Sunday, January 12, 2020

எதற்கு புத்தகக் கண்காட்சி?



அரசு பற்றியோ அரசாங்கத்தைப் பற்றியோ விமர்சித்து எழுதிய புத்தகங்களை விற்கக் கூடாது என்றால்

எதற்கு புத்தகக் கண்காட்சி?

சமையல் புத்தகங்களையும்
ஜோதிடப் புத்தகங்களையும்

மட்டும் விற்க வேண்டும். 

அதற்கு அப்படி ஒன்று அவசியமே இல்லை.

பிகு : பபாசியின் நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் ஏன் எதிர்வினையாற்றாமல் இருக்கிறார்கள்?


எடப்பாடியின் தவறல்ல . . .



சென்னை புத்தக விழாவை துவக்கி வைத்து எடப்பாடி ஆற்றிய உரை வீடியோ மீமாக உலாவிக் கொண்டிருக்கிறது. அது கீழே உள்ளது.


இதிலே எடப்பாடியின் தவறு எதுவும் இல்லை.

அவருடைய வாசிப்பு அறிவு, இலக்கிய ஞானம் எல்லாம் எவ்வளவு என்பதை அவர் படித்த "சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம்" நூலிலேயே தெரிந்து விட்டது. 

அதற்கு பின்பும் அவரை புத்தக விழாவிற்கு அழைத்து வந்து வாசிப்பு பற்றியெல்லாம் பேசச் சொன்னால் என்ன நியாயம்?

எப்படி மண்டியிடுவது?
எப்படி தவழ்ந்து கொண்டே சென்று காலில் விழுவது?
எப்படி டயரை கும்பிடுவது?

போன்ற அவரது கடந்த கால செயல்பாடுகள் பற்றியோ

அல்லது

எப்படி கோடிக்கணக்கில் சம்பாதிப்பது?
ஆட்சியை எப்படி பாதுகாத்துக் கொள்வது? 

போன்ற அவருடைய துறைகளைப் பற்றி பேசச் சொல்லியிருந்தால் தூள் கிளப்பியிருப்பார்.

அந்த வாய்ப்பை கொடுக்காதது யார் தவறு?


Saturday, January 11, 2020

தோழர் சு.வெவிற்கு விருது. பொறாமையில் சிலர்




கனடாவில் செயல்படும் இலக்கியத் தோட்டம் அமைப்பு தமுஎகச மாநிலத் தலைவரும் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினருமான தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு "இயல் வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்க உள்ளது.

வாழ்த்துக்கள் தோழர் சு.வெ.

ஒரு படைப்பாளியாகவும் களப் பணியாளராகவும் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே மக்களவை உறுப்பினராக முத்திரை பதித்து வரும் தோழர் சு.வெ இந்த விருதிற்கு மிக மிக பொருத்தமானது.

தோழர் சு.வெ விற்கு காவல் கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்த போதே சில இலக்கிய வாதிகள் பொறாமையில் புழுங்கி புலம்பினார்கள்.

வேள்பாரி நாவலுக்கு தமிழ் வாசகர்கள் மத்தியில் கிடைத்த சிறப்பான வரவேற்பு அந்த பொறாமைத் தீயை வளர்த்தது. மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு கிடைத்த போது கிட்டத்தட்ட மாரடைப்பு வராத குறைதான். அவர் தோற்றுப் போக வேண்டும் என்ற அவர்களின் பிரார்த்தனை பொய்த்துப் போனதில் கிட்டத்தட்ட செத்துப் போனார்கள்.

இப்போது கனடா நாட்டு இயல் விருது கிடைத்ததும் அவர்களால் தாங்கவே முடியவில்லை.

அதிலும் தேவிபாரதி என்ற பெயரில் எழுதும் ராஜசேகரன் அவர்கள் இன்று முக நூலில் எழுதிய பதிவு அநாகரீகத்தின் உச்சம்.  தன் குடும்பப் பிரச்சினையைப் பற்றி முக நூலில்  பக்கம் பக்கமாக எழுதி அனுதாபம் தேட முயற்சித்த ஒரு நபர் அவர். படைப்பாளி என்று அழைக்கப்படுவதற்கான அருகதையை அந்த பதிவு மூலம் சுத்தமாக இழந்து விட்டார்.

அவரை நியாயப்படுத்த பின்னூட்டமிட்ட பலரின் கருத்துக்களும் அவருடையது போலவே கேவலமாகவே இருந்தது. இடதுசாரிகள் மீதான காழ்ப்புணர்வு என்பதைத் தாண்டி அக்கருத்துக்களில் எதுவும் இல்லை. அந்த பதிவை பகிர்ந்து கொண்ட ஒரு நாம் தமிழர் கட்சிக்காரர் ஒருவரிடம் ஒரு தோழர் “எந்த விதத்தில் தேவி பாரதியின் எழுத்து சு.வெங்கடேசனை விட மேம்பட்டது?” என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் சுவாரஸ்யமானது. “அதெல்லாம் எனக்கு தெரியாது. சு.வெ ஒரு வடுக வந்தேறி. அவ்வளவுதான்”

இன்னொருவர் சொல்கிறார்

“சுவெ எழுதுவது வெகு ஜன எழுத்து”

அவர்களுக்கு சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றைத்தான்.

அடப்பாவிகளா, மக்களுக்கு புரியாத படி எழுதி நீங்கள் என்ன கிழித்தும் என்ன பயன்? மக்களுக்கு புரியாத உங்கள் இலக்கியம்தான் குப்பை.  கர்னாட சங்கீதத்தைப் போல இலக்கியத்தையும் சிறை வைத்து விடாதீர்கள்”

வேள்பாரி போல ஒரு காவியத்தை படைக்க முடியாதவர்களின் பொறாமை, புலம்பல் கடைசியில் சாபமிடும் அளவிற்கு கொண்டு விட்டது.

பாவம் கையாலாகாதவர்களின் புலம்பல் என்று அனுதாபப்படத்தான் தோன்றுகிறது.

ரஜனி படங்களே மேல்




ரஜனிகாந்த் நடித்த “தளபதி” படத்தில் அவர் முதலில் மம்முட்டியின் அடியாட்களில் ஒருவரை போட்டு அடிப்பார். அவர் இறந்த பிறகு ரஜனியை கைது செய்வார்கள். பிறகு ரஜனி அடித்தது நியாயம் என்று மம்முட்டி உணர்வதால் அவர் வேறு ஒரு அடியாளை அந்த கொலையை நான்தான்  செய்தேன் என்று  ஸ்டேட்ஜெண்ட் கொடுக்க வைத்து  சிறைக்கு அனுப்பி ரஜனியை வெளியே கொண்டு வருவார்.

அது போல ரஜனிகாந்த் நடித்த இன்னொரு  படமான சிவாஜி படத்தில் கூட அவர் அமைச்சர் வி.எம்.சி.ஹனீபாவை கத்தியால் குத்துவார். அவருக்கு பதிலாக ஒரு அடியாள் குற்றத்தை சுமந்து கொண்டு  சிறைக்குச் செய்வார்.

இந்த படங்களே மேல் என்றாகி விட்டது இப்போது.

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது அராஜக தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதான ரௌடிப் படையான ஏ.பி.வி.பி அமைப்புக்கு பினாமியாக ஹிந்து ரக்சா தள் என்று ஒரு அமைப்பு தாங்கள்தான் தாக்குதலை நடத்தினோம் என்று பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆனால் அந்த பினாமிகளைக் கூட கிரிமினல்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் இதுவரை கைது செய்யவில்லை.

அப்படி கைது செய்தால் உண்மையான குற்றவாளிகளை ரௌடித்தனம் செய்ய அனுமதித்து விட்டு தாக்குண்டவர்கள் மீதே வழக்கு பதிவு செய்த அயோக்கியத்தனம் அம்பலமாகி விடுமல்லவா!


Friday, January 10, 2020

முதலாளிகள் குரலில் நீதிமன்றம் பேசலாமா?



குடியுரிமை சட்டம் தொடர்பான போராட்டங்கள் நிறுத்தப்பட்டால்தான் அச்சட்டம் குறித்த வழக்கு விசாரணையை தொடங்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

பொதுவாக எந்த ஒரு நிறுவனத்திலும் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்கள் நடைபெறுகையில் போராட்டத்தை கைவிட்டால்தான் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று முதலாளிகள் சொல்வார்கள். பேச்சுவார்த்தையே நடைபெறாத காரணத்திலோ அல்லது பேச்சு வார்த்தை தீர்வை அளிக்காத காரணத்தால்தான் போராட்டமே துவங்கி இருக்கும். ஆனாலும் முதலாளிகள் அப்படித்தான் நிபந்தனை விதிப்பார்கள்.

முதலாளிகள் குரலில் அதே போல ஜனநாயக விரோதமாக  நீதிமன்றமும் பேசுவது நியாயமல்ல. குடியுரிமைச் சட்டம் அரசியல் சாசனத்தின்படி செல்லத்தக்கதா என்பதை ஆய்வு செய்வது அதன் கடமை. அதற்கு போராட்டங்கள் கூடாது என்பது முன் நிபந்தனை விதிப்பதெல்லாம் அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

மேலும் வழக்கு தொடுத்துள்ளவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களால் எப்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த இயலும்? இதைக் கூட புரிந்து கொள்ள முடியாதவரா தலைமை நீதிபதி?

சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பளித்த போதே நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை சரிந்து விட்டது.

நீதிமன்றம் ஆட்சியாளர்களின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுவது நாட்டிற்கோ மக்களுக்கோ நல்லதல்ல. அரசியல் சாசனத்தை குழி தோண்டி புதைக்கும் வேலைக்கு நீதிமன்றம் துணை போகக்கூடாது. 

Thursday, January 9, 2020

இவனுங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு




மத்திய கிழக்கு பகுதி பதட்டமாக இருக்கிறது. இராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது இரான் ஏவுகியணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இரானிலிருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் உக்ரேனிய நாட்டு விமானம் ஒன்று நொருங்கியுள்ளது. காரணம் என்னவென்று தெரியவில்லை.

டொனால்ட் ட்ரம்ப் இரான் மீது போர் நடத்தும் முடிவிலிருந்து கொஞ்சம் பம்முகிறார்.

மத்திய கிழக்கு பகுதியிலிருந்து அமெரிக்காவை அப்புறப்படுத்துவோம் என்று இரான் தலைவர் கொமேனி சூளுரைக்கிறார்.

இவ்வளவு பதட்டம் நிறைந்த சூழலில் சங்கிகள் காமெடி செய்கிறார்கள்.

“போரை நிறுத்த இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று இரான் கேட்டதாகவும் இதனால் மோடி உலகத் தலைவராகி விட்டதாகவும் இவர்களே ஒரு கட்டுக்கதையை பரப்பி வருகிறார்கள்”

இரான் தளபதியை அமெரிக்கா கொன்றதற்கு ஒரு சிறிய கண்டனம் கூட தெரிவிக்காத, அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிகிற கோழை மோடியிடம் போய் இரான் மத்தியஸ்தம் செய்யச் சொல்லி கேட்குமா என்று கூட யோசிக்கத் தெரியாத மூடர் கூட்டம் இந்த டுபாக்கூர் செய்தியை பரவசத்துடன் பரப்பி தாங்கள் முட்டாள்கள் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் ஒன்றை சொல்லிக் கொள்ள வேண்டும்.

“மூடர்களே, நாங்கள் மோடியை இந்தியாவின் தலைவராக அல்ல, ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அவரைப் போய் உலகத்தலைவர் என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்து அசிங்கப்படாதீர்கள்”



Wednesday, January 8, 2020

இதுதான் போராளியின் உணர்வு

தோழர் ஆதவன் தீட்சண்யாவின் உணர்வு பொங்கும் கவிதை . . .