் வெளியிடும்
தின மலர் பத்திரிக்கையின் விஷமத்தனம் இன்றும் 
வெளிப்பட்டுள்ளது.

வங்கித்துறையை பாதுகாக்க ஒரு தேச பக்த கடமையாக
வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் நேற்றும் இன்றும்
வெற்றிகரமான ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை
நடத்தினார்.

வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதே என்று சிலருக்கு
எரிச்சல் வரலாம். ஆனால் இந்த வேலை நிறுத்தம்
இல்லையென்றால், வேலை நிறுத்தக் கோரிக்கைகள்
வெற்றி பெறாவிட்டால் இந்தியாவில் உள்ள 
சாமானிய மனிதர்களுக்கு என்றுமே வங்கிச் சேவைகள்
கிடைக்காது. இது பற்றி பிறகு விரிவாக பார்ப்போம்.

இப்போது தினமலரின் வக்கிரத்திற்கு வருவோம்.

நாளிதழுக்கான சுவரொட்டியில் "ஐந்து வங்கிகள்
திறப்பு" என கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தார்கள்.
உள்ளே பார்த்தால் வேலை நிறுத்தம் பற்றிய முழுமையான
செய்திகள்,  பத்து லட்சம் பேர் கலந்து கொண்டது, பணிகள்
முடங்கியது எல்லாவற்றையும் பிரசுரித்து விட்டு, புதிய
வங்கிகள் ஐந்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து 
கொள்ளவில்லை என்று போகிற போக்கில் எழுதி
இருந்தார்கள்.

வெற்றிகரமான வேலை நிறுத்தம் என்பதுதான் உண்மை.
அதை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் சுவரொட்டியில்
ஐந்து வங்கிகள் திறப்பு என போட்டு தனது வக்கிரத்திற்கு
வடிகால் தேடிக்கொண்டது.

நாயை மனிதன் கடித்தால்தான் செய்தி என்ற கொள்கை
உள்ள தினமலரிடம் நேர்மை, நாணயம் இவற்றையெல்லாம்
எதிர்பார்த்தால் நாம் முட்டாள்கள்.

நடிகர் அமீர்கானை கண்டித்து ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம்




மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். வேலை நிறுத்தத்தின் முக்கியக் கோரிக்கைகள்.

மருத்துவப் பிரதிநிதிகள் பணி செய்வதை மும்பையில் உள்ள சில கார்ப்பரேட் மருத்துவமனைகள் தடை செய்துள்ளன. அதைக் கண்டித்தும் மருத்துவப் பிரதிநிதிகள் பணி செய்வதை சட்ட பூர்வ உரிமையாக்க வேண்டும் என்பது ஒரு முக்கியக் கோரிக்கை.

மருந்து உற்பத்தி நிறுவனங்களும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் செய்கின்ற ஊழல்கள், நெறி முறையற்ற வணிக நடைமுறைகள் ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.

நோயாளிகளுக்கு பயனளிக்கக் கூடிய விதத்தில் மருந்துக் கொள்கையை மத்தியரசு உருவாக்க வேண்டும் என்பது இன்னும் ஒரு கோரிக்கை.

வேலை நிறுத்தத்திற்கான இன்னொரு முக்கியமான காரணம் நடிகர் அமீர்கான் மருத்துவப் பிரதிநிதிகளை இழிவாகப் பேசியதை கண்டிப்பது.

சத்தியமேவ ஜெயதே நிகழ்ச்சியில் சுகாதாரம் பற்றி விவாதிக்கையில் மருத்துவத்துறை ஊழல்களுக்கெல்லாம் மருத்துவப் பிரதிநிதிகள்தான் காரணம், மருத்துவப் பிரதிநிதிகள் ஊழல்களின் தரகர்கள் என அவர் பேசியுள்ளார். சரியான புரிதல் இல்லாமல் ஒரு தரப்பு கூறியதை வைத்து அமீர்கான் பேசியது கண்டிக்கத்தக்கது.

மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. அந்த லாபத்தை அவர்கள் தக்க வைக்க வேண்டுமானால் அதற்கு மருத்துவர்களின் தயவு தேவை. மருத்துவம் இன்று முற்றிலுமாக வணிக மயமாகி விட்டது. அதனை ஏழை மக்களுக்கான சேவை என பார்க்கக் கூடிய மருத்துவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருபது லட்சமும் முப்பது லட்சமும் நன்கொடை கொடுத்து சீட் வாங்கி படிப்பவர்களிடம் சேவை மனப்பான்மையை எதிர்பார்ப்பது மூடத்தனம். அப்படி மூலதனத்தை போட்டு மருத்துவராகின்றவர்கள் போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்றுதான் பார்க்கிறார்கள்.

அவர்களின் ஆசைக்கு தீனி போடுவது மருந்துக் கம்பெனிகள். பரிசுப் பொருட்கள், இன்பச் சுற்றுலாக்கள், வெளி நாட்டுப் பயணங்கள் என ஏற்பாடுகள் நடக்கின்றன. கருத்தரங்குகள் என்று சொல்லப்பட்டாலும் அதன் நோக்கம் வேறாகத்தான் இருக்கிறது.

எனவே மருத்துவத்துறையின் ஊழல் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் மருந்துக் கம்பெனிகள் என்றால் மறு பக்கம் மருத்துவர்கள். இவர்கள் இருவர் மீதும் எந்த விமர்சனமும் வைக்காமல் மருத்துவப் பிரதிநிதிகளை மட்டும் குறை சொல்வது எப்படி நியாயமாக இருக்கும்?

சில சந்தர்ப்பங்களில் வேண்டுமானால் பரிசுப் பொருட்களை மருத்துவரிடம் சேர்ப்பது வேண்டுமானால் மருத்துவப் பிரதிநிதிகளாக இருக்கலாம். ஏனென்றால் பெரும்பாலான சமயங்களில் மருத்துவப் பிரதிநிதிகளை நம்பாமல் இந்தப் பொருட்களை மேலாளர் மட்டத்தில் உள்ளவர்களே நேரடியாக அளிக்கின்றார்கள்.

உண்மை நிலை இவ்வாறிருக்க “ எய்தவன் இருக்க அம்பை நோவானேன் “ என்பது போல மருத்துவப் பிரதிநிதிகள் மீது சேற்றை வாரி இறைத்துள்ளது மிகவும் மோசமான ஒன்று. சமூக அக்கறையுள்ள கலைஞனான அமீர்கான், சாதாரண நடுத்தர ஊழியர்களான மருத்துவப் பிரதிநிதிகள் மீது சொல்லப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும்.

அப்போதுதான் அவரை ஒரு நேர்மையான, நடுநிலையான மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியும்.

தங்களின் சுய மரியாதையை பாதுகாக்க, தன் மானத்தோடு மருத்துவப் பிரதிநிதிகள் நடத்திய வேலை நிறுத்த, ஆர்ப்பாட்ட முழக்கங்கள்  அமீர்கானின் செவிகளையும் நிச்சயம் எட்டியிருக்கும். அடுத்த நிகழ்ச்சியில் அவர் வருத்தம் தெரிவிக்கிறாரா என்று பார்ப்போம்.