Thursday, September 3, 2020

கொரோனாவின் பெயரால் - திமிரா? பயமா?

 


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. 

இந்த கூட்டத் தொடரில் கேள்வி நேரமும், உறுப்பினர்கள் நோட்டீஸ் எதுவும் இல்லாமல் எந்த பிரச்சினையையும் எழுப்ப வாய்ப்பளிக்கும் பூஜ்ஜிய நேரமும் (ZERO HOUR) ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவின் பெயரைச் சொல்லி நடந்துள்ள அராஜகம் இது.

எதிர்க்கட்சிகளின் உரிமைகளை முடக்கும் ஜனநாயகப் படுகொலை இது.

ஏன் இந்த முடிவு? நாங்கள்தான் பெரும்பான்மை என்ற வழக்கமான திமிரா அல்லது கேள்விகளை சந்திக்க முடியாத பயமா?

அதிகரிக்கும் கொரோனா தொற்று

மோடியின் மர்ம நிதி,

பெருகி வரும் வேலையின்மை

குறைந்து போகும் ஒட்டு மொத்த உற்பத்தி

மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி யை ஏமாற்றுவது,

புதிய கல்விக் கொள்கை

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை

சீனாவுடனான பிரச்சினையில் முரண்பாடான அறிக்கைகள்


இப்படி  ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளிக்க கையாலாகாத ஒரு கேடு கெட்ட அரசு ஜனநாயக படுகொலையை நிகழ்த்துகிறது.

அவர்கள் சில மசோதாக்களை நிறைவேற்றப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான்  இக்கூட்டத் தொடர்.

அதுவும் நடக்காவண்ணம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் நடக்க முடியாவண்ணம் முடக்கிட வேண்டும்.

மக்களுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேறாமல் தடுப்பது நாடாளுமன்றம் செயல்படுவதை விட நல்லதுதான்.

Wednesday, September 2, 2020

எங்கே செல்வாய் அரசே?

 


 

முன்பு எப்போதோ படித்தது. முழுமையாக நினைவுக்கு வரவில்லை.

 

கடைசி சொட்டு தண்ணீரும் தீர்ந்து,

கடைசி பருக்கை சோறும் தீர்ந்த பின்,

அசைவதற்கு ஒற்றை இலை கூட

இல்லாத போதுதான்

பணத்தை சாப்பிட முடியாதென்று

உனக்குப் புரியும்.

 

சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக சொல்லப்பட்டது அது.

 

கோவிட் தொற்றுக்குப் பின் ஒட்டு மொத்த உற்பத்தி மிகவும் பாதிக்கப் பட்ட நாடுகளில் முன்னணியில் இருப்பது இந்தியா.

 


இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத அரசு மோடி அரசு. மயிலோடும் வாத்தோடும் நாயோடும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் மட்டுமே தன் பொழுதை வெட்டியாக கழிக்கிற பிரதமரைக் கொண்ட பரிதாபத்திற்குரிய நாடு இந்தியா.

 

இப்படி அதல பாதாளத்தில் பொருளாதாரம் போய்க் கொண்டிருக்கிற சூழலிலே இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கிற எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி செய்கின்றீர்களே மோடி வகையறாக்களே!

 

பங்குச் சந்தை சரிந்தால் கை கொடுப்பது எல்.ஐ.சி,

ரயில்வேவுக்கு கடன் வேண்டுமானால் கொடுப்பது எல்.ஐ.சி

சாலை அமைக்கவும் எல்.ஐ.சி,

பாலம் கட்டவும் எல்.ஐ.சி

மத்தியரசுக்கும் எல்.ஐ.சி

மாநிலங்களுக்கும் எல்.ஐ.சி.

 

இப்படி அள்ளி அள்ளி கொடுக்கிற எல்.ஐ.சி யில் நாளை தனியாரும் பங்குதாரராக வந்து

 

இதெல்லாம் அவசியமில்லை, என் லாபத்திற்கேறார் போல செயல்படு என்று

 

மிரட்டினால்

 

அரசுக்கு தேவையான நிதிக்கு எங்கு செல்வீர் புத்திமான்களே?

எல்.ஐ.சி - 65 மகிழ்மதி தேசத்தின் பாகுபலியாய்...

- கற்பனை: க.சுவாமிநாதன் & நா.சுரேஷ்குமார்



 எல்.ஐ.சி பேசுகிறேன்

எனதருமை இந்திய மக்களே இன்று எனக்கு 65வது பிறந்த நாள். எனது வாழ்க்கை முழுவதும் உங்களோடுதான் மிக நெருக்கமாக இருந்து வந்தி ருக்கிறேன். எனது பிறந்த நாள் மகிழ்ச்சியை உங்களோடு பகிராமல் யாரோடு பகிர்ந்து கொள்வேன்!

கொரோனா பெருந்தொற்று காலம் இது. அன்றாட வாழ்வு துவங்கி... விலை மதிப்பில்லா ஆயுள் வரை... எல்லாம் நம்மை அச்சுறுத்தும் நேரம். ஆயுளின் மதிப்பை அனுபவத்தில் நான் அதிகம் அறிந்திருக்கிறேன். எத்தனையோ குடும்பங்க ளின் துயரில் பங்கேற்று இருக்கிறேன். அச்சம் வேண்டாம். பாதுகாப்புடனும் இருங்கள். நான் ஏன் பிறந்தேன்? பாகுபலி திரைப்படத்தில், பாகுபலி கொல்லப்பட்டு விட்டானே? என்ற அச்சத்தில் மகிழ்மதி மக்கள் திரண்டிருக்க, வஞ்சம் நிறைந்த அச்சூழலில், பிறந்த பச்சிளம் குழந்தையைத் தாங்கிய தனது இரு கைகளை தலைக்கு மேல் உயர்த்தி இதோ, உங்கள் புதிய அரசன் மகேந்திர பாகு பலி என ராஜமாதா அறிவிக்கும் காட்சியைப் பார்த்திருப்பீர் கள். எனது ஜனனமும் அப்படியே நிகழ்ந்தது.

பாகுபலியை மகிழ்மதி மக்கள் இழந்தது போல் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் போட்ட தங்களின் வியர்வை வீசும் சேமிப்புகளை இழந்திருந்தனர். 25 தனியார் இன்சூ ரன்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டன. 1955ஆம் ஆண்டு கணக்கு களை 66 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கெடு தேதி தாண்டியும் சமர்ப்பிக்காமல் இருந்தன. 1954 கணக்குகளை சமர்ப்பிக்காத தனியார் நிறுவனங்கள் 23. சிறப்பு நிர்வாக அலுவலரின் கைக்கு வந்துவிட்ட 11 நிறுவனங்களையும் சேர்த்தால் 100 நிறுவனங்கள் சிக்கலில் இருந்தன. நாடாளு மன்றத்தில் பேசிய ஃபெரோஸ் காந்தி, ஆம் இந்திரா காந்தியின் கணவர், “பல தனியார் கம்பெனிகளை காணவில்லை... கம்பெனிகள் இருந்தால் மேலாண்மை இயக்குனர்களைக் காணவில்லை”. என்றார். அந்த நேரத்தில்தான் மகேந்திர பாகு பலியை கரங்களில் ராஜமாதா தாங்கியது போல என்னை பாரத மாதா தாங்கியிருந்தாள். ஜனவரி 19, 1956 நான் கருக் கொண்ட நாள். அன்றுதான் 245 நிறுவனங்கள் தேசியமய மாகிறது என்ற அறிவிப்பை அன்றைய நிதியமைச்சர் சிந்தா மணி தேஷ்முக் அறிவிக்கிறார். செப்டம்பர் 1ல் நான் உதய மானேன். பாரத மாதாவின் மடியில் தவழத் துவங்கினேன். என் மீது பாரத அன்னைக்கு நிறைய எதிர்பார்ப்புகள். என் கடமைகள் என்ன என்பதை என்னைத் தாலாட்டும் போதே சொன்னாள். “இன்சூரன்ஸ் பாதுகாப்பை இந்த நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துச் செல்” என்றாள். “இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் சேமிப்புகளைத் திரட்டிக் கொண்டு வா” என்றாள்.

தாய் மாமன் போல என் ஜனனத்தை கனவு கண்டவர்கள் உண்டு. பிறந்த போது கொண்டாடியவர்கள் உண்டு. ஆம்... எனது பிறப்பிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, 1951 ஜூலை 1ஆம் தேதியன்றே, “இந்திய ஆயுள் இன்சூரன்ஸை தேசியமயமாக்க வேண்டும்” என்பதை தங்களது முதல் தீர்மானமாக தனது துவக்க மாநாட்டில் வாசித்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். நான் கருக் கொண்ட தை நாடாளுமன்றத்தில் அறிவித்த  சிந்தாமணி தேஷ்முக் “நான் இங்கு ஒன்றை கூடுதலாக கூற விழைகிறேன். தேசிய மய முடிவை வரவேற்று நான் பெற்ற முதல் தந்தி இன்சூரன்ஸ் ஊழியர்களிடம் இருந்து” என தாய் மாமன் மகிழ்ச்சியை அந்த சபைக்குத் தெரிவித்தார். அந்த அரவணைப்பை இன்று வரை நான் உணர்கிறேன். அலுவலகத்திற்குள் நேர்மையான சேவையை தருவதன் மூலம் எனக்கு சமூகத்தில் நற்பெயர் தருகிற முதல்நிலை அதிகாரிகளின், ஊழியர்களின் பங்க ளிப்பையும் நினைவு கூர்கிறேன். நான் தவழ்ந்து, நடை பயின்று, நாடு முழுவதும் மக்களாகிய உங்களைத் தேடி ஓடினேன். அன்னை செவிக ளில் கொஞ்சி சொன்ன கடமைகளை நினைவில் கொண்டு நிறைவேற்றினேன்.

“கடைக்கோடி மனிதனுக்கும் ஆயுள் காப்பீடு பாதுகாப்பு சென்றடைய வேண்டும்”.

இன்று 65 ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கிறேன். 1956ல் இந்தியாவின் மக்கள் தொகை 41 கோடி. எல்.ஐ.சியின் பாலிசிகள் 55 லட்சம். 2020ல் மக்கள் தொகை 138 கோடி. பாலிசிகளோ 42 கோடி. எனதருமை மக்களே... மக்கள் தொகை 3 மடங்குக்கு கொஞ்சம் அதிகமாக வளர்ந்துள்ளது. ஆனால் பாலிசி எண்ணிக்கையோ 76 மடங்கு பெருகி யுள்ளது. காரணம் எனது கரங்கள் இரண்டிற்குள் ஒளிர்ந்த அகல் விளக்கு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்றது. சமூகத்தின் அடித்தள மக்களின் குடிசைகள், குக்கிராமங்களில் கூட அது இன்சூரன்ஸ் ஒளியை ஏற்றியது.

என் தூதர்களாக உங்கள் மத்தியில் வலம் வரும் 11 லட்சம் முகவர்களை நான் சொல்லாமல் இருக்கலாமா? வளர்ச்சி அதிகாரிகளை குறிப்பிடாமல் இருக்கலாமா? அவர்கள் இல்லாமல் என் பயணம் கிடையாது. இன்சூரன்ஸ் விழிப்பு ணர்வு இல்லாத 60, 70களில் அவர்கள் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா? உங்களோடு அளவளாவி, இன்சூரன்ஸின் அரு மையை எடுத்துச் சொல்லி, மனதால் நெருங்கி எனக்கும் உங்களுக்கும் இடையே உறவுப் பாலம் அமைத்தவர்க ளல்லவா! இன்றும், ஆன்லைன்... கார்ப்பரேட் முகவர்கள்... புரோக்கர்கள்... பாங்கஸ்யூரன்ஸ்... இப்படி எத்தனையோ வழிகள் வணிகத்திற்காக திறந்தும் 95 சதவீத வணிகத்தை இவர்கள்தான் கொண்டு வருகிறார்கள். இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் கூட மொத்தம் விற்பனையான 1912611 பாலிசிகளில் இவர்கள் கொண்டு வந்தது 1832830 பாலிசி கள். 11 லட்சம் பேர் என்னைச் சார்ந்து வாழ்வாதாரத்தைக் கொண்டிருப்பது போல் இந்தியாவில் வேறு எந்த நிறுவ னத்திற்கு இத்தனை பேர் இருக்கிறார்கள்!

“மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே” இதுவும்  தாலாட்டின் போது என் காதுகளில் விழுந்த வார்த்தைகள். 

நான் பிறந்த போது இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமும் பிறந்தது. 184 கோடிகள் அன்று எனது பங்களிப்பு. ஐந்தாண்டுத் திட்டங்களும் என்னோடு சேர்ந்தே வளர்ந்தன. எனது வலிமையின் காரணமாக தோள்களில் சுமந்தேன். என் முதுகின் மீது ஏறி இலக்குகளை அவை தொட்ட துண்டு. ரயில், நெடுஞ்சாலை, மின்சாரம், குடிநீர், சாக்கடை வசதிகள் என எவ்வளவோ சவாரிகளுக்கு என் தோள் கொடுத்தேன். முதுகு மீது ஏறச் சொன்னேன். இந்த பட்டிய லைப் பாருங்கள். இது என்னால் 1956லிருந்து ஐந்தாண்டுத் திட்டங்கள் வளர்ந்த கதை. அழகான சித்திரக் கதை. 

    திட்டம்    தொகை    திட்டம்    தொகை    திட்டம்    தொகை

-------------------------------------------------------------------------------------------------------

           II                184             VI                  7140            X              394779

          III                285             VII                 12969          XI             704720 

          IV               1530           VIII                 56097         XII            1423055

           V               2942           IX                  170929

இதுவரை மொத்தம் சுமார் 34 லட்சம் கோடிகள் தரப்பட்டுள்ளது. அரசு உத்தரவாதம் என்ற கவச குண்டலமும் எனக்கு உண்டு. கர்ணன் எப்படி வாரி வழங்கினானோ அப்படி நானும் இந்தியப் பொருளாதாரத்திற்கு வழங்கி வருகிறேன். ஆனாலும் அரசு உத்தரவாதம் என்கிற கவச குண்டலத்தைப் பயன் படுத்துகிற தேவை ஒரு தடவை கூட எனக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு கவசம் தேவைப்படவில்லை. ஆனால் நான் இந்த தேசத்திற்கு கவசமாக இருந்துள்ளேன்.  எனது 65வது பிறந்த நாளை உங்களோடு கொண்டாடு வதை விட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்!  

அன்புடன், எல்.ஐ.சி


மக்கள் பேசுகிறோம்!


எங்கள் அன்பு எல்.ஐ.சியே!  பிறந்த நாள் வாழ்த்துக்கள். உனது வார்த்தைகள் உண்மையானவை. எங்களை நெகிழ வைக்கிறது. நீ எங்கள் மனதில் நிற்பதற்கு காரணமே நீ வார்த்தையை காப்பாற்றுவதால்தானே. எங்கள் சேமிப்பை உன்னிடம் தந்த பிறகு எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறோம்! ஆகவே உன் வலிமை எங்கள் சேமிப்பின் வலிமை. தேசத்தின் வலிமை. 

பாரத மாதா உன்னை உயர்த்தி காண்பித்து காப்பீட்டு தேசத்தின் அரசுரிமைக்கானவராய் அறிவித்த நாள் இந்திய பொருளாதார வரலாற்றில் முக்கியமான நாள். நீ வளர்ந்த கதை நாங்கள் வளர்ந்த கதை. இந்த தேசம் வளர்ந்த கதை. அக் கதையின் இரண்டாம் பகுதிக்கு வருகிறோம். 1980களுக்குப் பின் நீ நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறாய்.

பழுத்த மரத்தில் கல்லடி படாமல் இருக்க முடியுமா? அந்நியர் கண்கள் முதலில் விழுந்தன. பிறகு உள்நாட்டுத் தனியார் கண்களும் விழுந்தன. 1981ல் எல்.ஐ.சியை ஐந்து கூறுகளாக பிரிக்கிற மசோதா, 1989ல் இந்திய இன்சூரன்ஸ் துறையை திறக்குமாறு மிரட்டிய அமெரிக்க வர்த்தகச் சட்டம் சூப்பர் 301 ஆகியன வந்தன. எங்களால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை மறக்கவே முடியாது. முகவர்கள் வணிகக் குடையை உனக்கு பிடித்தார்கள் என்றால் தனியார்மய வெயிலில் நாங்கள் வாடாமல் நிழல் தந்தவர்கள் இந்த ஊழியர்கள். இவர்கள் போராடாவிட்டால் இன்று 65 வயதை கொண்டாடுகிற நீ இந்த உருவில் இருந்திருக்க மாட்டாய். ஐந்து கூறுகளாய் எல்.ஐ.சியைப் கூறு போடுகிற மசோதாவை அவர்கள் தடுத்து நிறுத்தி இருக்காவிட்டால்... அமெரிக்க வர்த்தகச் சட்டத்திற்கு இந்த துறை இரையாக்கப்பட்டிருந்தால்.... இவ்வளவு பெரிய குடையை இந்த நாட்டு மக்களுக்காக உன்னால் விரித்திருக்க இயலாது. 

கைகேயி கேட்ட இரண்டு வரங்கள் என்ற பெரும் அபாயம் 1990களில் கதவுகளைத் தட்டத் துவங்கியது. “பரதன் நாடாள வேண்டும்” என்பது முதல் வரம். அது போல 1994ல் அரசு போட்ட மல்கோத்ரா குழு அந்நியர்களை, தனியார்களை இந்திய இன்சூரன்ஸ் துறையில் மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்றது. கைகேயி ஒரு வரத்தோடு நிறுத்தவில்லையே! காரணம், இராமன் நாட்டில் இருந்தால் எப்படி மக்கள் பரதனை நாடாள அனுமதிப்பார்கள்? ஆகவே இராமன் 14 ஆண்டுகள் காட்டிற்குப் போக வேண்டும். அது போல மல்கோத்ரா குழு சொன்னது. எல்.ஐ.சியின் 50 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்றுவிட வேண்டும். எல்.ஐ.சி அப்படியே இருந்தால் மக்கள் எப்படி அந்நியர், தனியார்களை திரும்பிப் பார்ப்பார்கள். வரலாற்று சக்கரத்தை அப்படியே பின்னோக்கி சுழற்ற முயற்சித்தார்கள். மீண்டும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் எங்கள் மத்தியில் வந்தார்கள். இந்தியாவின் தெருக்கள் முழுவதும் கைகளில் கையெழுத்து படிவங்களோடு, முதலில் 65 லட்சம் - இரண்டாவது முறை ஒன்றரைக் கோடி பேர் உனக்காக, நீ எங்களுக்கு ஆற்றும் சேவைக்காக கையெழுத்திட்டோம். ஐந்து ஆண்டுகள் மல்கோத்ரா குழு அறிக்கையை அரசால் அமலாக்க முடியவில்லை. 1997ல் நாடாளுமன்றம் வரை வந்த மசோதா இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பால் பின் வாங்கியது. இடது சாரிகளையும் எங்களால் மறக்க இயலாது.

1999 - இந்திய இன்சூரன்ஸ் துறையில் தனியாரை- 26 சதவீத அந்நிய முதலீட்டோடு அனுமதிக்கிற ஐ.ஆர்.டி.ஏ சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் உனது அரசுத் தன்மை 100 சதவீதம் நீடித்தது. பெரிய பெரிய வெளி நாட்டு பிராண்டுகள் - உள்நாட்டு பிராண்டுகள் களத்தில் உன்னோடு போட்டியில் குதித்தன. இது புதிய அனுபவம்தான். ஆனால் மக்கள் நம்பிக்கை என்ற ஆயுதம்தான் உன் கைகளில் இருக்கிறதே! சந்தைப் போரில் இன்று வரை விடாமல் அவர்களை முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தி வருகிறாய். 2020ல் 24 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களோடு மோதி 75 சதவீத சந்தைப் பங்கை தக்க வைத்திருக்கிறாய். போட்டியாளர்கள் மலைக்கிறார்கள். ஒரு அரசு நிறுவனத்திற்கு இவ்வளவு மக்கள் ஆதரவா என்று. 

எல்.ஐ.சி பங்கு விற்பனையே அடுத்த கட்டம் என ஆட்சியாளர்கள் நகர்கிறார்கள். 2008லேயே ஒருமுறை எல்.ஐ.சி சட்டத் திருத்தம் என முயற்சித்தார்கள். முடியவில்லை. 2015ல் அந்நிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்துவதை செய்தார்கள். இவ்வளவுக்குப் பிறகும் நீ வளர்ந்தாய். தேசத்தின் வளர்ச்சிக்கும் துணை நின்றாய். இன்று வரை உனக்கு இடப்பட்ட இலக்குகளை நோக்கிய பயணத்தில் தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருக்கிறாய். 42 கோடி பாலிசிகளோடு எங்களை சுமந்து கொண்டு நீ ஓடுவது எவ்வளவு இனிமையானது. இதுதானே இந்திய அன்னையின் கனவு.

இன்னும் உன் மீது நிறைய எதிர்பார்ப்புகளை நாங்கள் வைத்திருக்கிறோம். “இன்சூரன்ஸ் பாதுகாப்பு இடைவெளி” அதாவது ஆண்டு வருமானத்தைப் போல 10 மடங்கு காப்பீட்டுத் தொகைக்கு மக்கள் பாலிசிகள் எடுத்திருக்க வேண்டும். நீ எங்கள் கதவுகளை எல்லாம் தட்டுவதால் உனக்கு எங்களில் பலர் வருமானம் இல்லாமல், பணிப் பாதுகாப்பு இல்லாமல், கைக்கும் வாய்க்கும் எட்டாமல் தவிப்பதெல்லாம் தெரியும். அதுவும் இந்த இடைவெளிக்கு காரணம். “வாங்கும் சக்தி” எங்கள் கைகளில் அதிகரிக்க வேண்டும். இது எல்லாமே உன் கைகளில் இல்லாவிட்டாலும், எங்களின் ஆதங்கத்தையும் சேர்த்து உன்னிடம் சொல்கிறோம். ஆனாலும் உன் கரங்களால், விரல்களால் பற்றி எங்கள் எல்லோரையும் அழைத்து செல்கிறாய். வெற்றியும் பெற்றுள்ளாய். வாங்கும் சக்தி உள்ளவர்கள், வசதி படைத்தவர்களும் உன்னையே நம்பி இருக்கிறார்கள். ஆகவே இந்த இடைவெளி இன்னும் சுருங்கும். 

2020ல் மீண்டும் பங்கு விற்பனை  கதவுகளை தட்டுகிறது. 5லிருந்து 10 சதவீதம் வரையிலாவது பங்கு விற்பனை செய்து விட வேண்டும் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். இதிலேயே 1 லட்சம் கோடி கிடைக்கும், பட்ஜெட் பள்ளத்தை நிரப்பலாம் என கணக்கு போடுகிறார்கள். ஆனால் விசித்திரமான நாடகத்தை இன்று இந்தியா பார்க்கிறது. வழக்கமாக தனியார் மயத்திற்கு சொல்லப்படும் காரணங்களை ஆட்சியாளர்கள் உன் மீது சொல்ல முடியவில்லை. நஷ்டம், திறமையின்மை, சேவை பரவலில்லை, நுகர்வோர் தெரிவு குறைவு... இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூட உன் மீது வைக்க முடியவில்லை. 100 கோடி முதலீட்டில் ஆண்டுக்காண்டு அரசுக்கு 2600 கோடி டிவிடெண்ட், 10000 கோடி செலுத்துகிற வரிகள், ஒவ்வொரு ஆண்டும் ரூ .4 லட்சம் வரை முதலீடுகளுக்கு தரும் உபரி... எங்கே இது நடக்கும்! எங்கள் ஆதரவு உண்டு. எங்கள் சேமிப்பு எங்கள் வியர்வை. எங்கள் ரத்தம்.

புதிய வாதங்களை ஆட்சியாளர்கள் முன் வைக்கிறார்கள். ஒரு காரணம், பங்குச் சந்தையில் உள்ள சில்லரை முதலீட்டாளர்கள் பயன்பெறுவார்கள் என்கிறார்கள். எல்.ஐ.சியின் மீதான கண்காணிப்பு செபி போன்ற நிறுவனங்களால் பலப்படும் என்கிறார்கள். சிரிப்புதான் வருகிறது. பங்குச்சந்தையின் சில்லரை முதலீட்டாளர்கள் இந்திய மக்கள் தொகையில் 3 சதவீதம் கூட கிடையாது. ஆனால் 42 கோடி பாலிசிகளை வைத்திருக்கும் எங்கள் கருத்து அல்லவா முக்கியமானது! எல்.ஐ.சியை நாடாளுமன்றமே கண்காணித்து வருகிறது. ஐ.ஆர்.டி.ஏ கட்டுப்பாடுகள் உள்ளன. இதில் என்ன பலவீனங்களை அவர்கள் கண்டிருக்கிறார்கள்! ஆனால் செபி கட்டுப்பாட்டை மீறி எத்தனை மோசடிகள் பங்கு சந்தையில்... அர்சத் மேத்தா, கேதன் பரேக், சத்யம் ராமலிங்கராஜ், இப்ப கூட நீரவ் மோடி... இப்படி எத்தனை எத்தனை.... ஆகவே இந்த புதிய அம்புகளும்  முறிந்து போகும், முனை மழுங்கி கீழே விழும்.

அபாயங்கள் வரலாம். ஆனால் எங்கள் ஆதரவோடு நீ (எல்.ஐ.சி) எதிர்கொள்ளும்; இடர்களைக் கடக்கும். மக்கள் விரல்களும் எல்.ஐ.சியின் விரல்கள் கோர்க்கும் போது கவலை ஏது! கோவிட் காலத்திலும் உன் கதவுகள் திறந்து இருக்கின்றன. உன் தூதர்கள் முகவர்கள் எங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். 

பாரத மாதா கைகளில் ஏந்தி எங்களுக்காக அர்ப்பணித்த பாகுபலியாய் உன் கடமை தொடரும்.

2020 செப் 1, இன்று உனது 65ஆவது பிறந்த நாள். எல்லோருக்கும் ஆண்டு கூடக் கூட வயது கூடும். உனக்கோ ஆண்டு கூட கூட இளமை கூடுகிறது. காரணம் ஒவ்வொரு புதிய ஆண்டிலும் கோடிக் கணக்கான புதிய பாலிசிகளை பெறுகிறாய். புதிய முகங் களைப் பார்க்கிறாய். எப்படி உனக்கு வயதாகும்! உன் பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட வேறு என்ன மகிழ்ச்சி!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
                                                                                                                                                                                                                                                                                                                                            என்றென்றும் உன்னை நேசிக்கும் 
                                                                                                                                                                                                                                                                                                                                                        இந்தியக் குடிமக்கள்.

Tuesday, September 1, 2020

எல்லையில் நின்றவர் சொல்கிறார்

 மோடி வகையறாக்களைப் பொறுத்த வரை ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக எல்லையில் நிற்பவர்கள் என்றொரு பல்லவியை பாடுவார்கள். எல்லையைக் காப்பவர்களை இவர்கள் காப்பதில்லை என்பதும் ஒழுங்கான உணவு கூட தருவதுமில்லை என்பது வேறு விஷயம்.



இங்கே எல்லையை பாதுகாத்த வீரர் ஒருவர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் திரு சுதிர் வொம்பட்கரே, எல்.ஐ.சி யாரிடம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அதையாவது மோடி வகையறாக்கள் கேட்பார்களா?





எல்.ஐ.சி - ஒளிரும் முன்னுதாரணம்

 



செப்டம்பர் 1, 1956 அன்று பிறந்த இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசிக்கு இன்று 65-வது பிறந்த நாள். எல்ஐசி உலகிலேயே அதிக பாலிசிகளைக் கொண்ட நிறுவனம். அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு முதற்பெரும் பங்களிப்பைச் செய்துவரும் நிறுவனம். இந்தியாவின் பங்குச்சந்தை நிலைகுலையும்போதெல்லாம் அதைத் தாங்கிப்பிடிக்கும் நிறுவனம். அவற்றையெல்லாம்விட முக்கியமான விஷயம், 1991-க்குப் பின்னர், எல்லாப் பொதுத் துறை நிறுவனங்கள் மீதும் கடும் விமர்சனங்களை வைப்பவர்கள்கூட புருவம் உயர்த்தி அண்ணாந்து பார்க்கும் நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது என்பதுதான்!

எல்ஐசியின் பிறப்பானது இந்திய விடுதலையின் கனவு. 200 ஆண்டு இந்திய காப்பீட்டுத் துறை வரலாற்றில் சுதேசி எழுச்சியில் முகிழ்த்த இந்தியக் காப்பீட்டு நிறுவனங்கள், நவீன இந்தியாவின் நிர்மாணத்தில் எல்ஐசியின் பங்கு ஆகியன பெருமைமிகு அத்தியாயங்கள்.

காத்திருக்கும் சவால்கள்

64 ஆண்டுகளில் எல்ஐசியின் வளர்ச்சி, புதிய வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறது. பழுத்த மரம் நோக்கிக் கற்கள் வராமல் இருக்குமா? அந்நிய முதலீடுகளும், இந்தியத் தனியார் கைகளும் 32 ஆண்டுகளாகவே கற்களை வீசுகின்றன. 1983-ல் கொண்டுவரப்பட்ட, எல்ஐசியை ஐந்து கூறுகளாகப் போடுகிற சட்டவரைவில் தொடங்கி, 2015-ல் அந்நிய முதலீட்டு உயர்வு சட்டத் திருத்தம் வரை அடுத்தடுத்த அம்புகள். ஆனாலும், இன்று வரை எல்ஐசி 100% அரசு நிறுவனமாகவே நீடிக்கிறது. இன்னமும், அந்நிய முதலீட்டுக்கு 49% வரையறை என்ற கடிவாளத்தோடுதான் இந்தக் காப்பீட்டுத் தொழில் தொடர்கிறது. ஆயினும் இந்திய மக்களின் இந்நிறுவனத்தைத் தொடர்ந்து பாதுகாப்பது இந்திய மக்களின் கடமை.

2020 நிதிநிலை அறிக்கையில், ‘எல்ஐசி பங்கு விற்பனை’ அறிவிக்கப்பட்டு அதற்கான ஆரம்ப வேலைகளை அரசு தொடங்கியுள்ளதை இந்தத் தருணத்தில் விவாதிக்க வேண்டும். எந்த நியாயத்தின் அடிப்படையில் இதைச் செய்கிறார்கள்? அரசு நிறுவனங்களின் தனியார்மயத்துக்கு 25 ஆண்டுகளாக அரசு சொல்லிவரும் வழக்கமான ‘நியாயங்கள்’கூட எல்ஐசிக்குப் பொருந்தாது. வழக்கமாக அரசு இப்படி நான்கு காரணங்களைப் பல்லவியாகப் பாடும்.

பழைய பல்லவிகள்

நட்டம்! இந்தக் கதையை எல்ஐசியிடம் யாரும் பேசவே முடியாது. ரூ.100 கோடி போட்ட அரசுக்குக் கடந்த ஓராண்டில் மட்டுமே ரூ.2,600 கோடி; ரூ.10,000 கோடிகளுக்கு நெருக்கமாக வரிகள்; நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம், குடிநீர் என ஆதாரத் தொழில் வளர்ச்சிக்குப் பல்லாயிரம் கோடிகள்; ரூ.100 கோடி மூலதனம் என்ற அடித்தளத்தில் உருவாகி இன்று ரூ.32 லட்சம் கோடி சொத்துகள் என்று நிற்கும் பெரும் நிறுவனம் அல்லவா அது!

திறமையின்மை! இந்தப் பருப்பும் இங்கு வேகாது. 2016-ல் நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, ‘கிரீடத்தை அலங்கரிக்கும் தங்க ஆபரணம்’ என்று எல்ஐசியை வர்ணித்தார். ஆயுள் காப்பீட்டுத் தொழிலில் சரக்கு என்பது ‘சத்திய’ங்களைக் காப்பாற்றுவதுதான். 42 கோடி பாலிசிகள் என்கிற மிகப் பெரும் வணிகத் தளத்தை வைத்திருக்கிற ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 98% பாலிசி உரிமப் பட்டுவாடா விகிதத்தையும் பராமரிக்கிறது என்பதைக் காட்டிலும் அதன் நிர்வாகத் திறமைக்கு வேறு என்ன சான்று வேண்டும்?

நுகர்வோர் தெரிவு! இதுவும் இங்கே செல்லாது. 1999-லிருந்து காப்பீட்டுத் தொழிலுக்குள் வந்துள்ள 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் – பெரிய பெரிய அந்நிய, இந்திய தனியார்கள் கைகோப்போடு – வணிகக் களத்தில் இருக்கும்போதும், எல்ஐசியின் சந்தைப் பங்கு 75%. எனில் இதைவிட நுகர்வோர் திருப்திக்கு என்ன வேண்டும்!

இந்தத் துறை இந்தியாவின் மூலை முடுக்குக்கும் செல்ல வேண்டும்! இப்படியும் யாரும் பேச முடியாது. ஏனெனில், காப்பீட்டுத் துறையைக் குக்கிராமத்தினருக்கும் கொண்டுசெல்லும் அன்றைய பிரதமர் நேருவின், அன்றைய நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக்கின் கனவை இன்றும் நிறைவேற்றிவருவதில் எல்ஐசி முன்னணியில் நிற்கிறது. 10,000 மக்கள்தொகை மட்டுமே கொண்ட இந்தியாவின் 3,867 ஊர்களில் 3,367 ஊர்களுக்கு எல்ஐசி அலுவலகங்கள் விரிந்துள்ளன. எல்ஐசி தரும் உரிமப் பட்டுவாடாவின் சராசரித் தொகை ரூ.1.75 லட்சம். ஒரு தனியார் நிறுவனத்தின் சராசரி உரிமப் பட்டுவாடா தொகை ரூ.15 லட்சம். அப்படியென்றால், சாமானியர்களுக்கும் காப்பீட்டுப் பரவலைக் கொண்டுசேர்ப்பது எல்ஐசி தவிர யார்?

புதிய கண்டுபிடிப்புகள்

ஆக, பிடியுங்கள் ஆட்சியாளர்களின் புதிய இரு கண்டுபிடிப்புகளை!

முதலாவது, பங்குச்சந்தையில் உள்ள சில்லறை முதலீட்டாளர்களுக்கு எல்ஐசி பங்கு விற்பனை முடிவு பயனளிக்குமாம். இந்திய நாட்டின் பங்குச்சந்தையில் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள் 4 கோடிப் பேர். அதாவது, இந்திய மக்கள்தொகையில் 3%-கூட இவர்கள் கிடையாது. ஆக, 42 கோடி பாலிசிதாரர்களின் நலனைக் காட்டிலும் இந்த 4 கோடி பேரின் நலன்கள் முக்கியமா என்று அரசு சொல்ல வேண்டும். சரி, அதுவாவது 4 கோடிப் பேரா என்றால், அதுவும்கூட உண்மையாக இருக்கப்போவது அல்ல என்பதையே முந்தைய அனுபவங்கள் சொல்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களான ஜிஐசி ரீ, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் பங்கு விற்பனை 15% வரை செய்யப்பட்டன. அவற்றில் இன்றைய பங்குடமையில் சில்லறை முதலீட்டாளர்கள் கைகளில் எவ்வளவு உள்ளன? ஜிஐசி ரீயில் சில்லறை முதலீட்டாளர் கைகளில் இருப்பது 1.6%. நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் 0.83%. இதுதான் உண்மை.

இரண்டாவது, பங்கு விற்பனை வழி வெளிப்படைத்தன்மை மேம்படுமாம். எல்ஐசியின் கணக்குகள் ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் இணையதளம் வாயிலாக அதன் வணிகம் தொடர்பிலான தகவல்கள் தரப்படுகின்றன. வேறென்ன வெளிப்படைத்தன்மை வேண்டும்? 1988-ல் செபி உருவாக்கப்பட்டது. 1992-ல் ஹர்ஷத் மேத்தா, 2001-ல் கேதன் பரேக், 2009-ல் இராமலிங்கராஜூ, 2013-ல் நேசனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச், 2018-ல் நீரவ் மோடி... இந்த மோசடிகள் எல்லாமே செபியினுடைய மூக்கின் கீழே நடந்தவைதானே.

ஆக, யாருக்குப் படியளக்க எல்ஐசியை பங்குகளாக்கி விற்கத் துடிக்கிறார்கள்?

இரு எதிரிகள்

தொடர் நிதிப் பசியில் ஆழ்ந்திருக்கும் இந்திய அரசு எதையெல்லாம் விற்பது என்று துடிக்கிறது. குறைந்தது ரூ.1 லட்சம் கோடியாவது எல்ஐசி பங்கு விற்பனை வழி கிடைக்கும் என்பதே இந்தக் கணக்குகளின் மையம். அரசின் நிதிதிரட்டலில் ஏற்பட்டுள்ள தோல்வியை மறைக்க எல்ஐசி பங்குகளைச் சந்தைக்கு இழுக்கிறார்கள். அடுத்த காரணம், தனியாரின் நீண்ட கால ஆசை, திட்டம், அரசியல். லாபகரமான தொழில்களிலிருந்து அரசாங்க நிறுவனங்களை வெளியேற்றித் தம் கைக்குள் கொண்டுவர அரசை அழுத்துவது; அதற்கு ஆட்சியாளர்கள் துணைபோவது. இந்த இரண்டு எதிரிகளும் எல்ஐசியை உக்கிரமாக இன்று பார்த்திருக்கின்றன.

எல்ஐசி ஒவ்வொரு சோதனையிலிருந்தும் வெற்றிகரமாக வெளிவருவதற்குக் காரணம், இந்திய மக்களுடனான அதன் பிணைப்பே. ‘மக்கள் சேமிப்பு, மக்கள் நலனுக்கே’ என்ற நோக்கத்தைச் செயலாக்கிவந்திருப்பதால் எப்போதுமே மக்கள் எல்ஐசியைத் தங்கள் பிடியிலிருந்து அதை நகர்த்தும் எந்த முயற்சியையும் எதிர்வினைகளால் தகர்த்திருக்கிறார்கள். எல்ஐசியின் ஊழியர்கள், முகவர்கள் படை பொதுச் சமூகத்தோடு இதைப் பிணைப்பதில் முன்னணியில் நிற்கிறது. ஆக, ஒருபுறம் எல்ஐசி மக்களைக் காக்கிறது, மறுபுறம் மக்கள் எல்ஐசியைக் காக்கிறார்கள். இந்தப் பந்தம் என்றும் தொடர வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது!

- க.சுவாமிநாதன்,தொடர்புக்கு: swaminathank63@gmail.com

துணைத்தலைவர், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு


நன்றி - தமிழ் இந்து 01.09.2020

அழகு தமிழில் ஆதரவாக . . .

 




மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி.




எல்.ஐ.சி நிறுவனம் இந்திய மக்களின் சொத்து. அதனை தனியார் கை கொள்ள அனுமதியோம் என்பதை அரசு உணர்த்துகிற வகையில் 

ட்விட்டரில்

#HBD_LIC 

என்ற ஹாஷ்டேக் உடன் உங்கள் செய்தியை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சிங்கத்தின் கர்ஜனையோடு

 இன்றைய தேதியின் முதல் பதிவை ஒரு சிங்கத்தின் கர்ஜனையோடு துவக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.



இன்று 65 வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் எல்.ஐ.சி நிறுவனத்தை வாழ்த்தி, அதன் பங்குகளை விற்க வேண்டும் என்ற முடிவை மத்தியரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும் பொதுவுடமை இயக்கத்தின் புடம் போட்ட தங்கமுமான தோழர் சங்கரய்யா அவர்களின் வாழ்த்துச் செய்தியை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.



எல்.ஐ.சி நிறுவனம் இந்திய மக்களின் சொத்து. அதனை தனியார் கை கொள்ள அனுமதியோம் என்பதை அரசு உணர்த்துகிற வகையில் 

ட்விட்டரில்

#HBD_LIC 

என்ற ஹாஷ்டேக் உடன் உங்கள் செய்தியை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.