Sunday, December 8, 2019

இப்பிரச்சினையிலிருந்து கவனம் மாறக்கூடாது.


மத்தியரசு தாக்கல் செய்துள்ள குடியுரிமை மசோதா மிகவும் ஆபத்தானது. இப்பிரச்சினை குறித்து பொதுவெளியில் போதுமான விவாதம் நடைபெறுவதாக தெரியவில்லை. இம்மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து முந்தைய நாடாளுமன்றத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் முகமது சலீம் அளித்த மாற்று அறிக்கை கீழே உள்ளது.

அவசியம் படிக்க வேண்டிய அறிக்கை இது.

இந்தியாவின் முக்கியமான பிரச்சினை இது.
நம் கவனம் முழுமையாக குவிய வேண்டிய பிரச்சினையும் கூட . . .

Friday, December 6, 2019

கைலாசத்துக்கு எப்போ மோடி?


கைலாச பதவி அல்லது வைகுண்ட பதவி என்ற அர்த்தத்தில் எல்லாம் கேட்கவில்லை.

இந்திய அரசின் ஆசிகளோடும் வாழ்த்துக்களோடும் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய மோசடி மன்னன் நித்தி, ஐ.நா விடம் அனுமதி கேட்டுள்ளதாக டுபாக்கூர் விட்டுக் கொண்டிருக்கிற "கைலாசா" நாட்டிற்கு மோடி எப்போது செல்லப் போகிறார் என்றுதான் கேட்கிறேன்.

ஒபாமாவிற்கு மோடி கொடுத்ததை விட நித்தி மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பார் என்பது நிச்சயம்.

என்னத்தான் டுபாக்கூர் என்றாலும் செய் நன்றி மறக்க மாட்டார் நித்தி. . .

பாஜக லட்சணம் மீண்டும் அம்பலம்



பிஜேபி அரசின் முகத்திரையை

கிழித்து தொங்கவிட்ட

#சாதி_மறுப்பு திருமண தம்பதியினருக்கு மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறித்த கேள்வியில் மத்திய அரசு அதிர்ச்சியளிக்கும் பதில்


சாதி மறுப்பு திருமணங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கத் தொகைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் பல கேள்விகளை எழுப்பினார்.

சமூக ஒருமைபாட்டிற்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொள்ளும் ஒவ்வொரு மணமக்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகை எவ்வளவு? என்றும்

2015-16 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகளில் எத்தனை பேர் ஊக்கத் தொகை வேண்டி விண்ணப்பம் அளித்து இருந்தனர்? என்றும்

மேற் சொன்ன காலக்கட்டத்தில் ஊக்கத் தொகை எத்தனை தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது? என்றும்

ஒரு நிதியாண்டில் 500 சாதி மறுப்பு தம்பதிகளுக்கு வழங்கப்படும் அளவிற்கான ஊக்கத்தொகை கிடைத்ததா? என்றும்

இத்திட்டத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகையினையும் பயனாளிகளின் எண்ணிக்கையினையும் அதிகரிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா? என்றும் கேள்விகள் எழுப்பியிருந்தார்.

இக்கேள்விகளுக்கு எல்லாம் சமூக நலத் துறையின் இணை அமைச்சரான திரு.ரத்தன் லால் கடாரியா அவர்கள் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.

சமூக ஒருமைபாட்டிற்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொள்ளும் ஒவ்வொரு மணமக்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ. 2.5 லட்சம் என்றும்

2015-16 ம் ஆண்டு 544 சாதி மறுப்பு தம்பதியினர் விண்ணபித்து இருந்தனர். இதில் 54 பேருக்கு மட்டும் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது.

இதே போல்
2016-17 நிதி ஆண்டில் 711 விண்ணப்பங்களில் 67 தம்பதியினருக்கும்,

2017-18 நிதி ஆண்டில் 582 விண்ணப்பங்களில் 136
தம்பதியினருக்கும்,

2018-19 நிதி ஆண்டில் 493 விண்ணப்பங்களில் 120 தம்பதியினருக்கும்

மட்டுமே வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு வருடத்திற்கு 500 எனும் இலக்கு என்பது 2013-14, 2014 -15 ஆகிய இரு ஆண்டுகளுக்கு பரிசோதனை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மட்டுமே.2015 ம் ஆண்டையும் தாண்டியும் இத்திட்டத்தை தொடர வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் மையம் முடிவெடுத்தது.

வருடத்திற்கு 500 எனும் இலக்கு அடையாளபூர்வமானது மட்டுமே என்றும் இலக்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயமில்லை என்றும் அமைச்சர் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

ஊக்கத் தொகையினை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அப்பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தோழர் கே.சாமுவேல்ராஜ் முகநூல் பதிவு

எண்கவுண்டர்களை கொண்டாடும் முன்பு


ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பாலியல் கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற கொலையாளிகள் இன்று அதே இடத்தில் எண்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் காட்டுமிராண்டிகள், அவர்கள் செய்த குற்றத்திற்கு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அந்த மரண தண்டனையை அளிக்கும் அதிகாரத்தை காவல்துறையே கையில் எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வியை அவ்வளவு சுலபமாக புறக்கணித்துச் செல்ல முடியாது.

இந்த பதிவை மிகுந்த சிந்தனைக்குப் பிறகே எழுதுகிறேன். அப்படி சிந்திக்க வேண்டிய அவசியத்தை அந்த எண்கவுண்டர் மரணங்களை கொண்டாடுகிற மன நிலையில் பலர் இருப்பதுதான் அளித்தது.

அந்த எண்கவுண்டர் நிஜமானதுதானா அல்லது போலியா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று ஊடகங்கள் அந்த காவல்துறை அதிகாரியை பாராட்டுகிற போதே அது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை உணர்த்துகிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அது முறையான வழியில் நீதிமன்ற தீர்ப்பு மூலமே வழங்கப்பட வேண்டும் என்பதையும் இணைத்தே வலியுறுத்துகிறேன்.

இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்து விட்டதே என்று மக்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இந்த எண்கவுண்டர் மூலம் காவல்துறை தன் மீது எழுந்த விமர்சனங்களை அழகாக அடக்கி விட்டு நாயகர்களாக மாறி விட்டது.

காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்?

குற்றவாளிகளை கைது செய்து விட்டார்கள். உடனடியாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் முன் அவர்களை நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். விரைவு நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்திருக்கலாம். 

காவல்துறை சட்டரீதியான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு பதிலாக சுலபமான தீர்வை நாடியுள்ளது என்பதுதான் யதார்த்தம். இதன் மூலம் சட்டத்தை மதிக்காத முதல் அமைப்பாகவும் காவல்துறையே திகழ்கிறது.

சட்டத்தின் தண்டனையை வாங்கித் தர முடியாத காவல்துறையின் கையாலாகத தனம் எண்கவுண்டர் என்பதை இப்போது உணர்ச்சிமயப் பட்ட நிலையில் அதை கொண்டாடுபவர்கள் யோசிப்பார்களா என்று தெரியவில்லை.

நீதிமன்றத்தின் அதிகாரத்தை காவல்துறை ஆக்கிரமிப்பதை கொண்டாடுவது எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சூழலை உருவாக்கும் என்பதை கணிப்பதெல்லாம் அவ்வளவு சுலபமல்ல.

இன்று ஹைதராபாத்தில் குற்றவாளிகளை துலைத்த தோட்டாக்கள், உத்திரப்பிரதேசத்தில் பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொலை முயற்சி செய்த பாஜக புள்ளி மீதும் 

பொள்ளாச்சி அயோக்கியர்கள் மீதும் 

ஆசிபாவை கொன்ற படுபாவிகள் மீதும்

பாயுமா?

தோட்டாக்களுக்கும் வர்க்கமும் அரசியலும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 



மேலே ஒரு பட்டியல் உள்ளது. அரசு இயந்திரம் அவர்களையும் எண்கவுண்டர் செய்ய முன்வருமானால் எண்கவுண்டரை ஆதரிப்பது பற்றி யோசிக்கலாம்.






அண்ணல் நினைவு நாளை திசை திருப்பினார்கள்






இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுதினம். ஆனால் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அப்படி மட்டும் நம்மால் பார்க்க முடிகிறதா?

இன்றைய ஆட்சியாளர்கள் இருபத்தி ஐந்து ஆண்டுகள் முன்பாக அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த காரணத்தால் டிசம்பர் ஆறு, பதட்டம் நிறைந்த நாளாக, மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கம் மீதான தாக்குதல் நிகழ்ந்த கறுப்பு தினமாக மாறி விட்டது.

அவர்கள் இன்றைய தினத்தை தேர்ந்தெடுத்ததை யதேச்சையானதாக கருத முடியாது.

இன்றைய ஆட்சியாளர்களுக்கு எந்த பாரம்பரியமோ வரலாறோ கிடையாது.

மகாத்மா காந்தியை படுகொலை செய்தது,
வீர சவர்க்கர் மன்னிப்பு கேட்டது,
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வாஜ்பாய் காட்டிக் கொடுத்தது போன்ற

பாரம்பரியம்தான் அவர்களுக்கு உண்டு.

ஆகவேதான் அவர்கள் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்.

அகமண முறை ஒழிந்தால்தான் இந்தியாவில் ஜாதி ஒழியும் என்று சொல்கிறார் அண்ணல் அம்பேத்கர். அதற்கு காதல் திருமணங்கள் அவசியம். இவர்களோ காதலர் தினத்தை பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளாக பொய்ச்செய்தியை பரப்புகிறார்கள்.

காந்தி ஜெயந்தி தூய்மை தினம் என்று நீர்த்துப் போக வைக்கப்படுகிறது.

எட்டு நாள் ஆட்சிக்காலத்தில் என்ரானுக்கு அனுமதி கொடுத்த வாஜ்பாய் பிறந்த நாளை நல்லாட்சி தினம் என்று அறிவிக்கிறார்கள். அது கிறிஸ்துமஸ் நாள்.

தேவலோகத் தச்சன் விஸ்வகர்மா பிறந்தநாளைத்தான் உழைப்பாளர் தினம் என்று சொல்கிறார்கள்.

எனவே இவர்கள் டிசம்பர் ஆறாம் நாளை மசூதியை இடிக்க முடிவு செய்தது உள்நோக்கமுடையது. 

அண்ணல் அம்பேத்கர் லண்டனில் வாழ்ந்த வீட்டை நாங்கள்தான் வாங்கியுள்ளோம் என்று சொல்லி அவரை இன்றைய ஆட்சியாளர்கள் அபகரிக்கப்பார்க்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசாகபட்டிணம் அகில இந்திய மாநாடு கோரியது.

தனியார்துறையில் இட ஒதுக்கீடு,
இன்னமும் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்,
எஸ்.சி/எஸ்.டி துணைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, அது முறையாக அமலாவது

உள்ளிட்ட தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதம் அமைய வேண்டும் என்று வற்புறுத்தியது.

ஆனால் அந்த கோரிக்கையை உதாசீனம் செய்த மத்திய அரசு நவம்பர் மாதம் 25 ம் தேதியை அரசியல் சாசன தினம் என்று அறிவித்து ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இரண்டாண்டுகள் முன்பு நடத்தியது. இதன் மூலம் அண்ணல் அம்பேத்கரை நாங்கள் கௌரவிக்கிறோம் என்றும் சொல்லிக் கொண்டது. ஆனால் அந்த கூட்டத்தொடரின் துவக்கத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையாக மனுதர்மம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார். இதுதான் அவர்கள் அண்ணல் அம்பேத்கரை கௌரவித்த லட்சணம்.

ஒரு மனிதன் - ஒரு மதிப்பு என்ற கொள்கை அனைவருக்கும் வாக்குரிமை என்பது அரசியலில் சாத்தியமாகி உள்ளது.

அதே நேரம் சமூகத்தில் ஒரு மனிதன் - ஒரு மதிப்பு என்ற நிலையை அடைய வெகு தூரம் பயணிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தை முன்மொழிகையில் அவர் சொன்னார். இன்னமும் அந்த இலக்கு வெகு தூரத்தில்தான் உள்ளது.  

லண்டன் நூலகத்தில் அதிகமான நூல்களை படித்தவர்கள் என்ற பெருமை இருவருக்கு மட்டுமே உண்டு.

ஒருவர் பேராசான் காரல் மார்க்ஸ்
இன்னொருவர் அண்ணல் அம்பேத்கர்.

உழைக்கும் மக்களின் விடியலுக்கான பாதையை அளித்தவர்  மார்க்ஸ்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்கான பாதையை அளித்தவர் அண்ணல் அம்பேத்கர்.

இந்தியாவில் ஜாதிகள் பிரமிட் வடிவத்தில் உள்ளது. ஒரு ஜாதி ஒடுக்கப்படுகிற ஜாதியாகவும் அதே நேரம் ஒடுக்குகிற ஜாதியாகவும் உள்ளது என்றார் அவர்.

ஜாதிய முறையை பாதுகாக்கிற சக்தியாக இங்கே மதம் உள்ளது என்பதை ஆணித்தரமாக நிறுவியவர் அவர்,

இந்தியாவில் ஜாதிகள்,
ஜாதி ஒழிப்பு 

என்ற அவரது நூல்கள் இப்போதும் கிடைக்கிறது. அவற்றை நாம் அவசியம் படித்திட வேண்டும்.

அவரை அரசியல் சாசனத்தை உருவாக்கியவர், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்ற சட்டகத்தில் மட்டும் அடைப்பது சரியல்ல.

தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமைக்காக,
மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்திற்காக
பெண்களின் சொத்துரிமைக்காக,
மாநிலங்களின் உரிமைகளுக்காக,
மத்தியிலே எல்லா அதிகாரங்களும் குவிக்கப்படக்கூடாது

ஆகியவற்றுக்காக

போராடிய, குரல் கொடுத்த பெரும் தலைவர்.

ஜாதிய முறையை கட்டிக்காத்து  நீடிக்க வைப்பது இந்து மதம்தான். நான் இந்துவாக பிறந்திருக்கலாம். ஆனால் இந்துவாக இறக்க மாட்டேன் என்று சொல்லிய அவர்

பல்லாயிரக்கணக்கான மக்களோடு புத்த மதத்தை தழுவுகிறார். அவர் அப்போது இருபத்தி இரண்டு பிரகடனங்களை வெளியிடுகிறார். அண்ணல் அம்பேத்கர் நாக்பூரில் புத்த மதத்தை தழுவிய இடம் "தீட்சா பூமி"  என்று  அழைக்கப்படுகிறது. 

அவரது பிரகடனங்கள் அங்கே ஒரு நினைவுத் தூணில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. 

அதனை பார்க்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்பு எனக்கு கிடைத்தது.

அந்த பிரகடனங்களை நான் வாசிக்கிறேன்.



1)        பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரை கடவுளாக கருதவோ, வழிபடவோ மாட்டேன்
2)        ராமனையோ கிருஷ்ணனையோ கடவுளாகக் கருதி வழிபட மாட்டேன்.
3)        கௌரி, கணபதி போன்ற ஹிந்து தர்மம் சொல்கிற எவரையும் கடவுளெனக் கருதி தொழ மாட்டேன்.
4)        கடவுள் அவதாரமெடுத்தார் என்பதை ஒருபோதும் நம்ப மாட்டேன்.
5)        புத்தர் விஷ்ணுவின் அவதாரம் எனச் சொல்வது தவறு மட்டுமல்ல, விஷமத்தனமான பிரச்சாரமும் கூட.
6)        திதி போன்றவற்றை நான் செய்ய மாட்டேன்.
7)        புத்த தர்மங்களுக்கு முரணான, எதிரான எதையும் நான் செய்ய மாட்டேன்.
8)        பிராம்மணர்கள் மூலம் எந்த சடங்கையும் செய்ய மாட்டேன்.
9)        அனைத்து மனிதர்களும் சமம் என்பதை நான் நம்புகிறேன்.
10)     சமத்துவத்தை உருவாக்க நான் பாடுபடுவேன்.
11)     புத்தரின் உயரிய கொள்கைகளை பின்பற்றுவேன்
12)     புத்தரின் பத்து கோட்பாடுகள் படி நடந்து கொள்வேன்.
13)     அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பேன்.
14)     நான் திருட மாட்டேன்.
15)     நான் தகாத உறவில் ஈடுபட மாட்டேன்
16)     நான் பொய் சொல்ல மாட்டேன்.
17)     எந்த போதைப்பொருளையும் நான் உட்கொள்ள மாட்டேன்
18)     புத்த தர்மத்தின் மூன்று அடிப்படைகளான ஞானம், கருணை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வேன்.
19)     மனிதகுல வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிற, மனிதர்களை சமமற்றவர்களாகவும் இழிவாகவும் நடத்துகிற ஹிந்து தர்மத்தை துறந்து புத்த தர்மத்தை தழுவிகிறேன்.
20)     இனி புத்த தர்மப்படியே நடந்து கொள்வேன் என சபதமேற்கிறேன்.


அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை வாங்கியுள்ளோம் என்று பெருமை கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் அவருடைய பிரகடனங்களை ஏற்பார்களா?

அதன் வழி நடப்பார்களா?

இல்லை

குஜராத் பாடத்திட்டத்தில் இருந்து அந்த பிரகடனங்களை நீக்கி உள்ளார்கள். 

இப்படிப்பட்டவர்களிடமிருந்து அண்ணல் அம்பேத்கரை மீட்பதும் நம் முன் உள்ள முக்கியக் கடமை.


அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் மற்றும் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கம், இரண்டாண்டுகளுக்கு முன்பு வேலூரில் நடத்திய அண்ணல் அம்பேத்கர் நினைவஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது பேசியதில் சில முக்கிய பகுதிகளை 
இங்கே மீண்டும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

Thursday, December 5, 2019

உங்க பாரம்பரிய வெங்காயமெல்லாம் வேண்டாம் . . .



நீங்கள் வெங்காயம் சாப்பிடுவீர்களா இல்லையா என்பது எங்களுக்கு முக்கியமில்லை.

வெங்காயம், பூண்டு சாப்பிடாத உங்கள் குடும்ப பாரம்பரியம் பற்றியும் எங்களுக்கு சிறிதும் கவலையில்லை.

வெங்காயம் சாப்பிடாதது என்னவோ பெரிய புனிதம் என்று அளக்கும் உங்கள் ஆணவம் எரிச்சல் மட்டுமே அளித்தது நிதியமைச்சர் அவர்களே!

உங்கள் உணவு பழக்கமும் உங்கள் குடும்ப பாரம்பரியமும் என்ன எழவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

ஆனால் 

நிதியமைச்சர் என்ற நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நாட்டை சீரழித்து வருகிற உங்களுக்கு

வெங்காய விலையை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டால் பதில் சொல்லும் பொறுப்பு இருக்கிறது.

இந்த பாரம்பரிய வெங்காயத்தை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு பதில் சொல்லுங்க பாப்போம் . . .


குற்றவாளிகளுக்கோர் நற்செய்தி . . .



கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி, செயின் திருட்டு, பாலியல் வன் கொடுமை, ஆவணக் கொலை, ஊழல், பண மோசடி, வங்கிகளை ஏய்த்தல் உள்ளிட்ட அனைத்து விதமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் ஓர் நற்செய்தி.

நீங்கள் பாரதீய ஜனதா கட்சியில் உறுப்பினராக இணைந்து விட்டால் உங்களின் அனைத்து குற்ற வழக்குகளும் ஊத்தி மூடப்பட்டு உங்கள் மீது கங்கை ஜலம் தெளிக்கப்பட்டு நீங்கள் புனிதராக மாற்றப்படுவீர்கள்.

ஆமாம். 



அது மட்டுமல்ல தீண்டாமைச்சுவர் கட்டி ஆணவக் கொலை செய்த சக்ரவர்த்தி துகில் மாளிகை முதலாளி சிவசுப்ரமணியனுக்கு வழங்கப் பட்டது போல உங்களுக்கு சட்ட உதவி, போலீஸ் பாதுகாப்பு எல்லாம் கிடைக்கும்.

உங்களுக்கு எதிரானவர்களை கைது செய்ய ஏவல் துறையின் சேவையும் கிடைக்கும்.

அனைத்து ரக குற்றவாளிகளும் பாஜகவில் இணைந்து கொள்வீர்.

பாஜக - குற்றவாளிகளால் குற்றவாளிகளால் நடத்தப்படும் குற்றவாளிகள் கட்சி.

BJP - A party of the Criminals by the Criminals For the Criminals